சந்தியாவந்தனம் (சைவ சமயம்)
Appearance
சந்தியாவந்தனம் என்பது சைவக் கிரியைகளின் பிரதான பிரிவாகிய ஆன்மார்த்தக் கிரியைகளில் ஒன்றாகும். இதை சைவ அனுட்டான விதி, நித்திய கரும விதி என்றும் அழைப்பர்.
அறிமுகம்
[தொகு]சைவ சமயத்தில் பிறந்த ஒருவர் சமய தீட்சை பெற்றுக்கொள்வதன் மூலம் சமயி ஆகின்றார். சமய தீட்சை பெற்றவர் செய்ய வேண்டிய வழிபாடுகளில் சந்தியாவந்தனம் முக்கியமானது. தீட்சை பெற்ற ஒருவர் தம்மால் இயன்ற அளவும் இடைவிடாது சந்தியாவந்தனம் செய்து வருதல் வேண்டும்.
சந்தியாவந்தனக் கிரியைகள்
[தொகு]ஸ்நானம்
[தொகு]- ஸ்நானம் என்பது நீராடுதலைக் குறிக்கும்.
- நீர்நிலையை அடைந்து நீராடி தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரம்துவட்டி, பட்டு அல்லது தோய்த்துலர்ந்த வஸ்திரம் அணிந்துகொண்டு சந்தியாவந்தனத்திற்கு நீர் கொண்டு வருதல். நோயாளர் வெந்தீரால் நீராடலாம். அதுவும் இயலாதவர்கள் விபூதியால் மானதஸ்நானம் செய்யலாம். அல்லது நெற்றியில் வீபூதியைத் தரித்துக்கொண்டு சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை மனதிலே சிந்தித்துக் கொண்டு இருக்க. வீட்டுக்கு விலக்காகியுள்ள பெண்கள் மூன்று நாளும் சிவமுலமந்திரத்தை மனதிலே நினைத்துக் கொண்டு நான்காம் நாள் ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்து கொள்க.
- ஸ்நானம் செய்வதால் உடல் தூய்மையாக மனோசக்தி வலுப்பெற தியானம் சித்திக்கும்.
திக்குநோக்குதல்
[தொகு]- சந்தியாவந்தனம் செய்யும் போது எத்திசை நோக்கி இருக்க வேண்டு மென்பது.
- முத்தியை விரும்புவோர் வடக்கு நோக்கியும், போகத்தை விரும்புவோர் காலையில் கிழக்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.
- முத்தியை அருளும் ஞானமூர்த்தியாகிய தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கி இருப்பதாலும் பாசங்களை அழிக்கும் அகோரமுகம் தெற்கு நோக்கி இருப்பதாலும் முத்தியை விரும்புவோர் எப்பொழுதும் வடக்கு நோக்கியும், போகத்தை அருளும் போகமூர்த்தி சூரிய மண்டலத்தில் இருப்பதால் போகத்தை விரும்புவோர் காலையில் கிழக்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.
பூமி சுத்தி
[தொகு]- பூமி சுத்தி என்பது தான் இருக்கும் இடத்தை சுத்தி செய்தல்.
- அஸ்திர மந்திரத்தை ஓம் அஸ்திராய பட் என்று சொல்லி பாதாகை முத்திரையினால் தானிருக்கும் இடத்தில் நீரைத் தெளித்து சுத்தி செய்து அமர்ந்து கொள்க.
- மனத்தை அடக்க புனிதமான இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் கிரியை.
கணபதி, குரு வந்தனம்
[தொகு]- விநாயகரையும் குருவையும் தியானித்தல்.
- ஓம் கணபதயே நம: என்று சொல்லி (முஷ்டி முத்திரையினால்) தலையிலே மும்முறை குட்டி, ஓம் குருப்பியோ நம: என்று சொல்லி நமஸ்கார முத்திரை யினால் கும்பிடுக.
