பாதாமி குடைவரைக் கோவில்கள்
பாதாமி குடைவரைக் கோவில்கள் | |
---|---|
மூன்றாவது குகையிலுள்ள விஷ்ணு உருவம் | |
இந்தியாவில் அமைவிடம் | |
அமைவிடம் | பாதமி, கருநாடகம் |
ஆள்கூறுகள் | 15°55′06″N 75°41′06″E / 15.91833°N 75.68500°E |
கண்டுபிடிப்பு | 6 ஆம் நூற்றாண்டு |
நிலவியல் | மணற்கல் |
சிறப்புகள் | யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்[1] |
பாதாமி குடைவரைக் கோவில்கள் (Badami cave temples) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலைநகரமாக பாதாமி, விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினாற் பெயர் பெற்றது.
பாதாமி குடைவரைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளில் குடையப்பட்டுள்ளன.
புவியியல்
[தொகு]கர்நாடக மாநிலத்தின் நடுப்பகுதியின் வடப்புறத்திலுள்ள பாதாமி நகரில் பாதாமி குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. கர்நாடகத்தின் இரட்டை நகரங்களான ஹூப்ளி-தார்வாடுக்கு வடகிழக்கில் 70 மைல்கள் (110 km) தொலைவில் இக்கோயில்கள் உள்ளன. இங்கிருந்து 3 மைல்கள் (4.8 km) தொலைவில் மலப்பிரபா ஆறு உள்ளது. வரலாற்று நூல்களில் வாதாபி, வாதாபிபுரி, வாதாபிநகரி எனக் குறிப்பிடப்படும் பாதாமி [2], சாளுக்கியரின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் விளங்கியது. இரு செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையே அமைந்த பள்ளத்தாக்கின் இறுதிப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.
பாதாமி நகரின் தென்கிழக்குப் பகுதியில் செங்குத்தான மலைச் சரிவில் இக்குகைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. அகத்தியர் ஏரி எனப்படும் செயற்கை ஏரிக்கு மேல் இச்சரிவு அமைந்துள்ளது. இங்கு நான்கு குகைக் கோயில்கள் உள்ளன. மலைச்சரிவின் மேற்கு ஓரத்தில் சரிவின் துவக்கப்பகுதியில் முதல் குகைக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. [3][4] நான்கு கோயில்களிலும் பெரியதாக உள்ள மூன்றாவது குகைக் கோயில் மலையின் வடக்குப் பார்த்தமைந்த பகுதியில் அமைந்துள்ளது.[5] மூன்றாவது குகைக் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் நான்காவது குகை அமைந்துள்ளது..[2][6][7]
வரலாறு
[தொகு]முற்காலச் சாளுக்கியர்கள்[4]) என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே, அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில்[2][8] பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் [9] இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.[2][10][11]
பிற்காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களுக்கு முன்னோடியாகவும் ’இந்துக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டில்’ எனவும் கருதப்படும் பாதாமி குகைக்கோயில் வளாகம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் மலப்பிரபா ஆற்றுப் பள்ளத்தாக்கில் "கோயில் கட்டிடக்கலையின் வளர்ச்சி - ஐகொளெ-பாதாமி-பட்டடக்கல்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.[1][6] முதல் இரண்டு குகைக் கோயில்களிலும் காணப்படும் கலை வேலைப்பாடுகள் ஆறாம், ஏழாம் நூற்றாண்டின் வடதக்காண பாணியிலும், மூன்றாவது கோயிலில் நாகர மற்றும் திராவிடக்கலை ஆகிய இரு பாணிகளிலும் உள்ளன.