நக்கீரர், சங்கப்புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் சந்திர குல பரதவ இனத்தில் அவதரித்தவர் . கிபி 3 நூற்றாண்டிற்கு முற்ப்படட் இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகும்.[1]

கதை[தொகு]

பல்வேறு காலங்களில் வாழ்ந்த நக்கீரர் பாடல்களைத் தொகுத்து ஒருவர் எனக் கொண்டு புனையப்பட்ட கதைகள் உண்டு.
பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா என்பது தொடர்பில் சுந்தரேசுவரருடனேயே (சிவன்) அஞ்சாது வாதிட்டவர் என்பது தொன்நம்பிக்கை. இன்றளவும் இந்த நிகழ்வு மதுரை மீனாட்சியம்மன் கோவில் விழாவில் நாடகமாகக்கப்படுவது குறிக்கத்தக்கது.

மதுரை சொக்க நாதர் பாடி நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட அப்பாடலாவது:

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"

நக்கீரர்[தொகு]

சங்கப்பாடல்கள் சிலவற்றில் சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் 'நக்கீரன்', நக்கீரனார்', 'மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை வருமாறு:

நக்கீரர் காலம் சான்றுகளுடன்:

சங்க காலத்தில் வாழந்த நக்கீரர் சைவ வேளாளர்/ வெள்ளாளர் குலத்தில் அவதரித்தவர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என தற்காலத்தில் தெரிய வருகிறது.

இவர் தலையாலங்கானத்து போர் பற்றி கூறுகிறார். போரில் வெற்றி கண்டவன் இரண்டாம் நெடுஞ்செழியன் எனப்பட்ட பாண்டியன். இவனை எதிர்தத வேளிர்கள், எழினி, திதியன், எருமையூரன் இருங்கோவேண்மான், பொருநன் ஆகியவர்கள். பேரரசருள் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்றோர். மேலும் இப்போர் பற்றி கூறியவர்கள் நக்கீரர், மாங்குடி மருதனார் ஆகியோர். இவர்களால் பாடப்பட்ட சிறு பெருங்காப்பியங்கள் எனப்பட்ட நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும் ஆகும். தன் காலத்தில் நடந்த இப்போரினை தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் என வருணிக்கிறார் குடபுலவியனார். இப்போர் நடைபெற்ற போது பாண்டியன் சிறுவனாக இருந்ததாக இடைக்குன்றூர்கிழார் பாடுகிறார். மேலும் "எதிரிகள் எத்தனை பேர் பிழைப்பார்களோ" என பாண்டியனை புகழ்ந்து பாடுகிறார் இடைக்குன்றூர்கிழார். சிலபதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனுக்கு பிறகு யானைகட் சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இளங்கோவடிகளால் புகழப்படுகிறான். அதேபோன்று சோழர்களில் கரிகாலனுக்கு பிறகு கிள்ளிவளவன் இளங்கோவால் பாடப்படுகிறான். நக்கீரர் தன் வயதை ஒத்த செங்குட்டுவனை பாடவில்லை, ஆனால் சில வருடங்கள் சேரனை விட வயது முதிர்ந்த கரிகாலனை பாடியுள்ளார். (கரிகாலன் அதிக காலம் வாழ்ந்து இருக்கலாம்.) சேரர்களில் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும், சோழர்களில் கிள்ளி வளவனையும் பாடுகிறார். இதன் மூலம் இளங்கோவடிகளும் நக்கீரரும் சமகாலத்தவர்கள் என தெளிவாக தெரிகிறது. மாமூலனார்(கி.மு 4ஆம் நூற்றாண்டு) காலத்தின் மூலம் நக்கீரர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு. மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியதாக சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை வருமாறு:

பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர்.

நக்கீரர் தரும் செய்திகள்[தொகு]

சங்ககால வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இவர் தம் அகத்திணைப் பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். இவரது உள்ளுறை உவமங்களில் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்லாது மக்களின் பண்பாடுகளும், ஆளி (சிங்கம்), வாவல், வரால்மீன் போன்ற உயிரினங்களும் சுட்டப்படுகின்றன.