- கணபதியை வணங்குவதால் சர்வ விக்கினங்களும் நீங்கும், குருவை வழிபடுவதனால் மலநீக்கம் ஏற்பட்டு சிவத்தன்மை ஏற்படும்.
சல சுத்தி
[தொகு]- சந்தியாவந்தனத்திற்குரிய நீரைச் சுத்தி செய்தல்.அதாவது சலத்தில் நிரீக்ஷணம், புரோக்ஷணம், தாடனம், அப்யுக்ஷணம், தாளத்திரயம், திக்பந்தனம், அவகுண்டனம், தேனு முத்திரை எனும் எட்டு சுத்திகளையும் செய்தல்.
ஆசமனம்
[தொகு]- ஆத்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் ஆகிய மூன்று தத்துவங்களையும் சுத்தி செய்வதற்காக மும்முறை நீரை உட்கொள்ளுதல், உதடுகளைத் துடைத்தல், தொடுமிடம் தொடுதல் ஆகிய மூன்று கிரியைகளையும் செய்தல் ஆசமனம் ஆகும்.
- ஆசமனம் செய்யும் முறை:
- ஓம் ஆத்மதத்துவாய சுவதா, ஓம் வித்தியாதத்துவாய சுவதா, ஓம் சிவதத்துவாய சுவதா என்று சொல்லி கோகர்ன முத்திரையினால் மும்முறை நீரை உட்கொள்ளுதல்.
- பின்பு ஓம் அஸ்திராய பட் என்று சொல்லி பதாகை முத்திரைதாங்கி பெருவிரல் அடியினால் உதடுகள் இரண்டையும் வலம் இடமாக இரண்டு தரமும், உள்ளங்கை கொண்டு கீழாக ஒருமுறையும் துடைத்தல். இது அதரசுத்தி எனப்படும்.
- பின்னர் ஓம் இருதயாய வெளஷட் என்று சொல்லி பெரு விரலோடு கூடிய அணிவிரலினால்(மேதிரவிரல்) முகம், வலமூக்கு, இடமூக்கு, வலக்கண், இடக்கண், வலக்காது, இடக்காது, வயிறு, மார்பு, வலப்புயம், இடப்புயம், சிரசு என்னும் பன்னிரண்டு இடங்களையும் தொடுதல். இது தொடுமிடம் தொடுதல் ஆகும்.
- மும்முறை நீரை உட்கொள்ளும் போது மூன்று தத்துவங்களும் சுத்தியாவதோடு இருக்கு, யசுர், சாமம் எனும் மூன்று வேதங்களும், உதடுகளைத் துடைப்பதனால் அதர்வண வேதமும், இதிகாசமும் உள்ளங்கை கொண்டு கீழாக துடைப்பதனால் விநாயகரும் பிரீதி அடைவர். அத்துடன் தொடுமிடம் தொடுவதனால் அத்தானங் களுக்குரிய அதிதேவதைகள் பிரீதியடைவர்.
- தானங்களும் அதிதேவதைகள்: பெருவிரல் - அமிர்தகலை, அணிவிரல் - ஈஸ்வரன், முகம் - கங்கை, கண் - சூரியசந்திரர், செவி - லோகபாலர், வயிறு - பிரம்மன், மார்பு - உருத்திரன், புயம் - அஸ்வினிதேவர்கள், சிரசு - விஷ்ணு.
விபூதி சுத்தி
[தொகு]- விபூதி சுத்தி என்பது பராசக்தி வடிவாயுள்ள விபூதியை சுத்தி செய்து அதில் சிவசக்தியைப் பிரகாசிக்கச் செய்தல்.
