ஈழத்துப் பூதன்தேவனார்
பூதந்தேவனார் அல்லது ஈழத்துப் பூதன்தேவனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் ஆவர். ஏழு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. இவர் அக்காலத்தில் தமிழர் வாழ்ந்துவந்த பகுதியாக விளங்கிய ஈழநாட்டில் வாழ்ந்து வந்தவர்.[1][2][3]
இவரது பாடல்கள் அகநானூறு 88, 231, 307, குறுந்தொகை 189, 343, 360, நற்றிணை 366 ஆகியனவாகும்.
வாழ்க்கை குறிப்பு
[தொகு]இவர் மதுரைக் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். ஈழத்து பூதந்தேவனார் எனவும் சொல்லப்படுவர். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு போய் மதுரைச் சங்கத்தில் புலவராய் நிலவினார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை வந்து கற்று புலவரானார் என்றும் கூறுவார். ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது.
சங்க இலக்கியப் பங்களிப்பு
[தொகு]இவர் பாலையும் குறிஞ்சியும் பாடியுள்ளார். இவருடைய பாடல்கள் நற்றிணையிலொன்றும் குறுந்தொகையில் மூன்றும் அகநானூறு என்னும் நெடுந்தொகையில் மூன்றுமாக ஏழு பாடல்கள் உள்ளன. நற்றிணையில் வாடை விசுங் குளிர்காலத்தில் தலைவியைப் பிரிபவர் மடைமையரென்று பாடுவர். அப்பாடலை இங்கே தருதும்:-
திணை:- பாலை துறை:- இஃது உலகியல் கூறப் பொருள் வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் கூறியது.
- அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ்
- வீடுறு நுண்டுகி லூடுவந் திமைக்குந்
- திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகண்
- மணியே ரைம்பான் மாசறக் கழீஇக்
- கூதிர் முல்லைக் குறுங்கா லலரி
- மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த
- விரும்பன் மெல்லணை யொழியக் கரும்பின்
- வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி
- முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
- முங்கி லங்கழை தூங்க வெற்றும்
- வடபுல வாடைக்குப் பிரிவோர்
- மடவர் வாழ்யிவ் வுலகத் தானே (நற்றிணை-366)
இன்னும் குறுந்தொகையில் உள்ள மூன்று செய்யுட்களும் சிறந்த பொருளமைவுடையன ஆகும். அவற்றுள் இரண்டைக் காட்டுதும்:-
திணை:- பாலை துறை:- இஃது தோழி கிழத்தியை உடன்போக்கு நயம்பக் கூறியது.
நினையாய் வாழி தோழி நனைகவுள் அண்ணல் யானை யணிமுகம் பாய்ந்தென மிகுவ லிரும்புலிப் பகுவா யேற்றை வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகை கோடை யொற்றிய கருங்கால் வேங்கை வாடு பூஞ்சினையிற் கிடக்கும் உயர்வரை நாடே னொடுபெயரு மாறே. (குறுந்தொகை-343)
திணை:- குறிஞ்சி துறை:- இஃது தலைமகன் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
வெறியென வுணர்ந்த வேல னோய்மருந் தறியா னாகுத லன்னை காணிய வரும்பட ரெவ்வ மின்றுநா முழ்ப்பினும் வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை யன்ன பெருங்குர லேன லுண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்புஞ் சோலை யிலங்குமலை நாட னிரலி னானே. (குறுந்தொகை-360)
நெடுந்தொகையான அகநானூற்றில் இவரால் பாடப்பட்ட மூன்றுள் ஒன்று காட்டுதும்:- திணை:- குறிஞ்சி துறை:- இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
முடைச்சுவற் களித்த மூரிச் செந்தினை ஓன்குவண்ர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப் பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும் புருவைப்பன்றி வருதிறம் நோக்கி, கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம் நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே-- குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம் இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து, இருங்கல் விடர் அலை அசுணம் ஓர்க்கும் காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியம் கெண்டும் வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே? (அகநானூறு(களிற்றியானை நிரை)-88)
அகநானூறு 88 தரும் செய்தி
[தொகு]இது குறிஞ்சித்திணைப் பாடல்.
