ஹம்பிறி போகார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹம்ப்ரே போகார்ட்

1945 இல்
இயற் பெயர் ஹம்ப்ரே டீஃபாரஸ்ட் போகார்ட்
பிறப்பு (1899-12-25)திசம்பர் 25, 1899
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சனவரி 14, 1957(1957-01-14) (அகவை 57)
லாஸ் ஏஞ்சலஸ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1920–1956
துணைவர் ஹெலன் மெங்கன் (1926–27)
மேரி பிலிப்ஸ் (1928–37)
மாயோ மெதோட் (1938–45)
லாரன் பேகல் (1945–இறப்பு வரை)
பிள்ளைகள் ஸ்டீபன் ஹம்ப்ரே போகார்ட் (பிறப்பு 1949)
லெஸ்லி ஹோவர்ட் போகர்ட் (பிறப்பு 1952)
பெற்றோர் டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட்,
மௌட் ஹம்ப்ரே
இணையத்தளம் www.humphreybogart.com

ஹம்ப்ரே போகார்ட் [1](டிசம்பர் 25, 1899சனவரி 14, 1957) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார்.கிட்டத்தட்ட 30 ஆண்டு தொழில் வாழ்க்கையில், அவர் சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்,பரவலாக ஒரு அமெரிக்க கலாச்சார சின்னமாக கருதப்படுகிறார்.[2][3][4] 1999 ல், அமெரிக்க திரைப்பட நிறுவனம் அமெரிக்க சினிமா வரலாற்றில் மிக பெரிய ஆண் நட்சத்திரமாக போகார்ட்டை அறிவித்தது. 1941ல் 'ஹை சியர்ரா' மற்றும் 'த மல்டீஸ் ஃபால்கன்' படங்கள் போகர்ட்டை ஒரு முன்னணி நடிகராக மாற்றின.அடுத்த ஆண்டு, காஸபிளான்காவி்ல் அவரது நடிப்பு, அவரது தொழிலை உச்சநிலைக்கு உயர்த்தியது.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

போகர்ட் நியூயார்க் நகரில், டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட் (ஜூலை 1867, வாட்கின்ஸ் கிளன், நியூ யார்க் - செப்டம்பர் 8,1934, டியூடர் நகர் அடுக்குமாடி குடியிருப்பு நியூ யார்க் நகர்) மற்றும் மௌட் ஹம்ப்ரேவுக்கு மூத்த குழந்தையாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1899 இல் பிறந்தார்.போகர்ட்டின் தந்தை, பெல்மண்ட், ஒரு இதய அறுவை சிகிச்சையாளர்.போகார்ட்டுக்கு இரண்டு இளைய சகோதரிகள், பிரான்செஸ் மற்றும் கேதரின் எலிசபெத் (கே).பெல்மாண்டும் மௌட் ஹம்ப்ரியும் ஜூன் 1898ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். போகர்ட் என்கிற பெயர் ஒரு டச் குடும்பப்பெயரில் இருந்து வந்தது. இது பூம்கார்ட் என்கிற டச் வார்த்தையை மூலமாக கொண்டது. இதன் பொருள் பழத்தோட்டம். போகர்டின் அப்பா ஒரு புனரமைக்கபட்ட கிறிஸ்துவ ப்ரெஸ்பைடீரியன், அம்மவோ ஆங்கில எபிஸ்கோபாலியன். போகார்ட் எபிஸ்கோபாலியன் நம்பிக்கையில் வளர்க்கப்பட்டார். ஆனால் இவரது இளமை பருவத்தின் பெரும்பாலும் இவர் இந்த இறை நம்பிக்கையை பின்பற்றவில்லை. போகர்ட் அவரது கடலைப் பற்றிய பேரார்வத்தால் 1918 வசந்த காலத்தில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.

