உள்ளடக்கத்துக்குச் செல்

பயோட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயோட்டின்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-[(3aS,4S,6aR)-2-ஆக்சோ ஹெக்சா ஹைட்ரோ-1H-தைஈனோ[3,4-d]இமிடசோல்-4-யில்]பென்டனோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
வைட்டமின் பி7; வைட்டமின் எச்; துணைநொதி ஆர்; பயோபெய்டெர்ம்
இனங்காட்டிகள்
58-85-5 N
ChemSpider 149962
InChI
  • InChI=1/C10H16N2O3S/c13-8(14)4-2-1-3-7-9-6(5-16-7)11-10(15)12-9/h6-7,9H,1-5H2,(H,13,14)(H2,11,12,15)/t6-,7-,9-/m0/s1
    Key: YBJHBAHKTGYVGT-ZKWXMUAHBB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 171548
  • O=C1N[C@@H]2[C@@H](SC[C@@H]2N1)CCCCC(=O)O
பண்புகள்
C10H16N2O3S
வாய்ப்பாட்டு எடை 244.31 g·mol−1
தோற்றம் வெண் நிறப் படிக ஊசிகள்
உருகுநிலை 232-233 °செ
22 மி.கி/100 மி.லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து பி குழுமத்திலுள்ள உயிர்ச்சத்து ஆகும். அது உரேயடோ (டெட்ராஹைட்ரோ இமிடிசலோன்) வளையம் ஒரு டெட்ராஹைட்ரோ தியோபன் வளையத்துடன் சேர்ந்த அமைப்பினாலானது. டெட்ராஹைட்ரோத்தியோபன் வளையத்திலுள்ள ஒரு கார்பன் அணுவில் ஒரு வேலரிக் அமில பதிலி இணைக்கப்பட்டுள்ளது. கொழுப்பு அமிலங்கள் மற்றும் லியூசின் ஆகியவற்றின் வளர்சிதைமாற்றத்தில் பயோட்டின் ஒரு இணை நொதியாகப் பயன்படுகிறது, அது மட்டுமின்றி இது குளுக்கோசு புத்தாக்கத்தில் முக்கியப்பங்கும் வகிக்கிறது.

பொதுவான மேலோட்டப் பார்வை

[தொகு]

செல் வளர்ச்சிக்கும் கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கும் கொழுப்புகள் மற்றும் அமினோ அமிலங்களின் வளர்சிதைமாற்றத்திற்கும் பயோட்டின் அவசியமானதாகும். காற்றியல் சுவாசத்தின் போது உயிர்வேதி ஆற்றல் உருவாக்கப்படும் செயலான சிட்ரிக் அமில சுழற்சியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு வளர்சிதைமாற்ற வினைகளில் உதவுவது மட்டுமின்றி, கார்பன் டை ஆக்சைடு மாற்றத்துக்கும் பயோட்டின் உதவுகிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதிலும் பயோட்டின் உதவியாக உள்ளது[2]. கூந்தல் மற்றும் நகங்களை உறுதிப்படுத்துவதற்கும் பெரும்பாலும் பயோட்டின் சிறந்தது எனப் பரிந்துரைக்கப்படுகிறது. பயோட்டினை கூந்தலோ சருமமோ உறிஞ்சிக்கொள்வதில்லை என்றபோதிலும் இது கூந்தலுக்கும் சருமத்திற்குமான பல அழகு சாதனப் பொருட்களிலும் உடல்நலத் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக குடல் பாக்டீரியா உடலின் தினசரித் தேவைக்கும் அதிகமான அளவில் பயோட்டினை உற்பத்தி செய்வதால், பயோட்டின் குறைபாடு என்பது அரிதான நிகழ்வாகும். இதனால், அமெரிக்கா,[3] ஆஸ்திரேலியா[4] போன்ற நாடுகளிலுள்ள சட்டபூர்வமான முகமைகள் மருந்தை தினசரி உட்கொள்ளும் அளவைப் பரிந்துரைப்பதில்லை.