காட்டு விலங்குகள் திரியும் வழியில் தலைவன் வந்திருக்கிறான். காவல் காக்கும் கானவன் கண்ணில் படாமல் வந்திருக்கிறான். இப்படி அரும்பாடு பட்டு வந்திருக்கிறான். நீ அவனிடம் செல் என்று தலைவியிடம் தோழி சொல்லும் பாடல் இது.
விலங்கினம்
[தொகு]காட்டுப் பல்லி
[தொகு]தினையை மேயச் செல்லும் புருவைப் பன்றி காட்டுப் பல்லியின் ஒலியைக் கேட்டுக்கொண்டே செல்லுமாம்.
அசுணம்
[தொகு]புலியைக் கொன்ற யானை தன் கடாம் என்னும் மதம் ஒழுகக் குரல் கொடுத்ததாம். அந்தக் குரல் ஒலியை யாழின் இசை என்று எண்ணி மலைப்பாறை வெடிப்புகளில் இருக்கும் அசுணம் என்னும் விலங்கு கேட்டு இன்புற்றதாம்.
உளியம்
[தொகு]உளியம் என்பது கரடி. இது புற்றைக் கிண்டிக் கறையானை உண்ணும்.
புருவை
[தொகு]காட்டுப் பன்றியைப் புருவைப் பன்றி என்றனர். மலைநிலத்தில் விளைந்திருக்கும் தினையைப் புலுவைப் பன்றி மேய வரும். குறிஞ்சிநிலக் கானவன் பரண்மீது ஏறி இருந்துகொண்டு தன் கையிலிருக்கும் சீப்பத்தத்தைச் சுற்றி அதனை ஓட்டுவான்.
அகநானூறு 231
[தொகு]இது பாலைத்திணைப் பாடல்.
கானவர் விளைச்சலை அழிக்க வரும் விலங்குகளை ஓட்ட எய்த கணை பட்டு மாய்ந்தவர்களுக்கு நினைவுச் சின்னமாகக் கற்களை அடுக்கிப் பதுக்கைகள் அமைப்பர். இப்படிப்பட்ட கள்ளிக் காட்டில் பொருள் தேடச் செல்லும்போது அவருக்கு உன் உச்சிக்கொண்டை நினைவு வரும். விரைவில் திரும்பிவிடுவார். அஞ்ச வேண்டாம் என்று தோழி தலைவன் பிரிவுக்கு ஒப்புதல் தரும்படி வேண்டும் பாடல் இது.
பொருள் தேடும் நோக்கம்
[தொகு]'செறுவோர் செம்மல் வாட்டவும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும், இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி, நல் இசை வலித்த நாணுடை மனத்தர்' பொருள் தேடச் செல்வர் என்று பொருள் தேடும் நோக்கத்தை இப்புலவர் தெளிவுபடுத்துகிறார்.
பகைவரின் கொட்டத்தை அடக்கவும், உறவினரின் துன்பத்தைப் போக்கவும் பொருள் உதவும்.
ஆண்மை
[தொகு]உறவினரின் துன்பம் போக்குவதே ஆண்மை.
வரலாறு
[தொகு]பசும்பூட் பாண்டியன் சங்ககால மன்னனர்களில் ஒருவன். இவனது கூடல் நகரம் போலத் தலைவி 'முச்சி' என்னும் உச்சிக்கொண்டை போட்டிருந்தாளாம்.
அகநானூறு 307
[தொகு]இது பாலைத்திணைப் பாடல்.
மழையில் நனையும் பூன் போல இவளைக் கண்ணீர் வடிக்க விட்டுவிட்டுப் பிரியலாமா என்று தோழி தலைவனுக்கு எடுத்துரைக்கும் பாடல் இது.
வேங்கைப் புலியை வென்ற யானை வழியில் செல்வோரையும் தாக்கும் வழியில் செல்லவேண்டுமா?
எண்கு என்னும் கரடி கரையான் புற்றைக் கிண்டும் வழியில் செல்ல வேண்டுமா?
பொதியில் என்றும் மன்றக் கோயிலில் 'கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து' ஓரமாகப் போய்த்தான் ஆகவேண்டுமா?
போனால் பிரிந்த புறாவுக்காக் குரல் கொடுக்கும் புறாவின் ஒலியை எண்ணிப் பார்ப்பீர்களா?
எண்கு
[தொகு]கறையான் புற்றைக் கிண்டி எண்கு உண்ணும்.