பிறந்த நாள் சர்ச்சைகள் போகர்டின் பிறந்தநாள் சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது; வார்னர் பிரதர்ஸ் போகர்ட் 1899ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தில் பிறந்ததவர் என்று சொல்கிறது. சிலர் இது இந்த நிறுவனம் தனது நட்சத்திர நடிகரை கவர்ச்சிகரமாக முன்னிறுத்த செய்த ஒரு கட்டுக்கதை என்று நம்புகிறார்கள். இவர்கள் போகர்ட் ஜனவரி 23,1899இல் பிறந்தவர் என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும் இவர்களின் நம்பிக்கை ஆதரமற்றது என்று கருதப்படுகிறது. போகர்டின் உண்மையான பிறப்பு சான்றிதழ் கிடைக்கவே இல்லை எனினும் அவரது பிறப்பு அறிவிப்பு ஒரு 1900ஆம் ஆண்டின் நியூயார்க் செய்தித்தாளில் ஜனவரி முதல்வாரதில் வந்திருகிறது. இது இவர் 1899ம் ஆண்டு டிசம்பரில் பிறந்திருப்பதை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. மேலும் 1900ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும் வைத்து இவர் 1899ல் பிறந்தவர் என்று முடிவுக்கு வரலாம்.

போகர்டின் தந்தை ஒரு இதய மற்றும் நுரையீரல் அறுவைநிபுணர். இவரது தாயார், மௌட் ஹம்ப்ரி தொழில்முறை ஓவியர், இவர் தனது ஓவிய பயிற்சியை நியூயார்க்கிலும் பிரான்சிலும் பெற்றார். இவருடன் பயின்ற ஜேம்ஸ் மெக்நீல் விசிலர் பின்பு தி டீலியநேட்டர் எனும் பாசன் சஞ்சிகையின் கலை இயக்குனராக பணியாற்றினார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக பணியாற்றிய ஒரு அதிதீவிர போராளி என்பது குறிப்பிடத்தக்கது. மெலின்ஸ் குழந்தை உணவின் யாவரும் அறிந்த ஒரு தொடர் விளம்பர நிகழ்விற்காக இவர் ஹம்ப்ரியின் குழந்தை படத்தை பயன்படுத்தினார். இவர் தனது தொழிலின் உச்சத்தில் இருந்த பொழுது ஒரு ஆண்டுக்கு 50,000 டாலர்களை ஈட்டினர். இது அவர்காலத்தில் ஒரு மாபெரும் தொகை. இவரது கணவர் 20.000ஆயிரம் டாலர்களை மட்டுமே ஈட்டினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. போகர்டின் குடும்பம் ஒரு அப்பர் வெஸ்ட் சைட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தது. இவர்களுக்கு அப்பர் நியூயார்க்கில் கனன்டைகுவா ஏரியில் ஒரு 55 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு காட்டேஜும் இருந்தது. ஹம்ப்ரியின் இளம் பருவத்தில் தனது நண்பர்கள் பட்டாளத்துடன் இந்த ஏரிக்கரையில் நாடகங்களை நடிப்பார்.

ஹம்ப்ரி குடும்பத்தின் மூத்தமகன் இவருக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். இவர்களின் முதல் சகோதரி பிரான்சஸ் மூன்றாவது சகோதரி காதரின் எலிசபத் (கே). இவரது பெற்றோர் ரொம்ப சீரான வாழ்க்கை முறையை கொண்டவர்கள். இருவரும் தங்கள் துறைகளில் மூழ்கியிருந்தனர். அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். இதனை அவர்கள் குழந்தைகள் மீதும் பிரதிபலித்தனர். "நான் உணர்வுரீதியாக வளர்க்கப்படவில்லை ஆனால் மிக நேர்மையாக வளர்க்கப்பட்டேன், எங்கள் குடும்பத்தில் முத்தம் ஒரு அரிதான நிகழ்வு.

போகர்ட் சிறுவனாக இருந்த போது அவருடைய சுருட்டை முடிக்காகவும், நேர்த்திக்காகவும், அவரது அம்மா அவரை வரைந்த லிட்டில் லார்ட் பான்ட்லாரி ஆடை விளம்பரங்களுக்கான படங்களுக்காகவும் அவருடைய நண்பர்கள் கேலி செய்து வேறுப்பேற்றினர். தனது தந்தையிடம் இருந்து போகர்ட் ஊசி போடுவதையும், மீன் பிடிக்கும் ஆர்வத்தையும், வாழ்நாள் முழுதும் அவர் வெகுவாக விரும்பிய படகோட்டுதலையும், உறுதியான மனப்பாங்குள்ள பெண்களை விரும்புவதையும் பெற்றார்.

