உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை:

சனவரி 2011 இன் படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்,

  • மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23
  • நகர சபைகளின் எண்ணிக்கை - 41
  • பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 271

இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும்.

இலங்கையில் உள்ளூராட்சி நீண்ட வரலாற்றையுடையது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் நாகர குட்டிக (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர கம்சபா என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.

பிரித்தானியர் காலம்

[தொகு]

1818 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் கிராமசபை முறையை இல்லாதொழித்தது. எனினும் 1856 ஆம் ஆண்டில் அவ்வரசு நிறைவேற்றிய நீர்ப்பாசனச் சட்டவிதிகளின் கீழ் பயிர்ச் செய்கை மற்றும் பாசனம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளூர் மக்களுக்குக் கிடைத்தது.

பிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1885 மற்றும் 86 ஆம் ஆண்டுகளில், கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களில் மாநகர சபைகள் உருவாக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டில் கிராமக் குழுக்கள் சட்டவிதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்பட்டது. 1892 ல், சிறிய நகரங்களில் சுகாதாரக் குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன. 1939 இலும், 1946 இலும் முறையே நகர சபைகளும், பட்டின சபைகளும் உருவாகின.

பிரித்தானியருக்குப் பின்

[தொகு]

1980 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக் கையளிக்கப்பட்டன. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் போனது. பின்னர் புதிய சீர்திருத்தங்களின் கீழ், பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. இன்றைய உள்ளூராட்சி முறைமையில், மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்பன அடங்கியுள்ளன. 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இலங்கையில், 14 மாநகரசபைகளும், 37 நகரசபைகளும், 258 பிரதேச சபைகளுமாக மொத்தம் 309 உள்ளூராட்சி அமைப்புக்கள் உள்ளன.

கிராம அபிவிருத்தி சபைகள்

[தொகு]

இலங்கையில் காணப்படும் உள்ளூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவு செய்யப்படுவர்.

ஏனைய அமைப்புகளுக்கான தேர்தல்கள்

[தொகு]

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.

பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை

[தொகு]

1991ம் ஆண்டு மே 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலின்போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக அல்லது சுயேட்சைக் குழுவின் மூலமாகும்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் குழுவின் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியிலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 1/3 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைதல் வேண்டும். அதேநேரம் இத்தொகை 6 க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும்.

  • உதாரணம்
1) 12 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 12 + (12இன் 1/3) 4 = 16
2) 24 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 24+06 = 30

மேற்படி உதாரணம் 1ல் 1/3 வீதமான மேலதிகமான அங்கத்தவர்களும், உதாரணம் 2ல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்.

மேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகையில் 40% க்குக் குறையாத இளைஞர்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும். தாக்கல் செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு சிங்கள அகரவரிசைக்கிணங்க இலக்கங்கள் வழங்கப்படும்.

விருப்பத் தெரிவு வாக்குகள்

[தொகு]

விருப்பத்தெரிவினை வழங்கும்போது ஒரே அபேட்சகர்களுக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும். (விருப்பத் தெரிவு கட்டாயமானதல்ல)

வாக்குக் கணிப்பு

[தொகு]

வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

  1. கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்
  2. விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.

ஆசனங்களைப் பகிர்ந்தளித்தல்

[தொகு]

ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

  • ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவிற்கு இரண்டு போனஸ் ஆசனங்களை வழங்குதல்

முடிவான எண்ணைக் கணித்தல்

[தொகு]

ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து '2' ஐக் கழித்து செல்லுபடியான மொத்த வாக்குகளை வகுக்கும் போது பெறப்படுவதே முடிவான எண்ணாகும்.

  • முடிவான எண்ணைக் கொண்டு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளைப் பிரித்து கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
  • இவ்வாறு பகிரப்பட்டபின் மேலும் ஆசனங்கள் எஞ்சியிருப்பின் மிகப் பெரும் மிகுதிக்கமைய அந்த ஆசனங்களை வழங்குதல்.
  • இறுதியாக விருப்பத் தெரிவுகளின் அடிப்படையில் அங்கத்தவர்களைத் தீர்மானித்தல்
  • இலங்கையில் மாநகர சபை, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தலின்போது தற்போது இந்த வழிமுறையே பின்பற்றப்படுவது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

உள்ளூராட்சி சபைகள்

[தொகு]

2011 இல் உள்ளூராட்சி சபைகள்:

மாகாணம் மாநகர சபை நகர சபை பிரதேச சபை மொத்தம்
மத்திய மாகாணம் 4 6 33 43
கிழக்கு மாகாணம் 3 5 37 45
வடமத்திய மாகாணம் 1 0 25 26
வடமேற்கு மாகாணம் 1 3 29 33
வட மாகாணம் 1 5 28 34
சபரகமுவ மாகாணம் 1 3 25 29
தெற்கு மாகாணம் 3 4 42 49
ஊவா 2 1 25 28
மேற்கு மாகாணம் 7 14 27 48
மொத்தம் 23 41 271 335

வெளி இணைப்புகள்

[தொகு]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Country profile: The local government system in Sri Lanka" (PDF). Commonwealth Local Government Forum. பார்க்கப்பட்ட நாள் 5 August 2018.
  2. "Local Government in Sri Lanka". localgovernance.lk. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2011-02-05.
  3. "Chapter 1 – Historical Background Relating to Local Government in Sri Lanka". Report of the Commission of Inquiry on Local Government Reforms. 1999. Archived from the original on 22 July 2011.