முதுகூத்தனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதுகூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் முதுகூத்தன் எனவும், உறையூர் முதுகூத்தன் எனவும் குறிப்பிடப்படுகிறார். சங்கநூல் தொகுப்பில் இவர் பாடியனவாக ஒன்பது பாடல்கள் உள்ளன. அவை:

பாடல் சொல்லும் செய்திகள்[தொகு]

அகம் 137[தொகு]

தலைவன் பிரியப்போகிறான் என்னும் செய்தியைக் கேட்ட தலைவியின் நெற்றி சிறப்பு குன்றியது, தோள் வாடிற்று என்னும் செய்திகளைக் குறிப்பிடும்போது இந்தப் புலவர் வரலாற்று நிகழ்வுகளை உவமையாக்கி விளக்கியுள்ளார்.
 • சோழர் காவிரியாற்றின் இரு மருங்கிலும் உள்ள உறையூர், திருவரங்கம் ஆகிய இரு ஊர்களிலும் பங்குனி முயக்கம் என்னும் விழா கொண்டாடி முடிந்த மறுநாள் கொண்டாடப்பட்ட இடம் வெறிச்சோடிக் கிடப்பது போல நெற்றி வெறிச்சோடிப் போனதாம்.[1]
 • பாண்டியன் பொதியமலை மூங்கில் போல் இருந்த தோள் வாடிப்போயிற்று.[2]

அகம் 329[தொகு]

கண்ணும் நுதலும் பசப்பக் காதலி உயிர் வாழ்வதால் அவரைப் பிரிந்து சென்ற காதலர் சிற்றூருக்கு உப்பு கொண்டு செல்லும் உமணர்களுடன் இளைப்பாறிச் செல்வார் போலும் என இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.[3]

குறுந்தொகை 221[தொகு]

முல்லைப்பூ பூத்துக் கிடக்கிறது. பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கூழை வாங்கிக்கொண்டு பசு மேய்க்கச் செல்லும் இடையன் கூட முல்லை மொட்டுகளை அணிந்திருக்கிறான். அவர் இன்னும் வராமையால் என்னால் முல்லைப் பூவை அணிய முடியவில்லையே எனத் தலைவி வருந்துவதாக இந்தப் பாடல் உள்ளது.[4]

குறுந்தொகை 353[தொகு]

பகலில் அவன் மார்பைத் தழுவிக்கொண்டு அருவியில் நீராடுவது இனிமையாக இருக்கிறது. ஆனால் இரவில் அன்னை என் பின்னலையும் முதுகையும் தழுவிக்கொண்டு தூங்குவதுதான் கொடுமையாக உள்ளது - என்கிறாளாம் தலைவி.[5]

குறுந்தொகை 371[தொகு]

அவன் அருவி நீர் பாய்ச்சி ஐவன நெல் விளைவித்துக்கொண்டிருக்கிறான். அவனை அணைக்காமையால் என் கையில் வளையல் நிற்கவில்லை. உடம்பு 'பசபச' என்னும் உணர்வோடு பசப்பு ஊர்ந்துகொண்டு இருக்கிறது. இது காம மிகுதியின் அடையாளம் - என்கிறாம் தலைவி.[6]

குறுந்தொகை 390[தொகு]

பொழுதும் போய்விட்டது. வழிப்பறி மக்களும் வேலேந்திக்கொண்டு தண்ணுமை முழக்கத்துடன் வருகின்றனர். இனி பேலும் செல்லவேண்டாம் - என்று பொருள் தேடச் செல்லும் தலைவனை வழியில் கண்டோர் தடுப்பதாக இந்தப் பாடல் உள்ளது.[7]

நற்றிணை 28[தொகு]

அவன் அவள் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டானாம். அவனுடைய கைகளால் அவளது நெற்றியைத் தடவிக் கொடுத்தானாம். தாய் போல இனிமையாகப் பேசினானாம். ஆனால் திருடன் போலக் கொடியவனாக மாறி அவளைத் திருடிக்கொண்டானாம். - இப்படித் தலைவி கூறுவதாக இந்தப் பாடல் உள்ளது.[8]

நற்றிணை 58[தொகு]

 • தன்னை அடைய தலைவன் வரும் தேரில் பூட்டிய குதிரை மெதுவாக நடக்கிறதாம். அதனை நன்றாக அடிக்கவேண்டுமாம். சிறுவர் முழக்கும் பறையில் எழுதப்பட்டுள்ள குருவி அடி படுவது போல அந்தக் குதிரைகள் அடிபட வேண்டுமாம்.[9]
 • வீரை வெளிமான் முரசத்தில் மாலையில் விளக்கேற்றி வைக்கப்பட்டதாம்.[10][11][12]

புறம் 331[தொகு]

வாகைத்திணையின் துறைகளில் ஒன்றான 'மறக்களவஞ்சி' என்னும் துறையைச் சேர்ந்த பாடல் இது. போர்வீரன் ஒருவனின் மறம் இதில் கூறப்பட்டுள்ளது.
 • இடையன் தீ மூட்டும் ஞெலிகோல் போன்று ஒளி தர வல்லவன்.[13]
 • இருப்பது சிறிதே ஆயினும் வந்தவர்க்கு ஊட்டும் மகளிர் போல வழங்கவும் வல்லவன்.[14]
 • அரசன் வழங்கும் பெருஞ்சோறு போலப் பகைவர்களை வெட்டித் தூவவும் வல்லவன்.[15]

அடிக்குறிப்பு[தொகு]

 1. வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
  இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
  வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
  உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
  பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
  வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
  தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
  பெரும் பாழ்கொண்டன்று, நுதலே
 2. தோளும்,
  தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
  திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
  நல் எழில் நெடு வேய் புரையும்
  தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
 3. காதலர்
  குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
  படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்
  கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
  பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
  எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
  ஏகுவர்கொல்லோ
 4. அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
  பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
  பாலொடு வந்து கூழொடு பெயரும்
  ஆடுடை இடைமகன் சென்னிச்
  சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
 5. ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
  கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
  பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
  நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,
  பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல்
  பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
  அன்னை முயங்கத் துயில் இன்னாதே.
 6. கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
  மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
  அருவியின் விளைக்கும் நாடனொடு,
  மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.
 7. எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-
  செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-
  வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
  வளை அணி நெடு வேல் ஏந்தி,
  மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
 8. என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
  தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
  அன்னை போல இனிய கூறியும்,
  கள்வர் போலக் கொடியன்மாதோ
 9. பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
  சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
  கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
  கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ
 10. வீரை வேண்மான் வெளியன் தித்தன்
  முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
 11. இது திருவண்ணாமலைத் தீபம் போலும்
 12. வீரகனூர் வெளிமான்
 13. புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும்
  கல்லா இடையன் போல, குறிப்பின்
  இல்லது படைக்கவும் வல்லன்
 14. உள்ளது
  தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்,
  நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
  இல் பொலி மகடூஉப் போல, சிற் சில
  வரிசையின் அளிக்கவும் வல்லன்
 15. காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
  போகு பலி வெண் சோறு போலத்
  தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகூத்தனார்&oldid=2718208" இருந்து மீள்விக்கப்பட்டது