பயோட்டின் D(+) பல கார்பாக்சிலேசு நொதிகளில் கார்பன் டை ஆக்சைடு நகர்வுக்குக் காரணமாக விளங்கும் இணைகாரணியாக உள்ளது:

  • அசிட்டைல் துணைநொதி-ஏ (அசிட்டைல் கோ ஏ) கார்பாக்சிலேசு ஆல்ஃபா
  • அசிட்டைல் துணைநொதி-ஏ (அசிட்டைல் கோ ஏ) கார்பாக்சிலேசு பீட்டா
  • மெத்தில்குரோட்டோனைல் துணைநொதி-ஏ (மெத்தில்குரோட்டோனைல் கோ ஏ) கார்பாக்சிலேசு
  • பாஸ்பனோல்பைருவேட் கார்பாக்சிலேசு
  • புரொப்பினைல் துணைநொதி-ஏ (புரொப்பினைல் கோ ஏ) கார்பாக்சிலேசு
  • பைருவேட் கார்பாக்சிலேசு

மேலும், இதன் காரணமாக கொழுப்பு அமில தொகுப்பாக்கம், கிளையமைப்பு சங்கிலி அமினோ அமில சிதைமாற்றம் மற்றும் குளுக்கோசு புத்தாக்கம் ஆகியவற்றில் முக்கியமானதாகும். இந்த கார்பாக்சிலேசுகளில் பயோட்டின், சக பிணைப்பு மூலமாக குறிப்பிட்ட லைசின் கசடுகளின் எப்சிலோன் அமினோ தொகுதியில் இணைகிறது. இந்த பயோட்டினிலாக்கம் வினைக்கு "ஏடீபி" அவசியமாகும், மேலும் அதற்கு ஹோலோகார்பாக்சிலேசு இணைவாக்க நொதி வினையூக்கியாக செயல்படுகிறது[5]. பயோட்டின் இணைந்திருக்கும் பல்வேறு வேதியியல் அமைப்பிடங்களை அறிவது என்பது, புரதம் இடமறிதல், புரதம் இடைசெயல்கள் டி.என்.ஏ. படியெடுத்தல் மற்றும் பிரதியெடுத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான செயலாக்கங்களை ஆய்வு செய்யும் ஆய்வக நுட்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பயோட்டினிடேசு (ஹிஸ்டோன்களை பயோட்டினிலாக்கம்) செய்யக்கூடிய திறனுள்ளதாகவும் உள்ளது[6], ஆனால் சிறிதளவு பயோட்டின் இயற்கையாகவே குரோமேட்டினில் இணைந்துள்ளது.

பயோட்டின் நான்கு பகுதியுள்ள புரதமான அவிடின், ஸ்டிரெப்டோவிடின் மற்றும் நியூட்டிராவிடின் ஆகியவற்றுடன் மிகவும் இறுக்கமான பிணைப்பிலுள்ளது. இதில் அதன் பிரிகை மாறிலி K d இன் மதிப்பு 10−15 என்ற அளவில் உள்ளது, இது புரதம் - ஈந்தணைவி இடைசெயல்களில் ஒன்றாக உள்ளது, இதனால் இது[7] என்னும் அளவிலான வலிமையில் சக பிணைப்பிற்கு முயற்சிக்கிறது. இது பெரும்பாலும் பல உயிர்தொழில்நுட்ப பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு வரை, பயோட்டின் - ஸ்டிரெப்டோவிடின் பிணைப்பை உடைக்க மிகவும் கடினமான நிபந்தனைகள் தேவைப்பட்டன[8].

பயோட்டின் இருக்கும் மூலங்கள்

[தொகு]

பயோட்டின் பல உணவுப்பொருள்களிலிருந்து பெறப்படுகிறது. இருப்பினும் பயோட்டின் அதிகமாக இருக்கும் மூலங்கள் சில உள்ளன. ஒப்பீட்டில் அதிக பயோட்டின் கொண்டுள்ள உணவுப்பொருள்களில், முட்டை மஞ்சள் கரு, ஈரல் மற்றும் சில காய்கறிகள் ஆகியவை அடங்கும். மேற்கத்திய மக்களிடையே உணவிலிருந்து உட்கொள்ளப்பட வேண்டிய பயோட்டினின் அளவு 35 முதல் 70 μg/d (143–287 nmol/d) என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது[9].

