இலங்கை நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை நாடாளுமன்றம்

ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුව
Parliament of Sri Lanka
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
TBA
TBA முதல்
பிரதி சபாநாயகர்
TBA
TBA முதல்
இலங்கைப் பாராளுமன்றம்
தம்மிக்க தசநாயக்கா
18 ஆகஸ்டு 2015 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்225
அரசியல் குழுக்கள்
அரசாங்கம் (107)

எதிர்க்கட்சிகள் (118)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015
கூடும் இடம்
நாடாளுமன்றக் கட்டடம், கோட்டே
வலைத்தளம்
http://www.parliament.lk

இலங்கை நாடாளுமன்றம் அல்லது இலங்கைப் பாராளுமன்றம் (Parliament of Sri Lanka) 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

முதலாவது நாடாளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்
கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சு. இங்கு பழைய சட்டவாக்கப் பேரவையின் அமர்வுகள் நடைபெற்றன.
காலிமுகத் திடலில் அமைந்திருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடம்.

வரலாறு

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டமன்றம் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, மற்றும் இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833, மார்ச் 13 ஆம் நாள் நிறுவப்பட்டன. நிறைவேற்றுப் பேரவையில் குடியேற்றச் செயலாளர், இராணுவப் படைகளின் கட்டளை அதிகாரி, சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவையின் கடமைகள் பொதுவாக இலங்கை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் மட்டுமே. ஆனாலும் இவ்வாலோசனைகளை ஆளுனர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் பிரிந்த்தானியர் மட்டுமே உறுப்பினர்களாகவிருந்தனர், பின்னர் இலங்கையரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் 16 உறுப்பினர்களும், பின்னர் 49 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இலங்கையின் குடிமக்களில் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

1931 இல் சட்டவாக்கப் பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 101 உறுப்பினர்களுடன் இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதிகரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார்.

1971 அக்டோபர் 2 இல் செனட் சபை கலைக்கப்பட்டது. 1972 மார்ச் 22 இல் இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் கட்டடங்கள்

பிரித்தானியக் குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் கொழும்பில் உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடினர். இக்கட்டடம் தற்போது "குடியரசுக் கட்டடம்" என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. 1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இங்கு இலங்கை அரசாங்க சபை (1931-1947), [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை (1947–1972), தேசிய அரசுப் பேரவை (1972–1977), இலங்கை நாடாளுமன்றம் (1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன. இன்று இக்கட்டடம் அரசுத்தலைவரின் செயலகமாக இயங்குகிறது.

1979 சூலை 4 இல், அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாசா கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா திறந்து வைத்தார்.

கடைசித் தேர்தல்

[உரை] – [தொகு]
2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள்
மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம்
  நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[1] 5,098,916 45.66% 93 13 106
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,732,664 42.38% 83 12 95
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[7] 515,963 4.62% 14 2 16
  மக்கள் விடுதலை முன்னணி 543,944 4.87% 4 2 6
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[3] 44,193 0.40% 1 0 1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 33,481 0.30% 1 0 1
  சுயேட்சைகள் 42,828 0.38% 0 0 0
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு[2] 33,102 0.30% 0 0 0
  சனநாயகக் கட்சி 28,587 0.26% 0 0 0
பௌத்த மக்கள் முன்னணி 20,377 0.18% 0 0 0
  தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி[8] 18,644 0.17% 0 0 0
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[4] 17,107 0.15% 0 0 0
  முன்னிலை சோசலிசக் கட்சி 7,349 0.07% 0 0 0
ஐக்கிய மக்கள் கட்சி 5,353 0.05% 0 0 0
ஏனையோர் 24,467 0.22% 0 0 0
தகுதியான வாக்குகள் 11,166,975 100.00% 196 29 225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 517,123
மொத்த வாக்குகள் 11,684,098
பதிவு செய்த வாக்காளர்கள் 15,044,490
வாக்குவீதம் 77.66%

வெளியிணைப்புகள்

6°53′12″N 79°55′07″E / 6.88667°N 79.91861°E / 6.88667; 79.91861

  1. ந.ஐ.தே.மு ஐதேகவின் சின்னத்திலும் கட்சியிலும் போட்டியிட்டது.
  2. 2.0 2.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ந.ஐ.தே.முயில் போட்டியிட்டது.
  3. 3.0 3.1 முகா மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவிலும் போட்டியிட்டது.
  4. 4.0 4.1 இதொகா பதுளை, கண்டி, கேகாலை மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
  5. பிரஜைகள் முன்னணி நுவரெலியா, வன்னி ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
  6. லிக கொழும்பு, காலி, குருநாகல், மாத்தறை மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
  7. ததேகூ இதகயின் சின்னத்தில் போட்டியிட்டது.
  8. ததேமமு அஇதகா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_நாடாளுமன்றம்&oldid=2750550" இலிருந்து மீள்விக்கப்பட்டது