உள்ளடக்கத்துக்குச் செல்

கிளார்க் கேபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் கிளார்க் கேபிள்

கேபிள் 1940ம் வருடத்தில்
இயற் பெயர் வில்லியம் கிளார்க் கேபிள்
பிறப்பு (1901-02-01)பெப்ரவரி 1, 1901
காதிசு, ஒகாயோ, அமெரிக்கா
இறப்பு நவம்பர் 16, 1960(1960-11-16) (அகவை 59)
லாஸ் ஏஞ்சலஸ்
வேறு பெயர் "பில்லி" (பள்ளிப்பருவப் பெயர்)
ஹாலிவுட்டின் மன்னன்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1923–1960
துணைவர்
  • ஜோசபின் தில்லான்
         (ம.1924–1930; விவாகரத்து)
  • மரியா "ரியா" பிராங்க்ளின் ப்ரென்டிஸ் லூகாஸ் லங்கம்
         (ம.1931–1939; விவாகரத்து)
  • கரோல் லம்பார்ட்
         (ம.1939–1942)
  • சில்வியா ஆஷ்லே
         (ம.1949–1952; விவாகரத்து)
  • கே வில்லியம்ஸ்
         (ம.1955–1960)
பிள்ளைகள்
  • ஜூடி லூயிஸ்
  • ஜான் கேபிள்
பெற்றோர்
  • வில்லியம் எச் கேபிள் (1870–1948)
  • அடெலின் ஹெர்ஷெல்மென் (1869–1901)

வில்லியம் கிளார்க் கேபிள் என்பவர் ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பரவலாக "ஹாலிவுட்டின் மன்னன்" என்று குறிப்பிடப்படுகிறார்.[1] இவர் பிறந்து 10 மாதத்திலேயே இவரது தாய் இறந்துவிட்டார். இவர் திரைத்துறையில் 37 ஆண்டுகள் நடித்தார். 60க்கும் மேற்பட்ட பல்வேறு வகைத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னணி நடிகராக நடித்தார். இவர் தனது 59ஆம் வயதில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவரது கடைசித் திரைத் தோற்றமானது முதிய கால்நடை மேய்ப்பாளர் கதாபாத்திரத்தில் த மிஸ்ஃபிட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததாகும். இத்திரைப்படம் இவரது இறப்பிற்குப் பிறகு 1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இவர் ஒகாயோ மாகாணத்தில் பிறந்தார். அங்கு வளர்க்கப்பட்டார். 1924 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஊமைத் திரைப்படங்களில் பின்னணி நடிகராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் கேபிள் ஹாலிவுட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். மெட்ரோ கோல்ட்வின் மேயர் (எம். ஜி. எம்.) திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காகத் துணை நடிகர் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறினார். கதாநாயகனாக இவரது முதல் படம் டான்ஸ், ஃபூல்ஸ், டான்ஸ் (1931) ஆகும். இத்திரைப்படத்தில் ஜோன் கிராபர்ட்டுடன் இவர் நடித்தார். இந்தக் கதாபாத்திரத்திற்குக் கேபிளை ஜோன் கிராபர்ட் தான் பரிந்துரைத்தார். ரெட் டஸ்ட் (1932) என்கிற காதல் நாடகத் திரைப்படத்தில் அந்நேரத்தில் பிரபலமான நடிகையான ஜீன் ஆர்லோவுடன் இவர் நடித்தது, எம். ஜி. எம்.மின் மிகப்பெரிய ஆண் நடிகராக இவரை ஆக்கியது.[2] பிராங்க் காப்ராவின் இயக்கத்தில் கிளாடெட் கோல்பெருடன் இவர் இணைந்து நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான இட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934) திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றார்.[3] மியூட்டினி ஆன் த பவுன்டி (1935) திரைப்படத்தில் பிளட்சர் கிறிஸ்டியன் கதாபாத்திரம் மற்றும் கான் வித் த விண்ட் (1939) திரைப்படத்தில் விவியன் லீயின் ஸ்கார்லெட் ஓகாரா கதாபாத்திரத்துக்கு எதிராக இவர் நடித்த ரெட் பட்லர் என்ற கதாபாத்திரம் ஆகியவற்றுக்காக இவர் மீண்டும் அகாதமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். மன்ஹாட்டன் மெலோட்ராமா (1934), சான் பிரான்சிஸ்கோ (1936), சரடோகா (1937), டெஸ்ட் பைலட் (1938) மற்றும் பூம் டவுன் (1940) ஆகிய இவரது மற்ற திரைப்படங்களும் தொடர்ந்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிகளைப் பெற்றன. இதில் மூன்று படங்களில் ஸ்பென்சர் டிரேசியுடன் இவர் இணைந்து நடித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது கேபிள் ஐரோப்பாவில் இரு ஆண்டுகளுக்கு வான்பரப்புப் புகைப்படக் கலைஞராகவும், குண்டுவீச்சு விமானங்களில் துப்பாக்கி இயக்குபவராகவும் பணியாற்றினார். போரிலிருந்து திரும்பிய பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டப்படவில்லை என்றாலும், நல்ல வசூலைக் குவித்தன.[4] இவரது த ஹக்ஸ்டர்ஸ் (1947), ஹோம் கம்மிங் (1948) மற்றும் புதுமுக நடிகை கிரேஸ் கெல்லிக்கு ஜோடியாக நடித்த மொகம்போ (1953) ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டன. பிறகு இவர் பர்ட் லங்காஸ்டருடன் ரன் சைலன்ட், ரன் டீப் (1958) போன்ற மேற்கத்திய மற்றும் போர்த் திரைப்படங்களில் நடித்தார். புதிதாக அறிமுகமான கதாநாயகிகளுக்கு ஜோடியாக நகைச்சுவை மற்றும் நாடகத் திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் சில டோரிஸ் டேயுடன் நடித்த டீச்சர்'ஸ் பெட் (1958), சோபியா லாரனுடன் நடித்த இட் ஸ்டார்ட்டேட் இன் நேப்பிள்ஸ் (1960) மற்றும் மர்லின் மன்றோவுடன் நடித்த த மிஸ்ஃபிட்ஸ் (1961) ஆகியவை ஆகும்.

