கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
| கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை Eastern University, Sri Lanka |
|
|---|---|
![]() |
|
|
|
|
| குறிக்கோள்: | Per Ardua Ad Scientiam |
| நிறுவல்: | ஆகஸ்ட் 1, 1981 (பல்கலைக்கழகக் கல்லூரி) அக்டோபர் 1, 1986 (பல்கலைக்கழகம்) |
| வகை: | பொது |
| துணைவேந்தர்: | முனைவர் கிட்ணன் கோவிந்தராசா (மாசி 15, 2012 முதல்) |
| பீடங்கள்: | கலை கலாச்சார, விஞ்ஞான, வர்த்தக முகாமைத்துவ, விவசாய மற்றும் சௌக்கிய பராமரிப்பு பீடம் |
| அமைவிடம்: | வந்தாறுமூலை, மட்டக்களப்பு, இலங்கை |
| சார்பு: | http://www.ugc.ac.lk பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (இலங்கை) |
| இணையத்தளம்: | http://www.esn.ac.lk |
கிழக்குப் பல்கலைக்கழகம் (Eastern University, Sri Lanka) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இதன் ஒரு வளாகம் திருகோணமலையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் இயங்கி வருகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
1960களில் ஒரு தொகை நிலப்பரப்பை திருகோணமலை நிலாவெளியில் வாங்கி கிழக்கிலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் முயற்சித்தபோதும் போதுமான நிதியுதவி கிடைக்காமையால் கைவிடப்பட்டது.
இப்பல்கலைக் கழகத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழியில் பாடங்கள் நடத்தப் படுகின்றன. 2001 ஆம் ஆண்டில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியும் இதன் ஒருபாகமாக்கப்பட்டது.
[தொகு] அமைவிடம்
இப்பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் செங்கலடி நகரத்திற்கு அருகே வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாசிக்குடாப் பகுதிக்கு சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சௌக்கிய பராமரிப்பு, அறிவியல் பீடம் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலை நகரத்திலிருந்து 15.6 கி.மீ தொலைவிலுள்ள நிலாவெளி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை வளாகத்திற்கென ஏறக்குறைய 300 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகத்தின் முதல்வராக கலாநிதி. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
[தொகு] பீடங்கள்
- கலைப் பீடம்
- விஞ்ஞான பீடம்
- விவசாய பீடம்
- வர்த்தக முகாமைத்துவ பீடம்
- சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
[தொகு] திருகோணமலை வளாகம்
- வர்த்தக வாணிப கற்கைகள் பீடம்
- பிரயோக விஞ்ஞான பீடம்
- சித்த மருத்துவ பகுதி
[தொகு] உபவேந்தர்கள்
இப்பல்கலைக்கழக உபவேந்தராக முன்னர் முனைவர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பணியாற்றியபோது, 2006, திசம்பர் 15 இல் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை[1][2]. இவரைத் தொடர்ந்து முனைவர் நா. பத்மநாதன் உபவேந்தராகப் பணியாற்றினார். இவரும் மார்ச் 2010 இல் மாணவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே பதவியில் இருந்து விலகினார்[3]. இதனை தொடர்ந்து விவசாய பீடாதிபதி பிரேமகுமார் 2010/11 காலப்பகுதிகளில் பதில் உபவேந்தராக பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வந்தார். இக்காலப்பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் குழு இப்பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளர் ஒருவரின் கட்டளையின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. தொடர்ந்தும் பதில் துணைவேந்தராக பிரேமகுமார் பெப்ரவரி 15, 2012 வரையில் இருந்து வந்தார், எனினும் இவரிற்கு ஒரு ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. முடிவுகள், தீர்மானங்கள் என்பன பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளரின் கையிலேயே இருந்தன.எனினும், பெப்ரவரி 15, 2012 முதல் கனேடியப் பிரசையான முனைவர் கிட்ணன் கோவிந்தராசா இப்பல்கைல்கழகத்தின் துணைவேந்தராக ஜனாதிபதியினால் நியமனம் பெற்றார். முனைவர் கிட்ணன் அவர்கள் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், கணிதத்திலான தனது பி.எச்.டி ஆய்வினை தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு கிழக்குப்பல்கலைக்கழகத்தில் 2004வரை சிரேஸ்டவிரிவுரையாளராக இருந்தவர். பின்னர் சில காரணங்களுக்காக இடம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். 2004 -2012 காலப்பகுதியில் கனடாவில் வசித்தாலும், தனது பதவியை இவர் இராஜினாமா செய்திருக்கவில்லை.
