விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்து வரும் சிலரைப் பற்றிய அறிமுகம்.

[தொகு] இரா.முத்துசாமி

Muthusamy.jpg

இரா.முத்துசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் நூலக அறிவியல் பட்ட மேற்படிப்பு பட்டமும், ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (டி.ஆர்.டி.சி) (Documentation Research and Training Centre (DRTC),இந்திய புள்ளியியல் நிறுவனம் (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute),பெங்களூருவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை (சி.வி.ஆர்.டி.இ,) டி.ஆர்.டி.ஒ, என்ற ஆய்வுக்கூடத்தில் நூலகராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாக்களில் டிசம்பர் 2011 முதல் பங்களித்து வரும் இவர் பங்களித்த முக்கிய கட்டுரைகள் திருவிளக்கு வழிபாடு, மூலிகைக் குடிநீர், ஈயம் பூசுதல், திருமயம் மலைக்கோட்டை,அத்தி மரச்சிலைகள், வைரப்பெருமாள் கதை, ரேக்ளா வண்டிப் பந்தயம், பவானி கைத்தறி தரை விரிப்பு, மரப்பாச்சி பொம்மைகள், கொலுசு, திருமண் முதலியன. விக்கிமீடியா காமன்சிலும், தமிழ் விக்சனரியிலும் பங்களித்து வருகிறார்.

[தொகு] அன்டன்

Anton - User Ta Wiki.JPG

அன்டன், இலங்கையிலுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சமூகத்துறையில் பணியாற்றிய இவர், வலைத்தள வடிவமைப்பு சார் சேவைகள் அளிப்பதைத் தொழில்முறையாகக் கொண்டவர். தமிழ் விக்கிப்பீடியாவில் கார்த்திகை 2011 முதல் பங்களித்து வரும் இவர் பங்களித்த முக்கிய கட்டுரைகளில் அரபு-இசுரேல் முரண்பாடு, தமிழர் வரலாற்றுக் காலக்கோடு, கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு, யாழ் தொல் பொருட்காட்சிச்சாலை, மேட்லேப், கிராவ் மகா, கபோய்ரா போன்றவை குறிப்பிடத்தக்கன. பல கட்டுரைகளின் விளக்கப் படங்களையும் தமிழாக்கி உள்ளார். ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வமுடைய அன்டன் தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பங்கு பெற்று தொடர் பங்களிப்பாளருக்கான பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிமீடியா காமன்சிலும் பங்களித்து வருகிறார்.

[தொகு] சசிக்குமார்

ESSAAR SASIKUMAR.jpg

எஸ். ஆர். சசிக்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டமும், மதுரை காமராசர் பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்று, மதுரையில் உள்ள செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். மதுரைத் தமிழ், டைம்ஸ் சதுக்கம், ஜன் லோக்பால் மசோதா, திருமங்கலம் சூத்திரம், நோபல் பரிசு சர்ச்சைகள், இழிவான போர் (அர்ஜென்டினா), அவகாதரோவின் விதி முதலியவை இவர் தொடங்கிய முக்கியக் கட்டுரைகளில் சில. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடைய சசிக்குமார் தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிமீடியா காமன்சிலும் பங்களித்து வருகிறார்.

[தொகு] மதனாஹரன்

User Mathanaharan.jpg

க. மதனாஹரன், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திசம்பர் 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல் தொழில்நுட்பம், கணிதம், சதுரங்கம், துடுப்பாட்டம், மென்பொருள்கள் சார்ந்த துறைகளில் பங்களித்து வருகின்றார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் சில: ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை, சாம்பியன்ஸ் லீக் இருபது20, கடவுச் சொல், டிஷ் டிவி, பை மாறிலியின் அண்ணளவாக்கங்கள், விண்டோஸ் துருவி, சிப்பாய் (சதுரங்கம்). தமிழ் விக்சனரியிலும் மொழிபெயர்ப்பு விக்கியிலும் சிறிதளவில் பங்களித்து வருகின்றார். தமிழ் விக்கிமீடியாத் திட்டங்களில் பன்முகப் பங்களிப்போரில் மதனாஹரன் மிக இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வயது நிறைந்த இவர் தற்பொழுது பாடசாலையில் பயின்று வருகிறார்.

[தொகு] செல்வசிவகுருநாதன்

Maa.say.jpg

மா. செல்வசிவகுருநாதன் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னையில் இயந்திரப் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் அக்டோபர் 2011 முதல் பங்களித்து வருகிறார். இசை, இதிகாசம், பக்தி, பொறியியல், மேலாண்மை, ஊடகம், இலக்கியம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல், புதுப் பயனர்களுக்கு உதவுதல், விக்கிப்பீடியா பரப்புரை முதலிய பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், தமிழ் விக்சனரியிலும் சிறிய அளவில் பங்களித்து வருகிறார்.