ஹாலிவுட்டின் வரலாற்றில் நீண்ட ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தனது திரைப்படங்களை வசூல் செய்ய வைத்த நடிகர்களில் கேபிளும் ஒருவர் ஆவார். குயிக்லேய் பதிப்பகத்தின் வருடாந்திர முதல் 10 வசூல் நட்சத்திரங்கள் பட்டியலில் 16 முறை கேபிள் இடம் பெற்றுள்ளார். பாரம்பரிய அமெரிக்கத் திரைத்துறையின் நடிகர்களில் ஏழாவது சிறந்த ஆண் திரைப்பட நடிகராக இவர் அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ளார்.[5] இவர் அக்காலத்தில் நடித்த மிகுந்த பிரபலமான பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். தன்னுடன் நடிப்பதற்கு விருப்பமான நடிகை என இவர் ஜோன் கிராபர்ட்டைக் குறிப்பிட்டுள்ளார்.[6] கிராபர்ட்டுடன் கேபிள் 8 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். மைர்னா லோய் 7 படங்களிலும், ஜீன் ஆர்லோ 6 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர். லானா டர்னருடன் 4 திரைப்படங்களிலும், நோர்மா சீயரர் மற்றும் ஆவா கார்ட்னர் ஆகிய ஒவ்வொருவருடனும் தலா 3 படங்களிலும் நடித்துள்ளார்.

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

1901–1919: ஆரம்ப வாழ்க்கை

[தொகு]
கேபிள் 1901ஆம் ஆண்டு பிறந்த இடம், காதிசு, ஒகாயோ.

