விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்து வரும் இலங்கையைச் சேர்ந்த பங்களிப்பாளர்களைப் பற்றிய அறிமுகம்.

மதனாஹரன்[தொகு]

க. மதனாகரன், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திசம்பர் 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல் தொழினுட்பம், கணிதம், சதுரங்கம், துடுப்பாட்டம், மென்பொருள்கள் சார்ந்த துறைகளில் பங்களித்து வருகின்றார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் சில: ஈரசோனியச் சேர்மம், இறுதி முற்றுகை, கடவுச் சொல், முட்டாளின் இறுதி, பை மாறிலியின் அண்ணளவாக்கங்கள், மாலை மாற்று, உம்மைக் குறி. தமிழ் விக்சனரியிலும் மொழிபெயர்ப்பு விக்கியிலும் சிறிதளவில் பங்களித்து வருகின்றார்.

சிறீதரன்[தொகு]

சிறீதரன் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். தற்பொழுது புலம் பெயர்ந்து சிட்னியில் பணியாற்றுகிறார். மாஸ்கோ லுமும்பா, மற்றும் வட அயர்லாந்து குயின்சு பல்கலைக்கழகங்களில் ஒளி மின்னணுவியலில் முதுமாணிப் பட்டம் பெற்று மட்டக்களப்பு, யாழ், கொழும்பு, மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2006 சனவரி முதல் பங்களித்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் 2000 இற்கும் அதிகமான கட்டுரைகளை ஆரம்பித்து எழுதியிருக்கிறார். 365 நாட்களுக்கும் நாட்கள் வாரியாக வரலாறுகளை இற்றைப் படுத்தியமை, முதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் விக்கிசெய்திகளில் தொடர்பங்களிப்புகள் ஆகியவை இவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

சஞ்சீவி சிவகுமார்[தொகு]

thump
thump

சஞ்சீவி சிவகுமார் , இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக பிரதிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். காலநிலை மாற்றம், முதியோர் சுகாதாரம், மரபியல் நோய், தமிழ் பெயரிடல், தோப்புக்கரணம், சாய்தளம், இந்துக்களின் ஓவியக் கலை மரபு, நையாண்டிப் பாடல், இலங்கையில் கல்வி, கதைப்பாடல் என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில. இவர் தமிழ் விக்கிப்பீடியா 2011-12 இல் நடாத்திய தமிழ் விக்கி ஊடகப் போட்டிகளில் இணைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.

பீ.எம். புன்னியாமீன்[தொகு]

பீ. எம். புன்னியாமீன், (நவம்பர் 11, 1960 - 10 மார்ச் 2016) இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் 2012 வரை தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்துள்ளார். கல்வித்துறையில் பணியாற்றிய புன்னியாமீன் இதழியலில் ஆர்வம் உள்ளவர். இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். 173 நூல்களை எழுதி வெளியிட்டார். விக்கிப்பீடியாவில் இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கியப் பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றது.

மு. சிவகோசரன்[தொகு]

மு.சிவகோசரன், யாழ்ப்பாணத்திலுள்ள உடுவிலைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர். பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர் விக்கிப்பீடியா பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். வேண்டிய பகுப்புகள் மற்றும் வார்ப்புருக்களை அமைத்தல், கட்டுரைகளில் உள்ள இணைப்புகளை ஆராய்ந்து சீர்செய்தல், புதிய கட்டுரைகளை உருவாக்குதல் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க பணிகள். இந்து சமயம், துடுப்பாட்டம் மற்றும் புவியியல்/நாடுகள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் பட்டியல்களைச் சீர்செய்வதில் ஆர்வமுடையவர். யெரெவான், உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் உட்பட 40க்கு மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார்.

செந்தி[தொகு]

செந்தி, யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பெலருசில் மருத்துவப் பட்டமும் பின்னர் இதயவியலில் சிறப்பு மருத்துவமும் பயின்று உள்ளார். மே 2010 இல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். மருத்துவம், உயிரியல், வானியல் தொடர்பான கட்டுரைகள் ஆக்கம், உயிரியல் மற்றும் மருத்துவக் கலைச்சொல்லாக்கம், உரைதிருத்தம், படங்கள் உருவாக்கி இணைத்தல், கட்டுரை விரிவாக்கம் போன்ற பணிகளைச் செய்து வருகின்றார். தமிழ் விக்சனரியில் உருசியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வதிலும் மருத்துவக் கலைச்சொற்கள் திருத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றார். உயிர்ச்சத்து, கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், விண்மீன் உயிரி, பெரிபெரி, பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் மூலம் மருத்துவக் கல்வியை ஊக்குவிப்பதும், மருத்துவத்தைத் தமிழ் மொழி மூலம் அறிந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு முதன்மைத் தளமாக உருவாக்குவதும் இவரின் குறிக்கோள்கள்.

பாஹிம்[தொகு]

பாஹிம், இலங்கையில் வெலிகமையைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநகரில் வணிகம் புரிவதுடன் பன்னாட்டளவில் மொழிபெயர்ப்பாளராகவும் மொழியியலாளராகவும் பணியாற்றுகிறார். 2010 முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் ஆசிய மரநாய், இலங்கையின் மலைசார் மழைக்காடுகள், இலங்கைச் சிங்கம், செம்முகப் பூங்குயில், ஓஊ, ஈஈ, கருமுதலை, வெண் புள்ளிச் சருகுமான், யால தேசிய வனம், அச்சே சுல்தானகம், இப்றாகீம் பாசா என்பன குறிப்பிடத் தக்கவை. இவை தவிர ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் உரைதிருத்தத்திலும் மொழிசார் கலந்தாய்வுகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.

