அரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் அரசியல் யாப்பு நீதிமன்றம் (Constitutional Court of Sri Lanka) என்பது 1972 முதல் 1978 வரை இலங்கைக் குடியரசில் நடைமுறையில் இருந்த ஒரு அரசியல் யாப்பு நீதிமன்றம் ஆகும். இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது.[1] இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. இதில் காணப்பட்ட ஒரு அம்சமே அரசியல் யாப்பு நீதிமன்றமாகும்.

நோக்கம்[தொகு]

முதலாம் குடியரசு அரசியலமைப்பின்படி இலங்கையின் அப்போதைய நாடாளுமன்றமாக இருந்த தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்களை எந்த நிறுவனத்தாலும் விவரணம் செய்யவோ, மறு சீராய்வு செய்யவோ முடியாது. எனவே தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க அரசியல் யாப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

நியமனம்[தொகு]

அரசியலமைப்பின் 54ம் உறுப்புரை 1ம் பந்தியின் படி பிரதமரின் ஆலோசனைக்கிணங்க சனாதிபதியால் அரசியல் யாப்பு நீதிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இந்த நீதிமன்றம் 5 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்.

ஆலோசனை[தொகு]

தேசிய அரசுப் பேரவையில் விவாதிக்கப்படும் மசோதாக்கள் சட்டமாவதற்குமுன் ஆலோசனை கூறும் கடமை இதற்குண்டு.

  • நாட்டு நலனுக்கு அவசரமானவை எனக் கருதும் மசோதாக்கள்
  • சாதாரண மசோதாக்கள்

அரசியல் யாப்பு நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தல்[தொகு]

குறித்த ஒரு மசோதாவை அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமாயின்,

  • தே.அ.பே. நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று 7 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர் அல்லது 20க்குக் குறையாத பேரவை உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்தால்,
  • ஒரு பிரசை அல்லது குழு ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால்,
  • சட்டத்துறை நாயகம் சபாநாயகருக்கு அறிவித்தால்,
  • சபாநாயகர் தாமாகவே கருதினால் அம் மசோதா அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்படும்.

தீர்ப்பு[தொகு]

அரசியல் யாப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறு அமையும். அ. சட்டமூலம் யாப்புக்கு முரணல்ல. ஆ. சட்ட மூலம் யாப்புக்கு முரண். இ. சட்டமூலம் யாப்புக்கு முரணா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம்

  • யாப்புக்கு முரணல்லாவிடின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
  • யாப்புக்கு முரணாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  • 1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு

வெளி இணைப்புகள்[தொகு]