கடவுள்கள்[தொகு]

 • நெடுவேள் மார்பில் ஆரம் [6][7]
 • முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் அவனது அருளைப் பெறலாம் என்று தம் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு கடவுள்கள் 'தோலா நல்லிசை நால்வர்' [8][தொகு]
 1. சிவன் - ஏறு என்னும் காளைமாட்டை ஊர்தியாகக் கொண்டவன். செஞ்சடை கொண்டவன். கணிச்சி என்னும் சூலம் ஏந்தியவன். 'கூற்று' என்றும் இவனைக் கூறுவர். இவனது சீற்றத்துக்கு இணை இல்லை.
 2. வாலியோன் - சங்கு போன்ற மேனியை உடையவன். நாஞ்சிலை எந்தியவன். பனைமரத்தைக் கொடியில் கொண்டவன். இவனது வலிமைக்கு இணை இல்லை.
 3. மாயோன் - கழுவிய மணி போன்ற மேனியை உடையவன். கருடக் கொடியை உடையவன். விறல் என்னும் புகழில் இவனுக்கு இணை இல்லை.
 4. செய்யோன் - சிவந்த மேனியை உடையவன். மயில் கொடி உடையவன். இவனது ஊர்தியும் மயில். நினைத்ததை முடிப்பதில் இணை இல்லாதவன்.
கணங்கெழு கடவுள் [9][தொகு]
 • பல கடவுள்கள் இருக்கும் கோயிலில் உயர்பலி தூவி மகளிர் வழிபடுவர்.
கடியுண் கடவுள்[தொகு]
 • தினை தூவி வழிபடுவர்.

மாந்தர்[தொகு]

அரசர், குறுநிலத் தலைவர்[தொகு]