வில்லியம் கிளார்க் கேபிள் காதிசு, ஒகாயோவில் வில்லியம் ஹென்றி "வில்" கேபிள் (1870-1948) என்ற எண்ணெய்க் கிணறு தோண்டுபவருக்கும்,[6][7] அவரது மனைவி அடெலினுக்கும் (1869–1901) மகனாக பெப்ரவரி 1, 1901 அன்று பிறந்தார். இவரது தந்தை கிறித்தவ மதத்தின் புராட்டஸ்டன்டு பிரிவையும், தாய் கத்தோலிக்கப் பிரிவையும் சேர்ந்தவர்களாவர். கேபிளுக்கு வில்லியம் என்ற பெயர் இவரது தந்தையின் பெயரை ஒத்து கொடுக்கப்பட்டது. ஆனால் இவர் பெரும்பாலும் எப்பொழுதுமே கிளார்க் என்றே அழைக்கப்பட்டார். இவரை இவரது தந்தை "த கிட்" என்று அழைத்தார்.[8]:1 மருத்துவரின் புரியாத கையெழுத்தின் காரணமாக மாகாணப் பதிவுகளில் இவர் தவறாக ஆண் மற்றும் பெண் என்று குறிப்பிடப்பட்டார். ஆனால் பிறகு பணியாளர் அதைச் சரிசெய்து ஆண் என்று மாற்றினார்.[6] இவரது முன்னோர்கள் பெல்ஜியம் மற்றும் செருமனியைச் சேர்ந்தவர்களாவர்.[9][10][11] ஒகாயோவில் உள்ள டென்னிசன் என்ற இடத்தில் உள்ள ஓர் உரோமானியக் கத்தோலிக்கத் தேவாலயத்தில் இவருக்கு 6 மாத வயதாக இருந்தபொழுது ஞானஸ்நானம் செய்யப்பட்டது. இவருக்கு 10 மாத வயதாகிய போது இவரது தாய் இறந்துவிட்டார்.[6] இவரது தந்தை கத்தோலிக்க நம்பிக்கையில் இவறை வளர்க்க மறுத்தார். இது இவரது தாய் வீட்டாரிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றது. பென்சில்வேனியாவின் வெர்னான் பட்டணத்தில் உள்ள இவரது மாமா சார்லசு ஹெர்ஷெல்மென் மற்றும் அவரது மனைவியுடன் அவர்களது பண்ணையில் நேரத்தைச் செலவிட இவரது தந்தை அனுமதித்த போது இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.[12] ஏப்ரல் 1903இல் கேபிளின் தந்தை ஜென்னி டன்லப் (1874-1920) என்பவரை மணந்தார்.[13][14]

கேபிளின் மாற்றாந்தாய், உயர்ந்த, கூச்ச சுபாவம் கொண்ட, கனத்த குரலையுடைய குழந்தையை நன்முறையில் உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தும், பேணியும் வளர்ந்தார். பியானோ வாசித்து கேபிளுக்கு வீட்டுப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.[15] பிறகு பித்தளை இசைக்கருவிகளை வாசிக்கக் கேபிள் ஆரம்பித்தார். தன் 13வது வயதில், கோப்டேல் ஆண்கள் பட்டண இசைக்குழுவின் ஒரே ஒரு சிறுவனாகக் கேபிள் திகழ்ந்தார்.[16] கேபிளுக்குத் தன் தந்தையுடன் கார்களைப் பழுது பார்ப்பதில் ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருந்தது. கேபிளின் தந்தை அவரை வேட்டையாடுதல் மற்றும் கடினமான உடல் பணிகள் போன்ற ஆண்களுக்கான செயல்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். கேபிளுக்கு இலக்கியமும் பிடிக்கும். தனக்கு மிகவும் நம்பிக்கையான நபர்களிடம் சேக்சுபியரின் இலக்கியத்தை, முக்கியமாக அவரது செய்யுள்களை கேபிள் ஒப்புவிப்பார்.[16]

இவரது தந்தைக்கு நிதிப் பிரச்சினைகள் 1917ஆம் ஆண்டு ஏற்பட்டது. அவர் பண்ணைத் தொழில் செய்ய முடிவு செய்தார். தனது குடும்பத்துடன் ஒகாயோவின் ஏக்ரனுக்கு அருகில் உள்ள பால்மிரா பட்டணத்திற்குக் குடிபெயர்ந்தார். பண்ணையில் வேலை செய்யுமாறு கேபிளுக்கு அவரது தந்தை அறிவுறுத்தினார். ஆனால் ஏக்ரனில் இருந்த பயர்ஸ்டோன் டயர் மற்றும் இரப்பர் நிறுவனத்தில் பணி புரியக் கேபிள் புறப்பட்டார்.[17]

