மலாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலாக்கா
Malacca

Melaka
马六甲
รัฐมะละกา
மாநிலம்
Flag of மலாக்காMalacca
Flag
Coat of arms of மலாக்காMalacca
Coat of arms
Motto: Bersatu Teguh
Anthem: Melaka Maju Jaya
      மலேசியாவில்       மலாக்கா
      மலேசியாவில்       மலாக்கா
ஆள்கூறுகள்: 2°12′N 102°15′E / 2.200°N 102.250°E / 2.200; 102.250ஆள்கூறுகள்: 2°12′N 102°15′E / 2.200°N 102.250°E / 2.200; 102.250
தலைநகர் மலாக்கா நகரம்
அரசாங்க
 • ஆளும் கட்சி தேசிய முன்னணி
பரப்பு
 • Total 1,650
மக்கள் (2007 மதிப்பீடு.)
 • மொத்தம் 7,70,000
Human Development Index
 • HDI (2010) 0.719 (high)
அஞ்சல் குறியீடு 75xxx - 78xxx
தொலைபேசிக் குறியீடு 06
வாகனக் குறியீடு M
மலாக்கா சுல்தானகம் 15ம் நூற்றாண்டு
போத்துக்கீசியரின் ஆளுகை 24 ஆகத்து 1511
டச்சு ஆளுகை 14 சனவரி 1641
பிரித்தானியர் ஆளுகை 17 மார்ச்சு 1824
சப்பானியரின் கட்டுப்பாட்டில் 1942-1946
மலாயா கூட்டமைப்பில் இணைவு 1948
Website http://www.melaka.org.my

மலாக்கா (Malacca, மலாய்: Melaka) மலேசியாவிலுள்ள 13 மாநிலங்களில், மூன்றாவது சிறிய மாநிலம். வரலாற்றுச் சிறப்புகள் பெற்றது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் மலாக்கா பட்டினம். யுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவித்தது.[சான்று தேவை]

மலாக்கா மாநிலத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. மத்திய மலாக்கா, அலோர் காஜா, ஜாசின் எனும் மூன்று மாவட்டங்கள். தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமத்திரா தீவும் இருக்கின்றன. வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலமும் தெற்கே ஜொகூர் மாநிலமும் உள்ளன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 148 கி.மீ. தொலைவில் மலாக்கா பட்டினம் அமைந்து உள்ளது.

பொருளடக்கம்

மக்கள் தொகை ஆய்வு[தொகு]

2007 ஆம் ஆண்டு மலாக்காவின் மக்கள் தொகை 770,000.

மலாக்காவின் முக்கிய நகரங்கள்[தொகு]

 • மலாக்கா மாநகரம்
 • அலோர் காஜா
 • மஸ்தீத் தானா
 • ஜாசின்
 • மெர்லிமாவ்
 • பத்து பெரண்டாம்
 • ஆயர் குரோ
 • டுரியான் துங்கல்
 • பத்தாங் மலாக்கா
 • சுங்கை ஊடாங்
 • பெம்பான்
 • சிலாண்டார்
 • அசகான்

வரலாறு[தொகு]

மலாக்கா நகரம்

மலாக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். 1402 ஆம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இவர் பின்னாளில் இசுலாமியச் சமயத்தைத் தழுவி தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் சிங்கப்பூரின் கடைசி ராஜாவாகவும் இருந்தவர். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

மலாக்காவிற்குப் பெயர் வந்த விதம்[தொகு]

சாவகத்தின் மஜாபாகித்துப் பேரரசு 1401 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மீது படை எடுத்தது. பரமேஸ்வரா அங்கிருந்து தப்பி ஓடி வந்தார். அப்படி வரும் போது ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகு மான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.

சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா பிரமித்துப் போனார். பலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை எதிர்கொள்வது என்பது நல்ல ஒரு சகுனம் என்று கருதினார். எனவே, அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு பேரரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது. பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயரும் மலாக்கா. அந்த மரத்தின் பெயரையே அந்த இடத்திற்கும் வைத்து விட்டார். இதுதான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு. மலாக்கா எனும் பெயர் வருவதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கின்றது. சருகுமான் உதைத்து தள்ளிய நாய் மல்லாக்காக[சான்று தேவை] விழுந்ததால் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

மலாகாட் எனும் அரபுச் சொல்[தொகு]

இந்தக் காரணங்கள் மட்டும் அல்ல. மற்றொரு காரணமும் உள்ளது. மலாகாட் என்றால் அரபு மொழியில் சந்தை என்று பொருள். மலாக்காவிற்கு வந்த அரபு வணிகர்கள் மலாகாட் எனும் பெயரிட்டு மலாக்காவை அழைத்து இருக்கலாம். அதனால் மலாகாட் எனும் சொல் மலாக்கா என்று மாறியதாகவும் சொல்லப் படுகிறது. இருப்பினும் பரமேஸ்வரா எனும் சிற்றரசரின் கண் முன்னால் ஒரு நாய் மல்லாக்காக விழுந்தது என்பது வரலாறு. அந்த மல்லாக்கா எனும் தமிழ்ச் சொல்லில் இருந்துதான் மலாக்கா எனும் சொல் பிரிந்து வந்து இருக்கலாம் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களின் ஒருமித்த[சான்று தேவை] கருத்து.

