ஆப்பெரா (உலாவி)
Opera Web Browser.png Opera 43.0 displaying the Speed Dial on விண்டோசு 10 | |
மேம்பாட்டாளர் | ஆப்பெரா மென்பொருள்(Golden Brick Capital Private Equity Fund I Limited Partnership) |
தொடக்க வெளியீடு | 1995[1] |
எழுதப்பட்ட மொழி | சி++[2] |
இயக்க அமைப்பு | விண்டோசு, [macOS], லினக்சு, (formerly [FreeBSD]) |
வளர்ச்சி நிலை | இயங்குநிலை |
வகை | உலாவி |
உரிமம் | இலவசமென்பொருள் |
வலைத்தளம் | opera |
ஆப்பெரா அல்லது ஒப்பேரா (Opera) என்பது ஆப்பெரா மென்பொருளால் மேம்படுத்தப்பட்ட உலகளவில் 27 கோடி எண்ணிக்கையிலான பயனர்களினால் பயன்படுத்தப்படும் உலாவியும் இணையக் கூட்டுத் தொகுப்பும் ஆகும். இணையம் தொடர்பான பொதுவான செய்பணிகளான வலைத் தளங்களைக் காட்சிப்படுத்துதல், மின்னஞ்சல் செய்திகளை அனுப்புதலும் பெறுதலும், தொடர்புகளை முகாமித்தல், இணையத் தொடர் அரட்டை மூலமாக அரட்டையடித்தல், பிட்டொரெண்டின் மூலம் கோப்புகளைப் பதிவிறக்குதல், வலை ஊட்டங்களை வாசித்தல் முதலியவற்றை ஆப்பெராவில் மேற்கோள்ள முடியும். தனியார் கணினி, நகர்பேசி ஆகியவற்றுக்கான ஆப்பெரா உலாவிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
உக்கிரைன், பெலருசு போன்ற சில நாடுகளில் ஆப்பெரா புகழ் பெற்ற திரைப்பலக உலாவியாக விளங்குகின்றது. திசம்பர் 2011 தரவுகளின்படி ஆப்பெரா மினியே மிகவும் புகழ் பெற்ற நகர்வலையுலாவியாக உள்ளதுடன் பெரும்பாலான நகர்பேசிகளில் அவற்றின் தயாரிப்பாளர்களால் இயல்புநிலை ஒருங்கிணை வலையுலாவியாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தத்தல் உலாவல், பக்கத்தைப் பெரிதாக்குதல், சுட்டிக் குறிகாட்டல்கள், ஒருங்கிணைந்த பதிவிறக்க முகாமை மென்பொருள் ஆகிய வசதிகளை ஆப்பெரா கொண்டுள்ளது. ஏமாற்றுப் பரப்புகை, தீப்பொருள் ஆகியவற்றிலிருந்தான உள்ளமைப் பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகளை அழிப்பதற்கான வசதி (எ-டு: மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை நினைவிகளை அழித்தல்) போன்ற பாதுகாப்பு வசதிகளும் ஆப்பெராவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக்கு இயங்குதளம் எக்கு, இலினக்கு, விரீபி. எசு. தி. ஆகிய இயங்குதளங்கள் உள்ளடங்கலாகப் பல்வகைப்பட்ட தனியார் கணினி இயங்கு தளங்களில் ஆப்பெரா ஓடுகின்றது. மேமோ, பிளாக்குபெரி, சிம்பியன், நகர்விண்டோசு, அண்டிராயுடு, ஐ. இயங்குதளம் ஆகிய இயங்குதளங்களிலும் யாவாத் தள