- மிருகீ முத்திரையினால் திருநீற்றை எடுத்து இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அத்திருநீற்றில் ஒரு துளியை பெருவிரல் மோதிரவிரல்களால் எடுத்து நிருதி மூலையில் (தென்மேற்கு) ஓம் அஸ்திராய ஹும்பட் என்று தெளிக்கவும். பின்பு திருநீற்றுக்கு ஓம் நமச்சிவாய என்று சொல்லி நிரீக்ஷணமும், ஓம் அஸ்திராய பட் என்று திக்பந்தனமும், ஓம் கவசாய வெளஷட் என்று அவகுண்டனமும் செய்து, விபூதியை வலது கையால் மூடிக்கொண்டு ஓம் ஈசானாய நம:, ஓம் தத்புருஷாநம:, ஓம் அகோராய நம:, ஓம் வாமதேவாய நம:, ஓம் சத்தியோஜாதாய நம:, ஓம் இருதயாய நம:, ஓம் சிரசே நம:, ஓம் சிகாய நம:, ஓம் கவசாய நம:, ஓம் நேத்திரேப்பியோ நம:, ஓம் அஸ்திராய நம:, எனும் பதினொரு சம்மிதா மந்திரங்களாலும் அபிமந்திரிக்க.
- நிருதி திக்கில் விபூதியை தெளிப்பதனால் இராக்கதர்கள் கொடியவர்களின் தீங்குகள் அணுகாதிருத்தலின் பொருட்டு செய்யப்படுவது. நிரீக்ஷணம், திக்பந்தனம், அவகுண்டனம் என்பன சலசுத்தியில் கூறியவாறு அறிக. பதினொரு மந்திரங்களினால் அபிமந்திரிப்பதனால் விபூதி இறைவனுடைய இயல்பையும் குணத்தையும் பெறும்.
விபூதி ஸ்நானம்
[தொகு]- விபூதி ஸ்நானம் என்பது திருநீற்றினால் ஸ்நானம் செய்தல். அல்லது திருநீற்றைத் தரித்தல் என்பதைக் குறிக்கும்.
- ஓம் அஸ்திராய நம: என்று சொல்லி வலக்கைப் பெருவிரல் அணிவிரல்களினால் சிறதளவு விபூதியை எடுத்து சிரசு முதல் பாதம் வரை(உத்தூளனமாக) பூசுதல். நிரோதான முத்திரையினால் சலத்தை எடுத்து பின்பு ஓம் இருதயாய வெளஷட் என்று விபூதியில் விட்டு ஓம் கவசாய வெளஷட் என்று இருகைகளாலும் குழைத்துக் கொண்டு நடுவிரல் மூன்றினாலும் ஓம் ஈசானாய நம: என்று சிரசிலும், ஓம் தத்புருஷாய நம: என்று நெற்றியிலும், ஓம் அகோராய நம: என்று மார்பிலும், ஓம் வாமதேவாய நம: என்று நாபியிலும்(கொப்பூழ்), ஓம் சத்தியோஜாதாய நம: என்று வலது இடது முழந்தாள், வலது புயம், இடது புயம், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது விலா, இடது விலா, முதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் தரித்துக்கொள்க. (இடையிடையே மேலதிக வீபூதி தேவைக்காக இரு கைகளையும் ஓம் அஸ்திராய பட் என்று சேர்த்து தடவிக் கொள்க.)
பின்னர் எஞ்சிய விபூதியோடு கைநிறையச் சலம் விட்டு கும்ப முத்திரையாகப் பிடித்து ஓம் ஈசானாய நம:, ஓம் தத்புருஷாய நம:, ஓம் அகோராய நம:, ஓம் வாமதேவாய நம:, ஓம் சத்தியோஜாதாய நம: என்னும் பஞ்சபிரம்ம மந்திரங்களைச் சொல்லி தலையிலே தெளித்துவிட்டு கைகழுவுக.
- விபூதியை உத்தூளனமாகப் பூசுவதனால் மூலமலமாகிய ஆணவ மலத்தின் சக்தி கெடும். திரிபுண்டரமாக தரித்தலினால் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களையும் அழிக்கும் பாவனையாகும். அத்தோடு தரிக்கப்படும் தானங்கள் சுத்தியாக அத்தானங்களுக்குரிய அதிதேவதைகள் மகிழ்வுற்று அவனது மலநீக்கத்திற்கு அருள் புரிவர். எஞ்சிய விபூதியால் அபிஷேகம் செய்வதால் மலமாசு பற்றற நீங்கிய பாவனை ஆகும்.