[தொகு] சண்முகம்

ப. சண்முகம், தமிழ்நாட்டில் உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர். தற்போது கோவையில் இளநிலை பொறியியல் இறுதியாண்டு இயந்திர மின்னணுவியல் பயின்று வருகிறார். இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரிவுகளும் மாவட்டங்களும், ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம், இன்சாட் செயற்கைக் கோள் முதலிய சில கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். புதுப்பயனர் வரவேற்பு, எரிதக் கண்காணிப்பு, பகுப்பாக்கம் போன்ற விக்கி பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் உள்ளவர். மொழிபெயர்ப்பு விக்கியிலும், மற்ற விக்கிமீடியா திட்டங்களிலும் அவ்வப்போது பங்களித்து வருகிறார்.

[தொகு] வாசு

வாசு, தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்தவர். பிட்ஸ், பிலானியில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். 2008 முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் கருநாடக இசை, படப்பிடிப்பு தொடர்பாக பங்களித்து வருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் மேளகர்த்தா இராகங்களின் படிமங்களையும் ஜன்னிய இராகங்களின் படிமங்களையும் சேர்த்திருக்கிறார். இவற்றைத் தவிர, பல வகையான ஒளிப்படங்களையும் விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றியுள்ளார்.

[தொகு] சிறீதரன்

சிறீதரன் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். தற்பொழுது புலம் பெயர்ந்து சிட்னியில் பணியாற்றுகிறார். மாஸ்கோ லுமும்பா, மற்றும் வட அயர்லாந்து குயின்சு பல்கலைக்கழகங்களில் ஒளி மின்னணுவியலில் முதுமாணிப் பட்டம் பெற்று மட்டக்களப்பு, யாழ், கொழும்பு, மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2006 சனவரி முதல் பங்களித்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் 2000 இற்கும் அதிகமான கட்டுரைகளை ஆரம்பித்து எழுதியிருக்கிறார். 365 நாட்களுக்கும் நாட்கள் வாரியாக வரலாறுகளை இற்றைப் படுத்தியமை, முதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் விக்கிசெய்திகளில் தொடர்பங்களிப்புகள் ஆகியவை இவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

[தொகு] ஸ்ரீகாந்த்

User Logicwiki 2.JPG

ஸ்ரீகாந்த், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர். தற்போது ஐதராபாத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். போக்குவரத்து, திறமூல, திற-தரவு சார்புடைய திட்டங்களில் ஆர்வம் மிக்கவர். 2010 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்பம் சார்ந்து பங்களித்து வருகிறார். மீடியாவிக்கி வழு மேலாண்மை, குறுந்தொடுப்பு, சில கருவிகளுக்கான நிரலாக்கம், தள அறிவிப்புகள் திட்டம், தமிழ் விக்கி ஊடகப் போட்டி, நரையம், இணைய எழுத்துரு நீட்சிகள் சோதனை முதலியவற்றில் ஈடுபட்டுள்ளார். விக்கிப்பீடியா பரப்புரையிலும் ஆர்வமுள்ள இவர், சென்னையில் நடந்த சில விக்கிப்பீடியா பட்டறைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

[தொகு] அஸ்வின்

அஸ்வின் குமார் .த சென்னையைச் சேர்ந்தவர். தற்போது இயந்திரப் பொறியியல் பயின்று வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏப்ரல் 22, 2011 முதல் பங்களித்து வருகிறார். மில்லெனியம் பூங்கா, மிச்சிகன் அவென்யூ (சிகாகோ), சிகாகோ பெருந்தீ போன்றவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் பகுப்பு உருவாக்கம், வார்ப்புரு பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

[தொகு] தென்காசி சுப்பிரமணியன்

Tenkasisubramanian.jpg

தென்காசி சுப்பிரமணியன், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் படிக்கும் தென்காசியைச் சேர்ந்த இயந்திரப் பொறியியல் மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 15 சூலை 2011 முதல் பங்களித்து வருகிறார். மயன் செங்கோண முக்கோண விதி, புடைநொடி ஆகிய படங்களை தமிழ் விக்கிப்பீடியாவுக்காக வரைந்திருக்கிறார். தமிழ் தொன்மவியல், தமிழர் வரலாறு, அண்டவியல், தமிழர் அறிவியல், சித்தரியல், நாகரிகங்கள், ஆயுதங்கள் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். குமரிக்கண்டம், தென்காசி பாண்டியர், பேரண்டத்தில் புவியின் அமைவிடம், சங்க கால வானியல், சித்தர்களின் அண்டவியல், இன்கா தகவல் பரிமாற்றம், பினாகா ஆகியவை இவர் அதிகமாக பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] கார்த்திக் இராமானுஜம்

Jenakarthik.jpg

கார்த்திக் ராமானுஜம், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட மதுரை தமிழர். தற்பொழுது சிங்கப்பூரில் பொறியியலில் பட்ட மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார். 2007 ஆம் ஆண்டு ஆங்கில விக்கியில் தன் பணியை தொடங்கிய இவர், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். அறிவியல், சமயம், தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் சார்ந்த தலைப்புகளில் விருப்பமுடையவர். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: சிலம்பு, வாத்தலகி, ஹஜ், இந்து சமய மெய்யியலாளர்கள், ஹராம், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள், சிங்கப்பூரில் தமிழ் கல்வி, சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில். தற்பொழுது இந்திய நகரங்கள் குறித்த கட்டுரைகளை முன்னிலைப்படுத்தி எழுதி வருகிறார்.