நுண்பதிப்பிலும் இயங்கும் கருவிகளுக்கும் ஆப்பெராப் பதிப்புகளைப் பெற முடியும். ஆப்பெரா உலாவியானது ஏறத்தாழ 12 கோடி நகர்பேசிகளுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. நிண்டெண்டோ தி. எசு., வீ ஆகிய ஆட்ட முறைமைகளுக்கான ஒரேயொரு வணிக வலையுலாவி ஆப்பெராவேயாகும். சில தொலைக்காட்சி மேலமைபெட்டிகளும் ஆப்பெராவைப் பயன்படுத்துகின்றன. அடோபி ஆக்கத் தொகுதியில் பயன்படுத்துவதற்கு அடோபி முறைமைகள் ஆப்பெராத் தொழினுட்பத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரலாறு
[தொகு]1994ஆம் ஆண்டில் பெரிய நோர்வேத் தொலைத்தொடர்பாடல் நிறுவனமான தெலினாரில் ஆய்வுத் திட்டமொன்றாகவே ஆப்பெரா தொடங்கப்பட்டது. 1995இல் ஆப்பெரா மென்பொருள் பொதுப் பங்கு நிறுவனம் என்ற தனியான நிறுவனமாக அது பிரிந்தது. 1996இல் மைக்ரோசாப்ட் விண்டோசில் மட்டும் ஓடக்கூடிய ஆப்பெரா உலாவியின் பதிப்பு 2.0ஏ வெளிப்படையாக வெளிவிடப்பட்டது. இணையத் தொடர்புள்ள கையடக்கக் கருவிகளுக்கான வளர்ந்து வரும் விற்பனை வாய்ப்பில் முதன்மை வகிப்பதற்கான ஒரு முயற்சியாக, 1998இல் நகர்கருவித் தளங்களுடன் ஆப்பெராவை இணைப்பதற்கான திட்டமொன்றும் தொடங்கப்பட்டது. பல்வேறு இயங்குதளங்களிலும் தளங்களிலும் இயங்கக்கூடிய ஆப்பெராப் பதிப்புகளை உருவாக்குவதை எளிதாக்கக்கூடிய புதிய குறுக்குத்தளக் கருவொன்றை 2000ஆம் ஆண்டில் வெளிவிடப்பட்ட ஆப்பெரா 4.0 கொண்டிருந்தது.
மேற்கூறிய பதிப்பு வரை, ஆப்பெரா ஒரு பங்குப் பொருளாகவே இருந்தது. ஒத்திகைக் காலம் முடிந்த பின்பு ஆப்பெராவைப் பணங்கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. பின்னர், 2000இல் வெளிவிடப்பட்ட பதிப்பு 5.0இலிருந்து ஆப்பெராவைப் பணங்கொடுத்து வாங்காமலேயே பயன்படுத்தலாம் என்ற நிலை வந்தாலும் ஆப்பெரா விளம்பர உதவியுடனான மென்பொருளாக்கப்பட்டது. பணங்கொடுத்து வாங்காத பயனர்களுக்கு விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆப்பெராவின் பிந்தைய பதிப்புகளில் பதாகை விளம்பரங்களை அல்லது கூகுளின் குறி வைக்கப்பட்ட உரை விளம்பரங்களைப் பார்ப்பதற்கான தெரிவு பயனர்களுக்கு ஆப்பெராவால் வழங்கப்பட்டது. பின்னர், 2005இல் வெளிவிடப்பட்ட பதிப்பு 8.5உடன் விளம்பரங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டு, உலாவிக்கான முதன்மைப் பண உதவியானது கூகுளிடமிருந்தான வருவாயிலிருந்து பெறப்படுகின்றது (ஒப்பந்தத்தின்படி ஆப்பெராவின் இயல்புநிலைத் தேடுபொறி கூகுள் ஆகும்.).