"தென்னாசியப் பிராந்தியத்தின் தனிப்பெரும் கல்விக் கலங்கரை விளக்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தை மாற்றிக் காட்டுவேனென்று", தனது பதவியேற்பு வைபவத்தில் முனைவர். கிட்ணன் கோவிந்தராசா பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
[தொகு] பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ள ஆய்வுத்திட்டங்களும் ஆய்வாளர்களும்
ஒப்பீட்டளவில் நிதி மற்றும் வளவாளர் பற்றாக்குறைகள் இருந்து வந்தாலும், கிழக்குப்பல்கலைக்கழகமானது இப்பிராந்தியத்தில் ஒரு மிகவும் முக்கியமான ஆய்வு மையமாக விளங்குகின்றது. குறிப்பாக முனைவர். பி. வினோபாபா சமகாலங்களில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகளை நீர்வாழ் உயிரியல் துறையில் முன்னெடுத்துள்ளார். இலங்கையின் சூழல் முகாமைத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு ஆலோசகராகவும் வளவாளராகவும் உள்ள முனைவர். ஜெயசிங்கம் இப்பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பிரிவின் ஸ்தாபக ஆசிரியர்களுள் ஒருவராக உள்ளார். முனைவர் சதானந்தன் என்பார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையில் தன் கலாநிதிப்பட்ட ஆய்வினை வெற்றிகரமாக முடித்துக் கொண்டவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது கலாநிதிப்பட்ட ஆய்வு இவரதே. இவரது ஆய்வானது மட்டக்களப்பு பிரதேசத்தின் நீரியல்வாழ் தாவர அலகுகளின் வகைப்படுத்துகையிலும் பட்டியலிடலிலும் ஒரு முன்னோடியாகும்.
தமிழ் மற்றும் பெண்ணிலையியல் துறைகளில் பாண்டித்தியம் பெற்ற பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, அவரது கணவரும் -பிரதேசரீதியிலான சுதேச நுண்கலைகளின் ஆய்வாளரும் வளவாளருமான - ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர். சி. மெளனகுரு; "மூன்றாவது கண்" இயக்கம் வழியாக நாட்டுக்கூத்தியல் ஆய்வுகளையும், சிறார்களின் கலையார்வ மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள முனைவர். சி .ஜெய்சங்கர் மற்றும் அவரது துணைவியாரும் பிரபல ஓவியருமான கமலா வாசுகி என்போர் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தினைச் சார்ந்தவர்கள். பேராசிரியர்கள் திரு திருமதி மெளனகுருவின் ஆய்வுப் பட்டறையில் உருவானவரும், ஊடகவியல்துறையியலாளருமான திரு. அலோசியஸ் அவர்கள் இலங்கை ரூபவாஹினித் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்துறைத் தயாரிப்பாளராகக் கடமை புரிகின்றார். இவரது முயற்சியில் பிரதேச கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தொலைக்காட்சி நாடகங்கள் பல உருவாக்கம் பெற்றுள்ளன.
விவசாய பீடத்தின் ஓய்வு ஒய்வுபெற்ற பேராசிரியர். அருள்நந்தி அவர்கள் இலங்கையின் பிரபல தாவர இனவியல் வல்லுனர்களில் ஒருவராவார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை தினக்குரல் அணுகப்பட்டது 3 மார்ச், 2007 (தமிழில்)
- ↑ Gardner, Simon (2007-03-07). "Abductions, disappearances haunt Lankan civil war". Gulf Times. பார்த்த நாள் 2007-07-23.
- ↑ கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார், விக்கிசெய்திகள், மார்ச் 11, 2010