[12][13] மூன்றாம் குகையில் நாகர-திராவிட பாணிகளின் கலவையான வேசரா பாணி வேலைப்பாடுகளும், கர்நாடாகத்தின் அதிமுற்கால வரலாற்றுச் சான்றுகளாக அமையும் எந்திர-சக்கர வடிவ வேலைப்பாடுகளும், வண்ணச் சுவரோவியங்களும் காணப்படுகின்றன.[14][15][16] முதல் மூன்று குகைகள் இந்து சமயம் தொடர்பான சிற்பங்களை, குறிப்பாக சிவன், திருமால் குறித்த சிற்பங்களையும்,[17] நான்காவது குகை, ஜைனத் திருவுருங்களையும் கருத்துக்களையும் சித்தரிக்கின்றன.[18]
குகைக் கோவில்கள்
[தொகு]பாதாமி குகைக் கோவில்கள் மனிதர்களால் கட்டமைக்கப்பட்டவை. பாதாமி நகரின் மலைச்சரிவின் மணற்கல்லில் செதுக்கப்பட்டவை.[10] இங்குள்ள நான்கு குகைக் கோயில்களும் நுழைவாயில், கற்தூண்களும் தாங்கிகளும் கொண்ட முகமண்டபம்,, தூண்கள் கொண்ட முதன்மை மண்டபம் (மகா மண்டபம்), அதையடுத்து குகையின் உட்புறமாக அமைந்த சிறிய சதுர கருவறை என்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.[19] ஒவ்வொரு கோயிலையும் படிகளாலான பாதை இணைக்கிறது. ஒவ்வொரு குகைக் கோயிலுக்கும் முன்புறம் ஏரியையும் ஊரையும் பார்த்தவாறு அமைந்த வெளிகள் உள்ளன. குகைக் கோயில்கள் கீழிருந்து மேல் வரிசையில் 1-4 எனப் பெயிரிடப்பட்டுள்ளன. குகைகளின் எண்வரிசையை, அவை செதுக்கப்பட்ட காலவரிசையாகக் கருத இயலாது.[20] நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும், இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக்கோவில் ஆகும்.
முற்காலச் சாளுக்கியர்கள் பின்பற்றிய நாகர மற்றும் திராவிடப் பாணியிலமைந்த கட்டிட அமைப்பு இக்குகைக் கோயில்களில் காணப்படுகிறது.[20] பாதாமியில் புத்தர் கோயிலமைந்த இயற்கைக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகைக்கோயிலுக்குள் தவழ்ந்துதான் செல்ல முடியும்.[21]
குகை 1
[தொகு]மலையின் வடமேற்குப் பகுதியில் தரைமட்டத்திலிருந்து 59 அடிகள் (18 m) உயரத்தில் முதல் குகை உள்ளது. இக்குகைக்குச் செல்ல குள்ளவடிவ கணங்களின் (மாடு மற்றும் குதிரைத் தலைடைய உருவங்கள்) உருவங்கள் செதுக்கப்பட்டப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.[22] 70 அடிகள் (21 m) x 65 அடிகள் (20 m) அளவிலமைந்த முகமண்டபத்தில் (தாழ்வாரம்) நான்கு தூண்கள் உள்ளன. இத்தூண்களில் சிவனின் நடனத் தோற்றங்களும் திருபிறப்புத் (அவதாரம்) தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன.[23] குகையின் நுழைவுப் பகுதியில் காணப்படும் துவாரபாலகர்கள் சிலையின் அளவு 6.166 அடிகள் (1.879 m).[22] ஆகும்.
சிவ தாண்டவச் சிற்பம்
[தொகு]இக்குகையில் சிவனின் தாண்டவ சிற்பம் (நடராசர்) செதுக்கப்பட்டுள்ளது.[23][24][17] இச்சிற்பத்தின் உயரம் 5 அடிகள் (1.5 m) ஆகும். சிற்பத்தின் 18 கரங்களின் அமைப்பு அண்டச் சக்கரத்தின் காலப்பகுப்பைக் காட்டும் வகையில் அமைந்துள்ளதாக கலை வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[17] பெரும்பாலான கரங்கள் நாட்டிய முத்திரையைக் காட்டுகின்றன.[25] சில கரங்கள் உடுக்கு, சூலம், கோடாரி, போன்றவற்றை ஏந்தியுள்ளன. சில கரங்களில் பாம்புகள் சுற்றிக்கொண்டுள்ளன. சிவனின் அருகில் அவரது மகன் பிள்ளையார் உருவமும் நந்தியின் உருவமும் காணப்படுகிறது.
