உள்ளடக்கத்துக்குச் செல்

கேசவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேசவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு முறை வரும் பெயர். 23-வது பெயராகவும், 648-வது பெயராகவும் வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர். இதற்கு பல விதப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.

மகாபாரத காவியத்தில், திருதராட்டிரன் கிருஷ்ணரின் வேறு பெயர்களை கூறுமாறு சஞ்சயனிடத்தில் கேட்கும் போது, கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயரும் உள்ளதாக தெரிவித்தான்.[1]

  • 'குழலழகர்' அல்லது 'அழகிய கூந்தலை உடையவர்' என்று ஒரு பொருள். ஆதி சங்கரருடைய உரையில் இதை 'கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் அழகிய கேசங்கள் உள்ளவர்' என்கிறார். நரசிங்க வடிவில் விஷ்ணுவின் பிடரிமுடி மிக அழகானது. வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கேசங்களின் அழகை மாரீசனும்,[2] விசுவாமித்திரரும்[3] வர்ணிக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகளும் கண்ணனின் கேசங்களை வர்ணிக்கின்றனர்.[4]
  • கேசி என்னும் அசுரனைக் கண்ணன் கொன்றதால் கேசவன் என்ற பெயர் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதை ஆமோதித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே 'கேசிஹா' - கேசியைக் கொன்றவர் என்ற பெயரும் வருகிறது.
  • க: - பிரம்மா, அ: - விஷ்ணு, ஈச: - சிவன் ஆகிய இம்மூன்று வடிவங்களையும் தம் வசத்தில் கொண்டவர், என்றும் இன்னொரு பொருள் கூறுகிறார் ஆதி சங்கரர். இதனால் 'கேசவ' என்ற சொல், பெயரும் உருவமுமில்லாத பரம்பொருளைக் குறிப்பதாகும் என்பது அத்வைத வேதாந்தத்தின் கூற்று.
  • 'சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்குரியவர்' என்பது இன்னொரு பொருள். இதுவே வேறுவிதமாகவும் சொல்லப்படுகிறது: சூரியன் முதலிய ஒளி மண்டலங்களில் தன் நுண்ணிய ரோமம் போன்ற ஒளிக் கதிர்களைப் பரவச் செய்தும் அம்மண்டலங்களில் உள்ளுறைபவனாகவும் ஒளி விடுபவர்.[5]
  • பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரும் கேசங்கள் எனப்பெறுவர். அவர்களை சக்தியாகக்கொண்ட பரம்பொருள்.
  • அக்னி, சூரியன், வாயு, என்ற மூன்று சக்திகள் கொண்டவர்.[6]
  • அசுரர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்குவதற்காக தேவர்களால் வேண்டப்பட்ட விஷ்ணு தனது முடியிலிருந்து கரு நிறமும் வெண்ணிறமும் கொண்ட இரு கேசங்களைப்பிடுங்கி இவை கண்ணனாகவும் பலராமனாகவும் தோன்றி உதவுவர் என வரம் தந்தார் மற்றும் அவர் அசுரர்களை கொன்று விட்டார் என விஷ்ணு புராணம் கூறுகிரது.[7]
  • பராசர பட்டர் ஹரிவம்சத்திலிருந்து மேற்கோள் காட்டி சிவன் விஷ்ணுவிடம் சொல்லியதாகச்சொல்கிறார்: 'க: என்றால் பிரம்மா, ஈசன் என்றால் நான் சிவன். நாங்களிருவரும் உன் உடலிலிருந்து பிறந்தோம். அதனால் உன் பெயர் கேசவன்'.[8]

திருவாய்மொழியில்

[தொகு]

நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10-2-1) கேசவன் என்னும் பெயரைச் சொல்லவே துன்பம் என்று பெயர் பெற்றன எல்லாம் கெடும்; ஞானம் பிறக்குமுன் செய்த பாவங்களும், பிறந்தபின் மறந்து செய்யும் பாவங்களும் தாமே அழியும். நாள்தோறும் கொடிய செயலைச் செய்யும் யமனுடைய தூதர்களும் வந்து கிட்டமாட்டார்கள், என்கிறார்:

கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்.

துணை நூல்கள்

[தொகு]
* சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • Shri Vishnu Sahasranama, with the Bhashya of Parasara Bhattar. Trans.Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.
  • Complete Works of Sri Sankaracharya, in the Original Sanskrit. Vol.V: Laghu Bhashyas. Samata Books. Madras. 1982

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்
  2. 'சிகீ கனக மாலயா' வால்மீகி ராமாயனம். 3-38-14
  3. 'காகபக்ஷதரோ தன்வீ' வால்மீகி ராமாயணம் 1- 22 - 6
  4. 'குடில குந்தலம் கோமளானனம்'. ஸ்ரீமத் பாகவதம், 10-31-15.
  5. மகாபாரதம், சாந்தி பர்வம், 350-48.
  6. ருக்வேத ஸ்ம்ஹிதை, 1-164-41.
  7. விஷ்ணு புராணம், 5-1-59-63.
  8. ஹரிவம்சம், 279.47.131-48.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவன்&oldid=4076596" இலிருந்து மீள்விக்கப்பட்டது