இந்து சமயத்தில் தியானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று.[1][2][3]

தியானத்தின் பலன்கள்[தொகு]

 • மன உறுதி மற்றும் மனத்தூய்மை உண்டாகும்
 • மனதில் நற்பண்புகள் ஏற்படும்
 • மன நிறைவு உண்டாகும்
 • உடல் மற்றும் மன நோய்கள் நீங்கும்

வேதகால தியானங்கள்[தொகு]

தியானம் எனில் கடவுளை மனதில் வழிபடுவது. கடவுள் எங்கும் நிறைந்தவர். சாதாரணமானதில் உயர்ந்ததை (இறைவனை) ஏற்றி வழிபடுவதே தியானம். இத்தகைய இறை தியானங்களை சாந்தோக்கிய உபநிடதத்திலும், பிரகதாரண்யக உபநிடத்திலும் மற்றும் பல உபநிடதங்களில் வித்யை என்றும் உபாசனை என்றும் பல்வகையாக விளக்கப்பட்டுள்ளது.

தியானத்தின் அங்கங்கள்[தொகு]

தியானத்தில் மூன்று அங்கங்கள் உள்ளன. தியானிப்பவன், தியானிக்கப்படுகின்ற தெய்வம் மற்றும் ஆலம்பனம் அல்லது தெய்வத்தை மனதில் ஏற்றி அல்லது தன்னையே தெய்வமாகத் தியானிப்பதற்கான ஆதாரம். வேதகாலத்தில் சூரியன், அக்னி, வாயு, நீர், ஆகாயம், பூமி, இயற்கை எனும் பிரகிருதி, இரண்யகர்பன், போன்ற இயற்கைப் பொருட்களை தியானத்தின் ஆலம்பனமாக கொண்டிருந்தனர்.

வேதகால தியான வகைகள்[தொகு]

வேதகால தியானம் உலகியல் நன்மைக்காகவும், ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் செய்யப்பட்டது.

1 சகாம, நிஷ்காம தியானங்கள்[தொகு]

 • பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் தியானம் சகாம தியானம்.
 • இறையனுபூதிக்காக மட்டும் செய்யப்படும் தியானம் நிஷ்காம தியானம்.

2 கர்மாங்க, சுதந்திர தியானங்கள்[தொகு]

 • புறவழிபாடுகளின் அங்கமாகச் செய்யப்படுகின்ற தியானம் கர்மாங்க தியானம். இந்த தியானம், எந்த யாகம் அல்லது கர்மத்தின் அங்கமாக செய்யப்படுகிறதோ அந்தக் கர்மத்தின் (செயலின்) பலனை அதிகரிக்கச் செய்யும். எடுத்துக்காட்டாக, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மட்டும் பாராயணம் செய்வதுடன் மஹாவிஷ்ணு தியானத்தையும் சேர்த்து செய்தால் அதன் பலன் பல மடங்காகிறது. இங்கே மஹாவிஷ்ணு தியானம் ’கர்மாங்க தியானம்’ ஆகிறது.
 • சுதந்திர தியானம் என்பது எந்த கர்மத்தின் அங்கமாகவும் அல்லாமல் தனியாக செய்யப்படுவது. எந்த தெய்வத்தைத் தியானிக்கிறமோ, எந்த ஆலம்பனத்தைப் பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப சுதந்திர தியானத்தின் பலனும் மாறுபடுகிறது.

3 சம்பத், பிரதீக உபாசனைகள்[தொகு]

 • உபாசனையில் பயன்படுத்தப்படுகின்ற ஆலம்பனத்தின் தன்மைக்கும் பாவனைக்கும் ஏற்ப உபாசனை, 'சம்பத் உபாசனை’ என்றும் 'பிரதீக உபாசனை’ என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
 • புஜாரி மூலம் இறைவனை அர்சித்து வழிபடுவது சம்பத் உபாசனை.
 • சாளக்கிராமம், சிவலிங்கம், கும்பம், மஞ்சள் உருண்டை முதலியவற்றில் இஷ்ட தெய்வத்தை ஏற்றி வழிபடுவது பிரதீக உபாசனை அல்லது தியானம்.

4 அதிதைவத, அத்யாம தியானங்கள்[தொகு]

 • புறத்திலுள்ள ஒரு பொருளை (எ. கா., சூரியன்) அல்லது இஷ்ட தேவதையை இறைவனாக வழிபடுவது அதிதைவத தியானம்.
 • மனித உடலில் உள்ள ஒரு அங்கத்தைத் (எடுத்துக்காட்டு; கண், இதயம், பிராணன்) தெய்வமாக வழிபடுவது அத்யாத்ம தியானம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Edwin Bryant (2009), The Yoga sūtras of Patañjali: a new edition, translation, and commentary with insights from the traditional commentators, North Point Press, ISBN 978-0865477360, pages xxii, xxix-xxx
 2. Stuart Sarbacker (2011), Yoga Powers (Editor: Knut A. Jacobsen), Brill, ISBN 978-9004212145, page 195
 3. dhyAna, Monier Williams Sanskrit-English Dictionary (2008 revision), Cologne Digital Sanskrit Lexicon, Germany
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_சமயத்தில்_தியானம்&oldid=3913604" இலிருந்து மீள்விக்கப்பட்டது