1831ல் மலாக்கா துறைமுகம்

பின்னர், அங்கு வாழ்ந்த மீனவர்கள், உள்ளூர் வாசிகள் போன்றவர்களை ஒன்று சேர்த்து ஓர் ஒன்றுபட்ட குடியிருப்புப் பகுதியை பரமேஸ்வரா தோற்றுவித்தார். அக்காலத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளுக்கு வாணிகம் செய்யப் போகும் சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப் பயன் படுத்தி வந்தன. அந்தக் கப்பல்கள் மலாக்கா துறைமுகத்திற்கு வந்து போகும் படி சில சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் நிறைய வணிகக் கப்பல்கள் மலாக்காவிற்கு வரத் தொடங்கின.

சீனர்களின் வாணிக ஈடுபாடு[தொகு]

இந்தக் கால கட்டத்தில்[சான்று தேவை] நிறைய சீனர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கின. மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட பரமேஸ்வரா சீனர்களுக்குச் சிறப்புச் செய்ய மலாக்காவில் ஒரு குன்றுப் பகுதியையே ஒதுக்கிக் கொடுத்தார்[சான்று தேவை]. அந்தக் குன்றுப் பகுதிதான் இப்போதைய புக்கிட் சீனா Bukit China. மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தடம் பதித்த சீனப் பாரம்பரிய இலக்கு.

1424 ஆம் ஆண்டு பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா காலமானார். அவர் புக்கிட் லாராங்கான் Bukit Larangan எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டார். இந்த இடம் சிங்கப்பூரில் கென்னிங் ஹில் Fort Canning Hill என்று இப்போது அழைக்கப் படுகிறது. அவருக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ மகாராஜா எனும் சுல்தான் முகம்மது ஷா அரியணை ஏறினார்.

கடல் கடந்து வணிகர்கள் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று[சான்று தேவை] வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சியாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

சியாம் நாட்டின் படை எடுப்பு[தொகு]

1446 ஆம் ஆண்டிலும் 1456 ஆம் ஆண்டிலும் சியாம் மலாக்கா அரசின் மீது படை எடுத்தது. அப்போது மலாக்காவின் முதல் அமைச்சராக துன் பேராக் என்பவர் இருந்தார். இவர் அரசியல் ஞானத்தைப் பயன்படுத்தி சியாம் படைகளைப் பின் வாங்கச் செய்தார். அந்தச் சமயத்தில் மலாக்கா அரசு சீன நாட்டுடன் நல்ல அணுக்கமான உறவு முறையை வைத்து இருந்தது. இந்த மலாக்கா-சீன அரசியல் உறவுகள் தான் சியாம் நாட்டின் ஆக்கிரமிப்புத் தன்மைக்குத் தடை போட்டு வைத்தன.

தென் கிழக்கு ஆசியாவில் மலாக்கா ஒரு முக்கிய இடமாக விளங்கத் தொடங்கியது. சீனக் கடலோடி செங் ஹோ மலாக்காவிற்கு சில முறைகள் வந்து சென்றுள்ளார். 1456ல் சுல்தான் மன்சூர் ஷா ஆட்சி செய்யும் போது ஹாங் லீ போ எனும் சீன இளவரசி மலாக்காவிற்கு 500 உதவியாளர்களுடன் வந்து சேர்ந்தார்.

Maritime Museum, replica of the Flor de la mar ship, Malacca
Stadthuys Square

இவர் சீனாவின் மிங் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர். மலாக்கா வந்த சில நாட்களில் இவர் சுல்தான் மன்சூர் ஷாவை திருமணம் செய்து கொண்டார். சுல்தான் மன்சூர் ஷா மலாக்காவை 1456 லிருந்து 1477 வரை ஆட்சி செய்தவர். அதன் பின்னர் இளவரசி ஹாங் லீ போவுடன் வந்த உதவியாளர்கள் மலாக்கா வாழ் மக்களுடன் நட்புறவுடன் பழகினர். காலப் போக்கில் உள்ளூர் வாசிகளை மணந்து கொண்டனர். தனித் தனி குடும்பங்களாக மலாக்கா புக்கிட் சீனாவில் குடியேறினர். அதன் வழி பெரானாக்கான் Peranakan எனும் ஒரு புதிய சந்ததியினர் மலாக்காவில் தோன்றினர். இப்போது அவர்கள் பாபாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆண்களைப் பாபா என்றும் பெண்களை நோஞ்ஞா என்றும் அழைக்கின்றனர்.

இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, சுமத்திராவின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. அதனால் பன்னெடும் காலமாக மலாக்காவின் எதிரியாக இருந்து வந்த தாய்லாந்து எனும் சியாமினால் மலாக்காவின் மீது படை எடுக்க முடியவில்லை. இந்தச் சமயத்தில் ஜாவாவை ஆண்டு வந்த மாஜாபாகிட் பேரரசும் சரிவு காணத் தொடங்கியது. அது மட்டும் அல்ல. தென் கிழக்கு ஆசியாவில் இசுலாமிய சமயம் பரவுவதற்கு மலாக்கா ஒரு கேந்திர களமாகவும் விளங்கியது.