1920–1923: திரைத்துறை ஆரம்பம்

[தொகு]

கேபிள் தனது 17ஆம் வயதில் த பேர்ட் ஆஃப் பாராடைஸ் என்ற நாடகத்தைக் கண்ட பிறகு, நடிகராக மாறும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆனால், 21 வயது வரை அவரால் நடிப்பைத் தொடங்க இயலவில்லை. ஒரு ஹெர்ஷெல்மென் அறக்கட்டளையிலிருந்து தனக்கு வர வேண்டிய ஐஅ$300 (21,454.8)ஐப் பெற்று நடிப்பைத் தொடங்கினார்.[14][18] 1920ஆம் ஆண்டு இவரது மாற்றாந்தாய் இறந்த பிறகு இவரது தந்தை ஒக்லகாமாவின் துல்சாவிற்கு இடம்பெயர்ந்தார். தன்னுடைய எண்ணெய் வணிகத்திற்குத் திரும்பினார். புதிய பகுதிகளில் எண்ணெய்க்குத் தோண்டுதல் மற்றும் ஒக்லகாமாவின் எண்ணேய் வயல்களில் சகதிகளை அகற்றுவது ஆகிய பணிகளைத் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து செய்த பிறகு, பசிபிக் வடமேற்குப் பகுதிக்குப் பயணித்தார்.[8]:15–16

கேபிள் இரண்டாம் தரப் பங்கு நிறுவனங்களில் வேலை தேடினார். பிறகு பயணம் செய்து கொட்டகையில் நாடகங்கள் நடத்துவோரிடம் பணிபுரிந்தார். மர அரவை ஆலை மற்றும் பிற சிறு சிறு வேலைகளில் பணிபுரிந்த பிறகு, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியைத் தாண்டி ஒரிகனின் போர்ட்லேண்ட்டுக்குச் சென்றார். அங்கு மெயர் மற்றும் பிராங் துறைக் கடையில் கழுத்துக் கச்சை விற்பவராகப் பணிபுரிந்தார்.[19] அக்கடையில் உள்ளூர் மேடை நடிகரான இயர்ல் லாரிமோரும் பணிபுரிந்தார். அவர் கேபிளை நடிப்பிற்குத் திரும்புமாறு ஊக்கப்படுத்தினார்.[18] லாரிமோர் என்பவர் கான் வித் த விண்ட் திரைப்படத்தில் கேபிளுடன் அத்தை பிட்டிபேட்டாக நடித்த லாரா கோப் க்ரூவ்ஸின் உறவினர் ஆவார். தன்னுடைய ரெட் லாண்டர்ன் பிளேயர்ஸ் என்ற நாடகக் குழுவிற்கு லாரிமோர் கேபிளை இணைய அழைக்காவிட்டாலும், அக்குழுவின் ஒரு உறுப்பினரான பிரான்சு டோர்ஃப்லர் என்ற பெண்ணிற்குக் கேபிளை அறிமுகம் செய்து வைத்தார். கேபிளும் பிரான்சு டோர்ஃப்லரும் பலமுறை சந்தித்துக் கொண்டனர்.[8]:18 த ஆஸ்டோரியா பிளேயர்ஸ் என்ற நாடகத்திற்கு இந்த ஜோடியினர் நடிப்பதற்காகச் சேர்ந்தனர். பயிற்சியற்ற கேபிளின் நடிப்பானது வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும் லாரிமோர் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் நாடகக் குழுவினர் கேபிளை ஏற்றுக்கொண்டனர். கேபிள் மற்றும் டோர்ஃப்லர் ஒரிகனின் ஆஸ்டோரியவிற்கு இடம் பெயர்ந்தனர். இந்த நாடகக் குழுவுடன் அக்குழு நொடித்துப் போகும் வரை, தொடர்ந்து பயணித்தனர். பிறகு போர்ட்லாண்ட்டுக்கு திரும்பி வந்தனர். போர்ட்லாண்டில் கேபிள் பசிபிக் டெலிஃபோன் என்கிற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். வேலை முடிந்து மாலை நேரத்தில் நடிப்புப் பாடங்களைக் கற்க ஆரம்பித்தார்.[6]