பிற சிற்பங்கள்
[தொகு]நடராசர் சிலைக்கடுத்துள்ள சுவற்றில் மகிசாசூரனை வதைக்கும் துர்க்கையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது[22]. பிள்ளையார் உருவமும் சாளுக்கிய அரசர்களின் போர்க் கடவுளும் குலக் கடவுளுமான முருகனின் உருவமும், மயில்வாகனத்தில் அமர்ந்துள்ள கார்த்திகேயன் (முருகன்) உருவமும் இக்குகையின் சுவற்றில் காணப்படுகின்றன.[22][23]
இலட்சுமி, பார்வதி, சிவன் பாதி, திருமால் பாதியாக அமைந்த 7.75-அடி (2.36 m) உயர அரிகரன் உருவங்கள் உள்ளன.[24] வலப்புறத்தில் சுவற்றின் இறுதிப்பகுதியில் சிவன் பாதி சக்தி பாதியென அமைந்த அர்த்தநாரீசுவரர் உருவமானது அருகில் நந்தி, பிருங்கி முனிவர் உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது.[26][24]
இக்குகையில் காணப்படும் அனைத்து சிற்பங்களும் செதுக்கப்பட்ட அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு விலங்குகள், பறவைகளின் உருவங்கள் கொண்ட ஓர வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. தாமரை வடிவம் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. உட்கூரைகளில் வித்தியாதர இணை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகையின் பின் சுவற்றுப் பிளவில் அதிகளவு சிற்பங்களுடைய சதுரவடிவக் கருவறை உள்ளது.[23]
உட்கூரை அமைப்பு
[தொகு]குகையின் கூரை, சிற்ப வேலைப்பாடுகளுடைய ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது. நடுப்பாகத்தில் ஆதிசேஷனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பாம்புருவம் தலையுடன் கூடிய மேற்பாதிப் பகுதியானது, சுற்றப்பட்ட பிற்பாதிச் சுருள் வடிவிலிருந்து நன்றாக எழும்பிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பாகத்தில் ஆண்-பெண் உருவங்கள் கொண்ட 2.5 அடிகள் (0.76 m) விட்ட அளவு குவிச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் காணப்படும் ஆணுருவம் ஒரு இயக்கர்; பெண்ணுருவம் ஒரு அப்சரா. அடுத்துள்ள பாகத்தில் இரு சிறு உருவங்களும் அதற்கடுத்த இறுதிப் பாகத்தில் தாமரைகளும் செதுக்கப்பட்டுள்ளன.[27]
குகை 2
[தொகு]இரண்டாவது குகை, மூன்றாம் குகைக்கு மேற்கில்[28] வடக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் கட்டப்பட்ட இக்குகையின் அமைப்பும் அளவும் கிட்டத்தட்ட முதல் குகையைப் போன்றே உள்ளது. எனினும் இக்குகையின் முதன்மைக் கடவுள் திருமாலாக உள்ளார். முதல் குகையிலிருந்து இக்குகையை அடையப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் குகையைப் போன்றே இக்குகையிலும் பல்வேறு இந்து சமயத் கடவுள்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[10][28] தூண்களில், கடவுள் உருவங்கள், போர்க்களக் காட்சிகள், பாற்கடல் கடைதல், கஜலட்சுமி, பிரம்மா, ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டுள்ள திருமால், கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சிகள், கிருஷ்ணரின் இளவயது நிகழ்வுகள், கோபியருடனும் பசுக்களுடனும் காணப்படும் கிருஷ்ணர் போன்ற சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[10][28] முதல் குகையைப் போன்று இரண்டாம் குகையின் சிற்பங்கள் எல்லோரா சிற்பங்களை ஒத்தவையாய், ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டு காலத்தின் வட தக்காண பாணியில் அமைந்துள்ளன.[12]
முகமண்டபம்
