கிம்மாஸ் போர்
| ||||||||||||||||||||||||||||||||||
கிம்மாஸ் போர் (ஆங்கிலம்: Battle of Gemas; மலாய்: Pertempuran di Gemas); என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், மலாயாவின் மீது சப்பானியர் படையெடுத்த போது, தீபகற்ப மலேசியா, ஜொகூர், கெமிஞ்சே பகுதியில் 1942 சனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.[2]
சப்பானிய இராணுவத்தின் 5-ஆவது தரைப்பிரிவிற்கும், ஆஸ்திரேலிய இராணுவத்தின் 2/30-ஆவது தரைப்படைக்கும் இடையே கெமிஞ்சே பாலத்திற்கு அருகில் நடந்த இந்தப் போரில் 800-க்கும் மேற்பட்ட சப்பானிய போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தப் போரின் முடிவு, மலாயா நடவடிக்கை எனும் மலாயா போர்களில், நேச நாடுகளின் கூட்டு இராணுவத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றி; மற்றும் கடைசி வெற்றியுமாகும். இந்தப் போர், நூற்றுக்கணக்கான சப்பானிய வீரர்களின் மன உறுதியை சிதைத்த போர் என்றும் அறியப்படுகிறது.[3]
போர்
[தொகு]ஆஸ்திரேலியாவின் 2/30-ஆவது தரைப்படைக்கு பிரடெரிக் கலேகன் படைத்தலைவராக பொறுப்பு வகித்தார். கிம்மாஸ் நகர்ப் பகுதிக்கு மேற்கே 11 கிலோமீட்டர் (6.8 மைல்) தொலைவில் உள்ள முதன்மைச் சாலையில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.[4] சப்பானியர்கள் மேலும் தெற்கு நோக்கி முன்னேறுவதைத் தடுப்பதற்காக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.[5]
தாக்குதல் இடம் அடர்ந்த புதர்களால் சூழப்பட்டிருந்தது. அங்கு ஓர் இடத்தில் கெமிஞ்சே ஆற்றை கடக்கும் மரப்பாலம் இருந்தது. இந்த மரப்பாலம் கிம்மாஸ் நகரத்தையும் தம்பின் நகரத்தையும் இணைக்கிறது.[3] முதனமைத் தரைப்படையில் இருந்து 5 கிலோமீட்டர்கள் (3.1 மைல்) தொலைவில் ஒரு தாக்குதல் பிரிவு நிறுத்தப்பட்டது.[4]
தாக்குதல்
[தொகு]சப்பானியர்கள் தம்பின் நகரத்தை அடைந்ததும், கிம்மாஸ் நகரத்தை அடைய அவர்கள் மரப்பாலத்தின் வழியாகக் கடக்க வேண்டும். 14 சனவரி 1942 அன்று 16:00 மணிக்கு, ஆஸ்திரேலிய இராணுவ அதிகாரி கேப்டன் டெஸ்மண்ட் டபி (Captain Desmond Duffy) என்பவரின் கீழ் இருந்த 2/30-ஆவது ஆஸ்திரேலியத் தரைப்படையின் (2/30th Battalion) 'பி' பிரிவினர் (B Company) பதுங்கியிருந்த நிலையில் தாக்குதலைத் தொடங்கினர்.[4]
நூற்றுக்கணக்கான சப்பானியர்கள் பாலத்தின் வழியாக கடந்து சென்றனர். அவர்களில் பலர் இருசக்கர மிதிவண்டிகளில் சென்றனர். அப்போது பாலம் வெடித்துச் சிதறியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் இயந்திர துப்பாக்கிகள், துமுக்கி துப்பாக்கிகள் (Rifles) மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தினர். பீரங்கித் தாக்குதல்களை நடத்த கேப்டன் டெஸ்மண்ட் டபி இராணுவத் தலைமையகத்தின் அனுமதிக்காகக் காத்து இருந்தார்.
ஆனால், பழுதடைந்த தொலைபேசி கம்பி வடங்களினால் தலைமையகத்துடன் தொடர்பு கிடைக்காமல் போனது. அதனால் 'பி' பிரிவினர், 20 நிமிடத் தாக்குதலுக்குப் பின்னர், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சப்பானியர்கள் தரப்பில் நூற்றுக் கணக்கானோர் இறந்துவிட்ட நிலையிலும், அவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.[3]
பின்விளைவுகள்
[தொகு]கிம்மாஸ் ஆற்றின் மரப்பாலத்திற்கு அருகே நடந்த பதுங்குத் தாக்குதலுக்குப் பின்னர் ஆஸ்திரேலியப் படைகள், கிம்மாஸ் நகருக்குள் பின்வாங்கினர். அங்கு ஆஸ்திரேலிய இராணுவத்தின் 2/4-ஆவது தகரி எதிர்ப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த ஆஸ்திரேலிய தகரி எதிர்ப்பு படையினர் (Anti-Tank Regiment); சப்பானியர்களின் எட்டு தகரிகளில் ஆறு தகரிகளை அழித்தார்கள். போர் மேலும் இரண்டு நாட்கள் நீடித்தது.[6]
ஆஸ்திரேலிய தரப்படையினர், கிம்மாஸ் வழியாக போர்ட் ரோஸ் இரப்பர் தோட்டத்திற்குள் பின்வாங்கியதுடன் சண்டை முடிந்தது. இந்தப் போரில் சப்பானியர்களின் மொத்த உயிரிழப்புகள் 800-க்கும் அதிகமாக இருந்தன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியர்களின் தரப்பில் 88-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணவில்லை[3][7]
காட்சியகம்
[தொகு]-
14.01.1942 கிம்மாஸ் காடுகளில் சப்பானிய துருப்புக்கள்
-
சப்பானிய தகரி
-
2/30-ஆவது தரைப்படை தளபதி பிரடெரிக் காலேகன்
-
சுங்கை கெலாமா நினைவுச்சின்னம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warren 2002, p. 156, quoting the IJA 5th brigade's war diary (belonging to the Mukaide detachment)
- ↑ Warren 2002, p. 156, quoting the IJA 5th brigade's war diary (belonging to the Mukaide detachment)
- ↑ 3.0 3.1 3.2 3.3 Coulthard-Clark 2001, p.197.
- ↑ 4.0 4.1 4.2 Long 1973, p. 140.
- ↑ Wigmore 1957, pp. 211–213.
- ↑ Long 1973, pp. 140–141.
- ↑ Warren 2002, p. 156
- Coulthard-Clark, Chris (2001). The Encyclopaedia of Australia's Battles. Sydney: Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86508-634-7. இணையக் கணினி நூலக மைய எண் 48793439.
- Dennis, Peter; et al. (2008). The Oxford Companion to Australian Military History (Second ed.). Melbourne: Oxford University Press Australia & New Zealand. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-551784-2.
- Long, Gavin (1973). The Six Years War: Australia in the 1939–45 War. Canberra: Australian War Memorial. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-642-99375-5.
- Warren, Alan (2002). Singapore 1942: Britain's Greatest Defeat. South Yarra, Victoria: Hardie Grant. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-81045-320-5.
- Wigmore, Lionel (1957). The Japanese Thrust. Australia in the War of 1939–1945. Series 1 – Army. Vol. 4. Canberra: Australian War Memorial. இணையக் கணினி நூலக மைய எண் 3134219.