ஆசமனம்
[தொகு]- முன்போல் ஆசமனம் செய்க. இது முன் செய்த தத்துவசுத்தி மீண்டும் மலப்பற்று அடையாது நன்கு நிலைபெறும்படி செய்யப்படும்.
பிராணாயாமம்
[தொகு]- பிராணாயாமம் என்பது சுவாசத்தை(பிராணவாயுவை) அடக்குதல், சுவாசப் பயிற்சி செய்தல் எனப்படும்.
- வலதுகை சுட்டுவிரலையும் நடுவிரலையும் உள்ளே மடக்கி மேதிரவிரலினால் இடது முக்குத்துவாரத்தை பிடித்துக் கொண்டு வலது மூக்குத் துவாரம் ஊடாக உள்ளே உள்ள அசுத்தவாயுவை வெளியே விடுதலாகிய இரேசகமும், வலது மூக்கை பெருவிரலால் பிடித்துக் கொண்டு இடது மூக்குத் தூவாரம் ஊடாக வெளியே உள்ள வாயுவை உள்ளே நிரப்புதலாகிய பூரகமும், பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தலாகிய கும்பகமும் செய்தல் பிராணாயாமம் ஆகும். பிராணாயாமம் செய்யும் போது ஈசானம் முதலிய பதினொரு மந்திரங்களையும் உச்சரித்துக் கொள்க. இவ்வாறு மூன்று முறை செய்தல் வேண்டும். பின்னர் ஓம் நமச்சிவாய என்று சொல்லி கோகர்ண முத்திரையினால் வலது காதைப் பொத்திக்கொள்க.
- இதனால் உள்ளே உள்ள வாயுக்கள் சுத்தியாகி தமது தொழிலை சரிவர செய்யும் அத்துடன் மன அடக்கம் ஏற்பட்டு சிந்தனை ஒருநிலைப்படும். காதைப் பொத்துவதால் பிராணாயாமம் செய்யும் போது அசுத்தமாகிய கை சுத்தியாகும்.
சிவதீர்த்தகரணம்
[தொகு]- சிவதீர்த்தகரணம் என்பது சலத்தை சிவதீர்த்தமாக்குதல்.
- ஓம் இருதயாய வெளஷட் என்று சொல்லி புருவநடுவில் உள்ள அமிர்தத்தை அங்குசமுத்திரையினால் எடுத்துச் சலத்தில் வைத்து, ஓம் நமச்சிவாய என்று அபிமந்திரித்து, ஓம் அஸ்திராய பட் என்று திக்பந்தனமும், ஓம் கவசாய வெளஷட் என்று அவகுண்டனமும் செய்க.
- பின்பு செய்யும் கிரியைகளுக்கு பயன்படுமாறு சலத்தை அமிர்தமயமாக்கி அதிலே சிவவடிவைப் பதித்து சிவதீர்த்தமாக்குதல்.
மந்திராபிஷேகம்
[தொகு]- மந்திராபிஷேகம் என்பது மந்திரத்தினாலான ஸ்நானம்(அபிஷேகம்) ஆகும்.
- வலக்கையினால் சலத்தை அள்ளி கும்பமுத்திரையாகப் பிடித்துக் கொண்டு ஈசானம் முதலிய பதினொரு மந்திரங்களால் அபிமந்திரித்து ஓம் நமச்சிவாய என்று சிரசிலே தெளிக்கவும்.
- இது தான் பெற்ற அருட்பேற்று நிலை நிலைபெறுமாறு சிவதீர்த்த வடிவினதாகிய அமுதகும்பத்தினால் அபிஷேகம் செய்யும் பாவனை.