போகர்ட் ஒரு தனியார் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஐந்தாம் வகுப்பு வரை அவர் டிலான்சி பள்ளியில் பயின்றார். பின்னர் ட்ரினிட்டி பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் அவர் ஒரு இயல்புக்குமாறான மாணவராகவே தொடர்ந்தார்.பள்ளியின் பிற் செயல்பாடுகளில் ஆரவமற்ற ஒரு சிடுமூஞ்சியாகவே இருந்தார். பின்னர் இவர் மசாசுசெட்ஸ் மாநில ஆண்டோவர் நகரின் மிக கௌரவமான ஆயத்த பள்ளியான பிலிப்ஸ் கல்விநிலையத்திற்கு சென்றார். தனது குடுபத்தின் செல்வாக்கான தொடர்புகளாலேயே இவர் இப்பள்ளியில் இணயமுடிந்தது. புகழ் பெற்ற ஏல் பல்கலைக் கழகத்தில் இணய ஒரு வாய்ப்பினை இந்தப் பள்ளி தரும் என்று இவரது பெற்றோர் நம்பினர். ஆனால் 1918ல் போகார்ட் இப்பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றதிற்கான உறுதியற்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

பள்ளியின் தலைமை ஆசிரியரை(சிலர் மைதானகாப்பாளரை எனவும் கூறுவர்) முயல் குளம் என்கிற செயற்கை குளத்தில் தள்ளிவிட்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பார். வேறு சிலர் போகார்டின் புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் அத்துடன் இவர் ஆசிரியர்களை குறித்து பேசிய மரியதைக்குறைவான வார்த்தைகளும், இவரது மோசமான கற்றல்திறனும் இவர் வெளியேற்றப் பட்டத்திற்கு காரணம் என்று கூறுகிரார்கள். இன்னும் சிலர் இவரது தொடர்ந்த தோல்விகளாலும், இவர் கற்றலை மேம்படுத்த தவறியதாலும் இவரது தந்தையே இவரை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார் என்கிறார்கள். இவர் வெளியேற்றப் படவில்லை தந்தையால் நிறுத்தப்பட்டார் என்கின்றனர் இவர்கள். எது எப்படியோ இது இவர் பெற்றோர்களை ரொம்பவே வருத்தியது. இவருக்கு தரவிரும்பிய எதிர்காலத்தை தரமுடியாது போனதற்காக அவர்கள் ரொம்பவே வருந்தினார்கள்.

கடற்படை (நேவி)[தொகு]

தனக்கு சரியான தொழில் வாய்புகள் ஏதும் இல்லாததால், போகர்ட் அவரின் கடல் குறித்த காதலால் உந்தப்பட்டு 1918ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஐக்கிய மாநிலங்களின் கப்பற்படையில் சேர்ந்தார். பின்னர் ஒரு முறை போகார்ட் சொன்னார் "18 வயதில் யுத்தம் என்பது மிகவும் கவரிசிகரமானது. பாரிஸ் போகலாம், பிரான்சின் அழகு பதுமைகளை பார்க்கலாம்." போகார்ட் ஒரு மாதிரி மாலுமியாக கருதப்பட்டார். ஆர்ம்டீஸ் ஒப்பந்தம் கையொப்பம் ஆனதற்குப்பின் படையணிகளை ஐரோப்பாவிலிருந்து கொண்டுசேர்த்த போக்குவரத்து பணியில் பலமாதங்கள் பணியாற்றினார்.

