உள்ளடக்கத்துக்குச் செல்

விசயாலய சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஜயாலய சோழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விசயாலய சோழன்
பரகேசரி
ஆட்சிக்காலம்அண். 847 – அண். 871 CE
இராணுவப் பணி
சேவை/கிளை சோழர் படை
பல்லவ ஆளுநர் (கி.பி. 847 – 860)
முன்னையவர்சூராதிராச சோழன்
பின்னையவர்ஆதித்த சோழன்
பிறப்புஒற்றியூர் (திருவொற்றியூர்)
இறப்புஏறக்குறைய கி.பி 884
ஸ்ரீகாளஹஸ்தி
குழந்தைகளின்
பெயர்கள்
ஆதித்த சோழன்
தந்தைஒற்றியூர் ஶ்ரீ கண்ட சோழன்
மதம்சைவ சமயம்

பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆவார். ஒற்றியூரை ஆண்டு வந்த ஶ்ரீ கண்ட சோழனின் மகனான விஜயாலய சோழன் பொ.ஊ. 847இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். பொ.ஊ. 880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். இதற்க்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.

திருப்புறம்பயம்

[தொகு]

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன் (பாண்டிய மன்னன்) காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன்(பல்லவ மன்னன்) கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிருதிவிபதியின் கடைசி ஆண்டு, பொ.ஊ. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் பொ.ஊ. 870 யிலிருந்து பொ.ஊ. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. பொ.ஊ. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, பொ.ஊ. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயாலய_சோழன்&oldid=3986289" இலிருந்து மீள்விக்கப்பட்டது