கூடுதல் பொருள்களிலிருந்தும் பயோட்டின் கிடைக்கும். செயற்கைத் தொகுப்பாக்க செயலாக்கத்தில் ஃபியூமரிக் அமிலம் தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது இயற்கையான தயாரிப்பை ஒத்ததே ஆகும்.[10]

உயிரியல் ரீதியாக கிடைக்கும் தன்மை

[தொகு]

பயோட்டின் விட்டமின் H அல்லது விட்டமின் B7 எனவும் அழைக்கப்படுகிறது. பயோட்டினின் உயிரியல் ரீதியாக கிடைக்கும் தன்மை தொடர்பான ஆய்வுகள் எலிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இந்த ஆய்வுகளிலிருந்து பயோட்டின் உயிரியல் ரீதியாக கிடைக்கும் தன்மை உட்கொள்ளப்படும் உணவின் வகையைப் பொறுத்து குறைவானதாகவோ மாறக்கூடியதாகவோ இருக்கலாம் என்ற முடிவுக் கருத்து கிடைத்தது. பொதுவாக, புரதத்தில் அமைந்த வடிவம் அல்லது பயோசைட்டின் ஆகியவை உள்ள உணவுப்பொருள்களில் பயோட்டின் காணப்படுகிறது[11]. இதன் உட்கிரகித்தலுக்கு முன்பு புரதச் சிதைப்பிகளால் நிகழும் புரதச் சிதைவு செயலாக்கம் அவசியமாகிறது. இந்த செயலாக்கம் பயோசைட்டின் மற்றும் புரதத்திலமைந்த பயோட்டின் ஆகியவற்றிலிருந்து சார்பற்ற பயோட்டின் வெளியிடப்படுவதில் உதவுகிறது. சோளத்தில் உள்ள பயோட்டின் ஆயத்த நிலையில் கிடைக்கிறது; இருப்பினும் பெரும்பாலான தானியங்களின் உயிரியல் ரீதியாக பயோட்டின் கிடைக்கும் தன்மை சுமார் 20-40% எனுமளவில் உள்ளது[12].

ஒவ்வொரு உயிருக்கும் உள்ள, உணவிலிருந்து பயோட்டின் - புரதம் பிணைப்பை உடைப்பதற்கான திறன் வேறுபடுகிறது என்பதே, பயோட்டின் உயிரியல் ரீதியாக கிடைக்கும் தன்மையின் பெரும் வேறுபடும் தன்மைக்கான சாத்தியமுள்ள விளக்கமாகும். ஓர் உயிரியில் இந்தப் பிணைப்பை உடைக்கும் திறன் கொண்ட நொதி உள்ளதா என்பதே, ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளிலிருந்து பயோட்டின் உயிரியல் ரீதியாக கிடைக்கும் தன்மையினை தீர்மானிக்கிறது[12].

பயோட்டின் தேவைகளைப் பாதிக்கும் காரணிகள்

[தொகு]

விளிம்பு பயோட்டின் நிலைக்கான அலைவெண் அறியப்படாததாக உள்ளது. ஆனால், குடிப்பழக்கம் கொண்டவர்களில் குறைவான பயோட்டின் சுழற்சி உண்டாகுதல், பொதுவான மக்களிடையே காணப்படும் குறை பயோட்டின் சுழற்சி நிலைகளை விட அதிகமாக உள்ளது. அறுவை சிகிச்சை முறையில் பகுதியளவு இரைப்பை அகற்றம் செய்யப்பட்டவர்கள் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலமின்மை, தீக் காயங்கள் உள்ள நோயாளிகள், கால்-கை வலிப்பு உடையவர்கள், வயதானவர்கள் மற்றும் தடகள வீரர்கள் போன்றவர்களின் சிறுநீர் அல்லது ஊனீரில் ஒப்பீட்டில் குறை அளவு பயோட்டின் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது[12]. கர்ப்பம் மற்றும் தாய்ப்பாலூட்டும் காலம் ஆகியவை பயோட்டின் தேவை அதிகரிப்பதுடன் தொடர்புடையவையாகக் கருதப்படலாம். கர்ப்பமாக இருக்கும் போது, பயோட்டின் சிதைமாற்றத்தில் ஏற்படும் சாத்தியமுள்ள முடுக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதே போல் தாய்ப்பாலூட்டும் காலத்தில் இந்த பயோட்டின் தேவை அதிகரிப்பதற்கான காரணம் இன்னும் ஆய்வு செய்து கண்டறியப்பட வேண்டியதாக உள்ளது. மனிதக் கருவளர்ச்சிக் காலத்தில் குறைந்தபட்ச பயோட்டின் குறைபாடு இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் காண்பித்துள்ளன. 3-ஹைட்ராக்சியிசோவாலெரிக் அமிலம் சிறுநீரின் வழியே அதிகமாக வெளியேறுவது, பயோட்டின் மற்றும் பிஸ்நோர்பயோட்டின் ஆகியவை சிறுநீர் மூலமாக வெளியேறும் அளவு குறைவது மற்றும் ஊனீரில் பயோட்டினின் செறிவு குறைவு ஆகியவை இதற்கு ஆதாரமாக உள்ளன. மேலும் பெண்களில் புகைப்பழக்கத்தினால் பயோட்டின் சிதைமாற்றம் முடுக்குவிக்கப்படலாம்[13].