2006இல் வெளிவிடப்பட்ட பதிப்பு 9.1இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதிகளுள் இலக்கச் சான்றிதழ் வழங்கும் நிறுவனமான சியோட்டிரட்டிடமிருந்தும் அறியப்பட்ட ஏமாற்றுப் பரப்புகை வலைத் தளங்களைத் தொடரும் விசுட்டேங்கு என்ற அமைப்பிடமிருந்தும் பெற்ற தொழினுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வசதியானது பதிப்பு 9.5இல் மேலும் மேம்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட்டதுடன் சியோட்டிரட்டுக்குப் பதிலாக நெட்கிராவிட்டு பயன்படுத்தப்பட்டது. மேலும் ஆட்டிப் பாதுகாப்பிடமிருந்தான தீப்பொருள் பாதுகாப்பும் சேர்க்கப்பட்டது.
2006ஆம் ஆண்டிலேயே, நிண்டெண்டோ தி. எசு., வீ ஆகிய ஆட்ட முறைமைகளுக்கான ஆப்பெராப் பதிப்புகளும் உருவாக்கப்பட்டு வெளிவிடப்பட்டன. இண்டனெட்டு சேனல் என்றழைக்கப்பட்ட வீக்கான ஆப்பெரா வெளிவிடப்பட்ட நாளான ஏப்ரல் 12, 2007இலிருந்து சூன் 30, 2007 வரை அப்பதிப்பை இலவசமாகப் பெறக்கூடியதாகவிருந்தது. சூன் 30, 2007இற்குப் பிறகு, 500 வீப் புள்ளிகளைச் செலுத்துவதன் மூலமே மேற்கூறிய பதிப்பை வீப் பயனர்கள் தரவிறக்கக் கூடியதாகவிருந்தது. பின்னர், செப்டெம்பர் 2, 2009இலிருந்து மீண்டும் அப்பதிப்பை இலவசமாகத் தரவிறக்கக் கூடியதாகவிருந்தது. இண்டனெட்டு சேனலைத் தரவிறக்குவதற்காக ஏற்கெனவே பணத்தைச் செலுத்திய பயனர்களுக்கு அதே பெறுமதியுடைய நிண்டெண்டோ பொழுதுபோக்கு முறைமையாட்டமொன்று வழங்கப்பட்டது. ஆனால், நிண்டெண்டோ தி. எசு. உலாவி இலவசமாக வழங்கப்படுவதில்லை; வன்பொருளாக, தி. எசு. படிப்பு நினைவகப் பொதியுறையாகவே வழங்கப்படுகின்றது. தி. எசு. ஐ. விற்பனை நிலையத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கக் கூடிய இண்டனெட்டு சேனலை நிண்டெண்டோ தி. எசு. ஐ. கொண்டுள்ளது.
சாவக வரிவடிவத்திற்குப் பின்பு, காரக்கன் என்றழைக்கப்பட்ட புதிய யாவாக்கிறிட்டுப் பொறியொன்று பதிப்பு 10.50உடன் அறிமுகப்படத்தப்பட்டது. ஆப்பெரா மென்பொருளின்படி, சன்பைடரில் காரக்கனானது ஆப்பெரா 10.10ஐ விட ஆப்பெரா 10.50ஐ ஏழு மடங்கு விரைவாக்குகின்றது. திசம்பர் 16, 2010]]இல் நீட்டிப்புகள், தாவல் அடுக்கு, கட்புலச் சுட்டிக் குறிகாட்டல்கள் ஆகிய வசதிகளுடனும் முகவரிப் பட்டியில் மாற்றங்களுடனும் ஆப்பெரா 11 அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முகவரிப் பட்டியானது நெறிமுறையையும் வினவற்றகவலையும் இயல்பாகவே மறைக்கின்றது. [[சூன் 14, 2012இல் ஆப்பெரா 12 வெளிவிடப்பட்டுள்ளது.
வசதிகள்
[தொகு]ஆப்பெராவானது உள்ளமைதத்தலுலாவல், விளம்பர வடிகட்டல், மோசடிப் பாதுகாப்பு, பதிவிறக்க முகாமை மென்பொருள், பிட்டொரெண்டு வாங்கி, தேடற்பட்டி, வலையூட்டத் திரட்டி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஆப்பெரா அஞ்சல் என்றழைக்கப்படுகின்ற மின்னஞ்சல் வாங்கியையும் உள்ளமையிணையத் தொடர் அரட்டை வாங்கியையுங்கொண்டும் ஆப்பெரா உலாவி வெளிவருகின்றது.