குறுந்தொகை 189 தரும் செய்தி
[தொகு]நாளை பொருள் தேடிவரச் செல்ல உள்ளேன். எனவே இன்றே என்னவளிடம் சென்று அவளைத் தழுவி வந்துவிடுகிறேன். என்று தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான். (பாங்கன் = பக்கத்தில் இருக்கும் உடன் தோழன். பாங்கு = பக்கம்)
வானியல் செய்தி
[தொகு]- 'விசும்பு வீழ் கொள்ளி'
எரிமீனைப் புலவர் இவ்வாறு கூறுகிறார்.
செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையில் மிதக்கும் விண்கற்கள் சில வேளைகளில் சுழல் விசையில் திசை மாறிப் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குள் நுழைந்துவிடும். அப்போது பூமியின் காற்றுவிசை உரசும்போது எரியும். இதனை எரிமீன் என்கிறோம்.
குறுந்தொகை 343 தரும் செய்தி
[தொகு]இது பாலைத்திணைப் பாடல்.
'தலைவனுட்ன் செல்க' என்று தோழி தலைவிக்குச் சொல்லும் பாடல் இது. உடன்போக்குக்கு ஆசை காட்டும் பாடல் இது.
ஆண்யானை பாய்ந்தது என்று ஆண்புலி அயர்ந்து கிடக்கும். வெண்ணிறக் கிளைகளை உடைய வேங்கை மரம் பூத்து உதிர்ந்த பூக்கள் போல ஆண்புலி அயர்ந்து கிடக்கும். (அவர் ஆண்யானை போன்றவர் - இது உவமையால் பெறப்படும் இறைச்சிப் பொருள்) எனவே அஞ்சாது செல்க என்கிறாள் தோழி.
குறுந்தொகை 360 தரும் செய்தி
[தொகு]இது குறிஞ்சித்திணைப் பாடல். தலைவி தோழியிடம் சொல்கிறாள். தலைவனை எண்ணித் நான் ஏங்குவதை வெறி என வேலன் சொல்லக் கேட்டு அன்னை வெறியாட்டி என்னைத் துன்புறுத்துவாள். அதனாலென்ன? கொடிச்சியர் கையில் குளிரை எடுத்துக்கொண்டு கிளி ஓட்டச் செல்வர். நாமும் செல்லலாம்.(அவர் வருவார்)
உவமை
[தொகு]தினைக்கதிர் யானையின் துதிக்கை போல வளைந்திருக்கும்.
நற்றிணை 366 பாடல் தரும் செய்தி
[தொகு]இது பாலைத்திணைப் பாடல். பொருள் தேடுவது உலகியல். உலகியல் வழக்கப்படி பொருள் தேடச் செல்லும் தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்.
அவள் தன் மணிநிற ஐம்பால் கூந்தலை அவிழ்த்து மாசு போகக் கழுவி உலர விட்டு முல்லைப் பூவை வண்டு மொய்க்கச் சூடிக்கொண்டிருப்பாள். நானோ வடபுலத்தில் வாடைக் காற்று வீசும்போதும் பொருள் தேடிக்கொண்டிருப்பேன். அவள் கூந்தல் மெத்தை அங்கு ஏது? (அங்குக் குருவியும் கரும்புப் பூ மெத்தையைத் தானே முயன்று தேடிக்கொள்கிறது)
குருவிக் கூடு
[தொகு]கரும்புப் பூவைக் கொய்து சென்று தன் கூட்டில் மெத்தையாக வைத்துக்கொள்ளும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stokke, K.; Ryntveit, A.K. (2000). "The Struggle for Tamil Eelam in Sri Lanka". Growth and Change: A Journal of Urban and Regional Policy 31 (2): 285–304. doi:10.1111/0017-4815.00129.
- ↑ Sri Lanka - Literature Encarta article reads: "The earliest known Sri Lankan Tamil poet was Eelattu Poothanthevanar, whose poems were included in the Tamil cankam (Sangam) poetry anthologies compiled in southern India before 250 AD." Archived 2009-10-31.
- ↑ Ampikaipākan̲, Caṅkarappiḷḷai; Ambikaipakan, S. (1981-01-01). Eelanadu and the Tamil Sangams: Paper Presented by S. Ambikaipakan at the Fifth International Conference Seminar of Tamil Studies, Madurai (in ஆங்கிலம்).