பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇதயவியல்
ஐ.சி.டி.-10I35.0, I06.0, Q23.0
ஐ.சி.டி.-9395.0, 396.0, 746.3
நோய்களின் தரவுத்தளம்844
மெரிசின்பிளசு000178
ஈமெடிசின்med/157
பேசியண்ட் ஐ.இபெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis) என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும்,[1] இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றது.

நோய் உடற்செயலியல்[தொகு]

பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிபுரிகிறது. பெருந்தமனி அடைப்பிதழ் படிப்படியாகக் குறுக்கம் அடையும்போது இடது கீழ் இதயவறையிலிருந்து குருதி குறுகிய துவாரமூடாக செலுத்தப்படவேண்டியதாகின்றது, இதனால் பெருந்தமனிக்கும் இ.கீ.இதயவறைக்கும் இடையே மாறுபட்ட அழுத்த வேறுபாடு உருவாகின்றது, இந்த வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக, இ.கீ.இதயவறையுள் உயர்வடைந்த அழுத்தத்தைச் சமாளிக்குமுகமாக இ.கீ.இதயவறையின் சுவர் தடிப்படைகிறது [2] (தசைமிகைவளர்ச்சி), எனினும் இதயவறை விரிவடைவதில்லை. இ.கீ.இதயவறையின் சுவர் மட்டும் தடிப்படைய இதயவறையுள் மாற்றம் நேரிடாத நிலை ஒருமையத் தசைமிகைவளர்ச்சி ( concentric hypertrophy) எனப்படும் [3]. இந்த நிலையில் இ.கீ.இதயவறையின் சுருங்கும் செயற்பாடு பாதிப்படைவதில்லை, வருடக் கணக்கில் இதயவறை விரிவடையாமல் இதய வெளியேற்றவளவு மாறுபடாமல் அழுத்தவேறுபாடு காணப்படலாம்.[4][5] நோயின் காலம், தீவிரம் அதிகமாகிக் கடைசிக்கட்ட நிலையில் இ.கீ.இதயவறை விரிவடைகிறது மேலும் அதன் சுருங்கும் தன்மை பாதிப்படைகிறது. இதனால் இதய வெளியேற்றவளவு குறைகிறது; இதயத் தசைக்குரிய இரத்தவோட்டம் பாதிக்கப்படுகிறது, இதனால் குருதியோட்டக்குறை ஏற்பட்டு மார்பு நெறிப்பு (அன்சைனா பெக்ரோறிசு) ஏற்படுகிறது. வலது இதயவறைகளில் அழுத்த உயர்வு காரணமாகவும் குருதியின் தேக்கத்தினாலும் சுவாசத்தொகுதியில் உயர் அழுத்தம், குருதித் தேக்கம் ஏற்படுகிறது. நோயின் இறுதிக்கட்டத்தில் தேக்க இதயச்செயலிழப்பு (congestive heart failure) ஏற்படுகிறது.[4]

நோய்க்காரணம்[தொகு]

பொதுவாக, முதியோர்களில் அடைப்பிதழில் கால்சியம் படிவதால் இந்த நிலை ஏற்படுகிறது, நோய் ஏற்படுவதற்கு 50 வீதத்திற்கு மேலான காரணியாக இது விளங்குகின்றது.[6] இருகூர்ப் பெருந்தமனி அடைப்பிதழ் எனப்படும் பிறப்பு நிலைக் கோளாறான மூன்று இதழ்களுக்குப் (முக்கூர்) பதிலாக இரண்டு இதழ்கள் (இருகூர்) காணப்படல், வாதக் குறுங்காய்ச்சல் ஆகியன வேறு காரணிகளாக உள்ளன. 30 – 70 வயதுக்கிடைப்பட்டோரில் ஏற்படும் குறுக்கத்திற்கு வாதக் குறுங்காய்ச்சல் அல்லது இருகூர்ப் பெருந்தமனி அடைப்பிதழில் கல்சியம் படிவது ஆகியன காரணமாகிறது,[4] அதேநேரத்தில் சாதாரண முக்கூர்ப் பெருந்தமனி அடைப்பிதழில் கல்சியம் படிதலால் ஏற்படும் நோயின் தீவிரம் 70-80 வயதளவில் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த கொழுப்புப்புரத மிகைப்பு, இரத்த யூரியா மிகைப்பு என்பன நோயின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த வல்லது.