புதிய தாவல் ஒன்று திறக்கப்படும்போது அப்பக்கத்தில் வில்லைப்பட அளவில் முடிவில்லாத எண்ணிக்கையான பக்கங்களைச் சேர்ப்பதற்கான வசதியைப் பயனருக்குக் கொடுக்கும் விரைவழைப்பு வசதியையும் ஆப்பெரா கொண்டுள்ளது. விரைவழைப்பிலிணைக்கப்படும் பக்கங்களுக்கான வில்லைப்படங்கள் தானாகவே உருவாக்கப்பட்டு, விரைவழைப்புப் பக்கத்தில் கட்புல உணர்வுக்குப் பயன்படுத்தப்படும்.
ஆப்பெராவானது மூன்றாந்தரப்பு வழியில் உலாவிக்குக் குறிப்பிட்ட செயற்பாடுகளைச் சேர்க்கும் ஒப்பீட்டளவில் சிறு செய்நிரல்களான உட்பொருத்திகளின் மூலம் நீட்டிக்கத்தக்கது. ஆப்பெரா 11இலிருந்து மூன்றாந்தரப்பு நீட்டிப்புகளையும் பயன்படுத்தக்கூடியதாகவுள்ளது. ஆனாலும் உட்பொருத்திகளின் செயற்பாட்டை ஆப்பெரா மட்டுப்படுத்துகின்றது. மேலும் ஆப்பெரா உலாவியில், பயனர் யாவாக்கிறிட்டை வலைத் தளங்களுக்குத் தனிப்பட்ட யாவாக்கிறிட்டைச் சேர்க்கவும் பயன்படுத்த முடியும்.
மொழிகளும் ஓரிடமாக்கலும்
[தொகு]ஆப்பெரா உலாவியானது இப்போது 60 வட்டார மொழிகளில் கிடைக்கின்றது. அவையாவன: ஆபிரிக்கானம், அரபு, அசர்பைசானியம், பெலருசியம், வங்காளம், பல்கேரியம், செக்கம், எளிய சீனம், பாரம்பரியச் சீனம், குரோவாசியம், தேனியம், இடச்சு, பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், எசுத்தோனியம், பின்னியம், பிரான்சியம், கனேடியப் பிரான்சியம், விரிசியம், சியார்சியம், இடாய்ச்சு, கிரேக்கம், எபிரேயம், இந்தி, அங்கேரியம், இந்தோனேசியம், இத்தாலியம், சப்பானிய மொழி, காசாக்கு, கொரியம், இலிதுவானியம், மக்கதோனியம், மலாய், மாண்டேனெகிரின், நீநொர்க்கு நோர்வே, பூக்குமோல் நோர்வே, பாரசீகம், போலியம், போர்த்துகீசம், பிரேசிலியப் போர்த்துகீசம், பஞ்சாபியம், உருமானியம், உருசியம், சுக்காத்திசு கேலிக்கு, செருபியம், சுலோவாக்கியம், இலத்தீன் அமெரிக்க எசுப்பானியம், எசுப்பானிய எசுப்பானியம், சுவாகிலி, சுவீடியம், தகலாகு, தமிழ், தாய், தெலுங்கு, துருக்கியம், உக்குரேனியம், உருது, உசுபேக்கியம், வியட்டிநாமியம், சுலு
பயன்படுதகவும் அணுகற்றகவும்
[தொகு]ஆப்பெராவிலுள்ள மாதிரிச் சுட்டிக் குறிகாட்டல்கள் | ||
---|---|---|
பின்: வலது சுட்டியாளியை அழுத்திக் கொண்டு, சுட்டியை இடது புறம் நகர்த்தி, அழுத்துவதைக் கைவிடவும்.