ஐரோப்பியர்களின் ஆதிக்கம்[தொகு]

அல்புகர்க்கு மலாக்காவின் மீது படையெடுப்பு[தொகு]

1630 இல் போர்த்துக்கீசக் கோட்டையும் மலாக்கா நகரமும்

1511 ஏப்ரல் மாதம் அல்பான்சோ டி அல்புகர்க்கு என்பவர் போர்த்துக்கலின் முடியேற்ற நாடான கோவாவில் இருந்து புறப்பட்டு மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார். ஏன் அவர் மலாக்கா பேரரசின் மீது போர் புரிய வந்தார் என்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. லோபெஸ் டி செக்குயிரா எனும் போர்த்துகீசிய மாலுமி 1509ல் மலாக்கா வந்திருந்தார். மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகளைத் தேடி அவர் அங்கு வந்தார். போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்யும் எண்னத்துடன் தான் முதலில் மலாக்கா வந்தனர்.

அப்போது மலாக்காவின் சுல்தானாக முகமது ஷா இருந்தார். சுல்தானிடம் லோபெஸ் டி செக்குயிராவின் அணுகு முறை சரியாக அமையவில்லை. அதனால் சுல்தான் முகமது ஷா கோபம் அடைந்தார். இருந்தாலும் அந்தக் கோபத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய சுல்தான் முகமது ஷா சூழ்ச்சி செய்தார். இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார். அதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அந்தச் சூழ்ச்சியில் லோபெஸ் டி செக்குயிராவின் உதவியாளர்கள் சிலர் கொல்லப் பட்டனர். ஆகவே பழி வாங்கும் திட்டத்துடன் தான் அல்பான்சோ டி அல்புகர்க்கு, மலாக்காவின் மீது படை எடுத்தார்.

மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் நடந்தது. போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். சுல்தான் முகமது ஷாவிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அந்தப் போரில் சுல்தான் முகமது ஷா தோல்வி அடைந்தார். பின்னர் அவர் சில அரச நேய விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் ஓடி மறைந்து கொண்டார். பகாங் என்பது மலேசியாவில் ஒரு மாநிலம். மலேசியாவின் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் இந்த மாநிலத்தில் தான் உள்ளன.

போர்த்துகீசிய சியாம் நல்லுறவு[தொகு]

அதன் பின்னர் காட்டிற்குள் இருந்தவாறு போர்த்துகீசியர்களின் மீது சுல்தான் முகமது ஷா அடிக்கடி மறைவுத் தாக்குதல்கள் நடத்தினார். அந்தத் தாக்குதல்கள் போர்த்துகீசியர்களுக்குப் பெரும் சிரமங்களைக் கொடுத்தன. இதற்கு இடையில் மலாக்காவில் போர்த்துகீசியர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா. அந்தக் கோட்டையின் சிதைவுற்றப் பாகங்களை இன்றும் மலாக்காவில் பார்க்க முடியும். அவற்றை வரலாற்று நினைவுச் சின்னங்களாகக் கருதி, மலாக்கா வாழ் மக்கள் இதுகாறும் போற்றிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

மலாக்காவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் அடுத்தக் கட்டமாக சியாம் நாட்டுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப் பட்டனர். அதன் பொருட்டு தீவிரமான முயற்சிகளில் இறங்கினார்கள். ஏனென்றால், சியாம் எந்த நேரத்திலும் மலாக்காவைத் தாக்கும் தயார் நிலையிலேயே இருந்து வந்தது. சீன மிங் அரசர்களின் பாதுகாப்பு மட்டும் மலாக்காவிற்கு இல்லாமல் இருந்திருக்குமானால், சியாம் நாடு நிச்சயமாக மலாக்காவின் மீது எப்போதோ படை எடுத்து இருக்கும். அந்தச் சமயத்தில் சியாம் நாட்டை மன்னர் ராமாதிபோடி ஆண்டு வந்தார்.

சுல்தான் முகமது ஷா பிந்தான் தீவில் தஞ்சம்[தொகு]

மன்னர் ராமாதிபோடியிடம் சமாதானம் பேசி நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள போர்த்துகீசியர்கள் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் 1511 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டுவார்த்தே பெர்ணாண்டஸ் Duarte Fernandez எனும் தூதரைச் சியாம் நாட்டின் அயோத்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மன்னர் ராமாதிபோடியும் முகம் சுளிக்காமல் அந்தத் தூதரைச் சகல மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அனுப்பினார். இவை அனைத்தும் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய நான்கே மாதங்களில் நடந்து முடிந்தவை.

பகாங் காட்டிற்குள் மறைந்து வாழ்ந்து வந்த சுல்தான் முகமது ஷா, பின்னர் பிந்தான் தீவில் தஞ்சம் அடைந்தார். ஜாவா தீவின் வடக்கே ரியாவ் தீவுக் கூட்டங்கள் உள்ளன. அங்குதான் இந்தப் பிந்தான் தீவும் இருக்கிறது. அங்கு இருந்தவாறு சுல்தான் முகமது ஷா அடிக்கடி மலாக்கா போர்த்துகீசியர்கள் மீது சின்னச் சின்னத் தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்தத் தாக்குதல்கள் போர்த்துகீசிய ஆளுமையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் அந்தத் தாக்குதல்கள் அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. அது மட்டும் அல்ல. மலாக்காவின் போர்த்துகீசிய அரசாங்கத்திற்கு அது ஒரு பெரிய சவாலாகவும் விளங்கி வந்தது.