கேபிளுக்கு நடிப்புப் பயிற்சியாளரான ஜோசப்பின் தில்லான் என்ற பெண்மணி போர்ட்லாண்டில் ஒரு திரையரங்க மேலாளராகப் பணியாற்றினார். கேபிளின் பற்கள் மற்றும் சிகை அலங்காரம் சரிசெய்யப்படுவதற்கு ஜோசப்பின் தில்லான் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்தார். நீண்டநாட்களாக ஊட்ட உணவின்றி மெலிந்திருந்த அவரது உடலை உடற்பயிற்சி செய்து வலுவாக்க அறிவுரைகளையும், அவரது உடலை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அவரின் தோற்ற அமைவை நன்முறையில் வைத்திருக்கப் பயிற்சியையும் ஜோசப்பின் தில்லான் அளித்தார். இயற்கையாகக் கனமான தனது குரலை கேபிள் மெதுவாகப் பயிற்சி செய்து மெல்லியதாக்கினார். கேபிளின் பேச்சுப் பழக்கவழக்கங்கள் முன்னேற்றம் அடைந்தன. அவரது முக அசைவுகள் மேலும் இயல்பானவையாகவும், மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவும் மாறின. நீண்ட பயிற்சிக்குப் பிறகு ஒரு திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்குவதற்குக் கேபிள் தயாராகிவிட்டார் எனத் தில்லான் கருதினார்.[8]:24

1924–1930: மேடை மற்றும் ஊமைத் திரைப்படங்கள்

[தொகு]
A young woman in a slip dress is kneeling on a bed while smiling at the young man clasping her hands, who is laying in a prone position in a dress shirt and pants and is smiling back.
மசினால் (1928) திரைப்படத்தில் ஜீட்டா ஜோஹனுடன் கேபிள். ஒரு விமர்சகர் கேபிளின் இத்திரைப்பட நடிப்பை, "இளமையான, வலிமையான மற்றும் மிருகத் தனமான ஆண்பால்" என்று குறிப்பிட்டார்.

1924ஆம் ஆண்டு கேபிள் மற்றும் தில்லான் ஹாலிவுட்டுக்குப் பயணித்தனர். கேபிளின் மேலாளராகத் தில்லான் பணியாற்றினார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தில்லானுக்குக் கேபிளை விட 17 வயது அதிகமாகும்.[20] வில்லியம் கிளார்க் கேபிள் என்ற தன்னுடைய பெயரைத் திரைப்படத்திற்காகக் கிளார்க் கேபிள் என்று மாற்றிக் கொண்டார்.[8] எரிக் வான் ஸ்ட்ரோகெயிமின் த மெர்ரி விடோவ் (1925), கிளாரா போவ் நடித்த த பிளாஸ்டிக் ஏஜ் (1925) மற்றும் போலா நெக்ரி நடித்த பர்பிட்டன் பாரடைஸ் (1924) போன்ற ஊமைத் திரைப்படங்களில் பின்னணி நடிகராகத் தோன்றினார். த பேஸ்மேக்கர்ஸ் மற்றும் பாக்ஸ் நிறுவனத்தின் த ஜான்ஸ்டவுன் ஃப்ளட் (1926) என்கிற ஒரு தொடர்ச்சியான இரண்டு ரீல் நகைச்சுவைகளில் தோன்றினார். தொடர்ச்சியான குறும்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.[21] ஆனால் இவருக்கு முன்னணித் திரைப்படக் கதாபாத்திரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாட் ப்ரைஸ் க்லோரி? (1925) என்ற நாடகத்தில் நடிப்பதற்காக மேடைக்குத் திரும்பினார்.[22]

கான் வித் த விண்ட்

[தொகு]
விவியன் லீயுடன் கான் வித் த விண்ட் (1939) திரைப்படத்தில்

இப்படத்தில் முதலில் அவர் நடிக்க தயக்கம் காட்டிய போதிலும்,இப்படம் அவரது சிறந்த நடிப்பிற்காக அறியப்படுகிறது. பட்லரின் கடைசி வரியான "உண்மையில், என் அன்பே, நான் சிறிதும் கவலைப்படப் போவதில்லை" ("Frankly, my dear, I don't give a damn") என்பது ஒட்டுமொத்த திரைப்பட வரலாற்றின் மிகப் பிரபலமான வசனமாகும். அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தின் சிறந்த வசனங்களின் பட்டியலில் இது முதல் இடத்தில் உள்ளது.