இவரது கடற்படை பணிக்காலத்தில்தான் இவரது தனி அடையாளமான உதட்டு தழும்பு ஏற்பட்டிருக்க கூடும். இருந்தபோதிலும் இதனை எந்த சூழல் இவருக்கு தந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. யூஎஸ்எஸ் லெவியத்தான் என்கிற கப்பலின் மீது வீசப்பட்ட குண்டுகளில் இருந்த ஒரு கூர்தகடு இவரது உதட்டை கிழிதிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலர் ஜெர்மனி ஆயுத ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வரை இவர் காயமின்றி இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.

போகார்ட் இந்த தழும்பினை கடலில் பெறவில்லை எனக்கூறுவோரும் உண்டு. போகார்டின் நீண்ட கால நண்பரும் எழுத்தாளருமான நாதானியேல் பெஞ்ச்லி வேறுமாதிரி கூர்கிறார். மையின் மாநிலத்தின் கிட்டரே நகரில் உள்ள ஒரு கடற்படை சிறைச்சாலைக்கு ஒரு கைதியை அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட தழும்பு இது. ஒரு தொடர்வண்டி நிலையத்தில் கைதி ஒரு சிகரட்டை கேட்க போகார்ட் அவனுக்கு தர வத்திக்குச்சியை தேடிய பொழுது விலங்கிடப்பட்ட தனது கைகளால் போகார்டின் வாயை நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான் அந்தக் கைதி. இந்த தாகுதலில் போகார்டின் மேலுதடு கிழிந்துவிட்டது. பின்னர் அக்கைதி பிடிபட்டு போர்ட்ஸ்மவுத் கொண்டுவரப்பட்டான். இதன் இன்னொரு வடிவமாக இது ரயில் நிலையதில் நடந்ததல்ல சிறையில் என்றும் சொல்வார்கள்.

எப்படியோ மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தழும்பு உருவாகிவிட்டிருந்தது. நாசமா போன மருத்துவர் தையல போடுன்ன தழும்பை போட்டுட்டார் என போகார்ட் பின்னர் சொன்னார். டேவிட் நிவியன் ஒருமுறை இந்த தழும்பு உருவானதை கேட்டிருக்கிறார். அது எனக்கு சின்ன வயசில இருந்து இருக்கு என்று சொல்லியிருகிறார் போகார்ட்! நிவியன் போகார்டின் தழும்புகள் குறித்து உலவும் கதைகள் அவரது நட்சத்திர பிம்பத்தை கவர்ச்சிகரமாக ஆக்குவதற்காக படத் தயாரிப்பு நிறுவனங்களால் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்.

ஆனால் அவரது பணிவிடுப்பு அறிக்கையில் பல்வேறு தழும்புகள் குறித்து பதிவுகள் இருந்தாலும் உதட்டு தழும்பு குறித்து குறிப்புகள் ஏதும் இல்லாது இருப்பது இவர் இந்தத் தழும்பை பின்னர் தான் பெற்றிருக்க வேண்டும் என்று உறுதிசெய்கின்றன.

நடிகை லூயிஸ் புரூக் ஒருமுறை இவரை 1924இல் பார்த்த பொழுது இவரது மேலுதட்டில் சில தழும்பு திசுக்கள் இருந்ததை பார்த்திருக்கிறார். 1930இல் திரைத்துறைக்கு வரும் முன் இவரது தழும்பிற்கு ஓரளவு சிகிச்சை எடுத்திருக்கலாமென பெல்மான்ட் கூறுகிறார். இவரது மேலுதட்டு தழும்பு இவரின் பேச்சையோ அல்லது உச்சரிப்பையோ எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார் லூயிஸ் புரூக். வருடகணக்கில் போகார்ட் உதட்டிற்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை மேற்கொண்டார். கொஞ்சம் மூக்கால் பேசுவதுபோல, மெல்லிய ஒலிகளை உச்சரிப்பதில் கொஞ்சம் சிரமம் என போகர்ட் தனது குறைகளையே தனது முத்திரைகளாக மாற்றிக்கொண்டார். இவரது பேயின்புன்னகை போன்ற முறுவல் திரையில் வந்ததில் ஆகச்சிறந்தது என்கிறார் லூயிஸ் புரூக்.