நோய் விகிதாசாரமும் இறப்பும்[தொகு]

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். பாடசாலைப் பருவம் வரை குறிப்பிட்ட நபரில் இந்த நோய் கண்டுபிடிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ 65 வயதைத் தாண்டியோரில் இரண்டு வீதமானவர்களிலும், 75 வயதைத் தாண்டியோரில் மூன்று வீதமானவர்களிலும், 85 வயதைத் தாண்டியோரில் நான்கு வீதமானவர்களிலும் இந்தக் குறைபாடு உண்டாகின்றது.[7] இந்த நோயுள்ள 3-5 வீதமானவர்களில் திடீர் இதயவிறப்பால் இறப்பு நேரிடலாம். வருடமொன்றிற்கு 9% இறப்புவீதம் வயதுவந்தோர்களிடையே காணப்படுகிறது. நோயின் தீவிர அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர் திடீர் இறப்பு உண்டாகும் வீதம் 15-20% இனால் அதிகரித்து சராசரி உயிர் வாழும் காலம் ஐந்து வருடங்களாகின்றது.[4]

நோய் அறிகுறிகள்[தொகு]

குறுக்கத்தின் அளவைப் பொறுத்து நோய் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுகின்றன. பெரும்பாலானவர்களில் மிதமான, நடுநிலையான குறுக்கங்களில் அறிகுறிகள் தென்படுவதில்லை. தீவிர குறுக்கங்களிலேயே அறிகுறிகள் தென்படுகின்றன, வேறுவிதமாகக் கூறப்போனால் அடைப்பிதழின் துவாரம் ஏறத்தாழ 1.0 செ.மீ3 குறுக்கம் அடையும் வரை அறிகுறிகள் தென்படுவதில்லை.[5] முக்கிய அறிகுறிகளாக சுவாசச்சிரமம், மயக்கம், மார்பு நெறிப்பு மற்றும் இறுதியில் இதயச் செயலிழப்பு ஆகியவை காணப்படுகின்றன.

சுவாசச்சிரமம்[தொகு]

இந்த நோயில் பொதுவான மருத்துவ அறிகுறியாகத் தோன்றும் சுவாசச்சிரமம், மிகப்பளுவான உடல் செயல்களின் போது ஏற்படுகிறது, இதன்போது நோயாளி இலகுவில் களைப்படைந்துவிடுவார். சுவாசத்தொகுதியில் உயர் அழுத்தம், குருதித் தேக்கம் ஏற்படுவது இதற்கான காரணத்தில் அடங்குகிறது.

மார்பு நெறிப்பு[தொகு]

பெருந்தமனிக்குறுக்கம் உள்ளோரில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மார்பு நெறிப்பு ஏற்படுகிறது, இது முடியுருநாடி நோயில் ஏற்படுவதைப் போலவே வெளிக்காட்டப்படுகின்றது. மார்பு நெறிப்பு பொதுவாக பளுவான உடல் செயல்களின் போது ஏற்படுகிறது; ஓய்வின்போது நீங்கிவிடும்.[8]

மயக்கம்[தொகு]

மிகப்பளுவான வேலைகளின் போது மயக்கம் உண்டாகின்றது.[9] தமனியில் உள்ள அழுத்தக் குறைபாட்டைத் தொடர்ந்து தொகுதித் தமனி விரிவடைதல் ஏற்படுகிறது, ஆனால் இதய வெளியேற்றவளவு இதற்கு ஈடு கொடுப்பதில்லை எனவே மிகப்பளுவான வேலைகளின் போது மூளைக்குச் செல்லும் இரத்தவோட்டம் குறைகின்றது, இதுவே மயக்கத்திற்குப் பொதுவான காரணமாக அமைகின்றது.[8]

தேக்க இதயச்செயலிழப்பு[தொகு]

பெருந்தமனிக் குறுக்கத்தில் தேக்க இதயச்செயலிழப்பு ஏற்படுவது நோயின் விளைவு ஆபத்தாக முடியும் என்பதைச் சுட்டுகிறது, அடைப்பிதழ் மாற்றப்படாத சந்தர்ப்பத்தில் இவ்வகையான நோயாளிகளின் இறப்புவீதம் இரண்டு வருடத்தில் 50% ஆக இருக்கின்றது.

ஏய்டியின் கூட்டறிகுறி[தொகு]

பெருந்தமனிக் குறுக்கம் பெருங்குடல் இரத்தக் குழாய்கள் இயல்புப்பிறழ்வுடன் இணைந்துவருகை ஏய்டியின் கூட்டறிகுறி எனப்படும். இதன்போது இரையகக்குடலிய இரத்தப்போக்கு ஏற்படலாம்.

