உள்ளடக்கத்துக்குச் செல்

காவடியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணத்தில் நேர்த்திக்காகக் காவடியெடுக்கும் பக்தர்கள்

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது.[1][2][a 1]

சொற்பிறப்பு[தொகு]

முள்ளுக்காவடி, யேர்மனி ஆலயத்தில்

கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப்பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை.[3] "காவடியாட்டம்" என்பது "காவடி", "ஆட்டம்" என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. காவடி என்பது ஆட்டத்துக்கான கருவி என்பதால், இவ்வாட்டத்தின் பெயர் அதற்கான கருவியின் அடியாக எழுந்தது எனலாம். "காவடி" என்னும் சொல் "காவுதடி" என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது[1]. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர்.

காவடியின் தோற்றம் குறித்த நம்பிக்கைகள்[தொகு]

காவடியின் தோற்றம் சிந்து சமவெளி காலத்தில் உருவாகியிருக்கலாம் என சான்று கிடைக்கிறது. சிந்துவில் கிடைத்த சித்திர வடிவ எழுத்துகளில் காவடி எடுப்பதை போன்ற தோற்றமும் உள்ளது .அதற்கு கொடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் மற்ற வார்த்தைகளுக்கும் பொருந்தி வருவதால் சிந்து எழுத்து தமிழே என்று "சிந்து வெளியில் முந்து தமிழ் " என்ற நூலில் நா.ப.பூரணச்சந்திர ஜீவா பல்வேறு சான்றுகளுடன் விளக்குகிறார். மேலும் சமயத் தொடர்புள்ள விடயங்களின் தோற்றங்கள் தொடர்பில் கதைகள் இருப்பது போலவே காவடியின் தோற்றம் குறித்தும் கதை ஒன்று உள்ளது[4]. இதன்படி, அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு அமைய சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான இடும்பன், சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளைக் காவுதடியில் சுமந்து கொண்டு பொதிகைமலை நோக்கிச் சென்றானாம். பழநியில் சுமையை இறக்கி வைத்துவிட்டுப் இளைப்பாறிப் பின் மீண்டு தூக்க முயற்சித்தபோது தூக்க முடியவில்லையாம். அப்போது சிறுவனாக உருக்கொண்டு வந்த முருகப் பெருமான் மலைமேல் இருந்து இடும்பனைக் கேலி செய்யவே சிறுவனை நோக்கிப் பாய்ந்த இடும்பன் தவறி மலையில் இருந்து உருண்டு இறந்தான். பின்னர் அவனை உயிர்ப்பித்த முருகன், இடும்பனின் கோரிக்கைக்கு இணங்கி, இடும்பன் அங்கே காவல் தெய்வமாக இருக்கவும், கோயிலுக்கு காவுதடி (காவடி) எடுத்துவரும் பக்தர்களின் குறைகள் தீர்ந்துவிடவும் வரம் அளித்தாராம். அதிலிருந்து, முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் ஒரு அம்சமாக ஆகியது எனவும், அக்காவடியை கோவிலில் இடும்பன் சந்நிதியில் வைத்த பின்னரே எடுப்பது என்னும் வழக்கம் உருவானது என்றும் கூறப்படுகின்றது. இக் கதையில் இருந்து காவடிக்கும், காவுதடிக்கும் உள்ள தொடர்பு புலப்படுவதையும் கவனிக்கலாம்.

காவடி[தொகு]

தற்காலக் காவடியின் அமைப்பு

காவடியாட்டத்திற்குப் பயன்படும் கருவியே காவடி எனப்படுகிறது. இது தொடக்கத்தில் சுமை சுமப்பதற்கான நீளமான ஒரு தடியையே (கோல்) குறித்தது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது. பூக்கள், வெட்டிவேர், பட்டுத்துணி, மயிலிறகு போன்றவற்றினால் காவடிகள் அழகூட்டப்படுகின்றன. தற்காலத்துக் காவடிகள் பல கூடிய அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் இதன் அடிப்படையான பகுதி ஒரு தடியே. இத் தடியின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் மரத்தாலும், மெல்லிய பிரம்புகளினாலும் ஆன ஒரு வளைவான அமைப்பு இருக்கும். இதன் மேல் அழகான குஞ்சங்களுடன் கூடிய பட்டுத்துணி போர்த்தப்பட்டிருக்கும். நான்கு மூலைகளிலும் ஏராளமான மயில் இறகுகளைச் சேர்த்துக் கட்டி அழகூட்டியிருப்பர். வளைவுப் பகுதியின் உச்சியிலும் உயரமான கூம்பு வடிவான அலங்காரக் கூறு அமைந்திருக்கும். எனினும், காவடிகள் வேறுபட்ட அலங்காரங்களுடனும் அமைந்திருப்பது உண்டு. பொதுவான காவடி ஏறத்தாழ 3 அடிகள் அகலம் உள்ளதாக இருக்கும். தோளில் வைக்கும்போது இரண்டு பக்கங்களிலும் சற்றுக் கூடுதலாக இருக்கும்படி இது அமையும். இது 5 கிலோ தொடக்கம் 7 கிலோ வரை நிறை கொண்டதாக இருக்கும். ஆனால், சிறுவர்களும் காவடி எடுப்பது உண்டு ஆகையால் அவர்களுக்காக நிறை குறைவான சிறிய காவடிகளும் உருவாக்கப்படுகின்றன.