மலாக்கா வாணிகம் பாதிப்பு[தொகு]

இந்த அச்சுறுத்தலை அடியோடு களைந்து விட வேண்டும் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தனர். ஒரு பெரும் படையைத் திரட்டி பிந்தான் தீவிற்கு அனுப்பினர். இது 1526ல் நடந்தது. அந்தப் படைக்கு பெட்ரோ மாஸ்காரன்காஸ் என்பவர் தலைமை தாங்கினார். பிந்தான் தீவையே அழித்து விட வேண்டும் என்று போர்த் தளபதிக்கு கட்டளை இடப்பட்டது. அதன் படியே அவரும் செய்து முடித்தார். அந்தப் போருக்குப் பின்னர் சுல்தான் முகமது ஷாவும் அவருடைய குடும்பத்தினரும் சுமத்திராவில் உள்ள கம்பார் எனும் இடத்திற்குத் தப்பித்துச் சென்றனர். அங்கேயே அவர் தன்னுடைய கடைசி நாட்களையும் கழித்தார். 1526ல் சுல்தான் முகமது ஷா காலமானார். அத்துடன் மலாக்கா சுல்தான்களின் வரலாற்றுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது

மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைபற்றிய பின்னர் அதன் வாணிபச் சூழ்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மலாக்காவை நிர்வாகம் செய்வதிலும் அவர்களுக்கு பற்பல சிரமங்கள் ஏற்பட்டன. மலாக்கா ஒரு சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்த போது பல தரப் பட்ட சமயத்தவர்கள் பாரபட்சம் இல்லாமல் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர். ஆனால், போர்த்துகீசியர்கள் வந்த பின்னர் மற்ற சமூகத்தினர் மலாக்காவிற்கு வர தயக்கம் காட்டினர். அவர்களின் பாதுகாப்பிற்கு முறையான உத்தரவாதம் இல்லாமல் போனதே அதற்கு முக்கியமான காரணம். ஆசிய வாணிகத்தைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் எனும் போர்த்துகீசியர்களின் தலையாய இலட்சியம் மலாக்காவில் நிறைவேறவில்லை.

அதற்குப் பதிலாக ஆசிய வாணிக வலைப் பின்னலையே அவர்கள் நலிவுறச் செய்து விட்டனர். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று மேலை நாட்டு வணிகர்கள் ஒதுங்கிப் போகும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது. அதனால் பெருவாரியான வணிகர்கள் மலாக்காவிற்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். மாறாக வேறு வாணிக மையங்களுக்குச் செல்லத் தொடங்கினர். அதனால் மலாக்காவின் வாணிகக் கேந்திரம் பாதிப்பு அடைந்தது.

புனித பிரான்சிஸ் சேவியர் வருகை[தொகு]

இந்தக் காலக் கட்டத்தில் தான் பிரான்சிஸ் சேவியர் எனும் புனிதப் பாதிரியார் மலாக்காவிற்கு வருகை தந்தார். இவர் உலகில் மிகவும் புகழ் பெற்ற கிறித்துவ சமயத் திருத்தொண்டர். 1545லிருந்து 1549ஆம் ஆண்டுகளில் பல மாதங்கள் அவர் மலாக்காவில் தங்கிச் சமயத் தொண்டுகள் செய்தார். கிறிஸ்துவ சமயப் போதனைகளைச் செய்தார்.

மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ”ஏ பமோசா கோட்டை”யின் சிதைவுகள்

கிறிஸ்துவத் திருச்சபைகளைக் கட்டுவதற்கு பல அரிதான முயற்சிகளை மேற்கொண்டார். கிறிஸ்துவ சமயம் மலாக்கா மக்களைச் சென்று அடைவதற்குப் பல வகைகளில் திருப்பணிகள் செய்து உள்ளார். பிரான்சிஸ் சேவியர் அவர்களின் சிலை மலாக்கா குன்றில் இன்றும் இருக்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிலையின் ஒரு பக்கக் கரம் உடை பட்டுப் போனது. மலாக்கா வாழ் கிறிஸ்துவ மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். உடனே மலாக்கா அரசாங்கம் பொருள் உதவி செய்து அந்தச் சிலையைப் புனரமைப்பு செய்து கொடுத்தது.

1641 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். 130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார். 1798 ஆம் ஆண்டு வரை மலாக்காவின் வாணிகம் டச்சுக்காரர்களின் இரும்புப் பிடிக்குள் இருந்தது. இருப்பினும் மலாக்காவை ஒரு பெரிய வாணிக மையமாக உருவாக்க வேண்டும் என்பது டச்சுக்காரர்களின் நோக்கம் அல்ல. ஏனென்றால் அவர்களுடைய பிரதான வாணிப இலக்குகள் இந்தோனேசியா பத்தேவியாவில் இருந்தது. ஆகவே அவர்களுடைய சிந்தனை, சித்தாந்தம், செல்வாக்கு அனைத்தும் பத்தேவியாவைச் சுற்றிச் சுற்றியே வலம் வந்தன. மலாக்காவை இரண்டாம் பட்சமாகவே கருதினர்.

1854 இல் பிரித்தானியரின் ஆட்சியில் மலாக்கா

ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை[தொகு]

டச்சுக்காரர்கள் மலாக்காவில் பல ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பொது மண்டபங்களைக் கட்டி உள்ளனர். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்தாடைஸ் (Stadthuys) எனும் சிகப்புக் கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்தில் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள் தான்.