மாற்றுவழி: வலது ஆளியை அழுத்திக் கொண்டு இடது ஆளியை அழுத்தவும். | ||
முன்: வலது சுட்டியாளியை அழுத்திக் கொண்டு, சுட்டியை வலது புறம் நகர்த்தி, அழுத்துவதைக் கைவிடவும்.
மாற்றுவழி: இடது ஆளியை அழுத்துக் கொண்டு வலது ஆளியை அழுத்தவும். | ||
புதிய தாவலில் திறக்கவும்: வலது சுட்டியாளியை அழுத்திக் கொண்டு, சுட்டியைக் கீழே நகர்த்தி, அழுத்துவதைக் கைவிடவும்.
நடுச் சுட்டியாளியின் மூலம் ஒரு தொடுப்பைச் சொடுக்குவதும் மேற்கூறியது போன்ற வருவிளைவைத் தருமென்றாலும் புதிய தாவல் செயற்படுதாவலாகத் திறக்கப்படுவதற்குப் பதிலாகப் பின்புலத் தாவலாகவே திறக்கப்படும். |
கட்புலக் குறைபாடுள்ளவர்கள்ள பயனர்களுக்குக் கணினி அணுகலை வழங்கும் கடப்பாட்டுடன் ஆப்பெரா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பெராவானது, ஒரு பன்னிலையுலாவியாக, அதனுடைய பயனர் இடைமுகத்தில் பல்வகைப்பட்ட தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பெரா உலாவியிலுள்ள பெரும்பாலான கூறுகளனைத்தையும் விசைப்பலகையை மட்டுமே பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன், பயனருக்கேற்ற வகையில் இயல்புநிலை விசைப்பலகைக் குறுக்குவழிகளையும் மாற்றியமைக்க முடியும். இட வழிநடத்துதலையேற்கும் ஒரேயொரு பாரிய உலாவி ஆப்பெராவே ஆகும். சுட்டிக் குறிகாட்டல்களையும் ஆப்பெரா ஏற்கின்றது. ஆப்பெராவில் சுட்டியை வேறுபட்ட முறைகளில் அசைப்பதன் மூலம் வேறுபட்ட பின், மறுநினைவேற்று போன்ற உலாவிச் செயல்களைச் செயற்படுத்த முடியும்.
சரிவரப் பார்வை தெரியாவர்களுக்கு உதவும் வகையில் உரை, படிமங்கள் ஆகியவற்றையும் அடோபி விளாசு பிளேயர், யாவாத் தளம், அளவிடக்கூடிய காவி வரைகலை போன்ற ஏனைய உள்ளடக்கங்களையும் அளவிற்பெருப்பிக்கவோ சிறிதாக்கவோ (20%இலிருந்து 1000% வரை) செய்வதற்காகப் பக்கப் பெருப்பிப்பு வசதியும் ஆப்பெராவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆப்பெராவில் பயனரொருவர் வலைப் பக்கங்களுக்கான எழுத்துருக்களையும் நிறங்களையும் தேர்வு செய்வதுடன் பக்கமொன்றின் விழுதொடர்பாணித்தாட்பாணியினது கட்டுப்பாட்டினையும் நீக்க முடியும். தளங்களை உயர்நிற வேறுபாட்டிலோ வாசிப்பதற்கு மேலுமிலகுவான எழுத்துருக்களிலோ தோன்றச் செய்வதற்கு இத்தெரிவு பயன் மிக்கது.
அனைத்துலக வணிகப் பொறிகள் கூட்டு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட குரலாளுகை முறையின் மூலம் விசைப்பலகையோ சுட்டியோ இன்றி ஆப்பெரா உலாவியைக் கட்டுப்படுத்த முடியும். இம்முறையின் மூலம் பக்கங்களையும் தெரிவு செய்யப்பட்ட உரையையும் பலத்து வாசிக்கச் செய்யவும் முடியும்.
