ஹம்ச கீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹம்ஸ கீதை:- ஹிரண்யகர்பரான நான்முக பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும், யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து, ஸ்ரீகிருஷ்ணர் ஹம்ஸப் (அன்னப் பறவை) பட்சி வடிவத்தில் உபதேசம் செய்தார். இதையே ஹம்ச கீதை என்பர்.

ஹம்ச கீதையியில் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய அருளுரைகள்[தொகு]

  • சத்வம், ராஜசம், தாமசம் எனும் முக்குணங்கள் மனித புத்தியில் உள்ளதே ஒழிய ஆத்மாவினுடையதல்ல. சத்வ குணத்தின் மூலமாக மற்ற இரண்டு குணங்களை அடியோடு நீக்கி விட வேண்டும். பின்னர் சத்வ குணத்தின் தனித்தன்மையையும் மறைத்து, முக்குணங்களையும் கடந்த குணாதீதனாக ஆகிவிட வேண்டும்.
  • சத்வ குணம் மென்மேலும் வளரும் போது, அதன் விளவாக மலரும் தர்மம், ராஜச - தாமச குணங்களை வீழ்த்திவிடும். இவ்விரண்டு குணங்களும் அழிந்து போனதும், இவற்றின் ஆணிவேரான அதர்மமும் விரைவில் அழிந்துவிடும்.
  • சாத்திரம், தண்ணீர், சந்ததி, நாடு, காலம், கர்மம், பிறப்பு, தியானம், மந்திரம், வினைப்பதிவு என்ற பத்தும், முக்குணங்கள் அமைவதற்கு காரணமாகிறது.
  • அனைத்து சீவராசிகளின் உடலில், பஞ்சபூதங்கள் ஒன்றுக்கொன்று சமமானவை. எனவே “நாங்கள் யார்” என்ற உங்கள் கேள்வி வெற்றுச் சொற்களே.
  • மனம், சொல், பார்வை மற்றும் பிற பொறிகளால் எவை பார்க்கப்படுகின்றனவோ, சிந்திக்கப்படுகின்றனவோ, அவைகள் எல்லாம் நானே தான்! என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • குணமயம், சித்தமயம் சீவனுக்குரியது. ஐம்புலன்கள் வழியாக பொருட்களை நுகர்வதால், மனம் அதில் ஆழமாக ஈடுபடுகிறது. சித்தத்தின் சங்கல்ப-விகல்பத்தால் பொருட்கள் தோன்றுகிறது. எனவே சீவன், பரமாத்மா வடிவானதால் மனம் அலைந்து திரிவதையும், பொருட்களின் மீதான பற்றையும் துறந்து விட வேண்டும்.
  • விழிப்புநிலை, கனவுநிலை மற்றும் உறக்கநிலை என்ற மூன்றும் புத்தியின் செயல்களே. சீவன் இந்த மூன்று நிலைகளுக்கு சாட்சி சைதன்யமாக மட்டுமாக உள்ளது.
  • சங்கல்ப-விகல்பங்களால் மனம் செயல்களை செய்து, ஆத்மாவை, சாத்வீகம்-ராஜசம்-தாமசம் என்ற முக்குணங்களில் சிக்க வைக்கிறது. எனவே நான்காம் நிலையான ”துரீயம் என்ற பிரம்ம நிலையில் உறுதியாக நின்று பொருட்பற்று-மனம் என்ற இரண்டையும் நீக்கி விட வேண்டும்.
  • ஆத்மா வைத் தவிர வேறு எதுவும் இல்லை. எவனொருவன் விழிப்புநிலையில், தன் பொறிகளின் வாயிலாகப் பொருட்களைத் தூய்க்கிறானோ, அவன் கனவுநிலையிலும் அதையேதான் அனுபவிக்கிறான். ஆழ்ந்த உறக்கநிலையில், அவைகளை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறான். இவ்விதம் மூன்று நிலைகளிலும் சாட்சியாக இருக்கும் ஜீவாத்மா ஒன்றே தான்.
  • மனதின் விழிப்புநிலை முதலிய மூன்று அவஸ்தைகளும், சாத்வீகம் முதலிய முக்குணங்கள் மூலமாக என்னுடைய மாயையால் சீவனிடம் கற்பிக்கப்படுகிறது. என்பதை உணர்ந்து, அனுமானம், சான்றோர்களின் கூற்று, சாத்திரங்கள் மற்றும் கூர்மையான கத்தி போன்ற ஞானத்தாலும் அனைத்து துயரங்களுக்கும் ஆதாரமான அகங்காரத்தை வெட்டித் தள்ளிவிட்டு, இதயத்தில் விளங்கும் பரமாத்மாவை வழிபட வேண்டும்.
  • இவ்வுலகம் என் மனதால் தோற்றுவிக்கப்பட்டது; இது நிலையானது போல் காணப்பட்டாலும் இல்லாததற்கு ஒப்பானது. இதனை “மித்யா” அல்லது இருப்பது போல் தோண்றி ஒரு காலத்தில் அழியக்கூடிய பொருள் ஆகும். இவ்வுலகம் சுழலும் நெருப்பு வளையம் போல் சஞ்சலமானது. அறிபவன்-அறியப்படும் பொருள் (திருக்-திருஷ்யம்) என்ற வேறுபாடு இல்லாத ஞான வடிவான ஆத்மாதான் பல்வேறு பொருட்களாக தோற்றமளிக்கிறது. இந்த மனித உடல் மூன்று வகையான குணங்களின் செயல்கள் கனவுபோல், (மாயையின் லீலை) அறியாமையால் கற்பிக்கப்பட்ட்து.
  • எனவே விருப்பு - வெறுப்புகளிலிருந்து விடுபட்டு, ஐம்புலன்களை அடக்கி, மெளனமாக, ஆத்மானந்த சுகத்தில் மூழ்க வேண்டும். சித்தர்கள் எந்த உடலைக் கொண்டு ஆத்மாவை அறிந்தார்களோ, அந்த உடல், பிராரப்த கர்மவினைப்படி, இந்த உடலைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
  • ஆத்மாவில் நிலைபெற்ற ஞானிகள், சமாதி நிலை வரையில் யோகத்தில் முன்னேறியுள்ளவர்கள், உலகத்தில் இருக்கும் தம் உடலில் ஆசை வைக்க மாட்டார்கள். கனவில் காணப்படும் பொருட்களைப் போல, இதுவும் பொய்யானது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.
  • ஆத்மா-அனாத்மா விவேகமான சாங்கிய யோகத்திற்கும், அட்டாங்க யோகத்திற்கும் சத்தியம், ரிதம் (தர்ம சிந்தனை), பிரபாவம், செழுமை, புகழ், புலனடக்கம் மற்றும் மனவடக்கம் இவைகளுக்கு பரப்பிரம்மம் ஆன நான் தான் காரணம்.
  • இவ்வாறாக பகவான் பிரம்மாவின் மனதில் தோண்றிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கு ஆத்மா தொடர்பான சந்தேகங்களைப் நீக்கினார்.

ஆதார நூல்[தொகு]

  • ஸ்ரீமத் பாகவதம், ஏகாதச ஸ்கந்தம் (பதினோராவது புத்தகம்), 13-வது அத்தியாயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்ச_கீதை&oldid=3913707" இலிருந்து மீள்விக்கப்பட்டது