1824 ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826 லிருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது. அதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946ல் நீரிணைக் குடியேற்றப் பிரதேசம் (Straits Settlements) உருவானது. இந்த அமைப்பில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயன் யூனியன் எனும் ஐக்கிய மலாயா அமைப்பின் கீழ் மலாக்கா சேர்க்கப் பட்டது.

மாநில அரசாங்கம்[தொகு]

மாநிலச் சட்ட மன்றம்[தொகு]

மலாக்கா மாநிலம் ஒரு சட்ட மன்றத்தினால் நிர்வாகம் செய்யப் படுகின்றது. மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். மாநிலத் தேர்தல்கள் மலேசிய நாட்டின் பொதுத் தேர்தலின் போது நடைபெறும். இதுவரை 12 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மலாக்கா மாநிலச் சட்ட மன்றத்தில் 28 பேர் உறுப்பினர்களாகச் செயல் படுகின்றனர். இவர்களில் 23 உறுப்பினர்கள் ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஐவரும் பாக்காத்தான் கெஅடிலான் ராக்யாட் எனும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

மாநிலச் சட்ட மன்றத்திற்கு ஒரு செயல் குழுவும் உண்டு. இந்தச் செயல் குழுவினர் அனைவரும் மாநில அமைச்சர்களின் தகுதிகளைப் பெற்றவர்கள். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விட இவர்களுக்குச் சலுகைகள் சற்றுக் கூடுதலாக இருக்கும். இவர்களுடைய பதவி காலம் ஐந்து ஆண்டுகள். மாநிலத்தில் அதிகமான வாக்குகள் பெற்ற ஆளும் அரசியல் கட்சி இந்தச் செயல் குழுவினரைத் தேர்வு செய்கிறது.

மாநில அமைச்சர்கள்[தொகு]

மலாக்கா மாநிலத்தின் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மாநில அமைச்சராக டத்தோ பெருமாள் இருக்கின்றார். இவர் அசகான் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்தவர். இவர் டுரியான் துங்கல் தமிழ்ப் பள்ளியில் படித்து மாநில அமைச்சராக உயர்வு பெற்றவர். மாநிலத்தின் தலைமைப் பதவியில் கவர்னர் எனும் யாங் டி பெர்த்துவா நெகிரி இருக்கின்றார். மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்த்துவா நெகிரியை மலேசிய நாட்டின் பேரரசர் அவர்கள் நியமனம் செய்கின்றார்.

மாநில அரசாங்கத்தின் தலைமைப் பீடமாக இருப்பது முதல் அமைச்சர் துறை. இந்தத் துறை மாநில நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கின்றது. 2010ல் மலாக்கா மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பவர் டத்தோ முகமது அலி முகமது ரோஸ்தாம். மலாக்கா மாநிலத்தின் நிர்வாகம் சிறப்பாகச் செயல் பட அந்த மாநிலம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

 1. மலாக்கா மத்திய மாவட்டம் & நில அலுவலகம்
 2. அலோர்காஜா மாவட்டம் & நில அலுவலகம்
 3. ஜாசின் மாவட்டம் & நில அலுவலகம்

அந்தந்த மாவட்டங்களின் மக்களின் பிரச்சினையை மாவட்ட அதிகாரிகளும் துணை மாவட்ட அதிகாரிகளும் கவனித்துக் கொள்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

சுற்றுலாத் துறை[தொகு]

மலாக்கா மாநிலத்தில் சுற்றுலாத் துறையும் உற்பத்தித் துறையும் மிக மிக முக்கியமான துறைகளாக விளங்குகின்றன. மாநிலத்திற்கு அதிகமாக வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகவும் இருக்கின்றன. Visiting Malacca Means Visiting Malaysia என்பது மலாக்கா மாநிலத்தின் சுலோகம் ஆகும். தமிழில் "மலாக்காவைப் பார்த்தால் மலேசியாவைப் பார்க்கலாம்" என்று பொருள். மலாக்கா மாநிலம் மலேசியாவிலேயே மிகுந்த கலாசாரப் பாரம்பரியங்களையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட மாநிலம் ஆகும்.

சீனா, ஆத்திரேலியா, போர்த்துகல், நெதர்லாந்து, இங்கிலாந்து, கொரியா, சப்பான் போன்ற நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுப் பயணிகள் வருகின்றனர். மலாக்கா கைவினைப் பொருட்களை அதிகமாக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பல சமூகத்தவரின் உணவு வகைகள் தாராளமாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. மலேசியாவிலேயே உணவுப் பொருட்கள் மிக மலிவாகக் கிடைக்கின்ற இடம் மலாக்கா என்று சுற்றுப் பயணிகள் சொல்கின்றனர். சுற்றுப் பயணிகள் அதிகமானோர் வருவதால் மலாக்கா மாநிலத்திற்கு அதிகமாக வருமானமும் கிடைக்கின்றது.

உற்பத்தித் துறை[தொகு]

சுற்றுலாத் துறையைத் தவிர உற்பத்தித் துறையும் மலாக்கா மாநிலத்திற்கு அதிகமான வருவாயைத் தேடித் தருகிறது. அமெரிக்கா, செருமனி, சப்பான், தைவான், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தொழில் துறை நிறுவனங்கள் ஏராளமான தொழில்சாலைகளைத் திறந்து இருக்கின்றன. பெரும்பாலானவை பயனீட்டாளர் பொருள்கள், தொழில் நுட்பத் தளவாடப் பொருள்கள், வாகன உபரிப் பாகங்கள், மின்னியல் சாதனங்கள், கணினி உபரிப் பாகங்கள் போன்றவற்றைத் தயாரித்து வெளிநாடுகளில் உள்ள தங்களின் பிரதான நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.