[தொகு] கிருஷ்ணபிரசாத்

கிருஷ்ணபிரசாத்.jpg

கிருஷ்ணபிரசாத், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த குடிசார் பொறியியல் மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 2011 முதல் பங்களித்து வருகிறார். பொறியியல், கணனி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கம், உரைதிருத்தம், வார்ப்புரு பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் செயல்பட்டு வருகிறார். குடிசார் பொறியாளர், ஊடக இயக்கி, தொடுதிரை, தாய்ப்பலகை, வரைவியல் முடுக்கி அட்டை, விக்கிமூலம், வான்கப்பல் போன்றவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை.

[தொகு] சிங்கமுகன்

லியோ ஆண்டனி என்ற இயற்பெயர் கொண்ட சிங்கமுகன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சிக் கழகம், கேரளாவில் முதுஆய்வு மாணவராக உள்ளார். பெப்ரவரி 2011 முதல் தமிழ் விக்கித்திட்டங்களில் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் நுண்ணுயிரியல், உயிரியல், தாவரங்கள் போன்ற துறைகளில் கட்டுரையாக்கம், உயிரியல் கலைச்சொல்லாக்கம் போன்ற பங்களிப்புகளை செய்து வருகிறார். நீலப்பச்சைப்பாசி, மிதவைவாழி, உயிர்வழிப்பெருக்கம், வங்கவராசி, பயறு, நுண்ணுயிர்த் தின்னி ஆகியவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் சில.

[தொகு] பார்வதிஸ்ரீ

Parvathisri.jpg

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும், பெரியார் பலகலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், செம்பகராமன் பிள்ளை, ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆர்தர் சி. கிளார்க்‎, கப்ரேக்கர் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

[தொகு] மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

Muthu.jpg

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர். கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருகின்றார். பல ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பின் கணினித் துறையிலும் பணியாற்றியவர். தற்சமயம் இவர் மலேசிய நண்பன் நாளிதழின் ‘கணினியும் நீங்களும்’, ‘மாணவர் சோலை’ எனும் பகுதிகளுக்கு பொறுப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசிய நகரங்கள், நபர்கள், அமைப்புகள், வரலாறு, அரசியல், பள்ளிகள் ஆகியவற்றைவைப் பற்றி ஏறக்குறைய 50 கட்டுரைகளை எழுதியுள்ளார். சிபில் கார்த்திகேசு, ஈப்போ, பரமேசுவரா, கம்பார் நகரம், பேராக், தேசிய முன்னணி (மலேசியா). மலேசிய தமிழ்ப்பள்ளிகள், சுங்கை பட்டாணி போன்றவை அவற்றுள் சில.

[தொகு] நந்தகுமார்

Nandakumar.jpg

நந்தகுமார் தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்தவர். தற்பொழுது இணைப் பேராசிரியராக கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் உள்ளார். முன்பு லுண்ட்_பல்கலைக்கழகம், உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராக இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் லுண்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2011 ஜனவரி முதல் பங்களித்து வருகிறார்; ஏறத்தாழ 100 உயிரிவேதியியல் மற்றும் மருத்துவத் துறைசார் கட்டுரைகள் எழுதியுள்ளார். அஃப்ளாடாக்சின், அகநச்சு, அமினோ அமிலம் (புரதமாக்குபவை), கரோலின்ஸ்கா மையம், கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா, கிளைசின், சிட்ரிக் அமில சுழற்சி, நோய் மாதிரி, யூரியா சுழற்சி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்சனரியிலும் உயிர்வேதியியல் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்து வருகிறார்.

[தொகு] சஞ்சீவி சிவகுமார்

thump

சஞ்சீவி சிவகுமார் , இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக முதுநிலை உதவிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். காலநிலை மாற்றம், முதியோர் சுகாதாரம், மரபியல் நோய், தமிழ் பெயரிடல், தோப்புக்கரணம், சாய்தளம், இந்துக்களின் ஓவியக் கலை மரபு, நையாண்டிப் பாடல், இலங்கையில் கல்வி, கதைப்பாடல் என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில.

[தொகு] சூர்ய பிரகாசு

சூர்ய பிரகாசு.ச.அ. , சேலத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் இயந்திரவியல் பொறியியல் (முதலாமாண்டு) பயின்று வருகிறார். தமிழ் மீது தணியா ஆர்வம் உடையவர். சூன் 2010 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இதுவரை இவர் எழுதிய கட்டுரைகளாவன வருடு ஊடுருவு நுண்ணோக்கி, குரோமாகுநன், தியான்கே-1, மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள். மேலும் பல புதிய அறிவியற்கட்டுரைகளை அளிப்பதே இவரின் குறிக்கோள். மேலும் துப்புரவுப் பணிகளையும் முதற்பக்க இற்றைப்படுத்துதல் பணிகளையும் செய்து வருகிறார்.