மார்ச்சனம்
[தொகு]- மார்ச்சனம் என்பது ஸ்தூல சரீரத்தைச் சுத்தி செய்தல்
- சலத்தை வலக்கையால் மூடி ஈசானம் முதலிய பதினொரு மந்திரங்களால் அபிமந்திரித்து சலத்தை வலக்கையால் எடுத்து இடது கையில் விட்டு வைத்துக் கொண்டு பதினொரு மந்திரங்களையும் வெளஷட் அந்தமாக(உ+ம்:ஓம் ஈசானாய வெளஷட்) சொல்லி இடக்கையிலிருந்து கீழே ஒழுகுகின்ற சலத்தை வலக்கையினால் சிரசில் தெளித்தல்.
- ஸ்தூல சரீர சம்பந்தமாய் அன்றன்று செய்துவந்த தீவினைகள் அகல்வதற்காக செய்வது.
அகமர்சனம்
[தொகு]- அகமர்சனம் என்பது சூக்ஷ்ம சரீரத்தை சுத்தி செய்தல் ஆகும்.
- மார்ச்சனம் செய்த பின்பு இடதுகையில் எஞ்சியுள்ள சலத்தை வலதுகையில் விட்டு மூக்குக்கு சமீபத்தில் பிடித்து அது வெண்மை நிறமான தர்மவடிவமாகி இடது மூக்கு வழியே உள்ளே புகுந்து அகத்திலுள்ள பாவத்தை அழித்ததாகவும் அந்தப் பாவம் மைக்குழம்பு போல் வலமூக்கினாலே புறத்தே கையில் வந்ததாகவும் பாவித்து வலக்காற் பெருவிரலில் சுவாலிக்கும் அக்கினியிலே அஸ்திராய பட் என்று புருவநெரிப்புடன் விட்டு அந்தப் பாவம் அதில் விழுந்து அழிந்ததாக பாவிக்க.
- இது சூக்ஷம சரீரசம்பந்தமாய் வந்த தீவினைகளை ஒழித்த பாவனை ஆகும்.
ஆசமனம்
[தொகு]- முன்போல் செய்க.
கவசவேஷ்டனம்
[தொகு]- கவசவேஷ்டனம் என்பது தன்னைச் சுற்றிக் காவல் செய்தல் ஆகும்.
- ஓம் கவசாய வெளஷட் என்று சொல்லி வலக்கையில் சலத்தைக்கொண்டு தன்னைச் சூழ நாற்புறமும் விழும்படி தனக்கு வலமாகச் சுற்றி நிலத்தில் விடுக.
- இதனால் தன்னைச் சூழ மதிலுண்டாக்கி சூக்ஷ்ம தேகச் சிவரூபத்தை காத்தல்.
சதாசிவத்தியானம்
[தொகு]- சதாசிவத்தியானம் என்பது சூரிய மண்டலத்தில் இருக்கும் சதாசிவமூர்த்தியை தியானம் செய்தல் ஆகும்.
- சூரிய மண்டலத்தின் நடுவிலே பத்மாசனத்தில் ஈசானம், தற்புரும், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம், எனும் ஐந்து திருமுகங்களும் முறையே வெண்மைநிறம், பொன்னிறம், கருமை நிறம், செந்நிறம் மிக்க வெண்மைநிறமுள்ளதாயும் முகங்களில் முக்கண்கள் உள்ளதாயும் பத்துதிருக்கரங்கள் உள்ளதாயும் பரசு, கட்கம், சூலம், வச்சிரம், அக்கினி என்பன வலது கரங்களிலும் அபயம், மணி, நாகம், பாசம், அங்குசம் என்பன இடதுகரங்களிலும் உள்ளதாக சதாசிவப்பெருமானை நினைத்து மனக்கண்முன் கொண்டுவந்து தியானிக்க.
- இதனால் சூரியமண்டலத்தில் இருக்கும் சதாசிவ மூர்த்தியின் அருள்பார்வையும் மனத்தை அலையவிடாது தடுத்தலும் ஏற்படும்.