உடற்பரிசோதனை[தொகு]

இதய ஒலிமானிச் சோதனையின் போது சிரசுத் தமனித் துடிப்பு (சிரசுநாடி மேலடிப்பு) தொட்டுணறல் , இதயச்சுருக்க முணுமுணுப்பு, இரண்டாம் இதயவொலி பிளவுபடல், இதயச்செயலிழப்பு அறிகுறிகள் என்பன உடற்பரிசோதனையின் போது செய்யவேண்டியவை ஆகும்.

பெருந்தமனிக்குறுக்கம் சிலவேளைகளில் வழமையான இதயக்குழலியத் தொகுதி உடல்நலப் பரிசோதனையின் போது அறியப்படுகிறது. நாடித்துடிப்பை வைத்து இந்தநோயின் தீவிரம் அறியப்படக் கூடியவாறு உள்ளது.[10] நோயின் இறுதிநிலையில் தமனியின் துடிப்பானது பலவீனமாகவும் (குறைந்த கொள்ளளவு) மற்றும் மேலடிப்பு தாமதமாகவும் சிரசுநாடியில் (pulsus parvus et tardus) அறியப்படுகிறது. சாதரணமாக இதயவொலிமானியில் முதலாவது இதயத்துடிப்புச் சத்தம் (இச1; S1) கேட்கும் அதேநேரத்தில் சிரசுநாடியில் தமனித்துடிப்பு தொட்டு உணரப்படுகிறது. தீவிர பெருந்தமனிக்குறுக்கத்தின் போது, குருதிப்பாய்ச்சலின் தாமதத்தால், இச1 கேட்டபின்னரே சிரசுநாடியில் தாமதமாக தமனித்துடிப்பு தொட்டு உணரப்படுகிறது. இதேபோன்று புயநாடிக்கும் ஆரைநாடிக்கும் இடையிலும் தாமதம் தென்படலாம்.

குருதிப்பாய்ச்சலின் விளைவாக ஏற்படும் இதயச்சுருக்க முணுமுணுப்பு முதலாவது இதயத்துடிப்புச் சத்தத்தின் பின்னர் ஏறி-இறங்கிக் கேட்கும், அதாவது இதன் ஒலி சீராக அதிகரித்துப் பின்னர் சீராகக் குறையும், இதனை இரண்டாவது வலது விலாவென்பு இடைவெளியில் மார்பென்பின் வலது ஓரத்தில் கேட்கலாம்,[6] இது இருபக்க சிரசு நாடிக்கும் பரவலாம்.[5] இதய உச்சிக்கு இது பரவினால் இருகூர் அடைப்பிதழ்க் குறைதிறனுடன் ஒப்பிட்டு அறிதல் கடினமாகிறது. முணுமுணுப்பு குந்துகையில் உயர்வடைந்தும் நிற்கும்போது குறைவடைந்தும் இருக்கும்; உட்சுவாசத்தின் போது கூடிய ஒலியாகக் கேட்கும். இந்த நோய் அதிகரித்துச் செல்லச் செல்ல கல்சியம் படிவதனால் பெருந்தமனிப்பகுதியில் இரண்டாவது இதயத்துடிப்புச் சத்தம் (பெ2; A2) குறைவாகக் கேட்கும்.[6] இடது கீழ் இதயவறை தசைமிகைவளர்ச்சி ஏற்படுவது நான்காவது இதயத்துடிப்புச் சத்தம் கேட்க ஏதுவாகின்றது.

நோய் ஆய்வுச்சோதனைகள்[தொகு]

மின்னிதைய வரைபு[தொகு]

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் நேரடியாக மின் இதய வேறுபாட்டைக் காட்டாவிடினும், இதனால் ஏற்படும் பிற விளைவுகள் மின்னிதைய மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. இடது கீழ் இதயவறை தசைமிகைவளர்ச்சிக்குரிய அறிகுறிகள் மின்னிதைய வரைபில் தென்படலாம். எஸ்டி பகுதி தாழ்வடைதலும் டி அலை தலைகீழாதலும் அவதானிக்கப்படலாம்.[8] கல்சியம் படிதல் இதய மின் கடத்து தொகுதியில் ஏற்பட்டால் இதயத்தடை ஏற்படலாம், இதன்போது இதயத்தடைக்குரிய மின் இதய வரைபை நோக்ககூடியதாக இருக்கும்.