மெதுவான இணைய இணைப்புகளில் ஆப்பெரா உலாவியில் ஆப்பெரா தருபோ என்ற வசதியைச் செயற்படுத்தினால், ஆப்பெராவின் வழங்கிகள் நிகர்வழங்கியாகச் செயற்பட்டு, வேண்டப்பட்ட வலைப் பக்கத்தைப் பயனருக்கு அனுப்பும் முன் 80% வரை சுருக்கி அளிக்கும். இச்செயன்முறையானது அனுப்பப்படும் தரவுகளின் மொத்த அளவைக் குறைப்பதுடன், பக்கத்தை ஏற்றுவதற்குத் தேவையான நேரத்தினளவையும் குறைக்கின்றது. இம்முறையானது ஆப்பெரா மினியிலும் பயன்படுத்தப்படுகின்றது.
தகவற்காப்பும் பாதுகாப்பும்
[தொகு]முடிவுப் பயனருக்குக் கட்புலனாகும் பாதுகாப்பு வசதிகள் பலவற்றை ஆப்பெரா கொண்டுள்ளது. மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை நினைவிகள், மேலோடல் வரலாறு, இடைமாற்று போன்ற தனிப்பட்ட தரவுகளை ஓராளியை அழுத்துவதன் மூலம் அழிப்பதற்கான தெரிவு அவற்றுள் ஒன்றாகும். பயனரொருவர் பகிரப்பட்ட கணினியொன்றில் மேலோடிய பிறகு, தனிப்பட்ட தரவுகளை அழிப்பதற்கு இவ்வசதி உதவுகின்றது.
பாதுகாப்பான வலைத் தளமொன்றைப் பார்க்கும்போது, பாதுகாப்பான குதைப் படை அல்லது பரிமாற்றப் படைப் பாதுகாப்பின் மூலம் ஆப்பெராவால் தரவுகள் மறையாக்கப்படும். பின்னர், முகவரிப் பட்டியில் தளத்தின் பாதுகாப்பைப் பற்றிய தகவல்கள் ஆப்பெராவாற்சேர்க்கப்படும். ஏமாற்றுப் பரப்புகை, தீப்பொருள் போன்றவற்றுக்கான கரும்பட்டியல்களுள் பார்க்கப்படுகின்ற வலைத் தளமுள்ளதா எனப் பார்க்கப்பட்டு, அவ்வாறிருந்தால் எச்சரிக்கை விடுக்கப்படும். இவ்வசதி இயல்பாகவே ஆப்பெராவிற்செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயனரொருவர் இவ்வாறான சோதனைகளை தானாகவே செய்யாதிருக்கும்படி தெரிவுகளை மாற்றியமைக்க முடியும். இச்சோதனை செயற்படுத்தப்படாதிருந்தாலும் தளங்களைத் திறந்துள்ளபோது பாதுகாப்பு விவரங்களுக்கான பெட்டியைத் திறப்பதன் மூலம் தனிப்படச் சோதித்துக் கொள்ள முடியும்.
ஆப்பெராவில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச் சொற்கள் அனைத்தையும் பயனரொருவர் முதன்மைக் கடவுச் சொல்லொன்றின் மூலம் பாதுகாக்க முடியும். முதன்மைக் கடவுச் சொல் தெரியாதவிடத்து ஏனைய கடவுச் சொற்களைத் தீப்பொருள்கள் அணுகுவதை இதன் மூலம் தடுக்க முடியும். மேலும் வயர்வாக்கு, குரோம் ஆகிய உலாவிகளில் கடவுச் சொல் முகாமை மென்பொருள்கள் மூலம் சேமிக்கப்பட்ட கடவுச் சொற்களைப் பார்ப்பது போல் ஆப்பெராவில் பார்க்க முடியாது.
