ஆகமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். [1] இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.

ஆகமம், தமிழ்ச்சொல் தொடர்

  • ஆகமம் என்பது ஆ கமம் என்னும் இரு தமிழ்ச் சொற்களின் புணர்நிலைத் தொடர். ஆ என்பது ஆன்மா. சைவ சித்தாந்தத்தில் இது பசு எனக் கூறப்படும். கமம் என்னும் சொல் நிறைவு என்னும் பொருளைத் தரும். [2] உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை உணர்த்தும் தமிழ்ச்சொல் தொடர் ஆகமம்.

ஆகமம் என்பதன் பொருள்

ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என்னும் பொருளைத் தருவது. இதற்குத் "தொன்று தொட்டு வரும் அறிவு" என்றும் "இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்" என்றும் அறிஞர் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது.

ஆகமங்களின் பிரிவுகள்

சைவ ஆகம நூல்கள் ஆகமம் என்றும், வைணவ ஆகம நூல்கள் ஸம்ஹிதை என்றும், சாக்த ஆகம நூல்கள் தந்திரம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. [3]

சைவ ஆகமங்கள்

சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,

  1. காமிகம் - திருவடிகள்
  2. யோகஜம் - கணைக்கால்கள்
  3. சிந்தியம் - கால்விரல்கள்
  4. காரணம் - கெண்டைக்கால்கள்
  5. அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
  6. தீப்தம் - தொடைகள்
  7. சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
  8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
  9. அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
  10. சுப்ரபேதம் - தொப்புள்
  11. விஜயம் - வயிறு
  12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
  13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
  14. அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
  15. வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
  16. ரௌரவம் - செவிகள்
  17. மகுடம் - திருமுடி
  18. விமலம் - கைகள்
  19. சந்திரஞானம் - மார்பு
  20. பிம்பம் - முகம்
  21. புரோத்கீதம் - நாக்கு
  22. லளிதம் - கன்னங்கள்
  23. சித்தம் - நெற்றி
  24. சந்தானம் - குண்டலம்
  25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
  26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
  27. கிரணம் - இரத்தினா பரணம்
  28. வாதுளம் - ஆடை

வைஷ்ணவ ஆகமங்கள்

  1. பாஞ்சராத்திரம்
  2. வைகானசம் என்பனவாகும்.

அடிக்குறிப்பு

  1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=211&pno=152
  2. தொல்காப்பியம், உரியியல் நூற்பா 58
  3. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=211&pno=152
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகமம்&oldid=1671879" இலிருந்து மீள்விக்கப்பட்டது