[தொகு] பவுல் லியோன் வறுவேல்

முனைவர் பவுல் லியோன் வறுவேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திட்டுவிளை என்னும் ஊரில் பிறந்தவர். நாகர்கோவில், உரோமை நகர், நியூயார்க் ஆகிய நகர்களில் கல்விபயின்று கிறித்தவ இறையியலில் முனைவர் பட்டமும், மெய்யியலில் பேராசிரியர் நிலையும் பெற்று, திருச்சிராப்பள்ளி தூய பவுல் இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தற்போது நியூயார்க் மாநிலத்திலுள்ள பஃபலோ நகரில் கிறித்து அரசர் இறையியல் கல்லூரியில் பேராசிரியராகச் செயல்படுகின்றார். இவரது ஆர்வத்துறைகள் கிறித்தவ இறையியல், மெய்யியல் கோட்பாடுகள், சமூகவியல், தமிழ் இலக்கியம், சமயமும் சமூகமும் முதலியனவாம். 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் நடுவராகப் பங்கேற்க முன்வந்த இவர், செல்வா அளித்த ஊக்கத்தை ஏற்று, மார்ச்சு 30, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: இயேசுவின் உயிர்த்தெழுதல், சிலுவைப்பாதை, தமிழ் விவிலியம், எஸ்தாக்கியார் நாடகம், துக்கப்பாட்டு, நற்செய்தி, கிறித்தவ இறைவேண்டல்கள், ஒத்தமை நற்செய்திகள், கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை, செப்துவசிந்தா, இறையியல், கிறித்தவ இறையியல், உடன்படிக்கை (விவிலியம்), தமிழ் நடை. மேலும், இயேசு கிறித்து, கிறித்துமசு, சென்னை சாந்தோம் தேவாலயம். விக்கிமூலத்தில் திருவிவிலியம் முழுவதையும் ஒவ்வொரு நூலாகப் பதிவேற்றிவருகின்றார்.

[தொகு] பீ.எம். புன்னியாமீன்

Punniyameenkalai.jpg

பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். கல்வித்துறையில் பல பொறுப்புகளுக்குப் பிறகு, தற்போது வெளியீட்டு நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இதழியலில் ஆர்வம் மிக்க இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். இதுவரை 173 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகள் சகல துறைகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கிய பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

[தொகு] மு. சிவகோசரன்

Sivakosaran.jpg

மு.சிவகோசரன், யாழ்ப்பாணத்திலுள்ள உடுவிலைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர். பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர் விக்கிப்பீடியா பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். வேண்டிய பகுப்புகள் மற்றும் வார்ப்புருக்களை அமைத்தல், கட்டுரைகளில் உள்ள இணைப்புகளை ஆராய்ந்து சீர்செய்தல், புதிய கட்டுரைகளை உருவாக்குதல் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க பணிகள். இந்து சமயம், துடுப்பாட்டம் மற்றும் புவியியல்/நாடுகள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் பட்டியல்களைச் சீர்செய்வதில் ஆர்வமுடையவர். யெரெவான், உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் உட்பட 40க்கு மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார்.

[தொகு] செங்கைப் பொதுவன்

Wikipedia WikimeetupChennai2 14Nov2010 0944.jpg

செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.

[தொகு] சோடாபாட்டில்

சோடாபாட்டில் தமிழ்நாடு, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முதலில் ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார்; பின் 2010 விக்கிப்பீடியா தகவல் பக்கப் போட்டியில் போட்டியாளராகக் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர், தமிழ்நாடு மற்றும் இந்தியத் தேர்தல்கள், ஆங்கில மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், இந்திய விடுதலை இயக்கம் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார். மேலும், புதிய கட்டுரைகளின் விக்கியாக்கம், பகுப்பு உருவாக்கம், துப்புரவு போன்ற பராமரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு, விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

[தொகு] செந்தி

செந்தி, யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பெலருசில் மருத்துவப் பட்டமும் பின்னர் இதயவியலில் சிறப்பு மருத்துவமும் பயின்று உள்ளார். மே 2010 இல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். மருத்துவம், உயிரியல், வானியல் தொடர்பான கட்டுரைகள் ஆக்கம், உயிரியல் மற்றும் மருத்துவக் கலைச்சொல்லாக்கம், உரைதிருத்தம், படங்கள் உருவாக்கி இணைத்தல், கட்டுரை விரிவாக்கம் போன்ற பணிகளைச் செய்து வருகின்றார். தமிழ் விக்சனரியில் உருசியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வதிலும் மருத்துவக் கலைச்சொற்கள் திருத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றார். உயிர்ச்சத்து, கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், விண்மீன் உயிரி, பெரிபெரி, பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் மூலம் மருத்துவக் கல்வியை ஊக்குவிப்பதும், மருத்துவத்தைத் தமிழ் மொழி மூலம் அறிந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு முதன்மைத் தளமாக உருவாக்குவதும் இவரின் குறிக்கோள்கள்.