ஏறக்குறைய 500 முதல் 800 வரையிலான தொழிற்சாலைகள் ஆயர் குரோ, பத்து பெரண்டாம் தொழில் பேட்டைகளில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளன. பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியும் வருகின்றன. மலாக்கா மாநிலம் ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கே மட்டும் 25 க்கும் மேற்பட்ட தொழில் பேட்டைகள் உள்ளன.

கல்வி[தொகு]

மணிப்பால் மருத்துவக் கல்லூரி[தொகு]

தனியார் மருத்துவக் கல்விக்கு மலாக்கா முதலிடம் வகிக்கிறது. மலாக்கா மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் புக்கிட் பாரு புற நகர்ப் பகுதியில் மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்தக் கல்லூரியில் இது வரை 1500 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர். புக்கிட் பெருவாங் புற நகர்ப் பகுதியில் பல்லூடகப் பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. மலேசியாவில் இருக்கும் ஒரே பல்லூடகப் பல்கலைக்கழகம் இது தான். இந்தப் பலகலைக்கழகத்தில் கணினியியல் படிப்பதற்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான மாணவர்கள் வருகின்றனர்.

மலாக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள்

 • மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி - புக்கிட் பாரு
 • மலேசியப் பல்லூடப் பல்கலைக்கழகம் - புக்கிட் பெருவாங்
 • மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - லெண்டு
 • மலாக்கா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - ஆயர் குரோ
 • யாயாசான் மலாக்கா கல்லூரி - புக்கிட் பாரு
 • மலாக்கா இஸ்லாம் பல்கலைக்கழகம்

மலேசியாவிலேயே இளம் குற்றவாளிகளுக்கான கல்விக் கூடம் மலாக்காவில் தான் உள்ளது. மலாக்கா மாநகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தெலுக் மாஸ் எனும் இடத்தில் அந்தக் கல்விக் கூடம் செயல் பட்டு வருகின்றது. அதன் பெயர் ஹென்றி கர்னி கல்விக் கூடம் ஆகும். இப்பள்ளியில் பல தரப் பட்ட தொழில் திறன்கள் சொல்லித் தரப் படுகின்றன.

மலாக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு மலாக்கா அனைத்துலப் பள்ளியும் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி 1993 ஆம் ஆண்டு திறக்கப் பட்டது.

மருத்துவ நலன்[தொகு]

மலாக்கா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள்:

அரசாங்க மருத்துவமனைகள்[தொகு]

 • மலாக்கா பொது மருத்துவமனை
 • ஜாசின் மாவட்ட மருத்துவமனை

இந்த இரு அரசாங்க மருத்துவமனைகளும் மலாக்கா மணிப்பால் மருத்துவ கல்லூரிக்கு பயிற்சி தரும் மருத்துவமனைகளாக விளங்குகின்றன.

தனியார் மருத்துவமனைகள்[தொகு]

 • புத்ரா மருத்துவமனை (முன்பு சவுத்தர்ன் மருத்துவமனை)
 • பந்தாய் மருத்துவமனை (ஆயர் குரோ)
 • மக்கோத்தா மருத்துவமனை

மாவட்ட உள்ளாட்சி மன்றம்[தொகு]

மலாக்கா மாநிலம் 3 மாவட்டங்களாகவும் 4 உள்ளாட்சி மன்றங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.

மாவட்டம் பரப்பளவு
(சதுர
கிலோ மீட்டர்)
மக்கள் தொகை
(2008)
தலைப் பட்டணம் உள்ளாட்சி மன்றம்
மத்திய மலாக்கா 279.85 464,200 மலாக்கா மாநகரம் வரலாற்றுமிகு மலாக்கா மாநகர மன்றம்
ஹங்துவா ஜெயா மாநகர மன்றம்
அலோர் காஜா 660.00 163,900 அலோர் காஜா அலோர் காஜா நகர மன்றம்
ஹங்துவா ஜெயா நகர மன்றம்
ஜாசின் மாவட்டம் 676.07 125,400 ஜாசின் ஜாசின் நகர மன்றம்
ஹங்துவா ஜெயா நகர மன்றம்

கலாசாரம்[தொகு]

மலாக்கா அறுநூறு ஆண்டுகள்[சான்று தேவை] வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாநகரம். அதனால் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி மலாக்கா நகரம் உலகப் பாரம்பரிய பட்டியலில் இணைக்கப் பட்டது. இந்த நகருடன் பினாங்குத் தீவின் தலைப் பட்டினமான ஜார்ஜ் டவுனும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றது. 1400 ஆம் ஆண்டிலிருந்து தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள். மலாக்காவின் மலாய்க்காரர்கள் பாரம்பரியக் கலாசாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். மலாக்காவில் இரண்டு அரும் பொருள் காட்சியகங்கள் உள்ளன. ஒன்று பாபா நோஞ்ஞா பாரம்பரிய அரும் பொருள் காட்சியகம். மற்றொன்று மலாக்கா சுல்தான்களின் அரண்மனை பாரம்பரிய அரும் பொருள் காட்சியகம்.