பாண்டியர், சோழர், சேரர், குறுநிலத் தலைவர்கள் என்னும் வரிசையில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 • செழியன், கொய்சுவல் புரவி கொடித்தேர்ச் செழியன் [10]
 • செழியன், கடுந்தேர்ச் செழியன், பெருங்குளம் என்னும் ஊரின் ஆரசன் [11]
 • பாண்டியன் நன்மாறன், இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன் இந்தப் பாண்டியன் சீற்றம், வலிமை, புகழ், முன்னியது முடித்தல் ஆகிய நிலைகளில் நாற்பெருந் தெய்வங்களைப் போன்றவன் என்று குறிப்பிடுகிறார். அவனை ஞாயிறும் திங்களும் போல நிலை பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.[8]
 • பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செரு வென்றவன். நெடுநல் வாடை நூலின் பாட்டுடைத் தலைவன்.
 • வழுதி, கூடல் அரசன்.[12]
 • வழுதி, பசும்பூண் [9] மருங்கை அரசன். சிறுவெண்காக்கை இறால்மீன் இரை பெறும் ஊர் மருங்கை. தலைவி இந்த ஊர்போல் அழகுள்ளவளாம்.
 • கரிகாலன் - செலவ வளம் மிக்க இடையாறு என்னும் ஊருக்கு அரசன் [13]
 • கிள்ளி வளவன் - கூடல் நகரைத் தாக்கினான். பழையன் மாறன் இவனது யானை, குதிரைப் படைகளைக் கைப்பற்றிக்கொண்டான். இதைக் கண்டு சேர அரசன் கோதை மார்பன் மகிழ்ந்தான்.[14]
 • தித்தன், உறையூர்ச் சோழன் [15]
 • சோழர் - ஆர் ஒன்னும் ஆத்திப் பூ மாலை சூடியவர்கள். உறையூரில் இருந்துகொண்டு ஆண்டவர் [12]
 • கோதை - கருவூர் அரசன் [12]
 • கோதை மார்பன் - கூடல் போரில் பழையன் மாறன் கிள்ளி வளவனின் யானைகளியும் குதிரைகளையும் கைப்பற்றிக்கொண்டது அறிந்து கோதை மார்பன் மகிழ்ந்தான் [16]
 • வான வரம்பன் - இவனது நாட்டைத் தாண்டிப் பொருள் தேடச் செல்வர்.[17]
 • அன்னி - திதியனோடு போரிட்டு மாண்டான்.[18]
 • திதியன் - போரில் அன்னியைக் கொன்றான் [18]
 • திரையன் - பவத்திரி என்னும் ஊரின் அரசன் [19]
 • முசுண்டை - வேம்பி என்னும் ஊரின் தலைவன் [20]
புலவர்[தொகு]
 • கபிலர் - பாரியின் நண்பர். மூவேந்தரும் பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டிருந்தபோது பழக்கிய பறவைகளைக்கொண்டு நெற்கதிர்களைக் கொண்டுவரச் செய்து ஊரின் பசியைப் போக்கினர்.[21]
குடிமக்கள்[தொகு]
 • உமணர் - உப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒழுகையாக(சாரி சாரியாக)ச் செல்வர் (அகம்310)
 • கொங்கர் - இவர்களை ஓட்டிவிட்டுப் பசும்பூண் பாண்டியன் தனதாக்கிக்கொண்டான் (அகம் 253)
 • மழவர் - மயில்தோகையைத் தொடையாக்கித் தலையில் அணிந்திருப்பர். கோடைமலைப்பகுதி மக்கள். கோடைமலை இக்காலத்தில் கொடைக்கானல் என வழங்கப்படுகிறது.[22]
 • வடுகர் - அயிரியாறு பாயும் எருமை நன்னாட்டு(மைசூர்) மக்கள் (அகம் 253)
வள்ளல்[தொகு]
 • அருமன், சிறுகுடி என்னுமு ஊரில் வாழந்த வள்ளல். (நற்றிணை 367)
 • தழும்பன் - மருங்கூர்ப் பட்டினத்தை அடுத்திருந்த ஊணூரில் இருந்த வள்ளல். இவன் பெரும்பெயர்த் தழும்பன் என்று போற்றப்படுகிறான். இவன் முரசு முழக்கித் 'தமிழ் அகப்படுத்திய' வள்ளல் பெருமகன். இவனைத் தூங்கல்(ஓரியார்) என்னும் புலவர் போற்றிப் பாடியுள்ளார். இந்தப் பாடல் சங்கநூல் தொகுப்பில் இடம் பெறவில்லை.(அகம் 227)
 • பாரி (அகம் 78)
 • பெருஞ்சாத்தன், சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் (புறம் 395) அறப்பெயர்ச் சாத்தன் என்று இவனைப் போற்றுகிறார். இவனது இல்லத்துக்கு நக்கீரர் சென்றபோது கொக்கின் நகம் போன்ற நெல்லஞ்சோறும் கருணைக்கிழங்குக் குழம்பும் போட்டு மகிழ்வித்தானாம். அவனது மனைவியிடம் 'என்னைப் போல இவரைப் பேணுக' என்றானாம்.

போர்[தொகு]

 • ஆலங்கானப் போர் - நெடுஞ்செழியன் ஏழு அரசர்களின் கூட்டணியை வென்றது (அகம் 36)
 • கூடல் போர் - கிள்ளி வளவன் யானைப் படையுடனும் குதிரைப் படையுடனும் சென்று கூடல்(மதுரை) நகரைத் தாக்கினான். கூடல் அரசன் பழையன் மாறன் சோழனை எதிர்த்துப் போராடி அவனது குதிரைகளையும் யானைகளையும் கைப்பற்றிக்கொண்டான். இதனை அறிந்த சேர அரசன் கோதை மார்பன் மகிழ்ச்சி கொண்டான். (அகம் 346)
 • பறம்புமலை முற்றிகை - மூவேந்தர் பாரியை வளைத்தது (அகம் 76)
 • முசிறிப் போர் - நெடுஞ்செழியன் சேரனை வென்றது. இறந்தவர்களுக்காக வருந்தியது (அகம் 57)
 • பசும்பூண் பாண்டியன் கொங்கரை ஓட்டி அவரது நாடுகள் பலவற்றைத் தன் கூடல் நாட்டோடு சேர்த்துக்கொண்டான் (அகம் 253)
 • திதியனோடு போரிட்டு அன்னி மாண்டான் (அகம் 126)