பாதுகாப்பு வழுக்களையும் மென்பொருள் வழுக்களையும் அவை தவறாகப் பயன்படுத்தப்படும் முன்னோ கடுமையான சிக்கலாக வரும் முன்னோ கண்டுபிடிப்பதற்காக, ஆப்பெரா மென்பொருள் நிறுவனமானது வழுவறிக்கைகளைப் பயனர்கள் வழங்குவதற்காகப் பொது வலைப் படிவமொன்றைப் பராமரித்து வருகின்றது. கணினிப் பாதுகாப்புப் பணி வழங்குநரான செக்குனியாவின் பெபிரவரி 10, 2009 தரவுகளின்படி, இறுதி 365 நாட்களில் ஆப்பெராவில் சீரமைக்கப்படாத வழுக்களின் இடை 0.01 ஆகும். இண்டநெட்டு எக்சுப்புளோரர் (38.3), வயர்வாக்கு (5.77), சபாரி (1.54) ஆகிய உலாவிகளுடன் ஒப்பிடும்போது இத்தொகை குறைவாகும்.
சனவரி 2007இல் ஆப்பெராவின் போட்டி நிறுவனமான மொசில்லா நிறுவனத்தைச் சேர்ந்த அசா தோட்சிளீர் திசம்பர் 2006இற்சரிசெய்யப்பட்ட ஆப்பெராவில் காணப்பட்ட பாதுகாப்பு வழுக்களைக் குறித்த தகவலை ஆப்பெரா மென்பொருள் நிறுவனம் பெரிதுங்கவனிக்காமல் விட்டதாகக் குற்றஞ்சாட்டினார். ஆப்பெராவின் முந்தைய பதிப்பில் காணப்பட்ட பாதுகாப்பு வழுக்களைப் பற்றிப் பயனர்களுக்குத் தெளிவாக அறிவிக்கப்படாததாகவும் அதன் விளைவாக, பயனர்கள் பிந்திய பதிப்பிற்கு நிகழ்நிலைப்படுத்த வேண்டிய தேவையைப் பற்றிச் சிந்திக்காமலோ ஆப்பெராவைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி அறியாமலோ இருக்கலாமெனவும் தோட்சிளீர் கூறினார். அடுத்த நாளே இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பெரா பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
தரங்களுடனான ஒத்திசைவு
[தொகு]இப்போது வலை வடிவமைப்பின் பாரிய கூறாகவுள்ள விழுதொடர்பாணித் தாள்களை ஏற்ற முதலுலாவிகளுள் ஆப்பெராவும் ஒன்று. விழுதொடர்பாணித் தாள்கள் 2.1, மீப்பாடக் குறிமொழி5, நீடகு மீப்பாடக் குறிமொழி 1.1, அடிப்படை நீடகு மீப்பாடக் குறிமொழி, நகர்சுயவிவர நீடகு மீப்பாடக் குறிமொழி, நீடகு மீப்பாடக் குறிமொழி+குரல், கம்பியில்லாக் குறிமொழி, நீடகு பாணித்தாண்மொழி நிலைமாற்றங்கள், நீடகு குறிமொழிப் பாதை, நீடகு பாணித்தாண்மொழி வடிவமைக்கும் உருப்படிகள், இ. சி. எம். ஏ. கிறிட்டு 5.1(யாவாக்கிறிட்டு), ஆவண உருப்படி மாதிரிகை 2, நீடகு குறிமொழி மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை வேண்டுகோள், மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை 1.1, பரிமாற்றப் படைப் பாதுகாப்பு 1.2, ஒருங்குறி, அடிப்படை அளவிடக்கூடிய காவி வரைகலை 1.1, சிறு அளவிடக்கூடிய காவி வரைகலை 1.1, வரைகலைப் பரிமாற்ற வடிவம்89ஏ, ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு ஆகிய வலைத் தரங்களுடன் பெயரத்தகு வலையமைப்பு வரைகலையையும் ஒளிபுகாதன்மையுடன் ஏற்கின்றது. குறிப்பிட்ட வலைத் தரங்களை ஓருலாவி சரியாக ஏற்கிறதா இல்லையா என்பதைச் சோதிக்கும் ஆசிடு2 சோதனையை, பதிப்பு 12.01 வரை, ஆப்பெராவானது வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இச்சோதனையை வெற்றிகரமாகக் கடந்த இரண்டாவது உலாவியும் முதலாவது விண்டோசு உலாவியும் ஆப்பெராவே ஆகும். ஆப்பெரா 10.5+ பதிப்புகள் ஆவண உருப்படி மாதிரிகை, யாவாக்கிறிட்டு ஆகிய தரங்களை முதன்மையாகக் குவியப்படுத்தும் ஆசிடு3 சோதனையை 100/100 எனும் புள்ளியுடன் வெற்றிகரமாகக் கடக்கின்றன.