[தொகு]குகைநுழைவின் வலது மற்றும் இடது இறுதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர்களின் சிற்பங்கள் இரண்டும் ஆயுதங்களுக்குக் பதில் கரங்களில் மலர்களை ஏந்தியபடி உள்ளன. இப்பகுதியைடுத்து முகமண்டபம் உள்ளது. முகமண்டபத்தின் இரு முனைகளில், வலப்புற இறுதியில் திரிவிக்கிரமர் சிற்பமும் இடப்புற இறுதியில் வராக அவதார சிற்பமும் உள்ளன. இத்தாழ்வாரத்தில் நான்கு சதுரத் தூண்கள் உள்ளன. இத்தூண்களின் மேற்பாதிப்பகுதியில் தொடங்கி மேற்பகுதிவரை சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இத்தூண்களின் யாளி வடிவத் தாங்கிகளும் சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
இக்குகையின் மிகப்பெரிய சிற்பமாக இம்முகமண்டபத்தின் திருமாலின் திரிவிக்கிரம (வாமனன்) அவதார சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தில் திருமாலின் ஒரு பாதம் பூமிமீதும் மற்றொன்று வடக்கு நோக்கி நீட்டப்பட்டும் உள்ளது.[10] இக்குகையிலமைந்த திருமாலின் பிற சிற்பங்களாக வராக உருவங்கொண்டு கடலுக்கடியிலிருந்து பூதேவியை மீட்டெடுத்து வந்த திருமாலின் வராக அவதாரச் சிற்பம், கிருட்டிண அவதாரச் சிற்பங்கள்; பாகவத புராணம் போன்ற இந்து புராணக்கதைகளிலுள்ள நிகழ்வுகளின் சிற்பங்கள் உள்ளன.[17][29] வராக அவதாரச்சிற்பத்தில் வராக உருவில் பூதேயைத் தாங்கியபடி உள்ள திருமாலின் பாதங்களுக்கருகில் வணங்கி நிற்கும் நாகர் வடிவம் (மேல் பாதி மனிதவுரு-கீழ் பாதி பாம்புரு) அமைக்கப்பட்டுள்ளது;
முகமண்டப உட்கூரையில் சதுரச் சட்டத்தினுள் அமைக்கப்பட்ட 16 மீன் ஆரைகள் கொண்ட சக்கரவடிவமைப்பு, சுவசுத்திக்கா, பறக்கும் இணையர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருடன் மேல் வீற்றிருக்கும் திருமால் சிற்பமும் பறக்கும் ஆண், பெண் இணையர் சிற்பமும் இறுதிப்பகுதியில் காணப்படுகின்றன.[10]
சுவற்றிலும் உட்கூரையிலும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களாகக் காட்சிதரும் மிச்சங்களைக் காணமுடிகிறது[10].
உள் மண்டபம்
[தொகு]33.33 அடிகள் (10.16 m) அகலம், 23.583 அடிகள் (7.188 m) ஆழம், 11.33 அடிகள் (3.45 m) உயரமுடைய உள்மண்டபத்தில் இரு வரிசையாக அமைந்த எட்டுத் தூண்கள் உள்ளன. இம்மண்டபத்தின் உட்கூரையும் குவிச் சிற்பங்கள் நிறைந்து பாகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மண்டபச் சுவர்களின் மேற்பகுதிகளில் தொடர்ச்சியாக கிருஷ்ணர் மற்றும் திருமால் தொடர்பான புராண நிகழ்வுகளின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.[28]
குகை 3
[தொகு]இரண்டாவது குகையைப் போன்றே மூன்றாம் குகையும் வடக்கு நோக்கியுள்ளது. இரண்டாவது குகையிலிருந்து மூன்றாவது குகைக்குச் செல்ல 60 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது குகை திருமாலுக்குரியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை வளாகத்திலேயே இது பெரியதும் சிக்கலான சிற்பவேலைப்பாடுகளுடைய குகையாகும். இங்கு நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட ஆதிசேஷன் மீதமர்ந்த நான்குகரமுடைய திருமால், பூவராகர், அரிகரர், நரசிம்மர் மற்றும் திரிவிக்கிரமர் சிற்பங்கள் மிக நேர்த்தியாக பெரியளவில் செதுக்கப்பட்டுள்ளன.[10] தூணொன்றில் ஆண்-பெண் இணையர் தழுவிநிற்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.இக்குகையின் முதன்மைக் கடவுள் திருமாலாக இருப்பினும் சிவன் பாதி-திருமால் பாதியாக அமைந்த அரிகரரின் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.[30] [8][31]
குகையின் அமைப்பு
[தொகு]இக்குகையின் முன்வெளியிலமைந்த படிகளுக்கு அடுத்துள்ள குகை நீளத்திற்கு ஒரு குறுகலான வெளித்தாழ்வாரத்துக்கடுத்து, 2.5 சதுர அடியளவிலான [33] ஆறு தூண்களும் அதையொட்டி நீண்ட முகமண்டபமும் உள்ளது. முகமண்டபத்திற்கும் உட்கூடத்துக்கும் இடையில் நான்கு தூண்கள் கொண்ட மற்றொரு சிறு நீள் தாழ்வாரம் அமைந்துள்ளது. உட்கூடத்தின் இறுதியில் சதுரவடிவக் கருவறையுள்ளது.