ஆறு[தொகு]

 • அயிரி யாறு - எருமை நன்னாட்டில் (=மையூர் என்னும் மைசூர்) உள்ளது (அகம் 253)

ஊர்[தொகு]

 • ஆலங்கானம் - தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியனை ஆலங்கானம் என்னும் ஊரில் ஏழு அரசர்கள் கூடித் தாக்கினர். ஒரே நாள் போரில் பகல் பொழுதிலேயே பாண்டியன் அந்த எழுவரின் முரசையும் வெண்கொற்றக் குடையையும் கைபற்றினான். எழுவரும் புறமுதுகிட்டு ஓடினர். பாண்டியனின் வீரர்கள் வெற்றிமுரசு முழக்கினர். அதுபோல தலைவன் பரத்தையோடு நீராடியதை ஊரெல்லாம் பேசிக்கொண்டது. எதிர்த்துப் போரிட்ட 7 அரசர்கள்: 1 சேரல், 2 செம்பியன், 3 திதியன், 4 எழினி, 5 எருமையூரன், 6 இருங்கோ வேண்மான், 7 பொருநன் ஆகியோர். (அகம் 36)
 • இடையாறு - கரிகாலனுக்கு உரியது. பெருஞ் செல்வ வளம் மிக்கது (அகம் 141)
 • ஊணூர் - (ஊண் என்றால் சோறு. சோறு போடும் மடம் இருந்த ஊர் ஊணூர்) இதன் உம்பர்(மேல்பகுதியில்) மருங்கூர்ப் பட்டினம் இருந்தது. இதன் அரசன் தழும்பன் (அகம் 227)
 • எருமை நன்னாடு - இதன் அரசன் வடுகர் பெருமகன் எருமை. தமிழர் இதனையும் தாண்டிச் சென்று பொருள் தேடிவந்தனர்.(அகம் 253)
 • கருவூர் - ஆன்பொருநை ஆறு பாயும் ஊர். இவ்வூர் அரசன் கோதை. (அகம் 93)
 • கூடல் - வழுதிக்கு உரியது. இதன் நாளங்காடியின் பூ மணம் போலத் தலைவி மணக்கிறாள். (அகம் 93). பசும்பூண் பாண்டியனின் தலைநகர். கொங்கரின் நாடுகள் பல இவனால் பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது. (அகம் 253)
 • சிறுகுடி - மூதில் அருமன் ஊர், கடலோரத்து ஊர். (நற்றிணை 367)
 • சிறுகுடி - வாணன் வாழ்ந்த ஊர். பெருங்குளம் என்னும் ஊரின் பெருங்குளம் உடைந்தால் நீர் இந்தச் சிறுகுடியில் மீன் பிறழும். (நற்றிணை 340)
 • பவத்திரி - இதன் அரசன் திரையன் (காஞ்சி அரசன்) (அகம் 340)
 • பெருங்குளம் - செழியனுக்கு உரியது. இவ் வூரிலுள்ள குளம் உடைந்தால் அதன் நீர் பாய்ந்து வாணன் சிறுகுடிநில் மீன் பிறழும். (நற்றிணை 340)
 • மதுரை - 'திருமருது ஓங்கிய வியன் மரக் கா' (மருதமரம் ஓங்கியிருந்த காடு மருதை. மருதை என்னும் பெயர் மதுரை என மருவிற்று. ஒப்புநோக்குக: விசிறி - சிவிறி)
 • வேங்கட வைப்பு (வேங்கட நாடு) - இதனைத் தாண்டித் தமிழர் பொருள் தேடச் சென்றனர் (அகம் 141)
 • வேம்பி - இவ்வூரின் அழகு தலைவியின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஊரின் தலைவன் முசுண்டை. (அகம் 249)