மலாக்காவின் உணவு வகைகள்[தொகு]

பல வகையான உணவுப் பொருட்களுக்கு மலாக்கா புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் உணவுப் பொருட்கள் மலிவாகவும் கிடைக்கிறது. சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரில் இருந்தும் சுற்றுப் பயணிகள் வந்து மலாக்கா உணவுகளைச் சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள். மலாய்க்காரர்களின் ‘ஈக்கான் அசாம் பெடாஸ்’ எனும் உரைப்புளிப்பு மீன், சம்பால் பெலாச்சான், செஞ்சாலுக் போன்றவை அனைத்து சமூகத்தவரையும் கவர்ந்தவை. இந்த உணவு வகைகள் மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்றவை.

சாத்தே செலுப் எனும் சாத்தே உணவுக்கு மலாக்கா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு தென்னை ஓலைக் குச்சியில் நான்கைந்து கோழி இறைச்சித் துண்டுகள் செருகப் படும். அவை அனலில் வாட்டி எடுக்கப் பட்டு கச்சான் குழம்பில் தொய்த்து பரிமாறப்படும். அதுதான் சாத்தே. பெரும்பாலும் சாத்தே செய்வதற்கு கோழி இறைச்சியும் மாட்டு இறைச்சியும் பயன் படுத்தப் படும். மலாக்காவில் சீன, இந்திய, போர்த்துகீசிய, டச்சு, ஆங்கில உணவுகளும் கிடைக்கும். நோஞ்ஞா லாக்சா எனும் கறிக் குழம்பும் சுவையான உணவுப் பொருளாகும்.

சன்னாசிமலை ஆண்டவர் ஆலயம்[தொகு]

16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவ ஆட்சியாளர்களாக மலாக்காவில் தடம் பதித்தவர்கள் போர்த்துக்கிசியர்கள். இவர்களின் சந்ததியினர் மலாக்காவில் பண்டார் ஹீலிர் எனும் இடத்தில் இன்றும் வாழ்கிறர்கள். அவர்கள் வாழும் இடத்தைப் போர்த்துகீசிய குடியேற்றப் பகுதி என்று அழைக்கிறார்கள். அத்துடன் சில ஆயிரம் சீக்கியர்களும் மலாக்காவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு வருட மே மாதத்தில் மலேசிய வாழ் சீக்கியர்கள் ஜாலான் தெமாங்கோங்கில் உள்ள சீக்கிய ஆலயத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

மலாக்காவிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் குருபோங் எனும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. இங்கே தான் புகழ்பெற்ற அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் ஆலயம் உள்ளது. இது 150 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஓர் ஆலயம்[சான்று தேவை]. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சன்னாசிமலைத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகின்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு காவடிகள் எடுத்து சிறப்புகள் செய்கின்றனர். இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஏராளமான சீனர்களும் காவடிகள் எடுக்கிறார்கள். சன்னாசிமலைத் திருவிழாவில் ஓர் இலட்சம்[சான்று தேவை] பக்தர்கள் திரண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

போக்குவரத்துச் சேவை[தொகு]

இப்போது மலாக்காவில் இரயில் சேவை இல்லை. இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் மலாக்கா மாநகரம் வரையில் இரயில் போக்குவரத்து இருந்தது[சான்று தேவை]. ஜப்பானியர் ஆட்சி காலத்தின் போது இரயில் தண்டவாளங்கள் பிரிக்கப் பட்டு பர்மா எனும் மியன்மாருக்கு அனுப்பப் பட்டன[சான்று தேவை]. அங்கே வரலாற்றுப் புகழ் "பர்மா மரண இரயில் பாதை"க்குப் பயன் படுத்தப் பட்டன.

மலாக்கா மாநகரில் “மலாக்கா சென்றல்” எனும் பிரதான பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் ஜாலான் துன் அப்துல் ரசாக் எனும் சாலைக்கும் ஜாலான் பாங்லிமா அவாங் சாலைக்கும் இடையில் கம்பீரமாக வீற்றுள்ளது. இது 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் டிரான்ஸ் நேசினல், சிட்டி ஹாலிடேய்ஸ், மாயாங் சாரி போன்ற பேருந்து நிறுவனங்கள் 24 மணி நேர சேவைகளை வழங்கி வருகின்றன. மலாக்காவில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, அலோர் ஸ்டார், கோத்தா பாரு, குவாந்தான், ஹாட்ஞாய் போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவைகள் உள்ளன.

பத்து பெராண்டாம் எனும் இடத்தில் விமான நிலையமும் உள்ளது. இந்த வட்டாரத்தின் முக்கிய நகரங்களுக்கு விமானச் சேவைகள் உள்ளன. விமானிகள் பயிற்சிக் கழகமும் இங்கே இருக்கிறது. அண்மையில் இந்த விமான நிலயத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு அனைத்துல விமான நிலையமாகத் தரம் உயர்த்தப் பட்டது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை இணைக்கும் சந்திப்பு இடமாக ஆயர் குரோ விளங்குகிறது. சிம்பாங் அம்பாட் எனும் இடத்திலும் ஜாசின் எனும் இடத்திலும் வெவ்வேறு சந்திப்புகள் உள்ளன.