காவடி எடுத்தல்[தொகு]

காவடி எடுப்பதற்காக முதுகில் செடில் குத்தியபடி ஒரு பக்தர்

வழிபாட்டுத் தொடர்பான காவடி எடுத்தலில், குறிப்பாக நேர்த்தி வைத்துக் காவடி எடுத்தலில், தங்களை வருத்திக்கொள்ளும் நடைமுறைகளைக் காண முடியும். சிலர் ஏறத்தாழ ஆறு அங்குல நீளம் கொண்ட வெள்ளி வேல்களை ஒரு கன்னத்திலிருந்து மறு கன்னத்தினூடாக வரும்படி குத்திக்கொண்டும், இன்னொரு சிறிய வேலை நாக்கினூடாகக் குத்தியபடியும் காவடி எடுப்பர் இது "அலகு குத்துதல்" எனப்படும். தவிரத் தூண்டில் போல் வளைந்த வெள்ளி ஊசிகள் பலவற்றை முதுகில் வரிசையாகக் குத்தி அந்த ஊசிகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளை இன்னொருவர் பிடித்து இழுத்தபடி இருக்கக் காவடி ஆடுவர். இது "செடில் குத்துதல்" எனப்படுகின்றது.

இது தவிர உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர். காவடி எடுப்பவர் முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கினால் அது "பறவைக் காவடி" எனப்படும். இருக்கும் நிலையில் தொங்குவது "தூக்குக் காவடி" ஆகும். பறவைக் காவடியிலும், தூக்குக் காவடியிலும் காவடி எடுப்பவர் சுமையைத் தோளில் சுமப்பதில்லை. ஆனால், அவரே காவுதடியில் சுமை போல் சுமக்கப்படுவதைக் காணலாம்.

காவடி ஆட்டத்துக்கான இசை[தொகு]

காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது.

தொழில்முறைக் காவடியாட்டம்[தொகு]

தொழில்முறைக் காவடியாட்டம், தற்போது தனி நிகழ்ச்சியாக அன்றிக் கரகாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாகவே இடம்பெற்று வருகிறது. இதில் ஆட்டக்காரர் மேற்சட்டை அணியாமல் முருக பக்தனைப்போல் வேடம் புனைந்து ஆடுவார். தொழில்முறைக் காவடியாட்டத்தில், ஆடுபவர், சுழன்றாடுதல், வளைந்தாடுதல், குனிந்தாடுதல், வில்லாடுதல், கைவிரித்து ஆடுதல், வரவேற்க ஆடுதல் என்னும் ஆறு முறைகளைப் பயன்படுத்தி ஆடுவது வழக்கம்[5]. தோளின்மீது காவடியை வைத்து ஆடும் மரபு வழிக்குப் புறம்பாக தொழில்முறைக் காவடியாட்டக் கலைஞர்கள் தமது உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் காவடியை வைத்து ஆடுகிறார்கள்[2]. இதைவிட காவடியுடன் ஏணிமீது ஏறுதல் போன்ற சாகசச் செயல்களையும் செய்து காட்டுகிறார்கள்.

கலைத்திற விளையாட்டு[தொகு]

கைகளைப் பயன்படுத்தாமல் காவடியை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கும், தோளிலிருந்து பின்கழுத்துப் பிடரிக்கும், பிடரியிலிருந்து தலை-உச்சிக்கும் ஏற்றி ஆடவைத்துக் காட்டிப் பின்னர் முறையை இறங்கி ஆடச் செய்து காவடிக் கலைஞர் தம் திறமையை வெளிப்படுத்துவர். இந்த வகையில் காவடி ஒரு விளையாட்டு.

காவடி எடுத்தல்

காவடி வகைகள்[தொகு]

பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி

மீன் போல் பிறவிக்கடலில் தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு, இதில் இருந்து மீட்டு உன்னோடு சேர்த்துக்கொள்,” என்பது மச்சக்காவடி தத்துவம்
சர்ப்பக் காவடி

மிரளும் பாம்பு புற்றுக்குள் ஒளிவது போல, பிறவித்துன்பம் என்னும் புற்றில் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு உன்னோடு சேர்த்துக்கொள்,” என்பது, சர்ப்பக்காவடி தத்துவம்.
பறவைக் காவடி
தூக்குக் காவடி

கற்பூரக் காவடி

வேல் காவடி

விடியற்காலையில் கூவும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து எனக்கு எப்போது விடியல் வரும்?” என்பது சேவல்காவடி தத்துவம்.

வெள்ளி காவடி

தாளக்காவடி

பாட்டுக்காவடி

ஆபரணக் காவடி

தாழம்பூ காவடி

சந்தனக்காவடி

மிட்டாய் காவடி

தயிர் காவடி

தேன் காவடி

அக்னி காவடி

அபிஷேக காவடி

தேர்க்காவடி

சேவல்காவடி

சாம்பிராணிக் காவடி

மயிற்தோகை அலங்கார காவடி

ரத காவடி

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 157
 2. 2.0 2.1 குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26
 3. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
  நோனா உடம்பின் அகத்து - திருக்குறள்
 4. தினமலர்.காம்
 5. பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 159

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

 • பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா. (பதிப்பாசிரியர்கள்), நாட்டார் நிகழ்த்துக் கலைகள்: களஞ்சியம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், சென்னை, 2001.
 • குணசேகரன். கரு. அழ., தமிழ் மண்ணின் மரபுக்கலைகள், மித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேசன்ஸ், சென்னை. 2004.
 • நா.ப.பூரணச்சந்திர ஜீவா "சிந்து வெளியில் மூந்து தமிழ்" சிந்து வெளி ஆராய்ச்சி முடிபுகள். தய்யல் பதிப்பகம் சென்னை 2004

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kavadi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவடியாட்டம்&oldid=3783224" இலிருந்து மீள்விக்கப்பட்டது