[தொகு] ஜெயரத்தின மாதரசன்

ஜெயரத்தின மாதரசன்.jpg

ஜெயரத்தின மாதரசன், புதுச்சேரியைச் சேர்ந்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் கணிணியின் பயன்பாட்டியலில் முதுகலையைப் பயின்று வருகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். நடப்பு நிகழ்வுகள், கத்தோலிக்கம், கிறித்தவப் புனிதர்கள், கிறித்தவ இறையியல் முதலியன இவரது ஆர்வத் துறைகள்.விவிலிய புத்தகங்கள், திருத்தூதர், சமவெளிப் பொழிவு, பாஸ்கா புகழுரை, பாஸ்கா திரி, பதுவை அந்தோனியார், செபமாலை திருத்தந்தையர்களின் பட்டியல், குல மரபுச் சின்னம், ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில. மேலும் கிறித்தவத் தலைவர், புனிதர் முதலிய தகவற்சட்டங்களை உருவாக்கியும் மேம்படுத்தியும் உள்ளார். பவுல் லியோன் வறுவேல் மற்றும் கனகரத்தினம் சிறீதரன் ஆகியோருடன் இணைந்து கிறித்தவம் வலைவாசலை உருவாக்கப் பணியாற்றியுள்ளார்.

[தொகு] பாஹிம்

Fahim.jpg

பாஹிம், இலங்கையில் வெலிகமையைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநகரில் வணிகம் புரிவதுடன் பன்னாட்டளவில் மொழிபெயர்ப்பாளராகவும் மொழியியலாளராகவும் பணியாற்றுகிறார். 2010 முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் ஆசிய மரநாய், இலங்கையின் மலைசார் மழைக்காடுகள், இலங்கைச் சிங்கம், செம்முகப் பூங்குயில், ஓஊ, ஈஈ, கருமுதலை, வெண் புள்ளிச் சருகுமான், யால தேசிய வனம், அச்சே சுல்தானகம், இப்றாகீம் பாசா என்பன குறிப்பிடத் தக்கவை. இவை தவிர ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் உரைதிருத்தத்திலும் மொழிசார் கலந்தாய்வுகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.

[தொகு] ஸ்ரீதர்

Srithar.jpg

ஸ்ரீதர் நாராயணசாமி, திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர். நூற்பாலை எழுத்தராக பணிபுரிந்து, தற்போது உழவராக உள்ள இவர், அக்டோபர் 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். கட்டுரை உருவாக்கம், விரிவாக்கம், உரைதிருத்தம் ஆகிய பணிகளில் செயல்பட்டு வருகிறார். ரா. கிருஷ்ணசாமி நாயுடு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பட்டுப்புழு வளர்ப்பு, பஞ்சகவ்யம், கஸ்தூரிபாய், ராட்டை முதலியன இவர் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்கிமீடியாவின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

[தொகு] பேராசிரியர். வி. கிருஷ்ணமூர்த்தி

Profvk-thumb.JPG

பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணிதம், ஆன்மிகம் முதலிய தலைப்புகளில் 2007ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இடவியல், வரிசைமாற்றம், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், வைணவம் கட்டுரைகள் போன்று ஆழமான நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை இவர் விக்கிக்கு அளித்துள்ளார். இவர் பிர்லா அறிவியல் நுட்பவியல் கழகம் (BITS பிலானி), அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியராக இருந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எல்லோரும் ஏன் பங்களிக்க வேண்டும் என விக்கி பட்டறைக்கு அவர் வழங்கிய உரையை இங்கு படிக்கலாம்.

[தொகு] சந்திரவதனா செல்வகுமாரன்

Chandra.jpg

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] மகிழ்நன்

MakizNan3-cropped.JPG

மகிழ்நன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள மேலக்கால் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில் நுட்பவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் வெண்டை மஞ்சள் நரம்பு தீ நுண்மத்தில் ஆய்வுப் பட்டமும், இசுரேல், பெட்-தேகன், வல்கானி மையத்தில் தக்காளி இலை சுருட்டு தீ நுண்மத்தில் ஆய்வும், இசுரேல், ரேகொவாட், வைசுமன் மையத்தில் மூளை புற்றுநோய் குருத்தணுக்கள் குறித்த ஆய்வும் செய்துள்ளார். தற்பொழுது மூளையில் காயங்களினால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் மூலக்கூற்று உயிரியல், மரபியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல ஆழ்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். கணிமி, டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி, பக்டிரியல் படிவாக்கம், செமினிவிரிடீ, வெசுட்டர்ன் படிவு ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] தானியல் பாண்டியன்

Daniel-pandian.jpg

தானியல் பாண்டியன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பங்களாச்சுரண்டையைச் சேர்ந்தவர். தற்போது, சிகாகோ நகரில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கி முழுமையாக்குவதில் ஆர்வம் உடையவர். நீர் மின் ஆற்றல், மனித மூளை, கொல்கத்தா, சூரியன், சிகாகோ, இந்தியத் தரைப்படை, நீர்மூழ்கிக் கப்பல் முதலிய இவர் உருவாக்கிய கட்டுரைகளில் சில.