குறைபாடு

[தொகு]

ஒப்பீட்டில் பயோட்டின் குறைபாடு என்பது மிகவும் அரிதானதும் பாதிப்பு குறைவானதும் ஆகும். மேலும், இது கூடுதல் உட்கொள்ளல் மூலமாக எளிதில் சரிசெய்யப்படக்கூடியதும் ஆகும். பயோட்டினை மிகவும் வலிமையாகப் பிணைக்கும் புரதம் அவிடின் அதிகமாக உள்ள, வேகாத முட்டை வெள்ளைக் கருவை அதிகமாக உட்கொள்வது இது போன்ற குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் (இக்குறைபாடு உருவாக ஒரு நாளைக்கு 20 முட்டைகள் உட்கொள்ளப்பட வேண்டியிருக்கும்). சமைக்கும் போது அவிடின் செயலிழக்கச் செய்யப்படுகிறது, ஆனால் பயோட்டின் பாதிக்கப்படாமலே உள்ளது.

பயோட்டின் குறைபாட்டின் வெளிப்படையான அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

சாதரணமாகக் காணப்படாத முகத்திலான கொழுப்புப் பரவலுடன் கூடிய முகத் தடிப்பு. இதை வல்லுநர்கள் "பயோட்டின் குறைபாட்டு முகம்" என அழைக்கின்றனர். பயோட்டின் குறைபாட்டுக்கான மரபுப்பாரம்பரியம் கொண்ட நபர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு பாக்டீரியா, பூஞ்சைகளினால் உண்டாகும் நோய்த்தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது[14].

கர்ப்பிணிப் பெண்களுக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கர்ப்பிணிப் பெண்களில் சுமார் பாதி பேருக்கு பயோட்டின் அளவுக் குறைவைக் குறிக்கும் இயல்புக்கு மாறான 3-ஹைட்ராக்சி ஐசோவாலரிக் அமில அதிகரிப்பு காணப்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன[14]. கர்ப்பத்தின் போது சாத்தியக்கூறுள்ள இந்த பயோட்டின் குறைபாடு மேலண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாட்டுக்கு காரணமாகலாம் என்பதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எலிகளுக்கு, கருவளரும் காலத்திலான பயோட்டின் குறைபாட்டைத் தூண்டுவதற்காக உலர்ந்த வேகவைக்கப்படாத முட்டை உணவாகக் கொடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தையிலான ஊட்டச்சத்துக் குறைவு நிகழ்வு நூறு சதவீதமாக இருந்தது. குழந்தையோ கருவோ பயோட்டின் குறைபாட்டினால் எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால், தாய்க்கு உடற்செயலியல் அறிகுறிகளின் மூலம் வெளிப்படாத வகையிலான சிறிதளவு பயோட்டின் குறைபாடு இருந்தாலும் அது குழந்தைகளுக்கு மிகத் தீவிரமான விளைவுகளை உண்டாக்கலாம்.