இதயச் சிலாகையேற்றல்[தொகு]

இதயவறையினுள் சிலாகை ஏற்றல் மிகச்சரியான நோய் அறுதியிடலைத் தரும். இதன் மூலம் குறுக்கம் அளக்கப்படலாம், குறுக்கம் <0.8 செ.மீ2 (சாதரணமாக 1.5-2 செ.மீ2) ஆக உள்ளவிடத்து தீவிரமான குறைபாடு எனக் கணிப்பிடலாம். இதைத்தவிர இம்முறைமூலம் பெருந்தமனி அடைப்பிதழின் இருபுறமும் உள்ள அழுத்தத்தையும் கணிக்கலாம், இந்த அழுத்தவேறுபாடு சிகிச்சையைத் தீர்மானிப்பதற்குரியதாக விளங்குகின்றது.

மின் ஒலி இதய வரைவு[தொகு]

இது அடைப்பிதழின் உடற்கூற்றியல், செயற்பாட்டை அறியச் சிறந்ததொரு ஊடுருவல் அற்ற முறையாகும். பெருந்தமனி அடைப்பிதழின் பரப்பளவு இம்முறை மூலம் கணிக்கப்படும். அடைப்பிதழின் ஊடாகச் செல்லும் குருதியின் வேகத்தைப் பயன்படுத்தி அழுத்தவேறுபாடு பெர்நோலியின் மாற்றப்பட்ட சமன்பாடு மூலம் கணிக்கப்படுகிறது.

அழுத்தவேறுபாடு = 4(வேகம்)² மி.மீ இரசம்

சாதாரணமாக, பெருந்தமனி அடைப்பிதழில் அழுத்தவேறுபாடு இருக்காது. பெருந்தமனி அடைப்பிதழின் பரப்பளவு குறையும் போது அழுத்தவேறுபாடு கூடுகின்றது. இவற்றை வைத்து நோயின் தீவிரம் கணிக்கப்படுகிறது. மின்னொலி இதய வரைபைப் பயன்படுத்தி இடது கீழ் இதயவறை தசைமிகைவளர்ச்சி, அடைப்பிதழின் தடிப்பு, விரிவடைந்த பெருந்தமனித் தொடக்கம் ஆகியவற்றையும் அவதானிக்கலாம்.

மார்பு எக்ஸ்-கதிர்ப்படம்[தொகு]

மார்பு எக்ஸ்-கதிர்ப்படம் கொண்டு கல்சியம் படிந்த அடைப்பிதழ், இடது கீழ்,மேல் இதயவறைத் தசைமிகைவளர்ச்சி ஆகியவற்றை அவதானிக்கலாம்.

நோய் பற்றிய முன்னெச்சரிக்கைகள்[தொகு]

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் உடையோருக்கு இலகுவில் அவர்களின் குறுக்கமடைந்த அடைப்பிதழில் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது, இந்த நிலை நுண்ணுயிரித் தொற்று இதய உள்ளுறை அழற்சி (infective endocarditis) எனப்படும். இந்த நிலையை சமாளிப்பதற்கு முன்னெச்செரிக்கையாக நுண்ணுயிர் எதிர்ப்பி தகுந்த சமயங்களில் உபயோகிக்கப்படவேண்டும். தகுந்த சமயங்கள் எனப்படும் போது பல் பிடுங்குதல், பற்படலம் நீக்கல், பல் முரசில் அறுவைச்சிகிச்சை, இரையகக் குடலிய அறுவைச்சிகிச்சை போன்றவை அடங்கும். குறுக்கமடைந்த அடைப்பிதழ் காரணமாக இதய வெளியேற்றவளவு குறைவதால் மயக்கம் ஏற்படும்; குருதி அழுத்தம் குறையும்; இதனைச் சமாளிக்க சுற்று குருதிக்குழலியங்களை விரிவடைக்கும் மருந்துவகைகள் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சிகிச்சை[தொகு]

நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை. இடைத்தரமான நிலையில் நோயின் விளைவுகளைக் கண்காணிக்க மின் ஒலி இதய வரைவு ஒவ்வொரு 1 – 2 வருடங்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. தீவிரமான நிலையில் ஒவ்வொரு 3 - 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இடைத்தர, தீவிர நிலைமைகளில் ஏதேனும் புதிய அறிகுறிகள் தென்படுமிடத்து உடனடியாக மருத்துவசாலையில் கவனிக்கப்படல் அவசியமாகின்றது.

அடைப்பிதழ் மாற்றுச் சிகிச்சை[தொகு]

வயது வந்தோரில் அடைப்பிதழ் மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இறப்பு வீதத்தை குறைக்க வல்லது. இதற்கு திறந்த இதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படும். இரண்டுவிதமான செயற்கை அடைப்பிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன; பொறிமுறை அடைப்பிதழ், திசு அடைப்பிதழ் (இழைய அடைப்பிதழ்).

பலூன் அடைப்பிதழ் வடிவமைப்பறுவைச் சிகிச்சை (Balloon valvuloplasty)[தொகு]

குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் இம்முறை பயனுடையதாக உள்ளது, இதன் போது சிலாகையுடன் கூடிய பலூன் அமைப்பு ஒன்று அறுவைச்சிகிச்சை நிபுணரால் மேற்காலில் உள்ள குருதிக் குழாய் மூலமாக உட்செலுத்தப்பட்டு, பின்னர் பெருந்தமனி அடைப்பிதழிலே பலூன் விரிவடையச் செய்யப்படுகிறது, இதன் மூலம் குறுகிய துவாரம் பெரிதாக்கப்படுகிறது. இந்த முறை வயது வந்தோரில் பெரும்பாலும் பலனைத் தராது.

மருந்துச் சிகிச்சை[தொகு]

நேரடியான மருந்துச் சிகிச்சை எதிர்பார்க்கும் பலனைத் தராது, எனினும் நோயில் உருவாகும் ஏனைய அறிகுறிகளைக் குணப்படுத்த மருந்து முறை பயன்படுகிறது. • மார்பு நெறிப்புக்கு நைத்திரேட்டுக்கள் கொண்ட குருதிக்குழலி விரிவாக்கிகள், பீட்டா-தடைப்பிகள், கல்சியம் தடைப்பிகள் • உயர் குருதி அழுத்தச் சிகிச்சை • இதயச் செயலிழப்புக்கு டிகொக்சின், சிறுநீரிறக்கிகள், நைத்திரேட்டு குருதிக்குழலி விரிவாக்கிகள்

உசாத்துணைகள்[தொகு]

  1. Michael H. Crawford, MD (2002). Current Diagnosis & Treatment in Cardiology. McGraw-Hill. 
  2. Lilly LS (editor) (2003). Pathophysiology of Heart Disease (3rd ). Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7817-4027-4. https://archive.org/details/pathophysiologyo00lill. 
  3. {{Richard E. Klabunde, PhD. Ventricular and Atrial Hypertrophy and Dilation. Cardiovascular Physiology Concepts. [Online] 2007. http://www.cvphysiology.com/Heart%20Failure/HF009.htm. }}
  4. 4.0 4.1 4.2 4.3 Jerry Balentine, DO. Aortic Stenosis. eMedicine. [Online] http://emedicine.medscape.com/article/757200-overview.
  5. 5.0 5.1 5.2 (Editors) Anthony S. Fauci, MD;Dan L. Longo, MD;Eugene Braunwald, MD. (2008). Harrison's Principles of Internal Medicine (17th ). The McGraw-Hill Companies. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-159991-7. 
  6. 6.0 6.1 6.2 VOC=VITIUM ORGANICUM CORDIS, a compendium of the Department of Cardiology at Uppsala Academic Hospital. By Per Kvidal September 1999, with revision by Erik Björklund May 2008.
  7. Clinical factors associated with calcific aortic valve disease. Cardiovascular Health Study. . Stewart BF, Siscovick D, Lind BK, Gardin JM, Gottdiener JS, Smith VE. 630-634., s.l. : J Am Coll Cardiol. , 1997, Vol. 29.
  8. 8.0 8.1 8.2 Eugene Braunwald, MD, MD(Hon) ScD(Hon) FRCP; Peter Libby, MD. Braunwald's Heart Disease: A Textbook of Cardiovascular Medicine. 8th. Philadelphia : SAUNDERS ELSEVIER, 2008. 978-0-8089-2385-5.
  9. Chapter 1: Diseases of the Cardiovascular system > Section: Valvular Heart Disease in: Elizabeth D Agabegi; Agabegi, Steven S. (2008). Step-Up to Medicine (Step-Up Series). Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7817-7153-6. https://archive.org/details/stepuptomedicine0000agab. 
  10. Etchells E, Bell C, Robb K (February 1997). "Does this patient have an abnormal systolic murmur?". JAMA 277 (7): 564–71. doi:10.1001/jama.277.7.564. பப்மெட்:9032164.