[தொகு] த. உழவன்

தகவலுழவன் 2007ஆம் ஆண்டில் இருந்து தமிழ் விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாக பங்களித்துவருகிறார். இவர் உயிரியல் துறையில் பயிற்சி பெற்றவர். தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்தவர். இவர் கட்டுரைகளுக்கு பொருத்தமான பல படங்களை எடுத்து விக்கி பொது ஊடகத்தில் இட்டுள்ளார். தமிழ் விக்சனரியில் அடிப்படைச் சொற் பட்டியல் உருவாக்கம், உயிரியல், தமிழ் முதலியவற்றில் ஆர்வம் உடையவர். கறையான், சபாபதி நாவலர், மண், ஆர்மடில்லோ, வாழை, பிரான்டு முள்ளெலி ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] அராப்பத்

Arafat.JPG

அராப்பத் ரியாத், பெங்களூரில் பணிபுரியும் பொறியாளர். திருநெல்வேலி மாவட்டம், பேட்டை நகரைச் சேர்ந்தவர். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இசுலாம், பொது அறிவு, புகழ்பெற்ற மாந்தர்கள், தொழில்நுட்பம், வரலாறு முதலிய துறைகளில் எழுதி வருகிறார். தீயணைப்பான், தீ எச்சரிக்கை அமைப்பு, இராச நாகம், சீன சோதிடம், சேரமான் பெருமாள், அக்கா மகாதேவி, சான் சல்லிவன் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] நிரோஜன் சக்திவேல்

நிரோஜன் சக்திவேல்.jpg

நிரோஜன் சக்திவேல், கனடாவில் வாழும் கல்லூரி மாணவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் மிக முனைப்பான இளைய பங்களிப்பாளர்களில் ஒருவர். தமிழீழம், திரைப்படத்துறை, தமிழர் வரலாறு, தமிழ் நாடகம், இசை முதலியன இவரது ஆர்வத் துறைகள். 2000க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை எழுதியது நிரோஜனின் முக்கியப் பங்களிப்பு.

[தொகு] ஹிபாயத்துல்லா

Copy (2) of Untitled-4.jpg

ஹிபாயத்துல்லா, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர். தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். இதழியல் அனுபவம் உள்ள ஹிபாயத்துல்லா, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார். இசுலாம், வரலாறு, அரசியல், தமிழ்நாட்டு ஊர்கள், தமிழக நபர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவதோடு விக்கியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி, தமிழ் முஸ்லிம்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தமிழ்நாடு வக்பு வாரியம், கா.காளிமுத்து, இராம. வீரப்பன் ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] தேனி. எம். சுப்பிரமணி

தேனி எம்.சுப்பிரமணி

தேனி எம்.சுப்பிரமணி, டிசம்பர் 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இதழியலில் ஆர்வம் மிக்கவர். ஸ்ரீ நாராயணகுரு, தேனி மாவட்டம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சொத்து வரி, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், கண்ணகி கோயில், இந்தியச் சரணாலயங்கள், தொழிலாளர்களுக்கான மீதூதியம், ஹென்றி பவர் ஐயர் முதலிய பல தலைப்புகளில் முதன்மையாகப் பங்களித்திருக்கிறார். இவர் எழுதியுள்ள தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் டிசம்பர்'2010ல் வெளியானது.

[தொகு] கலை

கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் சிறுநீரக ஆய்வியல் கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். மூச்சுத்தடை நோய், காச நோய், வடமுனை ஒளி, தொற்றுநோய், நோய்க்காரணி, எறும்பு முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

[தொகு] கலாநிதி

Kalanithe.jpg

கலாநிதி நவம்பர் 2005 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணக்கியல், பொருளியல், தமிழ் இலக்கியம், பொது அறிவு, கணனி, அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை, இணைபயன் வளையீ, கிராமின் வங்கி, இலங்கை வரலாற்று நூல்கள், சோழர் இலக்கியங்கள், முகமது யூனுஸ், புலிநகக் கொன்றை ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] Werklorum

Werklorum, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் , ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள் , ராப் இசைக் கலைஞர்கள் , ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சிகள் , ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.