கரோல் லம்பார்ட் இந்த புத்தகத்தை அவருக்கு பரிசளித்தபோது ரெட் பட்லெர் கதாபாத்திரத்தில் அவரை நடிக்கச் சொன்ன முதல் நபராக இருக்கலாம். ஆனால் அவர் அதைப் படிக்க மறுத்துவிட்டார். பொதுமக்களும், தயாரிப்பாளர் டேவிட் ஓ செல்ஸ்னிக்கும் கேபிள் இந்தக் கதாபத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் செல்ஸ்னிக்கின் கீழ் நீண்ட கால ஒப்பந்தத்தில் எந்த ஆண் நட்சத்திரமும் இல்லாததால், அவர் மற்றொரு திரைப்பட நிறுவனத்தின் நடிகரை கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கேரி கூப்பர் செல்ஸ்னிக்கின் முதல் விருப்பமாக இருந்தார். கூப்பர் பட்லர் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டபோது, "ஹாலிவுட் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியாக கான் வித் த விண்ட்இருக்க போகிறது", என்று கூப்பர் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. பின்னர், செல்ஸ்னிக் கேபிள் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, எம். ஜி. எம்.மிடமிருந்து அவரைக் கடன்பெறத் தீர்மானித்தார். ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை மெக்டேனியல் இப்படத்தின் அட்லாண்டா நகரத் திரையீட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை என்று தெரிந்தவுடன், கேபிள் திரையீட்டைப் புறக்கணிக்க முயற்சித்தார். மெக்டேனியல் அவரைப் போகுமாறு கெஞ்சிய பின்னரே அவர் சென்றார் எனக் கூறப்படுகிறது.

கேபிள் ஒரு முறை, அவரது திரைவாழ்க்கை மங்கத் தொடங்கும் போதெல்லாம், கான் வித் த விண்டை மறு வெளியீடு செய்வதன் மூலம் தன் புகழைப் புதுப்பிக்கலாம் என்றார். இருந்தபோதும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த முன்னணி நடிகராகத் தொடர்ந்தார்.

இரண்டாம் உலக போர்

[தொகு]
கிளார்க் கேபிள் B-17 விமானத்துடன்,வருடம் 1943,இங்கிலாந்து

1942 இல்,அவரது மனைவி லம்பார்ட்டின் மரணத்திற்கு பின்னர்,கேபிள் அமெரிக்க விமான படையில் சேர்ந்தார். கேபிள் B-17 விமானத்தில் மே 4, முதல் செப்டம்பர் 23, 1943 வரை ஜெர்மனி உட்பட ஐந்து போர் பயணங்களை மேற்கொண்டார்.ஜெர்மனி மீதான தாக்குதலில், அவர் குழுவில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமுற்றனர், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.இந்த செய்தி MGMஐ அடைந்த போது, ஸ்டூடியோ நிர்வாகிகள் அதன் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட நடிகரை போர் பயணம் அல்லாத ராணுவ பணியில் ஈடுபடுத்துமாறு ராணுவத்திடம் கோரிக்கை வைத்தனர்.மே 1944 ல், கேபிள் ராணுவ மேஜராக பதவி உயர்த்தப்பட்டார்.அவர் மற்றொரு போர் பயணத்தை எதிர்பார்த்திருக்கையில்,நார்மாண்டி படையிறக்கம் நடைபெற்றது மற்றும் எந்த பணி உத்தரவும் இல்லாமல் ஜூன் மாதம் சென்ற போது, கேபிளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12, 1944 இல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அவரது பணிவிடுப்பு பத்திரங்கள், பின்னாட்களில் அமெரிக்க ஜனாதிபதியான கேப்டன் ரானல்ட் ரேகன் ஆல் கையெழுதிடப்பட்டன. அடால்ஃப் ஹிட்லர் மற்ற நடிகர்களை விட கேபிள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இரண்டாம் உலக போரின் போது ஹிட்லர் கேபிளை சிறிதும் காயம் அடையாத வகையில் பிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இரண்டாம் உலக போருக்குப் பின்