ஆரம்ப கால திரைவாழ்க்கை[தொகு]

கடற்படையிலிருந்து உடல்நலிவுற்ற தனது தந்தையை பார்க்க வந்தார் போகார்ட். தந்தையின் மருத்துவ சேவை நலிவடைந்தது அவர் ஒரு மார்பின் அடிமையாக மாறியிருந்தார். குடும்பதின் பெருமளவு பணத்தை மரத்தில் முதலீடு செய்து அதை இழந்திருந்தார்.

போகார்ட் தனது கடற்படை நாட்களில் குடும்பத்தின் கலாச்சார அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்றிருந்தார். இது அவரை ஒரு தாராள மனப்பான்மை உள்ள மனிதராக மாற்றியிருந்தது. போலியாக நடிப்பது, பணமோகம்பிடித்த பணக்காரகளின் நட்பு, ஏழைகளை எள்ளுவது, மரபுசார்ந்த நடத்தை, மற்றும் அதிகாரம் போன்றவற்றை அவர் வெறுக்க துவங்கினார். இந்த வெறுப்பினையே இவர் தனது படங்களின் பாத்திரங்களின் மூலம் பிரதிபலித்தார்.

அதே சமயத்தில் தனது குடும்பம் தனக்கு தந்திருந்த, நன்னடத்தை, தெளிவாக பேசுதல், நேரந்தவறாமை, கண்ணியம், மற்றும் தொட்டு தொடு பேசுவதை வெறுப்பது போன்ற நற்பண்புகளை கடைசிவரை கடைபிடித்தார். கடற்படை சேவைக்கு பின்னர் சில நாட்கள் இவர் ஒரு ஷிப்பர்ராகவும் (லாரி சர்வீஸ் போல மூவழிகளிலும் பொருட்களை கொண்டுசேர்க்கும் வேலை) பத்திர விற்பனையாளாராகவும் பணியாற்றினார்.

பின்னர் தனது சிறுவயது நண்பன் பில் பிராடி ஜூனியரிடம் நட்பினை புதுப்பித்தார். சீனியர் ப்ராடி திரைத்துறை தொடர்புகளோடு இருந்தார். அவர் வேர்ல்ட் பில்ம்ஸ் எனும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த பொழுது போகார்ட் அந்நிறுவனத்தில் ஒரு அலுவலக பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல் என பல்வேறு பணிகளை முயற்சித்தார். ஒன்றில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

ப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட். நடிகர்களின் நீண்ட பின்னிரவுகள் போகார்டுக்கு பிடித்திருந்தது. மேடையில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் கவனம் போகார்டுக்கு நிறையவே பிடித்திருந்தது. அவர் சொன்னார் "பிறவியிலேயே நான் ஒரு அசமந்தம், நடிப்பு தான் எனக்கு தகுந்த தொழில் என்று முடிவு செய்தேன்." தனது பெரும்பாலான நேரத்தை ஸ்பீக்ஈசிகளில்(ரகசிய மதுபானக் கடைகள்) செலவிட்டு ஒரு பெரும் குடிகாராக மாறிப்போனார். இந்த சந்தர்ப்பத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரின் உதடு பிளவுபட்டிருக்க வேண்டும். இது மிக சரியாக லூயிஸ் ப்ரூக்ஸின் கருத்தை ஒத்திருக்கிறது.