[தொகு] வத்சன்

Vatsan.jpg

ஸ்ரீவத்சன், சென்னையை சேர்ந்த மென்பொருளாளர். அக்டோபர் 2009இல் இருந்து தமிழ் விக்கிபீடியாவில் பங்களித்து வருகிறார். காகா,மதராசு தொழில்நுட்ப நிறுவனம்,படைநடவடிக்கை திரிசூலம்,ஆலன் மூர்,வீ ஃபோர் வென்டேட்டா, டேவிட் லாயிட்,டீசீ காமிக்ஸ்,மார்வெல் காமிக்ஸ்,முகம்மது அலி,முகமது அலி வம்சத்தின் அரசர்கள் பட்டியல்,முகமது அலி வம்சம் முதலிய கட்டுரைகளில் பங்களித்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியா பற்றி டுவிட்டர் தளத்தில் அறிவிப்புகள் செய்து வருகிறார்.

[தொகு] இராஜ்குமார்

இராஜ்குமார், அரியக்குடியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றுகிறார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். முழு அக எதிரொளிப்பு, மின்னழுத்தமானி, செம்மை நெல் சாகுபடி, கீற்று முடைதல், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் பட்டியல், இயக்கி, எதிரொளிப்பு, அலைநடத்தி, மாறுதிசை மின்சார இயக்கி ஆகிய கட்டுரைகளில் முதன்மையாக பங்காற்றியுள்ளார் .

[தொகு] குறும்பன்

குறும்பன், நாமக்கல் நகரைச் சேர்ந்தவர். தற்போது ஐக்கிய அமெரிக்காவில் மென் பொருள் துறையில் பணியாற்றுகிறார். இவர் 2007ம் ஆண்டிலிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்காற்றுகிறார். வரலாறு, புவியியல், அரசியல் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர். காவிரி ஆறு, மஞ்சள் ஆறு, நியூயார்க் நகரம், வாசிங்டன், டி. சி., தமிழக மக்களவைத் தொகுதிகள், மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, நாமக்கல் முதலான பல கட்டுரைகளில் முதன்மையாக பங்காற்றியுள்ளார். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் பணியாற்றி வருகிறார்.

[தொகு] மணியன்

மணியன்-cropped.jpg

மணியன், மும்பையில் வாழும் தொலைத்தொடர்பியல் பொறியாளர். முன்பு ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இந்தியத் தொலைதொடர்புப் பணி அதிகாரியாகவும் பின்னர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டிலும் பணியாற்றிய பிறகு, தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திரா காந்தி அமைதிப் பரிசு, சூரிய நாட்காட்டி, மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு, நீரில் பாய்தல் முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியா குறித்த பல உதவிக்கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் பங்களித்துள்ளார்.

[தொகு] சுந்தர்

சுந்தர்

சுந்தர், தேடுபொறித் துறையில் பணியாற்றும் தகவல் பெறுநுட்ப வல்லுனர். 2004-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வருகிறார். மொழியியல், உயிரியலில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதியுள்ள கட்டுரைகளில் வெண்பா, மௌடம், புணர்ச்சிப் பரவசநிலை, கிப்பன் பண்டம், பகடிப்பட இயற்பியல், கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை, மாந்தவுருவகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டம் மூலம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழ் விக்சனரியில் சேர்த்தது சுந்தரின் ஆகச் சிறந்த பங்களிப்பு ஆகும். மேலும் இவர், மீடியாவிக்கி நுட்பப் பணிகள், விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள், கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும், விக்கிமீடியா உறவுத் திட்டங்களுடனான தொடர்பிலும் ஈடுபட்டு வருகிறார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகளைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றைப் படித்துள்ளார்.

[தொகு] மயூரநாதன்

மயூரநாதன்

மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தனியொருவராகப் பங்களித்து இத்திட்டத்துக்கு வித்திட்டவர் மயூரநாதனே. அன்று முதல் கட்டிடக்கலை, வரலாறு, மொழியியல் ஆகிய பல்வேறு ஆர்வத் துறைகளில் 3000 க்கும் கூடுதலான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளில் கட்டிடக்கலை, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், முடிச்சு, ஓவியத்தின் வரலாறு, கோயில், யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி, தமிழ் விக்கி மேற்கோள் திட்டங்களின் தொடக்கக் காலத்தில் பங்களித்துள்ள இவர், மீடியாவிக்கி மென்பொருளின் தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு வகையான விக்கிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

[தொகு] இரவி

Ravi.png

இரவி, ஒரு தொழில்முறை வலைத்தள வடிவமைப்பாளர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2005 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். கட்டுரைகள் உரை திருத்தம், தளத்துப்புரவு, மீடியாவிக்கி இடைமுகப்புத் தமிழாக்கம், தமிழ்விக்கிக் கொள்கை உரையாடல்கள், உதவிப்பக்கங்கள் உருவாக்கம் முதலிய பணிகளில் ஈடுபடுபவர். பயிற்சிப் பட்டறைகள், ஊடகத் தொடர்பு, வலைப்பதிவுகள் மூலம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை மேம்படுத்தி வருகிறார். 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியின் கள ஒருங்கிணைப்புகளில் முக்கிய பங்கேற்றார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கண்காட்சியில் தமிழ் விக்கித்திட்டங்களுக்கான சிறப்புப்பகுதி ஒன்றைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு விக்கிமேனியாவில் கூகுள் மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை முன்வைத்தார். தமிழ் விக்சனரியின் தொடக்க நாட்களில் அத்தளத்தை ஒழுங்கு செய்து பயனர்களை ஈர்க்க வழிசெய்தார். விக்சனரியில் முதல் முறையாகத் தானியங்கி வாயிலாகச் சொற்களைப் பதிவேற்றிய திட்டத்துக்கான திட்டமிடலிலும் இயக்கத்திலும் கலந்துள்ளார்.