[தொகு]

இரண்டாம் உலக போருக்கு பின்னர் கேபிளின் முதல் திரைப்படம் அட்வென்ச்சர்(1945), இப்படம் விமர்சன மற்றும் வணிகரீதியான தோல்வியைத் தழுவியது.கேபிளின் ஹக்ஸ்டர்ஸ்(1947) படம், போருக்கு பிந்தைய மாடிசன் அவென்யூ ஊழல் மற்றும் ஒழுக்க கேடு பற்றி நையாண்டி செய்யும் படம், இது அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டது.கேபிளின் கடைசி படம் மிஸ்ஃபிட்ஸ்(1961), மர்லின் மன்றோவுடன் இதில் நடித்திருந்தார்.இது இருவருக்கும் கடைசி படமாக அமைந்தது.

அரசியல்

[தொகு]

பிப்ரவரி 1952 ல், அவர் நியூயார்க்கில் ந்டைபெற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டபோது டுவைட் டி. ஐசனாவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார்.இச்சமயத்தில் தான் ஐசனோவரை தங்களது வேட்பாளராக்க அமெரிக்காவின் இரு கட்சிகளும் முயன்று வந்தன.கடுமையான இதய இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கேபிள் 1960ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களித்தார்.

இறப்பு

[தொகு]

கேபிள் நவம்பர் 16, 1960 இல் ஹாலிவுட்டின் பிரிஸ்பைடீரியன் மருத்துவமனையில் இதய இரத்த உறைவால் இறந்தார்,பத்து நாட்களுக்கு முன் 59 ஆம் வயதில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர்.உடலளவில் மிகுந்த சிரமத்துடன் த மிஸ்ஃபிட்ஸ் படத்தில் அவர் நடித்ததன் காரணமாக அவர் திடீர் மரணமடைந்ததாக ஊகங்கள் உள்ளன.கேபிள் அவரது மூன்றாவது மனைவி, கரோல் லம்பார்ட் அருகில் க்ளொன்டேல், கலிபோர்னியாவில் புதைக்கப்பட்டார்.

கேபிள் பற்றிய கூற்றுகள்

[தொகு]
கேபிள் 1938ம் வருடத்தில்

ஒருமுறை ஆர்தர் மில்லர், த மிஸ்ஃபிட்ஸ் ஆசிரியர், கேபிளை பற்றி கூறும்போது "எப்படி வெறுப்பது என்று தெரியாத மனிதன்" என்று கூறினார்.

நடிகை ஜோன் க்ராஃபோர்ட் கேபிளை பற்றி கூறும்போது "அவர் எங்கு சென்றாலும் ஒரு அரசனைப் போல இருந்தார்" என்றார்.

ராபர்ட் டெய்லர் கேபிள் "ஒரு உயர்ந்த மனிதர்,இனி மற்றொரு கிளார்க் கேபிள் உருவாவது சந்தேகமே அவர் ஒரு தனித்துவமானவர்" என்று கூறினார்.

அவர் தனது ஒப்புமைக்கு பொருத்தமில்லை என்று உணர்ந்த ஸ்கிரிப்ட் அம்சங்களை மாற்றுவதன் காரணமாக விமர்சிக்கப்பட்டார்.ஒருமுறை ஜேம்ஸ் கார்னர் கதாசிரியர் லார்ரி கெல்பர்ட் கூறியதாக சொன்னது "கேபிளை உடையும் நீர்மூழ்கி கப்பல் கீழே கொண்டு போக முடியாது (Run Silent, Run Deep படத்தின் கடைசிப்பகுதி அதன் அடிப்படையான புத்தகத்தில் இருந்து வேறுபட்டு முடிவடைந்ததை சுட்டிக்காட்டி),ஏனெனில் கேபிள் மூழ்குவதில்லை" என்றார்.

திரைப்படங்கள்

[தொகு]

கேபிள் 1924 மற்றும் 1930 இடையே 13 படங்களில் ஒரு துணை நடிகராக தோன்றினார். பின்னர் அவர் 17 "குறும்படம்" படங்களில் அவராகவும், 67 திரையரங்குகளில் வெளியான படங்களிலும் தோன்றினார்.காம்பாக்ட் அமெரிக்கா என்னும் ஒரு இரண்டாம் உலகப் போர் பிரச்சார படத்திலும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Clark Gable: King of Hollywood". The Huffington Post. http://m.huffpost.com/us/entry/1244759. 
  2. Balio, Tino (March 14, 2018). MGM (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-42967-8.
  3. "AFI's 100 YEARS…100 STARS" (PDF). Archived (PDF) from the original on 2022-10-09.
  4. Thomson, David (2010). The New Biographical Dictionary of Film (in ஆங்கிலம்). Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-27174-7.
  5. "America's Greatest Legends" (PDF). American Film Institute. Archived (PDF) from the original on 2022-10-09. பார்க்கப்பட்ட நாள் July 29, 2009.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Spicer, Chrystopher (2002). Clark Gable: Biography, Filmography, Bibliography. Jefferson, North Carolina: McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-1124-5.
  7. Van Neste, Dan (1999). "Clark Gable Reconstructed Birthhome: Fit For A King". Classic Images. Archived from the original on January 5, 2005. பார்க்கப்பட்ட நாள் April 3, 2008.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 Harris, Warren G. (2002). Clark Gable: A Biography. New York: Harmony Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-609-60495-3.
  9. Spicer, Chrystopher J. (January 15, 2002). Clark Gable: Biography, Filmography, Bibliography (in ஆங்கிலம்). McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-1124-5.
  10. Justus George Frederick (1935). Pennsylvania Dutch and their cookery: their history, art, accomplishments ... பார்க்கப்பட்ட நாள் August 31, 2012 – via Google Books.
  11. "1933: Clark Reaches His Goal!". Dear Mr. Gable. பார்க்கப்பட்ட நாள் August 31, 2012.
  12. Philip C. DiMare (June 30, 2011). Movies in American History: An Encyclopedia, Volume 1. p. 661. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-296-8. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  13. Clark Gable on Biography.com Accessed August 5, 2016
  14. 14.0 14.1 Harris, Warren G. (September 1, 2010). Clark Gable: A Biography (in ஆங்கிலம்). Crown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-55517-5.
  15. Todd E. Creason (2009). Famous American Freemasons, Volume 2. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-557-07088-6. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  16. 16.0 16.1 Spicer, Chrystopher J. (January 15, 2002). Clark Gable: Biography, Filmography, Bibliography (in ஆங்கிலம்). McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-1124-5.
  17. Jordan, Elisa (October 22, 2018). Rockhaven Sanitarium: The Legacy of Agnes Richards (in ஆங்கிலம்). Arcadia Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4396-6558-9.
  18. 18.0 18.1 Chrystopher J. Spicer (October 14, 2011). Clark Gable, in Pictures: Candid Images of the Actor's Life. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-8714-1. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  19. Jeff Dwyer (January 19, 2016). Ghost Hunter's Guide to Portland and the Oregon Coast. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4556-2117-0. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  20. Brett L. Abrams (November 21, 2014). Hollywood Bohemians: Transgressive Sexuality and the Selling of the Movieland Dream. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-8247-4. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  21. Anthony Slide (September 5, 2012). Hollywood Unknowns: A History of Extras, Bit Players, and Stand-Ins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61703-475-6. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  22. Spicer, Chrystopher J. (October 14, 2011). Clark Gable, in Pictures: Candid Images of the Actor's Life (in ஆங்கிலம்). McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-8714-1.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளார்க்_கேபிள்&oldid=4112233" இலிருந்து மீள்விக்கப்பட்டது