பேராலவாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேராலவாயார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பேராலவாயர் சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் ஆறு உள்ளன.[1] இவரை மதுரைப் பேராலவாயார் எனவும் வழங்குவர்.[2] பேராலவாய் என்பது மதுரையின் ஒரு பகுதி. பெரிய ஆலமரம் இருந்த பகுதி. இங்கு வாழ்ந்த புலவர் பேராலவாயர்.[3]

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

இவரது பாடல்களில் சொல்லப்படும் இவை.

பெருங்காடு நோக்கித் தெருமரும்[தொகு]

பூதபாண்டியன் மாண்டான். அவன் மனைவி 'பெருங்கோப்பெண்டு'. அவள் இளமை நலத்தோடு இருந்த காலத்தில் இது நிகழ்ந்தது. அரண்மனையில் முரசு முழங்க வாழ்ந்தவள். இப்போது முற்றத்துக்கு வந்துவிட்டாள். அங்கே யானைகள் கொண்டுவந்த காய்ந்த விறகில் மூட்டிய ஞெலிகோல் தீப்பந்தம் எரிந்துகொண்டிருந்தது. பக்கத்திலே மான்கூட்டம் தூங்கிக்கொண்டிருந்தது. மந்திகள் மண்ணைக் கிளறி விளையாடிக்கொண்டிருந்தன. அங்கே அவள் கூந்தலில் நீர் வடிந்துகொண்டிருந்தது. கண்ணிலே கலக்கம். கணவனை எரிக்கப்போகும் பெருங்காடு நோக்கிச் செல்லலானாள்.[4]

நிரையொடு வரூஉம் என் ஐ[தொகு]

இதோ என் தலைவன் பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து அவற்றை ஓட்டிக்கொண்டு அவற்றின் பின்னே வருகிறான். (அவனுக்கு விருந்து படைக்க வேண்டும்) நறவுக் கள்ளை ஊற்றி வையுங்கள். காளைமாட்டுக் கறி சமைத்து வையுங்கள். பசுந்தழைப் பந்தலின்கீழ் ஆற்று இளமணலைப் பரப்பி வையுங்கள்.[5]

தண்ணுமைப் பாணி[தொகு]

நெஞ்சே! நினைத்துப்பார். பாலைநிலத்தில் செல்லும்போது குறும்பு ஊர்களில் வறுமையில் வாடும் மறவர் புல்லுக் குடிசைகளில் தங்கினோம். கோழி கூவியதும் புறப்பட்டோம். அங்கே என்றோ தயிர் கடைந்த மத்தைக் கன்றுக்குட்டி நக்கிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மறவர் தண்ணுமை முழக்கினர். அந்த ஒலி நெஞ்சில் 'துண்துண்' என்றது. இப்போது பொருள் ஈட்டிக்கொண்டு மீள்கிறோம். இனி மகிழ்ச்சி கொள். நம் காதலியின் கூந்தல் மெத்தையில் அவளை அணைத்து இன்புறலாம். - தலைவன் இப்படி நினைக்கிறான்.[6]

கூடல் கம்பலை[தொகு]

தோழி வாயில் மறுத்தல் - நேற்றுக் காஞ்சித் தோப்பில் அவளோடு துயின்றாய். இன்று அவளோடு வையையில் நீராடினாய். அவளை மணந்த மார்போடு இப்போது உன் மனைவியை நாடி வந்திருக்கிறாய். கொற்கை அரசன் நெடுந்தேர்ச் செழியன் தன் வெற்றிக்குப் பின் யானைப்படையுடன் வந்து கூடல் நகரில் தங்கியதை ஊரெல்லாம் பேசியது போல நீ முன்பு நடந்துகொண்டதைப் பேசுகின்றனர். இதை மறைக்கமுடியுமா? [7]

பின்னுவிடு முச்சி[தொகு]

வெறியாடல் பற்றித் தோழி தலைவனுக்குச் சொன்னது. மழை பொழிந்துகொண்டிருக்கிறது. நீ வந்திருக்கிறாய். இங்கு வேலன் வந்திருக்கிறான். இவளது பின்னல் முடியைப் பிடித்து வெறியாட்டப் போகிறான். இதுதான் நிலைமை.[8]

மாலை மான்ற மணமலி வியனகர்[தொகு]

அவனும் முல்லை சூடினான். அவனது இளைஞர்களும் முல்லை சூடினர். அவனது குதிரை பூட்டிய தேர் புறவுநிலத்தைக் கடந்து நகருக்கு வந்துவிட்டது. மணம் கமழும் அந்த மாளிகையில் மாலை வேளையில் பகலும் இரவும் மயங்கிக்கொண்டிருக்கின்றன. இனி அவனுக்கும் அவளுக்கும் விருந்துதான்.[9]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அகநானூறு 87, 296, நற்றிணை 51, 361, புறநானூறு 247, 262
  2. இவரது பெயர் 'மதுரைப் பேராலவாயார்' எனச் சில பாடல்களில் (அகம் 87, 296, புறம் 247, 262) உள்ளது. ஒரு பாடலில் (நற்றிணை 51) இவரது பெயர் 'பேராலவாயர்' எனவும், மற்றொரு பாடலில் (நற்றிணை 361) 'மதுரைப் பேராலவாயர்' எனவும் உள்ளது.
  3. இடைக்காடனார் இடைக்காடன் + ஆர் என வருவதையும், நக்கீரனார் - நக்கீரர் என வருவதையும் கருதிப் பார்த்த சு. வையாபுரிப்பிள்ளை தம் நூல் சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் நூலில் பேராலவாயர் என்பதே பொருத்தமானது எனக் கொண்டு பதிப்பித்துள்ளார்.
  4. புறநானூறு 247
  5. புறநானூறு 262 உண்டாட்டு அல்லது தலைத்தோற்றம் என்னும் துறை
  6. அகநானூறு 87
  7. அகநானூறு 296
  8. நற்றிணை 51
  9. நற்றிணை 361
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராலவாயர்&oldid=3198776" இருந்து மீள்விக்கப்பட்டது