போகார்ட் நடிப்பு என்பது ஒரு அகவுரமான தொழில் என்று கூறி வளர்க்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் மேடை நாடகங்களில் நடிப்பதை விரும்பினார். ஒருபோதும் நடிப்புக்கலையை முறையாக கற்றவர் இல்லை என்றாலும் விடாமுயற்சியுடன் சீராக தனது திறனை கூர்தீட்டிக்கொண்டே வந்தார். 1922 முதல் 1935 வரை பிராட்வே நிறுவனத்தின் குறைந்தது பதினேழு நாடகங்களில் நடித்திருந்தார். சிறுவனாகவோ இரண்டாம்கட்ட காதலராகவோ வரவேற்பறை நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். இவர்தான் டென்னிஸா யாராவது ? என்கிற வார்த்தையை முதன் முதலாக மேடையில் கேட்டது. அலெக்சாண்டர் உல்கோட் போகார்டின் ஆரம்பகால பணிகளை பார்த்துவிட்டு "வழக்கமாக கருணையோடு குறிப்பிடப்படும் பற்றாக்குறை" என்று எழுதினார். சில விமர்சனங்கள் கருணையோடு இருந்தன. போகர்ட் ஆரம்ப காலத்தில் தனக்கு வாய்த்த துக்கடா வேடங்களை வெறுத்தார். அவற்றை வெள்ளை பான்ட் வில்லி பாத்திரங்கள் என்று அழைத்தார். லின் ஸ்டார்லிங் எழுதிய மீட் தி வைப் என்கிற நாடகத்தில் பதின்ம வயது பத்திரிகையாளர் கிரிகோரி பிரவுனாக நடித்தார் போகார்ட். இந்நாடகம் நவம்பர் 26, 1923 முதல் ஜூலை 1924 வரை 232 முறை கிளா அரங்கில் வெற்றிகரமாக மேடையேறியது.

இவரது ஆரம்பகால தொழில் பயணத்தில் ட்ரிப்டிங் என்கிற நாடகத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இது ப்ளே ஹவுஸ் அரங்கில் நடந்துகொண்டிருந்தது. இந்த தருணத்தில்தான் நடிகை ஹெலன் மென்கனை சந்தித்தார். மே 20, 1926ஆம் ஆண்டு நியுயார்க்கின் கிரேமெர்சி பார்க் ஹோட்டலில் அவரை மணந்தார் போகார்ட். நவம்பர் 18, 1927ஆம் ஆண்டு ஹெலனை விவாகரத்து செய்தார். அவர்கள் நண்பர்களாக தொடர்ந்தார்கள். ஏப்ரல் 3, 1928ஆம் ஆண்டு அவர் மேரி பிலிப்சை அவரது அன்னையின் ஹார்ட்போர்ட், கன்னக்டிகட் அடுக்குமாடி குடியிருப்பில் மணந்தார். போகார்டின் பிற மனைவிகளைப் போல மேரியும் ஒரு நடிகை. மேரிக்கு முன் கோபம் அதிகம். நெர்வ்ஸ் என்கிற நாடகத்தில் நடிக்கும் பொழுதுதான் போகார்ட் இவரைப் பார்த்தார். நெர்வ்ஸ் நகைச்சுவை அரங்கில் 1924 செப்டெம்பர் மாதம் குறுகிய காலம் ஓடியது.

1929ஆம் ஆண்டு பங்கு சந்தை வீழ்ச்சிக்கு பின் நாடகங்கள் தயாரிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்தது. அவற்றில் நடித்த புகைப்படத் தகுதியோடு இருந்த பல நடிகர்கள் ஹாலிவுட் பக்கம் நகரத் துவங்கினர். 1928ல் இரண்டு சுருள்கள் மட்டுமே கொண்ட தி டான்சிங் டவுன் என்கிற படத்தில் ஹெலன் ஹெய்சுடன் நடித்தார் போகார்ட். மேலும் ஜோன் ப்லண்டால், ருத் எட்டிங் போன்ற நடிகைகளுடன் ஒரு சிறிய விட்டாபோன் படமான பிராட்வேஸ் லைக் தட் நடித்தார். 1930ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் 1963ஆம் ஆண்டு மீண்டும் கண்டறியப்பட்டது.

பின்னர் பாக்ஸ் பில்ம் நிறுவனதிர்க்காக வாரத்திற்கு 750 டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டார். ஸ்பென்சர் ட்ரேசி போகார்ட் விரும்பி ரசித்த நடிகர். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். குடித்துணைகளாகவும் இருந்தனர். 1930இல் டிரேசிதான் போகார்ட்டை முதல் முதலில் "போகி" என்று அழைத்தார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

அவரது முதல் படம் 'பெட்ரிஃபைடு ஃபாரஸ்ட்' 1936ல் வெளியானது.போகர்ட் 1942 இன் காஸபிளான்காவி்ல் 'ரிக் பிளெய்னெ' கதாபாத்திரத்தில் நடித்தார்.காஸாபிளான்கா 1943ல் சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்றது.இப்படம் அவரை ஸ்டுடியோ பட்டியலின் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுசென்றது மற்றும் அவரது அவரது ஆண்டு சம்பளம் $ 4,60,000 மேல் சென்றதுடன் உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நடிகராக ஆக்கியது.

