வஞ்சி (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வஞ்சி என்னும் மாநகரம் மணிமேகலை – வஞ்சிமாநகர் புக்க காதை சேரநாட்டின் தலைநகர். [1] குடநாட்டின் தலைநகர் வஞ்சி. [2] தற்காலக் கரூரையும் சங்ககாலத்தில் வஞ்சி என்றும், வஞ்சிமுற்றம் என்றும் வழங்கினர்.

பாட்டு - வஞ்சி என்பது பாணர் பாடும் பண் வகைகளில் ஒன்று [3] [4] [5]
மரம் - வஞ்சி என்பது ஒரு வகை மரம் [6] [7] [8]
மலர் - வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. [9] வஞ்சிமாநகரம் பூவா வஞ்சி எனப் போற்றப்பட்டது. [10]

குடபுலச் சேரர் தலைநகரம்[தொகு]

வஞ்சி, உறந்தை, மதுரை ஆகிய மூன்றும் சேர, சோழ, பாண்டியரின் தலைநகராக விளங்கியதை இணைத்துப் பார்க்கும் பாடல்கள் உள்ளன. [11] [12] இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோரின் [13] [14] [15] தலைநகரம்.திருவாங்கூர் நாட்டை வஞ்சிபூமி என்றனர். 'வஞ்சி பூமி' எனத் தொடங்குப் பாடல் திருவாங்கூர் நாட்டின் தேசிய கீதமாக விளங்கியது. [16] [17] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சி நகர் வாடும்படி போரிட்டான். [18]

கருவூர்ச் சேரர் தலைநகரம்[தொகு]

கொங்குநாட்டுக் கருவூர் சேரநாட்டு வஞ்சியின் முற்றமாக விளங்கிற்று. [19] புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் இந்த ஊர் வஞ்சி எனப் பெயர்பெற்றது. [20] வஞ்சியில் உள்ளிவிழா சிறப்பாக நடைபெறும். [21] இளஞ்சேரல் இரும்பொறை [22] , கோதை [23] ஆகிய சேர வேந்தர்களின் தலைநகரமாக வஞ்சி விளங்கியது. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, புகழூர்த் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவன். இவனது ஆட்சிக்காலத்தில் பொருநை ஆறு பாயும் கொங்குநாட்டுக் கருவூரும் வஞ்சி என்னும் பெயரால் வழங்கப்பட்டது. [24]

அடிக்குறிப்பு[தொகு]

 1. சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் இந்த ஊர் 'அஞ்சைக்களம்' என வழங்கப்பட்டது.
 2. வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; (புறநானூறு 373)
 3. பாடினி பாடும் வஞ்சி - புறம் 15-24
 4. புறம் 378-9
 5. புறம் 33-10
 6. வஞ்சிக்கோடு புறம் 384
 7. வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50
 8. அகம் 226
 9. குறிஞ்சிப்பாட்டு 89
 10. பூவா வஞ்சி - புறம் 32-2
 11. வஞ்சிமாநகரும், கோழி எனப்படும் உறையூரும் போலச் சேவல் கூவும் ஒலி கேட்டு மதுரை மக்கள் எழுவதில்லையாம். சான்மறையாளர் வேதம் ஓதும் ஒலி கேட்டு எழுவார்களாம். பரிபாடல் திரட்டு 8-10
 12. குடபுலம் காவலர் மருமானும், வடபுல இமயத்து வணங்கு வில் பொறித்தோனுமாகிய குட்டுவனின் தலைநகர் வருபுனல் வாயில் வஞ்சி - சிறுபாணாற்றுப்படை 50
 13. ஆரியர் அலரத் தாக்கி பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன (தலைவி நலம்) - பரணர் பாட்டு - அகம் 396
 14. சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்
 15. மணிமேகலை வஞ்சிமாநகர் புக்க காதை
 16. வஞ்சி பூமி
 17. திருவாங்கூர்
 18. பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம வில் பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டியவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் – மாறோக்கத்து நப்பசலையார் பாடல் - புறம் 39-17
 19. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை எறிந்து கைப்பற்றினான். இதனை வஞ்சிமுற்றம் வயக்களனாக வென்றான் எனக் காவூர் கிழார் குறிப்பிடுகிறார் - வஞ்சிமுற்றம் புறம் 373
 20. புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387
 21. குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு, உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே - நற்றிணை – சான்றோர் எனத்தொடங்கும் பிற்சேர்க்கை 8
 22. இளஞ்சேரல் இரும்பொறை பொத்தி ஆண்ட பெருஞ்சோழனையும், வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனையும் வென்று பெற்ற செல்வத்தைத் தன் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவந்து பிறருக்கு வழங்கினான். பதிற்றுப்பத்து பதிகம் 9
 23. கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி - அகம் 263
 24. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடிய பாடல் குறிப்பிடுவது - தண்பொருநைப் புனல் பாயும் விண் பொருபுகழ் விறல்வஞ்சி - புறம் 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சி_(ஊர்)&oldid=2588650" இருந்து மீள்விக்கப்பட்டது