அனைத்துலக ஐரோப்பியக் கணினி உற்பத்தியாளர்கள் கழகத்தின் இ. சி. எம். ஏ. கிறிட்டுத் தர உறுதிப்படுத்தற்சோதனை 262இல் (பதிப்பு 0.7.2) ஆப்பெரா 11.10 3840/10872 என்ற புள்ளியைப் பெற்றது. இங்கே மொத்தச் சோதனைகளிற்றோல்வியடைந்த சோதனைகளின் எண்ணிக்கையைக் கூறுவதால் குறைந்த புள்ளிகளே சிறந்தவையாகும். ஆப்பெரா 12இன் முன்வெளியீட்டமைப்பானது சோதனை 262இல் 1/10927 என்ற புள்ளியைப் பெற்றுள்ளது; ஒரேயொரு சோதனையில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
தரப்படுத்தல் நிறுவனமான உலகளாவிய வலைக் கூட்டமைப்பின் அலுவன்முறை விழுதொடர்பாணித் தாள்கள் சோதனைத் தொகுப்பில், சோதிக்கப்பட்ட விழுதொடர்பாணித் தாள்கள் 2.1 சோதனைகளில் ஆப்பெராவின் மீடருபொறியான பிரெட்டோ 89.37% (86.65%இல் 77.44%) கடந்துள்ளது.
கருவிகள்
[தொகு]தனியார் கணினிகளுக்கான ஆப்பெராவின் முதன்மைப் பதிப்பை விடவும் அதே கருவை அடிப்படையாகக் கொண்ட, வழங்கப்படும் வசதிகளிலும் பயனர் இடைமுகத்திலும் சில வேறுபாடுகளைக் கொண்ட, பல்வகையான கருவிகளுக்கான பதிப்புகளும் உள்ளன.
நுண்ணறிபேசிகளும் தனியாள் இலக்க உதவியாளர்களும்
[தொகு]நுண்ணறிபேசிகளுக்கும் தனியாள் இலக்க உதவியாளர்களுக்குமென ஆப்பெரா மொபைல் எனப்படுகின்ற ஆப்பெராப் பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பீசியன் தொடர் 7, பீசியன் வலைக் கணினி ஆகியவற்றுக்கென, ஆப்பெரா மொபைலின் முதற்பதிப்பு 2000ஆம் ஆண்டு வெளிவிடப்பட்டது. அண்டிராயுடு, விண்டோசு மொபைல், தொடர் 60 தளம் ஆகிய இயங்குதளங்களில் அல்லது பயனர் இடைமுக வெங்க இயங்குதளங்களில் இயங்கும் பல்வகைப்பட்ட கருவிகளுக்குமென ஆப்பெரா மொபைல் பதிப்புகள் கிடைக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Opera version history — Opera 1 series". Opera Software. 21 February 2012. பார்க்கப்பட்ட நாள் 21 February 2012.
- ↑ Lextrait, Vincent (July 2010). "The Programming Languages Beacon, v10.3". Archived from the original on 30 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.