பயோட்டின் சார்ந்துள்ள கார்பாக்சிலேசுகளின் குறைபாட்டு செயல்பாடுகளின் மூலமாக தெரியப்படும் வம்சாவழியாக வந்த வளர்சிதைமாற்றக் கோளாறு பல கார்பாக்சிலேசு குறைபாடு என அழைக்கப்படுகிறது. ஹோலோகார்பாக்சிலேசு இணைவாக்க நொதி அல்லது பயோட்டினிடேசு நொதியில் உள்ள குறைபாடுகளும் இதில் அடங்கும். ஹோலோகார்பாக்சிலேசு இணைவாக்க நொதி குறைபாடு உடலின் செல்கள் பயோட்டினை சிறப்பான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன. மேலும், இதனால் பல கார்பாக்சிலேசு வினைகளுடன் இடைசெயல் வினைபுரிகின்றன[15]. உயிர்வேதியியல் மற்றும் மருத்துவ விளக்கங்களில் பின்வருவன அடங்கும்: கீட்டோலாக்டிக் அமிலவேற்றம், கரிம அமிலசிறுநீர், இரத்த அம்மோனிய மிகை, தோல் தடிப்புகள், பாலூட்டல் சிக்கல்கள், தளர்ச்சி, வலிப்புத் தாக்கங்கள், வளர்ச்சி தாமதம், வழுக்கை மற்றும் மீளாத்துயில் ஆகியவை. இந்த நோய் உயிர்க்கொல்லி நோயாகும், இருப்பினும், குறிப்பிடப்பட்ட மருத்துவ நிலைகள் பயோட்டினின் மருந்தியல் அளவுகளின் உள்ளெடுப்பின் (நாளொன்றுக்கு 10–100  மி.கி) மூலம் சரியாக்கப்படலாம்[சான்று தேவை].

பயோட்டினிடேசு குறைபாடு உருவாவதற்கு போதிய அளவு பயோட்டின் இல்லாமல் போவது காரணமல்ல. ஆனால் மாறாக அதைச் செயலாக்கும் நொதிகளாலேயே ஏற்படுகிறது. பயோசைட்டின் மற்றும் பயோட்டினைல் புரதக்கூறுகளிலிருந்து (ஒவ்வொரு ஹோலோகார்பாக்சிலேசுகளின் புரதச்சிதைவு விளைபொருள்கள்) பயோட்டின் பிளவுறுவதற்கான வினையின் வினையூக்கியாக பயோடினிடேசு செயல்படுகிறது. இதனால் பயோட்டின் மறுசுழற்சி நடைபெறுகிறது. உணவிலுள்ள புரதத்திலமைந்த பயோட்டினை விடுவிப்பதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது[15]. பசியின்மை மற்றும் வளர்ச்சிக் குறைவு ஆகியவை பொதுவான அறிகுறிகளில் அடங்கும். சருமவழல் அறிகுறிகளில் சருமவழல், முடி கொட்டுதல் மற்றும் நரை (கூந்தலின் நிறமிகள் குறைவு அல்லது இழப்பு ஆகியவை) அடங்கும்[16]. எலும்புக்கூட்டில் காணப்படும் எலும்புகளின் நீளம் குறைதல் மற்றும் தடித்தல், கொழுப்பு நிறைந்த ஈரல் மற்றும் சிறுநீரக நோய்க்குறித்தொகுப்பு மற்றும் கல்லீரல் வறட்சி (ஹெப்பாட்டிக் ஸ்டீட்டோசிஸ்) ஆகியவையும் ஏற்படலாம்[12].

பயன்கள்

[தொகு]

கூந்தல் பிரச்சனைகள்

[தொகு]

பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குள்ள முடி கொட்டும் பிரச்சனையைச் சரி செய்ய இயற்கையான தயாரிப்பாக பயோட்டின் உள்ள பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. பயோட்டின் குறைபாட்டின் குறிகள் மற்றும் அறிகுறிகளில், மிகவும் பயோட்டின் குறைபாடு உள்ளவர்களில் கண் இமைகளிலுள்ள முடிகள் மற்றும் புருவங்கள் இழக்கப்படுமளவுக்கு தீவிரம் அதிகரிக்கும். இதில், முடி கொட்டுதல் என்பதும் அடங்கும். பயோட்டின் உள்ள சில சிகைகழுவிகள் (ஷாம்பூக்கள்) கிடைக்கின்றன, ஆனால் பயோட்டின் தோலினால் சிறப்பாக உறிஞ்சப்படுவதில்லை என்பதால் அவற்றினால் பலன் விளையுமா என்பது சந்தேகமே.