பல்வேறு வேலைகளை செய்து பார்த்தபின், போகார்ட் 1921ஆம் ஆண்டு முதல் பிராட்வே நாடக தயாரிப்பு நிறுவனத்திற்காக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இது 1920ம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டுவரை நிகழ்ந்தது. 1929ஆம் ஆண்டு பங்கு சந்தை சரிவிற்குப்பின் நாடகங்களுக்கான வரவேற்பு குறைய ஆரம்பித்தது. எனவே போகர்ட் திரைத்துறையின்பால் தனது கவனத்தை திருப்ப ஆரம்பித்தார். அவரது முதல் மாபெரும் வெற்றி அவரது டுயூக் மாண்டி கதாபாத்திரம். (பெட்ரிபைட் பாரஸ்ட் 1936), இது இவரை இதைப் போன்ற ஒரேமாதிரியான தாதா பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நிலைக்கு ஆளாக்கியது. ஏஞ்சல்ஸ் வித் டர்டி பேசஸ் 1938, (அசிங்கமுக தேவதைகள்), பி-மூவிஸ் வகை தி ரிடர்ன் ஆப் டாக்டர் எக்ஸ் (1939) போன்ற படங்களிலும் இவருக்கு தாதா பாத்திரங்களே அமைந்தன.

போகர்டிர்க்கான முன்னணி கதாபாத்திர வாய்ப்பு 1941ஆம் ஆண்டு, ஹை சியரா மற்றும் தி மால்டிஸ் பால்கன் என்கிற திரைப்படங்களின் மூலமே கிடைத்தது. அடுத்த ஆண்டு போகர்டின் நடிப்பாற்றல் காஸாபிளாங்கா திரைபடத்தில் முழுமையாக உணரப்பட்டது. இது அவரை திரைத்துறை உச்சத்தில் அமர்த்தியது. இவருடைய பாணியை அழுத்தமாய் ரசிகர்களிடம் பதிவிட்டது. அது எதார்த்தமான, உணர்வுகள் இறுகிப்போன அழுத்தமான ஒரு நபராகவும் அதே வேளை உன்னதமான மறுபக்கத்தை கொண்ட ஒரு நபராகவும் இவரை காட்டியது.

தொடர்ந்து டு ஹாவ் அண்ட் ஹாவ் நாட்(1944);தி பிக் ஸ்லீப்(1946); டார்க் பாசேஜ்(1947) மற்றும் இவரது மனைவி லாரென் பாகல்லுடன் நடித்த தி டிரஷர் ஆப் தி சியரா மாடரே(1948); இந் எ லோன்லி பிளேஸ்(1950), தி ஆப்ரிகன் குவீன்(1951); இவர் பெற்ற ஒரே அகாடமி விருதினை இவருக்கு பெற்றுத்தந்த படம்;சாப்ரினா (1954). தி ஹார்டர் தே பால்(1956) இவரது கடைசிப் படம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு நீண்ட இவரது திரைவாழ்வில் இவர் எழுபத்தி ஐந்து படங்களில் நடித்திருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bogart." Random House Webster's Unabridged Dictionary. Retrieved: March 13, 2015.
  2. Obituary Variety, January 16, 1957.
  3. Sragow, Michael. "Spring Films/Revivals; How One Role Made Bogart Into an Icon." The New York Times, January 16, 2000. Retrieved: February 22, 2009.
  4. "100 Icons of the Century – Humphrey Bogart." Variety, October 16, 2005. Retrieved: February 22, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்பிறி_போகார்ட்&oldid=2907362" இலிருந்து மீள்விக்கப்பட்டது