துறைமுகம்[தொகு]

 • தொண்டி - இந்தத் துறைமுகத்தின் அரசன் 'வெண்கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன்' (= பல்யானைச் செல்கெழு குட்டுவன்)
 • மருங்கூர்ப் பட்டினம் - தூங்கல் வங்கம் நிற்கும் துறைமுகம் (நற்றிணை 258)- இந்தத் துறைமுகத்தை அடைய ஊணூரைத் தாண்டிச் செல்ல வேண்டும் (அகம் 227)
 • முசிறி - கொடித்தேர்ச் செழியன் என்னும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் முசிறியை முற்றுகையிட்டு (சேரனின்) யானைப்படையை அழித்தான். அப்போது போரில் இறந்தவர்களுக்காகப் பாண்டியன் வருந்தியது போலத் தலைவி தலைவன் பிரிவை எண்ணி அழுதாள். (அகம் 57)

பல்துறை[தொகு]

பழக்கவழக்கம்[தொகு]
 • தாய்வீட்டை விட்டுவிட்டுக் கணவனுடன் செல்லும் மகள் தன் சிலம்பைக் கழற்றித் தாய்வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வாள்.[23]
 • கார்த்திகைத் திருநாள் அறுமீன் என்னும் கார்த்திகை மாதம் நிறைமதி நாளில் மாலையில் தெருவில் விளக்கு வைத்துக் கொண்டாடப்படும்.[13]
 • சுவர்ப் பாவை காழ் என்னும் வயிரங்கள் பதித்து இயற்றப்படும். அதற்கு மகளிர் பூசனைப் பலி ஊட்டுவர் [23]
 • பச்சை நெல்லில் அவல் இடிப்பர்.[13]
குறிப்பு[தொகு]
 • புலிப்பல் தாலிப் புதல்வர் [24] - புலிப்பல் தாலி மனைவிக்குக் கட்டுவது அன்று. குழந்தைகளுக்குச் சூட்டும் அணி
நல்லுரை[தொகு]
 • 'இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்' [17]
 • நம் செல்வத்தை நாமே முற்றிலுமாகத் துய்க்க முடியாது' [25]
 • செல்வம் - 'கடப்பாட்டாளன் உடைப் பெரும்பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று' [26]
 • கணவனானவன் மனைவி தொழுதகு மெய்யை உடையவன் [27]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. நக்கீரர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
 2. 36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389
 3. 75, 105, 131, 161, 266, 280, 368
 4. 31, 86, 197, 258, 340, 358, 367,
 5. 56, 189, 395,
 6. அகம் 120
 7. (நெடுவேள் = திருமால், முருகன்)
 8. 8.0 8.1 புறம் 56
 9. 9.0 9.1 நற்றிணை 358
 10. அகம் 36
 11. நற்றிணை 340
 12. 12.0 12.1 12.2 அகம் 93
 13. 13.0 13.1 13.2 அகம் 141
 14. அகம் 346
 15. புறம் 395
 16. அகம் 349
 17. 17.0 17.1 அகம் 389
 18. 18.0 18.1 அகம் 126
 19. அகம் 340
 20. அகம் 249
 21. அகம் 78
 22. தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
  நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
  புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
  நீள் வரைச் சிலம்பின் (அகம் 249)
 23. 23.0 23.1 அகம் 369
 24. குறுந்தொகை 161
 25. செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்போம் எனினே தப்புந பலவே' - (புறம் 189)
 26. தலைவியின் பசப்பு (குறிந்தொகை 143)
 27. அகம் 310

வெளி இணைப்புகள்[தொகு]

நக்கீரர் பாடல் புறநானூறு 56