புகழ்பெற்ற வரலாற்றுத் தளங்கள்[தொகு]

 • ஆ பாமோசா கோட்டை: 1511ல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. அவர்களுக்குப் பின்னர் மலாக்காவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் அந்தக் கோட்டையை உடைத்து விட திட்டம் போட்டார்கள். நல்ல வேளையாக சர் ஸ்டான்பர்ட் ராபிள்ஸ் என்பவர் அந்த நாச வேலையை நிறுத்தி அந்தக் கோட்டையைக் காப்பாற்றி வைத்தார். அவருடைய அரிய செயலை இன்றும் மலாக்கா வாழ் மக்கள் பெருமையுடன் நினைத்துப் பார்க்கின்றனர். சர் ஸ்டான்பர்ட் ராபிள்ஸ் தான் சிங்கப்பூரை உருவாக்கியவர்.
 • செயிண்ட் ஜான் கோட்டை: 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலக் கட்டத்தில் டச்சுக்காரர்கள் இந்தக் கோட்டையைப் புனரமைப்புச் செய்தனர்.
 • செயிண்ட் பீட்டர் தேவாலயம்: 1710ல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. இந்தத் தேவாலயத்தில் இருக்கும் ஆலய மணி கோவாவில் இருந்து கொண்டு வரப் பட்டது.
 • செயிண்ட் பால் தேவாலயம்: போர்த்துகீசியத் தலைமை மாலுமி டுவார்த்தே கோயெல்ஹோ என்பவரால் கட்டப் பட்டது. போர்த்துகீசியர்களுக்குப் பின்னர் வந்த டச்சுக்காரர்கள் இந்தத் தேவாலயத்தைக் கல்லறையாக மாற்றி விட்டார்கள். இப்பொது அந்த தேவாலயம் மலாக்கா அரும் பொருள் காட்சியகமாக விளங்குகிறது. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் இறந்ததும் அவர்களின் புனித உடல் இந்த இடத்தில் தான் தற்காலிகமாக வைக்கப் பட்டு இருந்தது. அதன் பின்னர் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.
 • கிறிஸ்து தேவாலயம்: டச்சுக்காரர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் தேவாலயம். 1753ல் கட்டப் பட்டது.
 • பிரான்சிஸ் சேவியர் தேவாலயம்: பிரென்சு பாதிரியார் பெப்ரே என்பவரால் 1849ல் கட்டப் பட்டது.
 • ஸ்தாடைஸ்: 1650ல் டச்சுக்காரர்களால் கட்டப் பட்டது.
 • செங் ஊன் டெங் கோயில்: ஜாலான் தோக்கோங்கில் இருக்கிறது. மலாக்காவிலேயே மாபெரும் கோயில். மலேசியாவில் மிகப் பழமையான கோயில்.
 • ஜோங்கர் சாலை: மலாக்கா மாநகரில் மிகவும் புகழ் பெற்ற சாலைகளில் ஒன்று. மிகவும் குறுகிய சாலை. பழமை வாய்ந்த பொருட்களும் கைவினைப் பொருட்களும் இங்கே விற்கப் படுகின்றன.
 • போர்த்துகீசியச் சதுக்கம்: போர்த்துகீசியர்களின் குடியேற்றப் பகுதி. கிறிஸ்மஸ் பண்டிகை இங்கே மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.
 • திரேங்கேரா பள்ளிவாசல்: மலாக்காவில் மிகப் பழமை வாய்ந்த பள்ளிவாசல்.

மலாக்காவின் புகழ் பெற்ற மனிதர்கள்[தொகு]

மலாக்காவின் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற மனிதர்கள்:

 • துன் காபார் பாபா: மலேசியாவின் துணைப் பிரதமர் (1986-1993), மலாக்கா முதலமைச்சர் (1959-1963)
 • இபு ஜாயின்: பிரபலமான கல்வியாளர், மலேசிய தேசியவாதி
 • சிர்லி லிம்: உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியை, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியை
 • துன் சர் தான் செங் லோக்: மலேசிய சீனர் சங்கத்தை உருவாகியவர்
 • துன் தான் சியூ சின்: மலேசியாவின் முதல் நிதி அமைச்சர். 15 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தவர்
 • டத்தோ ஆர்.அருணாசலம்: மலாக்கா மாநில ம.இ.கா தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்,
 • டத்தோ ஆர்.ராகவன்: புக்கிட் அசகான் சட்ட மன்ற உறுப்பினர், மலாக்கா மாநில அமைச்சர்
 • டத்தோ ஆர்.பெருமாள், அசகான் சட்ட மன்ற உறுப்பினர், மலாக்கா மாநில அமைச்சர்

மலாக்கா காட்சியகம்[தொகு]


மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 • De Witt-டி விட், Dennis-டென்னிஸ் (2010). Melaka from the Top-மலாக்கா மேலே இருந்து. Malaysia: Nutmeg Publishing. ISBN 9789834351922. 
 • De Witt-டி விட், Dennis-டென்னிஸ் (2007). History of the Dutch in Malaysia-மலேசியாவில் டச்சுக்காரர் வரலாறு. Malaysia: Nutmeg Publishing. ISBN 9789834351908. 
 • மலேசியாவின் வரலாற்றுச் சுவடுகள். பதிப்பாசிரியர்
  மலாக்கா முத்துக்கிருஷ்ணன் aka Muthukrishnan K.S.|“Shadows of the Moon" எடுக்கப் பட்ட திகதி. 23 டிசம்பர் 2010.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா&oldid=1753274" இருந்து மீள்விக்கப்பட்டது