[தொகு] கே. எஸ். பாலச்சந்திரன்

KSBalachandran-cropped.jpg

கே. எஸ். பாலச்சந்திரன் அறியப்பெற்ற ஈழத்தின் நாடக, நகைச்சுவை, திரைப்படக் கலைஞர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்கிறார். 2007 முதல் ஈழத்துக் கலைஞர்கள், ஒலிபரப்புக் கலை, நாடகத் துறை, திரைப்படத் துறை முதலிய துறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார். நா. சோமகாந்தன், சுப்பு ஆறுமுகம், அ. பாலமனோகரன், ஏரம்பு சுப்பையா, இலங்கை வானொலி நாடகத்துறை, 1999 (திரைப்படம்), நான் உங்கள் தோழன், உடப்பு, கரவெட்டி ஆகிய கட்டுரைகள் இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

[தொகு] செல்வா

Selva IWPSD.jpg

செல்வா என்று அழைக்கப்படும் செ. இரா. செல்வக்குமார், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பின்னர் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய ஆய்வுத்துறை குறைக்கடத்திக் கருவிகள் நுட்பம் பற்றியது. மே 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் (இதுவரை ஏறத்தாழ 800 கட்டுரைகள்), உரைதிருத்தம், படங்கள் உருவாக்குதல், இணைத்தல், தமிழ்விக்கி கொள்கை, நடை பற்றிய உரையாடல்களில் பங்களித்தல் முதலான பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். கலைச்சொற்கள் ஆக்கித் தருவதிலும், விக்கிப்பீடியர்களுக்கு ஊக்கம் தந்து உதவுவதிலும் ஆர்வம் காட்டுகின்றார். கனடாவில் விக்கிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், பொதுவாக இணைய உலகில் விக்கிப்பீடியாவின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தல் முதலான பணிகளிலும் ஈடுபடுகின்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு நடத்திய விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியை உருவாக்குவதற்கும், நடுவர்கள் தேர்வுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

[தொகு] நற்கீரன்

Nat.jpeg

நற்கீரன். வசிப்பது ரொறன்ரோ. தொழில் நிரலாக்கம். கல்வி பொறியியல். 2005 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். கட்டுரை ஆக்கம், திருத்தம், பகுப்பாக்கம், தளத்துப்புரவு, பயிற்சிப் பட்டறை, விக்கிச் சமூகம், கொள்கையாக்கம் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கனடா, தமிழர், இறைமறுப்பு, கட்டுரை, மின்காந்த அலைகள், அலைக்கம்பம், பெர்ள், பி.எச்.பி, இணக்க முடிவு ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்கிப்பீடியாவையும், விக்கி ஊடகங்களையும் அறிவியற் தமிழின் ஒரு முதன்மைக் தளமாக, கூட்டு மதிநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக வடிவமைப்பது இவரின் நோக்கம் ஆகும்.

[தொகு] சிவக்குமார்

Siv.JPG

சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

[தொகு] மயூரேசன்

Mayu.jpg

ஜெ.மயூரேசன் இலங்கையைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். முதலில் மென்பொருள் சோதனையாளராகவும், தற்போது அன்ரொயிட் மென்பொருள் வல்லுனராகவும் பணியாற்றி வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் கணனி, இணையம், வரலாறு, இலங்கை, புதினங்கள், திரைப்படம் போன்ற பகுப்புக்களுக்குள் சுமார் 140 கட்டுரைகள் வரை எழுதியுள்ளார். இவற்றில் ஆப்கானித்தான், எனிட் பிளைட்டன், ஹாரி பாட்டர் போன்றவை இவர் தொடங்கிய முக்கியக் கட்டுரைகளாகும். இது தவிர கட்டுரை விரிவாக்கம், துப்பரவுப்பணி, புதுப்பயனர் வரவேற்பு போன்ற பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார்.

[தொகு] உமாபதி

இரகுநாதன் உமாபதி இலங்கையில் உள்ள அரியாலையில் பிறந்தவர். வவுனியாவில் புவியற்சார் தகவற் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறார். 2005 ஆம் ஆண்டு முதல் பல கணினிசார் கட்டுரைகளைத் தொடங்கியும் மேம்படுத்தியும் வருகிறார். இதில் ஜிமெயில் கட்டுரை குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மார்களைப் பற்றியும் எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவில் இலங்கைக்கான இடங்களை அடையாளப்படுத்தும் வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.

[தொகு] இவற்றையும் பார்க்க

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி