யால தேசிய வனம்

ஆள்கூறுகள்: 6°22′22″N 81°31′01″E / 6.37278°N 81.51694°E / 6.37278; 81.51694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yala National Park
යාල ජාතික වනෝද්‍යානය
யால தேசிய வனம்
Sandy beach with a rocky outcrop in sea side
பாத்தனன்கல, யால கடலோரப் பாறையொன்று
Map showing the location of Yala National Park
Map showing the location of Yala National Park
யால் தேசியப் பூங்காவின் அமைவிடம்
அமைவிடம்தென் மாகாணம் மற்றும் ஊவா மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்அம்பாந்தோட்டை
ஆள்கூறுகள்6°22′22″N 81°31′01″E / 6.37278°N 81.51694°E / 6.37278; 81.51694
பரப்பளவு978.807 km2 (377.919 sq mi)
நிறுவப்பட்டது1900 (வனவிலங்கு சரணா)
1938 (தேசியப் பூங்கா)
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் (இலங்கை)
வலைத்தளம்www.yalasrilanka.lk

யால தேசிய வனம் (Yala National Park) இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஒன்றாகும்.மிகுந்த சுற்றுலாப் பயணிகள் செல்லும், பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசிய வனம் இதுவே ஆகும் ஆகும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட இத்தேசிய வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் காணப்படுகின்றன. அதன் முதலாவது பிரிவு உறுகுண தேசிய வனம் எனப்படுகிறது. அதனுடன் சேர்ந்தாற் போல இருக்கும் காடு குமண தேசிய வனம் அல்லது யால கிழக்கு வனம் ஆகும்.

யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில், அதாவது தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இருக்கிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கி.மீ (378 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. யால தேசிய வனமும் வில்பத்து தேசிய வனமும் 1900 ஆம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டன. பின்னர் 1938 இல் தேசிய வனங்களாக அறிவிக்கப்பட்ட இவையிரண்டுமே இலங்கையின் புகழ்பெற்ற முதலிரண்டு தேசிய வனங்களாகும். இக்காடு இங்கு வசிக்கும் ஏராளமான வனவிலங்குகளுக்காக பெயர்பெற்றதாகும். இத்தேசிய வனம் இலங்கை யானை மற்றும் நீரியற் பறவைகளின் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

யால தேசிய வனத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் பிற தேசிய வனங்கள் ஆறும் வனவிலங்கு சரணாலயங்கள் மூன்றும் காணப்படுகின்றன. இலங்கையின் அரைகுறை வறள் வலயம் எனப்படும் காலநிலை வலயத்தினுள் அமைந்திருக்கும் இக்காடு முக்கியமாக வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போதே மழையைப் பெறுகிறது. இவ்வனம் ஈரலிப்பான பருவப் பெயர்ச்சிக் காடுகள், நன்னீர் ஈரநிலங்கள் மற்றும் கடல்சார் ஈரநிலங்கள் போன்ற பல்வேறு வகையான சூழலியற் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையின் முக்கிய பறவைகள் வாழிடங்கள் எழுபதில் இதுவும் ஒன்றாகும். யால தேசிய வனத்தில் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். இக்காட்டில் பதியப்பட்டுள்ள முலையூட்டி இனங்களின் எண்ணிக்கை 44 ஆகும். அதே வேளை, உலகில் சிறுத்தைகள் செறிவு மிக்க இடங்களுள் யால தேசிய வனமும் ஒன்றாகும்.

யால தேசிய வனத்தைச் சூழவுள்ள பகுதிகள் சில பழங்கால நாகரிகங்களின் களங்களாகக் காணப்பட்டுள்ளன. இத்தேசிய வனத்தினுள்ளேயே பௌத்த புனிதப் பயணத் தலங்களான சிதுல்பாகுவ மற்றும் மகுல் விகார ஆகிய இரண்டும் அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோளின் காரணமாக இத்தேசிய வனத்துக்குப் பெருஞ் சேதங்கள் விளைந்ததுடன் இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2009 ஆம் ஆண்டு இக்காட்டின் உட்பகுதியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.

வரலாறு[தொகு]

1560-ஆம் ஆண்டு எசுப்பானிய நிலப்படவரைஞரான சிப்ரியானோ சான்செசு என்பவர் மோசமான நிலைமைகள் காரணமாக 300 ஆண்டுகளுக்கு முன்னரேயே யால காட்டுப் பகுதி கைவிடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்[1]. இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (1775-1849)-ல் தான் 1806 ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்து அம்பாந்தோட்டைக்குப் பயணித்த பின்னர் யால காட்டுப் பகுதி பற்றி விரிவாக எழுதினார். 1900 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று அப்போதைய அரசாங்கம் யால, வில்பத்து பகுதிகளை காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டனவாக அறிவித்ததுது[2].

மெனிக் ஆற்றுக்கும் கும்புக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்டதாக அமைந்துள்ள யால தேசிய வனத்தின் பரப்பளவு தொடக்கத்தில் 389 சதுர கிலோமீற்றர் (150 சதுர மைல்) என வரையறுக்கபட்டிருந்தது. அந்நேரம் இக்காட்டுப் பகுதிக்கு யால என்ற பெயர் வழங்கப்படவில்லை. வேட்டைப் பாதுகாப்புச் சங்கம் (தற்போதைய வனவிலங்கு மற்றும் இயற்கைவளப் பாதுகாப்புச் சங்கம்) என்ற அமைப்பே இக்காட்டுப் பகுதி பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்படக் காரணமாயமைந்தது. அக்காலத்தில் பலத்துப்பன, யால ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதி மேற்படி சங்கத்தைச் சேர்ந்த, அங்கு தங்கி வாழும் உறுப்பினர் வேட்டையாடுவதற்காக மட்டுமென ஒதுக்கப்பட்டிருந்தது.[2]

காட்டின் பாதுகாவலர் நியமனம்[தொகு]

இக்காட்டின் முதலாவது பாதுகாவலராக ஹென்றி எங்கெல்பிரெச்ட் என்பவர் நியமிக்கப்பட்டார்[1]. அவர் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற இரண்டாவது போயர் போரின் போது தளபதி கிறித்தியன் டி வெட் என்பவரின் கீழ்ப் பணியாற்றிய இராணுவ அதிகாரியாவார். அப்போது பிரித்தானியரால் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்ட அவர் 1900 ஆம் ஆண்டு ஏனைய போர்க் கைதிகள் 5000 பேருடன் சேர்த்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். ஹென்றி எங்கெல்பிரெச்ட் எட்டாம் எட்வர்டு மன்னருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டமையால் தென்னாபிரிக்காவுக்குத் திரும்பிச் செல்வதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. இந்நாட்டினுள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் தன்னுடைய ஓய்வுதியத்தை அம்பாந்தோட்டை கச்சேரியிலிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

அப்போது இலங்கையில் பணியாற்றிய பிரித்தானியத் தேசாதிபதி சேர் ஹென்றி ஆதர் பிளேக் அம்பாந்தோட்டையிலிருந்து பதுளைக்குப் பயணித்த போது அவரைச் சந்தித்தார். அதன் விளைவாகவே அவர் இக்காட்டின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். இப்பகுதியை நன்கு பராமரித்த அவர் வனவிலங்குகளை உரிய முறையில் கவனித்து வந்ததுடன் சட்டவிரோத வேட்டையாடுதலையும் தடுத்து வந்தார். எனினும், முதலாம் உலகப் போரின் போது யேர்மனியப் போர்க் கப்பல் எம்டனுக்கு இறைச்சி உணவு வழங்கி வந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் அம்பாந்தோட்டைக்குத் திரும்பி வந்தார். அதன் பின்னர் வறுமையில் வாடிய அவர் 1922 மார்ச் 25 ஆம் திகதி காலமானார். மேற்படி போர்க்கப்பலின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதி எஸ். விதொயிப்ட் 1931 ஆம் ஆண்டு கொழும்புக்குப் பயணித்து கொழும்பு ரோட்டரி சங்கத்தில் உரையாற்றினார். ஹென்றி எங்கெல்பிரெச்ட்டின் வழக்கறிஞர் லூசியன் பவுலியர் அவருக்குக் கடிதமெழுதினார். தளபதி விதொயிப்ட் அனுப்பிய பதிலில் எம்டன் எனப்பட்ட போர்க்கப்பல் இந்தியப் பெருங்கடலினூடகப் பயணித்த போது ஒரு போதும் இறைச்சியுணவைப் பெற்றுக்கொள்ளவோ இலங்கையில் தரிக்கவோ அல்லது இலங்கையுடன் எந்த வகையிலான தொடர்பையும் கொண்டிருக்கவோ இல்லையெனக் கூறினார்.[1]

தேசிய வனமாதல்[தொகு]

யால தேசிய வனத்தின் வரைபடம்

பிரித்தானிய இலங்கையில் விவசாய அமைச்சராகப் பதவி வகித்த டி.எஸ். சேனாநாயக்க 1938 மார்ச் முதலாம் திகதி தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியதும் யால காட்டுப் பகுதி தேசிய வனமாகியது. இத்தேசிய வனம் ஐந்து பிரிவுகளைக் கொண்டதாகும்.[3] அதன் பின்னர், மேலும் நான்கு பிரிவுகள் இத்தேசிய வனத்துடன் இணைக்கப்பட்டன. யால காட்டைச் சுற்றிவர ஆறு தேசிய வனங்களும் மூன்று வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன. அவற்றில் குமண தேசிய வனம், யால கட்டாய இயற்கைவள ஒதுக்கீடு, கதிர்காமம், கதகமுவ மற்றும் நிமலவ சரணாலயங்கள் என்பன அவற்றுள் அடங்கும்.[2]

பிரிவு பரப்பு வனத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு
பிரிவு I 14,101 எக்டேயர் (54.44 சதுர மைல்) 1938
பிரிவு II 9,931 எக்டேயர் (38.34 சதுர மைல்) 1954
பிரிவு III 40,775 எக்டேயர் (157.43 சதுர மைல்) 1967
பிரிவு IV 26,418 எக்டேயர் (102.00 சதுர மைல்) 1969
பிரிவு V 6,656 எக்டேயர் (25.70 சதுர மைல்) 1973
மூலம்: இலங்கையின் ஈரநிலங்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும்[3]

நில இயல்புகள்[தொகு]

வறட்சியான காலத்தில் இந்நிலப் பகுதி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது

யால காட்டுப் பகுதி பெரும்பாலும் 'முன் கேம்பிரியன்' காலத்திற்குரிய உருமாறிய பாறைகளைக் கொண்டுள்ளது. அவை 'விசயன் தொகுதி' என்றும் 'உயர்நிலத் தொகுதி' என்றும் இரு வகைப்படும். இங்கு காணப்படும் மண் வகைகளில் செங்கபிலக் களிமண்ணும் வண்டல் மண்ணுமே பொதுவாகக் காணப்படுகின்றன. யால காட்டின் அமைவு திருகோணமலைக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியிலான இலங்கையின் மிகக் கீழ்மட்ட அண்சமவெளியிலேயே உள்ளது. இதன் தரைத்தோற்ற அமைப்பு பெரும்பாலும் மட்டமாகவும் இடையிடையே மேலெழுந்தும் காணப்படுகிறது. கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இக்காட்டின் உயரம் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 30 மீ. (98 அடி) ஆக இருக்கும். அதேவேளை உட்பகுதிகளில் இதன் உயரம் 100-125 மீ. (330-410) ஆகும்.

கொழும்பிலிருந்து பயணிக்கும் போது யால தேசிய வனத்தை அடைவதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. அவற்றுள் 270 கி.மீ.(170 மைல்) தொலைவு கொண்ட இரத்தினபுரி-திஸ்ஸமகாராம வழியே மிகக் குறுகியதாகும். எனினும் ஏராளமான பயணிகள் மாத்தறை-அம்பாந்தோட்டை வழியாகவும் பயணிப்பதுண்டு.[2]

பருவ நிலை[தொகு]

இலங்கையின் அரைகுறை வறள் வலயம் எனும் காலநிலை வலயத்தில் அமைந்துள்ள இக்காடு முக்கியமாக வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி காரணமாகவே மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. இக்காடு பெறும் ஆண்டு தோறுமான மழை வீழ்ச்சி 500-775 மிமீ (20-30.5 அங்குலம்) ஆகும். அவ்வாறே, இதன் சராசரி வெப்பநிலை சனவரியில் 26.4 °C (79.5 °F) உம் ஏப்ரலில் 30 °C (86 °F) உம் ஆகும். யால காட்டுப் பகுதியில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சியின் போது வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காலத்திலும் கூடுதலாகக் காற்று வீசுகிறது. அப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 15-23 கி.மீ.(9.3-14.0 மைல்) வரை மாறுபடும்.[3]

நீர்வளம்[தொகு]

வடகிழக்குப் பருவப்பெயர்ச்சியின் போது நீர்வளம் தாராளமாகக் கிடைத்த போதும் கோடை காலங்களில் கிடைக்கும் மேற்பரப்பு நீரின் அளவு இங்கு மிக முக்கியமாகின்றது. மேற்பரப்பு நீரைத் தேக்கி வைப்பதற்காக இங்கு பல்வேறு நீரோடைகளும் அணைக்கட்டுக்களும் குளங்களும் நீர்ச்சுனைகளும் பொய்கைகளும் நீர்க்குழிகளும் களப்புகளும் காணப்படுகின்றன. நீர்க் குழிகள் பெரும்பாலும் கீழ்ப் பகுதிகளில் காணப்படுகின்றன உட்பகுதிகளில் காணப்படும் சிறிய, பெரிய பொய்கைகள் பலவும் ஆண்டு முழுவதும் நீரைத் தேக்கி வைத்திருக்கக் கூடியனவாக உள்ளன. இவையே யானைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கையாக அமைந்த நீர்க்குழிகள் நீரியற் பறவைகள் பலவற்றிற்கும் நீரெருமைகளுக்கும் முதன்மை வாழிடங்களாகும். அத்தகைய நீரத்தேக்கங்கள் பெரும்பான்மையாக யால தேசிய வனத்தின் முதலாம் பிரிவிலும் இரண்டாம் பிரிவிலுமே காணப்படுகின்றன. இங்கு காணப்படும் பல்வேறு அணைக்கட்டுக்களில் மகா சீலாவ, புதாவ, ஊரணிய, பிலின்னாவ போன்றன முக்கியமானவையாகும்.[2]

இக்காட்டை அண்மித்திருக்கும் மத்திய மலைநாடு மற்றும் ஊவா பகுதிகளில் ஊற்றெடும் பல ஆறுகளும் ஓடைகளும் தென்கிழக்காகப் பாய்கின்றன. இக்காட்டின் கிழக்குப் புறமாக ஓடும் கும்புக்கன் ஓயாவும் மேற்குப் புறமாகவும் காட்டை ஊடறுத்தும் ஓடும் மாணிக்க ஆறும் அதன் கிளையாறுகளும் இக்காட்டில் வாழும் வனவிலங்குகளுக்கு கோடை காலங்களில் நீரை வழங்குவதில் முக்கிய பங்கெடுக்கின்றன. வறட்சியான காலங்களில் இக்காட்டின் ஓடைகள் பொதுவாக வற்றிப் போய்க் காணப்படும். மாரி காலங்களில் மிக வேகமாக நீர் வழிந்தோடும் இவ்வாறுகளும் ஓடைகளும் கோடை காலங்களில் மிகவும் தடைப்பட்ட ஓட்டம் உடையனவாகக் காணப்படும். மாரி காலத்தில் கும்புக்கன் ஓயாவில் பெருகியோடும் நீரின் அளவு கோடை காலத்தில் ஓடும் நீரின் அளவு போன்று ஏழு மடங்காகும். இக்காட்டை அண்மித்த கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் ஏராளமான களப்புகளும் கூட வனவிலங்குகளுக்கு நீர் வழங்குவதில் முக்கிய பங்கெடுக்கின்றன.[3]

2004 ஆம் ஆண்டு கடற்கோளின் தாக்கங்கள்[தொகு]

யால தேசிய வனத்தில் வாழும் புள்ளி மான்கள்

2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட கடற்கோளின் நேரடிப் பாதையிலேயே யால தேசிய வனம் அமைந்துள்ளது. அக்கடற்கோள் உருவாகி வெறுமனே 90 நிமிடங்களுக்குள் இக்காட்டுப் பகுதியை அது தாக்கியது.[4] கடற்கோளின் காரணமாக இக்காட்டினுள் பெருத்த சேதம் விளைந்தது.[5] அப்போது இத்தேசிய வனத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்ந்தோரில் கிட்டத்தட்ட 250 பேர் கொல்லப்பட்டனர்.[6] கடற்கோள் ஏற்படுத்திய பேரலைகள் 20 அடி (6.1 மீ) உயரம் வரை மேலெழுந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அப்பேரலைகள் காட்டின் உட்பகுதியை இங்கு ஓடும் ஆறுகளின் கழிமுகங்கள் வாயிலாக மாத்திரமே அடைந்தன.[7] கடற்கோள் ஏற்படுத்திய வெள்ளம் காட்டினுள் 392-1490 மீ (429-1630 யார்) தூரம் வரை உண்டாகியது. அதன் காரணமாக புதர்க் காடுகளும் புன்னிலங்களுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 5000 எக்டேயர் (19 சதுர மைல்)புன்னிலங்களும் காடும் ஈரநிலங்களும் அக்கடற்கோளின் காரணமாகப் பாதிக்கப்பட்டன. பெறப்பட்ட செய்மதிப் படங்களின் தரவுகளின் படி, இக்காட்டின் முதலாம், இரண்டாம் பிரிவுகளில் தாவரவியல் மீளமைவுச் சுட்டி 0.245-0.772 ஆகும். கடற்கோள் பேரழிவின் பின்னர் அது 0.211 ஆகக் குறைந்துள்ளது. அதன் காரணமாக கடற்கரையை அண்மித்த பகுதிகள் கிட்டத்தட்ட 60% மாற்றமடைந்துள்ளன. கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட சேதம் மிக மோசமானதாகும்.[5]

அதன் பின்னர், சமிக்ஞைப் பட்டிகள் அணிவிக்கப்பட்ட இரண்டு யானைகளின் நடமாட்டம் கவனிக்கப்பட்டது. நடத்தப்பட்ட ஆய்வின் படி, அவற்றின் நடமாட்டம் வழமையைப் போலவே காணப்பட்டது. மனிதர்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி தங்களது நடத்தையை மாற்றிக் கொள்வது போல அவை மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை.[8]

தாவரங்கள்[தொகு]

ஈரநிலங்கள்-யால தேசிய வனத்தின் விலங்கு வாழிடங்கள்

இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள், இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள், தக்கிண ஊசியிலைக் காடுகள், புன்னிலங்கள், நன்னீர் ஈரநிலங்கள், கடல்சார் ஈரநிலங்கள், மணற்பாங்கான கடற்கரைகள் போன்ற பல்வேறு சூழலியற் பகுதிகளை யால தேசிய வனம் தன்னுள் கொண்டுள்ளது.[3] இத்தேசிய வனத்தில் பெரும்பான்மையாக காடு சூழ்ந்த பகுதிகளாக உள்ளன.

திறந்தவெளி மேய்ச்சல் நிலங்கள்[தொகு]

இதன் முதலாம் பிரிவு, புன்னிலங்களைச் சேர்ந்த திறந்த வெளி மேய்ச்சல் நிலங்களைக் குறிப்பிடலாம். காட்டுப் பகுதி பெரும்பாலும் மாணிக்க ஆற்றுக்கு அருகாமையில் உள்ள இடங்களாகவே காணப்படுகின்றது. அதே நேரம் மேய்ச்சல் வெளிகள் கடற்கரையை அண்டிக் காணப்படுகின்றன. முதலாம் பிரிவில் காணப்படும் ஏனைய விலங்கு வாழிட வகைகளில் குளங்கள், நீர்க்குழிகள், களப்புக்கள், கண்டல்கள் மற்றும் சேனைப் பயிர்நிலங்கள் என்பன அடங்குகின்றன. இதனுள் அமைந்திருக்கும் புத்துவ களப்புக்கு அருகாமையில் ஏராளமான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள்[தொகு]

யால தேசிய வனத்தின் இரண்டாம் பிரிவில் காணப்படும் தாவர வகைகள் பெரும்பாலும் இதன் முதலாம் பிரிவை ஒத்திருக்கின்றன. இதனுள்ளேயே ஒரு காலத்தில் வளம் மிக்க வயல் நிலமாகக் காணப்பட்ட யாலவெல பகுதி இருக்கிறது. அது இப்போது பிட்டிய எனப்படும் புன்னிலத்தின் ஒரு பகுதியாகும். இரண்டாம் பிரிவில் காணப்படும் கண்டல் தாவரங்கள் பெரும்பாலும் மாணிக்க ஆற்றின் கிளையாறுகளின் மருங்குகளிலேயே உள்ளன. அவை கிட்டத்தட்ட 100 எக்டேயர் (0.39 சதுர மைல்) பரப்பளவில் விரவியுள்ளன. இங்கு பொதுவாகக் காணப்படும் கண்டல் தாவரங்களில் ரீசோஃபோரா மக்ரொனாடா (Rhizophora mucronata), சோன்னெராட்டியா கேசியோலாரிஸ் (Sonneratia caseolaris), அவிசீனியா (Avicennia) இனங்கள் மற்றும் ஏஜிசிராஸ் கார்னிகுலேடம் (Aegiceras corniculatum) போன்றன அடங்குகின்றன. இந்த இரண்டாம் பிரிவிலேயே பிலின்னாவ, மகாபொத்தன, பகலபொத்தன போன்ற களப்புக்களும் காணப்படுகின்றன.[3] இங்கு காணப்படும் ஏனைய கண்டல் தாவரங்களில் அகாந்தஸ் இலிசிபோலியஸ் (Acanthus ilicifolius), எக்சோகாரியா அகல்லோக்கா (Excoecaria agallocha) மற்றும் லூமிந்த்செரா ரேசிமோசா(Lumnitzera racemosa) என்பன குறிப்பிடத் தக்கன. மணற்பாங்கான பகுதிகளில் ஏராளமாக கிரினம் சைலானிகம்(Crinum zeylanicum) என்ற தாவரம் காணப்படுகிறது.[9]

காடுகள்[தொகு]

யால தேசிய வனத்தின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பிரிவுகளின் எல்லாப் பகுதிகளிலும் பொதுவாகக் காடு நிறைந்துள்ளது. இப்பிரிவுகளெங்கும் காணப்படும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பெரு மர இனங்களில் முதிரை, கருங்காலி, பாலை, அராக், ஆல், அத்தி, வேம்பு, நாவல், மில்ல போன்ற பல்வேறு இன மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.[2] இக்காட்டின் இரண்டாம் பிரிவில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகளில் காட்டு நெல்லினமொன்று காணப்படுகிறது. கிலென்னனீயே உனிசுகா(Glenniea unijuga) என்பது இங்கு காணப்படும் ஈரநிலங்களில் உள்ள தனிச் சிறப்பான தாவரமாகும். இங்குள்ள மூலிகைத் தாவரங்களில் மன்ரோனியா ப்யூமிலா(Munronia pumila), சாலசியா ரெடிகுலாட்டா(Salacia reticulata) மற்றும் சாத்தாவாரி என்பன குறிப்பிடத் தக்கன.[3]

உயிர் வாழிடங்கள்[தொகு]

யால தேசிய வனத்தில் வாழும் நீரியற் பறவையொன்று

பறவைகள்[தொகு]

இலங்கையின் முக்கிய பறவை வாழிடங்கள் எழுபதில் யால தேசிய வனமும் ஒன்றாகும்.[10] இக்காட்டில் காணப்படும் 215 பறவையினங்களில் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும்.[2] இங்குள்ள ஈரநிலங்களில் வாழும் நீர்ப்பறவை இனங்கள் 90 இல் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வரும் வலசை போகும் பறவைகளாகும்.[3] அவற்றுள் நீர்க்கோழிகள், நீர்க்காகம், நாரை, கொக்கு, அன்னம், பெருஞ் சொண்டுப் பறவைகள், பூநாரை போன்றவற்றின் பல்வேறு இனங்கள் அடங்குகின்றன. அவ்வாறே, கருங்கழுத்துக் கொக்குகள் போன்ற பல அரிய பறவையினங்களும் இங்கே காணப்படுகின்றன. பருமனில் பெரிய பெலிக்கன் பறவையினங்களும் இங்கு வாழ்வது பதியப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போது வலசை போகும் நீர்ப்பறவைகள் ஆயிரக்கணக்கில் யால களப்புக்களுக்கு வருவதுண்டு. இக்காட்டில் காணப்படும் ஏனைய பறவையினங்களில் வெண்வயிற்றுக் கடற் பருந்து, பெருங் கழுகு, மயில், இலங்கைக் காட்டுக்கோழி, மணிப்புறா, மரங்கொத்தி, பாலகன், சிச்சிலி, இரட்டை வால் குருவி, மாம்பழத்தி போன்றன குறிப்பிடத் தக்கன.[9]

விலங்குகள்[தொகு]

யால தேசிய வனத்தில் அலையும் யானைக் கூட்டங்கள் இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய யானைக் கூட்டங்களாகும்

யால தேசிய வனத்தில் இலங்கை யானை உட்பட 44 முலையூட்டி இனங்கள் வாழ்கின்றன.[2] இக்காடு உலகில் அதிக எண்ணிக்கையான சிறுத்தைகள் வாழிடங்களில் ஒன்றாகும்.[11] இதன் முதலாம் பிரிவில் 25 தனிச் சிறுத்தைகள் அலைவதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[12] யால தேசிய வனத்தில் காணப்படும் யானைகளின் எண்ணிக்கை 300-350 ஆகும்.[13] இங்குள்ள யானைகளின் எண்ணிக்கை பருவ காலங்களுக்கேற்ப மாறுபடுவதுண்டு.[9] இங்கு வாழும் முலையூட்டிகளில் இலங்கைப் பனிக்கரடி, இலங்கைச் சிறுத்தை, இலங்கை யானை, காட்டு நீரெருமை ஆகியன அழிவை எதிர்நோக்குவனவாகும். காட்டு நீரெருமை இலங்கைக்குத் தனிச் சிறப்பான இனமாயினும் வளர்ப்பு எருமைகளின் அல்லது தப்பி வாழ்பவற்றின் மரபியற் கூறுகளையும் அவற்றில் பெரும்பாலானவை கொண்டுள்ளன. மேலும் மீனவப் பூனை, கொடும்புலி, பொன் மரநாய் போன்ற ஏனைய முலையூட்டி இனங்களும் நிறையவே காணப்படுகின்றன.

ஊர்வன[தொகு]

இக்காட்டிலுள்ள 46 ஊர்வன இனங்களில் இலங்கைப் புடையான், இலங்கை பறக்கும் பாம்பு போன்ற ஐந்து இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும்.[2] உலகெங்கும் அழிவை எதிர்நோக்கும் கடலாமை இனங்கள் ஐந்துமே இத்தேசிய வனத்தின் கடற்கரைகளுக்கு வருகின்றன.[2][3] இலங்கையில் வாழும் முதலை இனங்கள் இரண்டுமான சாதாரண முதலை மற்றும் உவர்நீர் முதலை ஆகியனவும் இங்கு காணப்படுகின்றன. இந்திய நாகம், கண்ணாடி விரியன் போன்ற நச்சுப் பாம்புகளும் இங்கு வாழ்வதுண்டு.[9] இங்கு பதியப்பட்டுள்ள பதினெட்டு ஈரூடகவாழி இனங்களில் இரண்டு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும்.

நீர்வாழ்வன[தொகு]

யால காட்டின் நீர்நிலைகளில் 21 நன்னீர் மீன் இனங்கள் வாழ்கின்றன.[2] இங்குள்ள நீர்த்தேக்கங்களில் வாழும் மீன்களில் பெரும்பாலானவை உணவுக்காகப் பெறப்படும் மொசாம்பிக் திலாப்பியா ஆகும்.[3] கல் உழுவை, மணல் உழுவை, செத்தல், செப்பலி, சுங்கான் போன்றவையும் குறிப்பிடத் தக்கன. இங்குள்ள களப்புக்களில் பல்வேறு வகையான நண்டுகளும் இறால்களும் கூட வாழ்கின்றன.[9] இவை தவிர இன்னும் ஏராளமான பட்டாம்பூச்சி இனங்களும் தும்பிகளும் இங்கு இருக்கின்றன.[2]

பண்பாட்டு முக்கியத்துவம்[தொகு]

யால தேசிய வனப் பகுதி முற்கால நாகரிகங்கள் சில வளர்ச்சியடைந்த இடமாகும்.[9] இராவணன் தன்னுடைய அரசை இங்குள்ள இராவணன் கோட்டை எனும் பகுதியிலேயே நிறுவியதாகக் கருதப்படுகிறது. இக்காட்டை அண்டியிருக்கும் அவ்விடம் இப்போது கடலுக்குட்பட்டிருக்கிறது. அத்துடன் அங்கே ஒரு வெளிச்ச வீடு அமைக்கப்பட்டுள்ளது. கடலோடிகளான வணிகர் பலரும் தங்களது பயணப் பாதையில் அமைந்துள்ள யால பகுதிக்கு இந்தோ ஆரிய நாகரிகத்தைத் தங்களுடன் எடுத்து வந்தனர். இங்கு மிகச் சிறந்த முறையில் நீர் மற்றும் விவசாயம் சார்ந்த கலாசாரம் மிகப் பழங்காலத்தில் நன்கு மேலோங்கியிருந்ததற்கு ஆதாரமாக இப்பகுதியில் ஏராளமாகக் காணப்படுகின்ற கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அணைக்கட்டுக்களைக் குறிப்பிடலாம்.[3]

அக்காலத்தில் பன்னிரண்டாயிரம் பௌத்தத் துறவிகள் வாழ்ந்த இடமான சித்துல்பாகுவ என்ற இடமும் கி.மு. 87 இல் கட்டப்பட்ட மகுல் விகாரையும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆகாச சைத்திய என்ற பௌத்தத் தலமும் இத்தேசிய வனத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள மாகாமம் என்ற இடத்தைத் தலைநகரைக் கொண்ட உறுகுணை இராச்சியம் விவசாயத் துறையில் நன்கு செழித்திருந்தது. பல நூற்றாண்டுகள் செழித்திருந்த உறுகுணை இராச்சியம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையத் தொடங்கியது . அதன் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாத ஆட்சியின் போது யால வனப் பகுதி வேட்டைப் பகுதியாக மாறியது. தற்காலத்தில் யால காட்டுப் பகுதிக்கு ஆண்டு தோறும் 400,000 பௌத்த புனிதப் பயணிகள் வருகை தருகின்றனர்.[14]

சவால்களும் பாதுகாப்பும்[தொகு]

சுற்றுலாத் துறை காரணமாக இப்பகுதியில் இரைச்சலும் வளி மாசடைதலும் ஏற்படுகிறது

விலங்கு பிடித்தல், மாணிக்க அகழ்வு, மரம் வெட்டுதல், சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் சுதந்திரமாக அலையும் கால்நடைகள் வனத்தினுள் நுழைதல் என்பன 'யால தேசிய வனம்' எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாகும்.[9] விலங்கு பிடிப்போரினால் இதன் காவலர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மாணிக்க ஆற்று நெடுகிலும் மாணிக்க அகழ்வு இடம் பெறுகிறது. அவ்வாறே மாணிக்க அகழ்வுக்காகத் தோண்டப்பட்ட 30 மீ.(98 அடி) ஆழமான சுரங்கக் குழிகள் கும்புக்கன் ஓயா பகுதியிலும் காணப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கையானது இக்காட்டின் மூன்றாம், நான்காம் பிரிவுகளுக்கு அண்மித்து இடம்பெறுவதால் காட்டுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மாணிக்க ஆற்றின் கரைகளில் உள்ள மரங்கள் பலவும் சாகின்றன. புகையிலைப் பயிர்ச்செய்கை, சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் இரைச்சல் மற்றும் வளி மாசடைதல் என்பனவும் சூழற் பாதுகாப்பு தொடர்பில் கட்டாயமாகக் கருதப்பட வேண்டியவை ஆகும். அவ்வாறே வெளியிலிருந்து கொண்டு வந்து நடப்பட்ட தாவர இனங்களின் வளர்ச்சியும் இங்கு இயற்கையாக உள்ள தாவர இனங்களுக்குக் கேடாக அமைகின்றது.[3] காட்டின் மிக உட்புறமான பகுதிகளை வெட்டி கஞ்சாப் பயிர்ச்செய்கையும் நிகழ்கிறது.[9]

பாத்தனன்கல பகுதியில் மீனவர்கள் வனவிலங்குகளைப் பிடிப்பதும் குழப்புவதும் நடைபெறுகிறது. மீன் வலைகளில் அரிய இன கடலாமைகள் அகப்படுகின்றன. மீனவர்கள் உட்பகுதிகளில் பொறிகளை அமைத்திருப்பதுடன் கடலாமைகளின் முட்டைகளைத் தோண்டி எடுக்கின்றனர். அவர்கள் குப்பை கூளங்களைக் கடற்கரையில் வீசியெறிந்து அதனை மாசுபடுத்துகின்றனர். 1950 வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று களைகளைத் தேர்ந்தெடுத்து அழிக்காமல் இருப்பதனால் புன்னிலங்கள் காடுகளினுட் பகுதியிலும் களைகள் வளர்ச்சியடையக் காரணமாகின்றது.

கடந்த காலங்களில் சுற்றுலாத்துறை வளர்ச்சி காரணமாக காட்டுக்குள் வரும் வண்டிகளால் விலங்குகளின் நடமாட்டம் தடைப்படுவதும் அவற்றுடன் மோதுவதும் குறிப்பிடத் தக்கன. மேலும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான புனிதப் பயணிகளும் அவர்களைக் குறி வைத்து இடம்பெறும் வணிகமும் சித்துல்பாகுவ பகுதியில் இந்நிலையை இன்னும் மோசமடையச் செய்கிறது. இந்நிலையைச் சமாளிப்பதற்காக இலங்கை வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் மேய்ச்சல் நிலங்களை முகாமை செய்தல், சிறிய குளங்களைப் பராமரித்தல், வெளித் தாவரங்கள் வளர்வதைத் தடுத்தல் முதலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. யானைகள் காட்டை அண்மித்த கிராமங்களுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக இங்கு 40 கி.மீ.(25 மைல்) நீளமான மின்சார வேலி இடப்பட்டுள்ளது.[3]

சுற்றுலா[தொகு]

யால தேசிய வனத்தில் உள்ள செம்முகப் பூங்குயில்

இலங்கையில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடம் யால தேசிய வனம் ஆகும்.[3] 2002 ஆம் ஆண்டு இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 156,867 ஆகும். அவர்களில் வெளிநாட்டவர், குறிப்பாக ஐரோப்பியர் 30% ஆவர்.[15] இக்காட்டின் முதலாம் பிரிவே மிகக் கூடுதலான பயணிகளைக் கவருவதாகும். இதன் மூன்றாம் பிரிவுடன் சேர்ந்தாற் போல இருக்கும் 'குமண தேசிய வனம்' அல்லது 'யால கிழக்கு' காரணமாக இப்போது காட்டின் மூன்றாம் பிரிவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. (பார்க்க: [1]).யானைக் கூட்டங்களைப் பார்த்தல் இங்கு வெகுவாக விரும்பப்படுகிறது. அத்துடன், கரடி, சிறுத்தை, பறவைகள் போன்றவற்றைப் பார்ப்பதை கூடுதலாக விரும்புவதாகவும் பயணிகளில் பலர் கூறுகின்றனர்.

2000 ஆம் ஆண்டு இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளால் கிடைத்த வருமானம் 468,629 அமெரிக்க டொலர் ஆகும்.[14] இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக இதன் வருமானம் மிகக் குறைந்திருந்தது.[16] யால தேசிய வனத்தில் தமிழிழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. 2007 ஒக்டோபர் 17 ஆம் திகதி தேசிய வனத்தினுள் அமைந்துள்ள தல்கசுமங்கட இராணுவ முகாமை விடுதலைப் புலிகள் தாக்கினர்[17].ஈழப்போர் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தததை அடுத்து இத்தேசிய வனத்தின் மூன்றாம், ஐந்தாம் பிரிவுகள் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டன.

2008 சனவரி முதல் சூன் வரை 9078 உள்நாட்டுப் பயணிகளும் 7532 வெளிநாட்டுப் பயணிகளும் இங்கு வருகை தந்துள்ளனர். 2009 ஆம் ஆண்டின் அதே காலப் பகுதியில் வருகை தந்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 18,031 உம் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10,439 உம் ஆகக் கூடியது. அவ்வாறே, 2008 ஆம் ஆண்டு 16.6 மில்லியன் இலங்கை ரூபாய் (154,000 அமெரிக்க டொலர்) ஆக இருந்த வருமானம் 2009 இல் 27 மில்லியன் இலங்கை ரூபாய் (235,000 அமெரிக்க டொலர்) ஆகக் கூடியது. இக்காட்டுக்கு வரும் பயணிகள் வனவிலங்குகளைப் பார்வையிடுவதற்கு காலை 5.30 முதல் மாலை 6.30 வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.[2] வறட்சி காரணமாக ஒவ்வோராண்டும் செப்டெம்பர் 1 முதல் அக்டோபர் 15 வரை சுற்றுலாப் பயணிகள் காட்டினுட் செல்வது அனுமதிக்கப்படாமலிருந்தது; எனினும், 2009 இலும் 2010 இலும் வனவிலங்குகளுக்காக இங்குள்ள குளங்களில் நீர் நிறைக்கப்பட்டவுடன் அனுமதிக்கப்பட்டது. எவ்வாறிருந்த போதும், வறட்சியான நிலைமையை எதிர்கொள்வதற்கான எதிர்காலத் திட்டமெதுவும் இதுவரை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 R. L. Brohier (2001). ஹேவாவசம், அபய. ed (in Sinhala). புரோகியர் கண்ட இலங்கை [The Ceylon that Brohier seen] (2nd ). சூரியா பதிப்பகம். பக். 312–320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9348-63-9. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 சேனாரத்ன, பி.எம். (2005). "யால" (in Sinhala). இலங்கையின் தேசிய வனங்கள் (2nd ). சரசவி பதிப்பகம். பக். 22–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 "றுகுண தேசிய வனம்". இலங்கையின் ஈரநிலங்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும். பன்னாட்டு நீர் முகாமைத்துவ நிறுவனம். Archived from the original on 26 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 15 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. பெர்னாண்டோ, பிரித்திவிராஜ்; விக்கிரமநாயக்க, எரிக் டி. மற்றும் பஸ்டோரினி, ஜெனிபர் (2006 யூன் 10). "இலங்கையின் யால தேசிய வனத்தின் தரைத்தோற்ற சூழலியல் அமைப்பில் கடற்கோளின் தாக்கம்" (pdf). Current Science 90 (11): 1531–1534. http://www.ias.ac.in/currsci/jun102006/1531.pdf. 
  5. 5.0 5.1 எல். ரத்னாயக்க, ரானித்த (pdf). தொலையுணர்தல் வழியாக இலங்கையின் யால தேசிய வனத்தின் தாவரங்களின் ஒருமைப்பாட்டில் கடற்கோள் பேரழிவின் தாக்கம். இலங்கை. http://www.ceg.ncl.ac.uk/rspsoc2007/papers/77.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "நிலநடுக்கம்: கடற்கோள் யால காட்டை மூடுகிறது". noticias.info. 28 டிசம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 18 March 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. மூர், ஏ.எல்.; மெக்கடூ, பீ.ஜீ.; ரணசிங்க, என். (December 2007). 2004 இலங்கையின் தென்கிழக்கில் உள்ள யால காட்டின் மீது சிறிய தாக்கத்தையே தெற்காசியக் கடற்கோள் பதித்துள்ளது. American Geophysical Union. Bibcode: 2007AGUFMOS31A0168M. 
  8. விக்கிரமநாயக்க, எரிக் டி.; பெர்னாண்டோ, பிரித்திவிராஜ்; லெய்ம்குருபர், பீட்டர் (2006). "தென்னிலங்கையில் சமிக்ஞைப் பட்டி அணிவிக்கப்பட்ட யானைகள் கடற்கோள் தொடர்பில் காட்டிய நடத்தை" (pdf). Biotrophica 38 (6): 775–777. doi:10.1111/j.1744-7429.2006.00199.x. http://si-pddr.si.edu/dspace/bitstream/10088/6047/1/41A3412A-04F5-48D1-86A7-8BF03813F28B.pdf. பார்த்த நாள்: 2011-03-27. 
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 Green, Micahael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. International Union for Conservation of Nature. பக். 242–246. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2831700302. http://www.archive.org/details/iucndirectoryofs90gree. 
  10. "Important Bird Area factsheet: Yala, Sri Lanka". birdlife.org. BirdLife International. 2009. Archived from the original on 2 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 18 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. கிட்டில், அண்ட்ரூ (10 May 2009). "இலங்கைச் சிறுத்தையைக் கண்காணித்தல்". The Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/090510/Plus/sundaytimesplus_12.html. பார்த்த நாள்: 27 February 2010. 
  12. Santiapillai, Charles; Chambers, M.R. and Ishwaran, N. (May 1982). "The leopard Panthera pardus fusca (meyer 1794) in the ruhuna national park, Sri Lanka, conservation". Biological Conservation (1982) 23 (1): 5–14. doi:10.1016/0006-3207(82)90050-7. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6V5X-48XVM91-3D&_user=10&_coverDate=05/31/1982&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=1258691484&_rerunOrigin=google&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=744e90ac3cf20d3191547a2d216bb8be. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. Perera, B. M. A. Oswin (2007) (pdf). Status of Elephants in Sri Lanka and the Human-Elephant Conflict. http://www.vet.cmu.ac.th/elephant/file/9%2014-22%20Oswin.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. 14.0 14.1 Buultjens, J.; Ratnayake, I.; Gnanapala, A.; Aslam, M (2005). "Tourism and its implications for management in Ruhuna National Park (Yala), Sri Lanka" (pdf). Tourism Management 26 (5): 733–742. doi:10.1016/j.tourman.2004.03.014. http://www.sab.ac.lk/Faculty/Management/tourism/Research/sdarticle.pdf. பார்த்த நாள்: 2011-03-27. 
  15. Weerasinghe, U. M. I. R. K. "Ruhuna (Yala) National Park in Sri Lanka: visitors, visitation and Eco-tourism". fao.org. Food and Agriculture Organization. பார்க்கப்பட்ட நாள் 17 March 2010. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  16. Prematunge, Sajitha (26 July 2009). "Revamping national parks in a post-war setting". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605233821/http://www.sundayobserver.lk/2009/07/26/imp10.asp. பார்த்த நாள்: 17 March 2010. 
  17. "Not a feather in Tiger cap". Sunday Observer. 21 October 2007 இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080123124048/http://www.sundayobserver.lk/2007/10/21/fea02.asp. பார்த்த நாள்: 18 March 2010. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யால_தேசிய_வனம்&oldid=3829404" இலிருந்து மீள்விக்கப்பட்டது