சைபாசா
சைபாசா என்பது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும். சைபாசா மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமும் பிரதேச ஆணையாளர் தலைமையிலான சிங்பும் கோல்ஹான் பிரிவின் தலைமையகமும் ஆகும். இது ஒரு சுரங்க மையமாகவும், ஜார்க்கண்டின் மிகவும் பிரபலமான சுதந்திரப் போராளியான பிர்சா முண்டாவின் சொந்த ஊராகவும் புகழ் பெற்றள்ளது.
புவியியல்[தொகு]
சாய்பாசா 22.57 ° வடக்கு 85.82 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 222 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இது மாநில தலைநகர் ராஞ்சிக்கு தெற்கே 140 கி.மீ தொலைவிலும், சக்ரதர்பூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், ஜாம்ஷெட்பூரிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
புள்ளிவிபரங்கள்[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி சைபாசாவின் மக்கட் தொகை 63,648 ஆகும்.[2] மொத்த குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 10596 ஆகும். மக்கட் தொகையில் ஆண்கள் 33686 ஆகவும், பெண்கள் 29962 ஆகவும் இருந்தனர். (பாலின விகிதம் 100%: 91,8%). சைபாசா மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.54% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 79% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 68% வீதமாகவும் காணப்பட்டது. மக்கட் தொகையில் 12% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்[தொகு]
இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் நகராட்சியில் அவற்றின் மையங்களைக் கொண்டுள்ளன. சன்மத் நிறுவனம் சைபாசாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் இயக்கி வருகிறது.[3]
பொருளாதாரம்[தொகு]
சாய்பாசா ஒரு மாவட்ட தலைமையகமாகவும், மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களையும் கொண்டதாகவும் காணப்படுகின்றது. சீமேந்து உற்பத்தி செய்யும் இடமான ஏ.சி.சி சிமென்ட் ஒர்க்ஸ் சாய்பாசாவிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள ஜிங்க்பானியில் அமைந்துள்ளது. ஆனால் அதன் தேவைகளுக்காக சைபாசாவை நம்பியுள்ளது. எஸ்.ஆர்.ருங்தா குழுமம், தாக்கூர் பிரசாத் சாவ் அன்ட் சன்ஸ், மற்றும் சஹா பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களால் இப்பகுதியில் கணிசமான சுரங்கத் தொழில்கள் நடைப்பெறுகின்றன. பல சிறிய அளவிலான எஃகு உற்பத்தி நிறுவனங்களும் சைபாசாவில் அமைந்துள்ளன.
ஜாம்ஷெட்பூர் மற்றும் கல்கத்தா ஆகியவற்றுடனான சைபாசாவின் அருகாமை அதன் சிறிய அளவிலான தொழில்துறை நோக்கத்திற்கு பங்களிக்கிறது. சுரங்க, ஜவுளி மற்றும் சேவைத் துறை ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன.
ஹவுரா-மும்பை பிரதான பாதையில் சாய்பாசா நேரடியாக இல்லாதது அதன் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அனைத்து ரயில்வே வேலைகளும், அவற்றுடன் தொடர்பான தொழில்களும் பிரதான பாதையில் அமைந்துள்ள சைபாசாவிற்கு அருகில் உள்ள சிறிய நகரமான சக்ரதர்பூருக்கு சென்றடைகின்றன.
போக்குவரத்து[தொகு]
சைபாசாவில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் இந்நகருடன் இணைக்கப்பட்ட சிறந்த இடமாகும். இரண்டாவது சிறந்த இடமாக சக்ரதர்பூர் திகழ்கின்றது. சக்ரதர்பூர் ஹவுரா - மும்பை பிரதான பாதையில் சைபாசாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஜாம்ஷெட்பூரிலிருந்து சைபாசா வழியாக இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஹவுராவிலிருந்து இன்னுமொரு ரயிலான ஹவுரா பார்பில் ஜான் சதாப்தி விரைவு வண்டி சைபாசா வழியாக செல்கிறது. 2012 ஆம் ஆண்டில் சக்ரதர்பூர்-பார்பில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸிலிருந்து மற்றொரு ரயில் சாய்பாசா வழியாக செல்லத் தொடங்கியது.
2014 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினம் - டாடாநகர் வார சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து மற்றொரு வாராந்திர ரயில் சாய்பாசா வழியாக செல்கிறது. ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி சாய்பாசாவிலிருந்து 145 கி.மீ தூரத்தில் உள்ளது.
சைபாசா என்பது ஹவுரா-நாக்பூர்-மும்பை பாதையின் டாடாநகர்-பிலாஸ்பூர் பிரிவில் உள்ள ராஜ்கர்சவன் சந்திப்பிலிருந்து ஒரிசாவுக்கு தெற்கே செல்லும் ஒரு நிலையமாகும்.
நகரத்தில் பொது விமான நிலையம் இல்லை. ஆனால் சில உலங்கு வானுர்தி தளங்கள் அமைந்துள்ளன.