ஊறல் தோலழற்சி

[தொகு]

சிறுநீரில் பினைல்கீட்டோன் (பினைல்அலனின் அமினோ அமிலத்தை உடைக்க முடியாத நிலை; (பினைல்கீட்டோனுரியா)) என அழைக்கப்படும் அரிதான மரபார்ந்த வளர்சிதைமாற்ற நோய்க் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் மண்டை தவிர்த்த உடலின் பிற பகுதிகளில் அரிக்கும் தோலழற்சி மற்றும் ஊறல் தோலழற்சி போன்ற சரும பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகமுள்ளது. சிறுநீரில் பினைல்கீட்டோன் உடைய நபர்களுக்கு ஏற்படும் செதில்களுடையது போன்ற சரும மாற்றங்களுக்கும் பயோட்டினைப் பயன்படுத்தும் திறன் குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருக்கலாம். இவர்களில் உணவின் மூலமாகக் கிடைக்கும் பயோட்டினை அதிகரிப்பதால் ஊறல் தோலழற்சியில்[17] முன்னேற்றம் ஏற்படலாம்.

நீரிழிவு நோய்

[தொகு]

கூடுதல் பயோட்டின் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோய்க்கும் பயனுண்டு. இன்சுலின் சார்புள்ள மற்றும் இன்சுலின் சார்பற்ற இரு வகை நீரிழிவு நோயிலுமே, பயோட்டின் எடுத்துக்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவின் கட்டுப்பாடு மேம்படுகிறது, மேலும், உண்ணாத நேரத்திலான இரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதிலும் உதவுகிறது, சில ஆய்வுகளில் உண்ணாத நேரத்திலான இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கப்படுகிறது. பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நரம்பியக்கக் கோளாறைத் தடுப்பதிலும் பயோட்டின் முக்கியப் பங்கு வகிக்கலாம். இது மிக மோசமான குளுக்கோஸ் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதான உணர்விழப்பு மற்றும் கூச்ச உணர்வு ஆகியவற்றையும் குறைக்கலாம்[18].

நச்சுத்தன்மை

[தொகு]

விலங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம் பயோட்டினின் நச்சுத்தன்மைக்கான சாத்தியக்கூறுள்ள அளவுகளைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. விலங்குகளும் மனிதர்களும், அவற்றின் உணவு ரீதியான தேவையை விட பல அதிக மடங்குகளை உட்கொண்டாலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியும் என்பதற்கு இது ஆதாரமாக விளங்கக் கூடும். என்றாலும், விட்டமின்களை அதிக அளவு உட்கொள்வதால் குறிப்பாக குழந்தைகளில் ஊறல் தோலழற்சியை உண்டாக்கும் வளர்சிதைமாற்ற நோய்க் குறைபாடுகளுக்கான சிகிச்சையின் போது ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி எந்தத் தகவலும் பதிவு செய்யப்படவில்லை[19].

ஆய்வகப் பயன்கள்

[தொகு]

பயோட்டின் பெரும்பாலும் உயிரியல் ஆய்வகத்தில், உயிர்வேதியியல் மதிப்பீடுகளுக்கான ஒரு மூலக்கூறு அல்லது புரதத்துடன் வேதியியல் முறையில் இணைக்கப்பட்டு அல்லது குறியிடப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலுக்கு பயோட்டினிலாக்கம் என்று பெயர். அவிடின்கள் பெரும்பாலும் பயோட்டினுடனே பிணைப்பை ஏற்படுத்தும் என்பதால் ஒரு பொருளிலிருந்து பயோட்டின் இணைக்கப்பட்ட மூலக்கூறுகளை பிரித்தெடுக்க முடியும். அவற்றை சகபிணைப்பில் அவிடினுடன் இணைந்துள்ள திரட்சிகளுடன் கலந்து திரட்சிகளுடன் ஒட்டியிருக்காதவற்றை கழுவி அகற்றுவதன் மூலம் பிரித்தெடுக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, பயோட்டின் ஏதேனும் ஒரு மூலக்கூறுடன் (உ-ம், புரதம்) இணைக்கப்படலாம் . பின்னர் இந்த மாற்றியமைக்கப்பட்ட மூலக்கூறு புரதங்களின் கூட்டுக் கலவையுடன் கலக்கப்படுகிறது. அவிடின் அல்லது ஸ்டிரெப்டாவிடின் திரட்சிகள் இந்தக் கலவையுடன் சேர்க்கப்பட்டு பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறு திரட்சிகளுடன் இணைக்கப்படுகிறது. பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறுடன் இணைந்துள்ள பிற புரதங்கள் திரட்சிகளுடன் அப்படியே இருக்கும். பிற அனைத்து இணையாப் புரதங்களும் கழுவி அகற்றப்படலாம், மேலும் ஒரு ஆய்வாளர் (விஞ்ஞானி) பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறுடன் எந்த புரதம் கட்டுண்டிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க பல வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