சந்திரவதனா செல்வகுமாரன்[தொகு]

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

நிரோஜன் சக்திவேல்[தொகு]

நிரோஜன் சக்திவேல், கனடாவில் வாழும் கல்லூரி மாணவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் மிக முனைப்பான இளைய பங்களிப்பாளர்களில் ஒருவர். தமிழீழம், திரைப்படத்துறை, தமிழர் வரலாறு, தமிழ் நாடகம், இசை முதலியன இவரது ஆர்வத் துறைகள். 2000க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை எழுதியது நிரோஜனின் முக்கியப் பங்களிப்பு.

கலை[தொகு]

கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு, தமிழ் விக்கி ஊடகப் போட்டி முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். மூச்சுத்தடை நோய், காச நோய், தொற்றுநோய், நோய்க்காரணி, கருச்சிதைவு, மலட்டுத்தன்மை சிகிச்சை, வெளிச் சோதனை முறை கருக்கட்டல், தாய்ப்பாலூட்டல், ஏபிஓ குருதி குழு முறைமை, பூச்சி, வாழ்க்கை வட்டம், பல்லுருத்தோற்றம், ஒன்றிய வாழ்வு, வித்து, வளர்ப்பூடகம், இழையம், வடமுனை ஒளி முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார்.

கலாநிதி[தொகு]

கலாநிதி நவம்பர் 2005 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணக்கியல், பொருளியல், தமிழ் இலக்கியம், பொது அறிவு, கணனி, அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை, இணைபயன் வளையீ, கிராமின் வங்கி, இலங்கை வரலாற்று நூல்கள், சோழர் இலக்கியங்கள், முகமது யூனுஸ், புலிநகக் கொன்றை ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

மயூரநாதன்[தொகு]

மயூரநாதன்
மயூரநாதன்

மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தனியொருவராகப் பங்களித்து இத்திட்டத்துக்கு வித்திட்டவர் மயூரநாதனே. அன்று முதல் கட்டிடக்கலை, வரலாறு, மொழியியல் ஆகிய பல்வேறு ஆர்வத் துறைகளில் 3000 க்கும் கூடுதலான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளில் கட்டிடக்கலை, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், முடிச்சு, ஓவியத்தின் வரலாறு, கோயில், யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி, தமிழ் விக்கி மேற்கோள் திட்டங்களின் தொடக்கக் காலத்தில் பங்களித்துள்ள இவர், மீடியாவிக்கி மென்பொருளின் தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு வகையான விக்கிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கே. எஸ். பாலச்சந்திரன்[தொகு]

கே. எஸ். பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற நாடக, நகைச்சுவை, திரைப்படக் கலைஞர் ஆவார். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த பாலச்சந்திரன் 2014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 2007 முதல் 2013 வரை ஈழத்துக் கலைஞர்கள், ஒலிபரப்புக் கலை, நாடகத் துறை, திரைப்படத் துறை முதலிய துறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதினார். நா. சோமகாந்தன், சுப்பு ஆறுமுகம், அ. பாலமனோகரன், ஏரம்பு சுப்பையா, இலங்கை வானொலி நாடகத்துறை, 1999 (திரைப்படம்), நான் உங்கள் தோழன், உடப்பு, கரவெட்டி ஆகிய கட்டுரைகள் இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

மயூரேசன்[தொகு]

ஜெ.மயூரேசன் இலங்கையைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். முதலில் மென்பொருள் சோதனையாளராகவும், தற்போது அன்ரொயிட் மென்பொருள் வல்லுனராகவும் பணியாற்றி வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் கணனி, இணையம், வரலாறு, இலங்கை, புதினங்கள், திரைப்படம் போன்ற பகுப்புக்களுக்குள் சுமார் 140 கட்டுரைகள் வரை எழுதியுள்ளார். இவற்றில் ஆப்கானித்தான், எனிட் பிளைட்டன், ஹாரி பாட்டர் போன்றவை இவர் தொடங்கிய முக்கியக் கட்டுரைகளாகும். இது தவிர கட்டுரை விரிவாக்கம், துப்பரவுப்பணி, புதுப்பயனர் வரவேற்பு போன்ற பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார்.

உமாபதி[தொகு]

இரகுநாதன் உமாபதி இலங்கையில் உள்ள அரியாலையில் பிறந்தவர். வவுனியாவில் புவியற்சார் தகவற் தொழில்நுட்பத்தில் பல வருடங்கள் பணியாற்றியவர். 2012 ஆம் ஆண்டுமுதல் மிதிவெடி அபாயக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக கடமையாற்றி வருகிறார். 2005 ஆம் ஆண்டு முதல் பல கணினிசார் கட்டுரைகளைத் தொடங்கியும் மேம்படுத்தியும் வருகிறார். இதில் ஜிமெயில் கட்டுரை குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மார்களைப் பற்றியும் எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவில் இலங்கைக்கான இடங்களை அடையாளப்படுத்தும் வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்க[தொகு]