உள்ளடக்கத்துக்குச் செல்

காமிகாகமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம், சைவ சித்தாந்தம் ஆகும். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.

பெயர்ப் பொருள்

[தொகு]

காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

ஆகம நூல்களின் அமைப்பு

[தொகு]

எல்லா ஆகமங்களும் நான்கு பகுதிகளாகப் (பாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன. இவை:

  1. வித்யா பாதம் அல்லது ஞான பாதம்
  2. கிரியா பாதம்
  3. யோக பாதம்
  4. சரியா பாதம்

எனப்படுகின்றன. இவற்றுள், ஞான பாதம் ஆகமங்களின் தத்துவப் பகுதியாகும். கிரியா பாதம், சமயக் கிரியைகள் பற்றிய பகுதி. ஆகமங்களின் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இவ்விரண்டு பாதங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. ஏனைய இரண்டு பகுதிகளும் நீளம் குறைந்த பகுதிகளாகும்.

உள்ளடக்கம்

[தொகு]

காமிகாகமத்தின் கிரியா பாதம், பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளன. கிரியா பாதம் 12,000 செய்யுள்களைக் கொண்டது. இதில் 5166 செய்யுள்கள் பூர்வ பாகத்திலும், 6477 செய்யுள்கள், உத்தர பாகத்திலும் உள்ளன. 357 செய்யுள்கள் கிடக்கவில்லை.

பூர்வபாகத்தில், ஆகமங்களின் தோற்றம், அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள், கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள், விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் கோயிற் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந் நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்[1]. மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும் எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்[2].

குறிப்புகள்

[தொகு]
  1. Gaur Niketan Ananth (Editor), Stapathya Ved-Vastu Sastra Ideal Homes, Colony and Town Planning, New Age Books, New Delhi, 2002. p.13
  2. Bruno Dagens (Text Editor and Translator), Kapila Vatsayan (General Editor), Mayamatam Treatise of Housing, Architecture and iconography, Volume 1, Kalamulasastra Series - 14, Indira Gandhi National Centre for Arts and Motilal Banarsidass publishers Pvt. Ltd. Delhi, 1994, Reprint 2000. p. xliv

உசாத்துணைகள்

[தொகு]
  • காமிகாகமம் கிரியா பாதப் பூர்வ பாகம் தமிழ் சந்திரிகையுடன் (முதற் பகுதி), சுவாமிநாத சிவாசாரியார் சி. (வெளியிடுபவர்), தென்னிந்திய அர்ச்சகர் சங்கம். சென்னை, 1977.
  • Bruno Dagens (Text Editor and Translator), Kapila Vatsayan (General Editor), Mayamatam Treatise of Housing, Architecture and iconography, Volume 1, Kalamulasastra Series - 14, Indira Gandhi National Centre for Arts and Motilal Banarsidass publishers Pvt. Ltd. Delhi, 1994, Reprint 2000.
  • Gaur Niketan Ananth (Editor), Stapathya Ved-Vastu Sastra Ideal Homes, Colony and Town Planning, New Age Books, New Delhi, 2002.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமிகாகமம்&oldid=2120165" இலிருந்து மீள்விக்கப்பட்டது