அவிடின் அல்லது ஸ்டிரெப்டாவிடின் ஆகியவற்றை நொதியிணைக்கப்பட்ட எதிர்ப்பியக்கவர்பொருள் வட்டச்சோதனை (எலிஸ்பாட்;ELISPOT) மற்றும் நொதியிணைக்கப்பட்ட எதிர்ப்பியக்கவர்பொருள் சோதனை (எலைசா;ELISA) ஆகிய இரு உத்திகளிலும் பிடிக்க பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பொருள்கள் (எதிர்ப்பான்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Merck Index, 11th Edition, 1244.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  3. 3.0 3.1 Otten, JJ, Hellwig, JP and Meyers, LD., ed. (2006). Dietary Reference Intakes: The Essential Guide to Nutrient Requirements. The National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-309-10091-7.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  4. "National Health and Medical Research Council: Nutrient Reference Values for Australia and New Zealand" (PDF). Archived from the original (PDF) on 2017-01-21. பார்க்கப்பட்ட நாள் 2010-04-05.
  5. [7] ^ [6]
  6. Hymes, J; Fleischhauer, K; Wolf, B. (1995). "Biotinylation of histones by human serum biotinidase: assessment of biotinyl-transferase activity in sera from normal individuals and children with biotinidase deficiency.". Biochem Mol Med. 56 (1): 76–83. doi:10.1006/bmme.1995.1059. பப்மெட்:8593541. 
  7. Laitinen OH, Hytonen VP, Nordlund HR, Kulomaa MS. (2006). "Genetically engineered avidins and streptavidins.". Cell Mol Life Sci. 63 (24): 2992–3017. doi:10.1007/s00018-006-6288-z. பப்மெட்:17086379. https://archive.org/details/sim_cellular-and-molecular-life-sciences_2006-12_63_24/page/2992. 
  8. Holmberg A, Blomstergren A, Nord O et al. (2005). "The biotin-streptavidin interaction can be reversibly broken using water at elevated temperatures". Electrophoresis 26 (3): 501–10. doi:10.1002/elps.200410070. பப்மெட்:15690449. 
  9. Zempleni J, Mock DM. (1999). "Biotin biochemistry and human requirements.". J Nutr Biochem. 10 (3): 128-138. பப்மெட்:15539280. https://archive.org/details/sim_journal-of-nutritional-biochemistry_1999-03_10_3/page/128. 
  10. "Biotin". DSM Nutritional Products. 2009-08-31. Archived from the original on 2009-08-14. பார்க்கப்பட்ட நாள் 2010-02-19.
  11. Gropper S.S., Smith, J.L.,Groff, J.L. (2005). Advanced nutrition and human metabolism. Belmont.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  12. 12.0 12.1 12.2 12.3 Combs, Gerald F. Jr. (2008). The Vitamins: Fundamental Aspects in Nutrition and Health. San Diego: Elsevier, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780121834937.
  13. Bowman, BA and Russell, RM., ed. (2006). "Biotin". Present Knowledge in Nutrition, Ninth Edition, Vol 1. Washington, DC: Internation Life Sciences Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781578811984.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  14. 14.0 14.1 Higdon, Jane (2003). "Biotin". An evidence-based approach to vitamins and minerals. Thieme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781588901248.
  15. 15.0 15.1 Wolf B, Grier RE, Secor McVoy JR, Heard GS. (1985). "Biotinidase deficiency: a novel vitamin recycling defect". J Inherit Metab Dis. 8 (1): 53-8. doi:10.1007/BF01800660. பப்மெட்:3930841. 
  16. biology-online.org
  17. Murray, Michael; Pizzorno, Joseph (1997). "Encyclopedia of Natural Medicine" (Revised 2nd Edition) Three Rivers Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7615-1157-1
  18. http://recipes.howstuffworks.com/biotin2.htm
  19. Combs, Gerald F. Jr. (1998). The Vitamins: Fundamental Aspects in Nutrition and Health. Ithaca: Elsevier Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0121834921.pg. 360

புற இணைப்புகள்

[தொகு]


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயோட்டின்&oldid=3848888" இலிருந்து மீள்விக்கப்பட்டது