சிவகாயத்தீரி செபம்
[தொகு]- சிவகாயத்தீரி செபம் என்பது சிவகாயத்திரி மந்திரத்தை செபித்தல்.
- சிவகாயத்திரியை தியானித்து 'ஓம் தந்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்நோ சிவப் பிரசோதயாத்.' என்று மூன்று முறை சொல்லி மும்முறை அர்க்கியம் கொடுத்து அதன்பின் இக்காயத்திரி மந்திரத்தை பத்துத்தரமாதல் செபஞ் செய்யவும்.
- இதனால் சிவவிளக்கமும் அறிவுப் பெருக்கமும் மனச்சாந்தியும் உண்டாகும்.
தர்ப்பணம்
[தொகு]- தர்ப்பணம் என்பது அமிர்தமயமான நீரை சிவபிரானுக்கும் ஏனைய கடவுளர்களுக்கும் கொடுத்து மகிழ்வித்தல்.
- இருகைகளும் நிறைந்த சலத்தினாலே ஓம் நமச்சிவாய என்று மூன்று தரம் தர்ப்பணம் செய்து, ஓம் நமச்சிவாய என்று பத்து தரம் செபித்து, ஓம் நமச்சிவாய என்று மீண்டும் ஒருதரம் தர்ப்பணம் செய்க. பின்பு பதினொரு மந்திரங்களையும் "சுவாகா" அந்தமாக (உ+ம்: ஓம் ஈசானாய சுவாகா) சொல்லி ஒவ்வொரு தரம் தர்ப்பணம் செய்து, ஓம் உமாதேவ்யை சுவாகா, ஓம் கணபதயே சுவாகா, ஓம் சரவணபவாய சுவாகா என்று ஒவ்வொரு தரம் தர்ப்பணம் செய்க.
- தர்ப்பணம் செய்வதனால் அந்தந்த தெய்வங்கள் மகிழ்வுற்று அநுக்கிரகம் செய்வார்கள். இது சிவ புண்ணியங்களில் ஒன்றாகும்.
ஆசமனம்
[தொகு]- முன்போல் செய்க.
தீரத்தோபசங்காரம்
[தொகு]- தீர்த்தோபசங்காரம் என்பது முன்பு புருவ நடுவிலிருந்து எடுத்து சலத்தில் வைத்த அமிர்தத்தை சங்கார முத்திரையினால் எடுத்து புருவநடுவிலே ஒடுக்குதல். (சேர்த்தல்)
சூரியோபஸ்தானம்
[தொகு]- சூரியோபஸ்தானம் என்பது ஆன்மசக்தியை சிவசக்தியாக்கி சூரிய மண்டலத்தில் இருக்கும் சிவமூர்த்தியிடம் ஒப்படைத்தல்.
- கைநிறைய சலம்விட்டுப் பிடித்துக்கொண்டு ஈசானாய நம: முதலிய பதினொரு மந்திரங்களையும் உச்சரித்து ஓம் நமச்சிவாய என்று சொல்லி சூரிய மண்டலத்திலிருக்கும் சிவபெருமானிடத்தே கொடுத்து ஓம் சிவசூரியாய சுவாகா என்று ஒருதரம் தர்ப்பணம் செய்க.
- நான் செய்தேன் என்ற செருக்கின்றி எல்லாம் சிவன் செயல் என்று கருதி அவரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்தல் இக்கிரியையின் பாவனையாகும்.
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை நூல்கள்
[தொகு]- காமிகாகமம்.
- க்ரியாக்ரம த்யோதி, அகோரசிவாசாரியார், தென்னிந்திய அர்ச்சகர் அசோசியேஷன், 1967
- சந்தியாவந்தனரகசியம், ஸ்ரீமத் சி. தாமோதரம்பிள்ளை, 1934.
- சிவஞானசித்தியார், திருவிளங்கம் உரை.