சிற்பங்கள்
[தொகு]முகமண்டத்தின் கிழக்குச் சுவற்றில் ஆதிசேஷனின் குடைக்குக் கீழ் பாம்பணை மேல் வீற்றிருக்கும் திருமாலின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஆயுதமேந்திய வராக அவதாரச் சிற்பம்[17], நரசிம்ம அவதார சிற்பம், அரிகர சிற்பம், திரிவிக்கிரம அவதாரச் சிற்பம் மிகப் பெரிய அளவுகொண்டவையாய் வடிக்கப்பட்டுள்ளன. பின்சுவற்றில் வராகருக்கு சமர்ப்பணங்கள் செலுத்தும் வித்தியாதரர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதையடுத்து கிபி 579 ஆம் ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது.[9]
வீற்றிருக்கும் திருமால் சிற்பத்துக்கு எதிர்ப்புறம் நரசிம்ம அவதார சிற்பமும் அதனையடுத்துள்ள சுவரணைத்தூணில் திரிவிக்கிரம சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தில் திரிவிக்கிரமருக்கு வலப்புறம் கருடர் உருவமும் முன்புறம் பாலி, பாலியின் மனைவி, பாலியின் ஆசிரியர் சுக்கிராச்சாரியார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன[34][35]. இக்குகைச் சிற்பங்கள் ஆறாம் நூற்றாண்டின் பண்பாடு, ஆடையணிகலங்கள், அலங்காரமுறைகளைத் தெரிவிப்பனவையாக அமைகின்றன.[36]
உட்கூரை
[தொகு]இக்குகையின் முகமண்டபத்தின் உட்கூரை ஏழு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வட்டவடிவ அமைப்புக்குள் இந்து சமயக் கடவுளர் (சிவன், விஷ்ணு, பிரம்மன், இந்திரன், மன்மதன், மற்றும் திக்பாலர்களின் சிறு உருவங்கள் காணப்படுகின்றன. [37] ஓவியங்களில் சில மங்கியவையாய் தெளிவில்லாமல் காணப்படுகின்றன. இந்தியக் கலையில் வண்ண ஓவியங்கள் இடம்பெற்றிருந்தற்கான அதிமுற்காலச் சான்றுகளாக இவ்வோவியங்கள் விளங்குகின்றன.[15] படைப்புக் கடவுளான பிரம்மாவின் ஓவியமும் இந்து சமயக் கடவுள்கள் கலந்து கொண்ட சிவன் - பார்வதி திருக்கல்யாணக் கோலக்காட்சியும் வடிக்கப்பட்டுள்ளன.[38]
இடைகழித் தாழ்வாரக் கூரையிலும் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. நடுப்பாகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் பறக்கும் நிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வாளும் கேடயமும் ஏந்தியுள்ள ஆணுருவம் ஒரு இயக்கராக உள்ளது. உட்கூரையின் பாகங்கள் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உட்கூடத்தின் உட்கூரை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நடுப்பாகத்தில் அக்னி தேவன் எனக் கருதப்படும் உருவமும் பிரம்மன் மற்றும் வருணன் உருவங்களும் இதர பாகங்களில் பறக்கும் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.[28] நான்கு கரங்கொண்ட பிரம்மாவின் சுவரோவியத்திற்குக் கீழ் தரையில் தாமரைப்பூ வடிவம் நல்லநிலையில் காணப்படுகிறது.
குகை 4
[தொகு]முதல் மூன்று குகைகளை விட அதிக உயரத்தில், மூன்றாவது குகைக்கு கிழக்கில் நான்காவது குகை உள்ளது. ஜைன மத வழிபாட்டு உருவங்களைக் கொண்ட இக்குகை ஏனைய குகைகளைவிடக் காலத்தால் பிந்தையதாகும். மற்ற குகைகளைப் போன்றே இக்குகையும் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.[18][39] இக்குகையின் நுழைவில் நான்கு சதுரத் தூண்கள் உள்ளன. இத்தாழ்வாரத்தை அடுத்துள்ள கூடத்தில் இரண்டு தனித்தனி தூண்களும், இரண்டு இணைந்த தூண்களும் காணப்படுகின்றன. கூடத்திலிருந்து 25.5 அடி அகலமும் 6 அடி ஆழமும் உள்ள கருவறைக்குச் செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. .[39]
சிங்கங்கள் செதுக்கப்பட்ட அரியணையில் அமர்ந்தவாறு மகாவீரர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.[40][39] பார்சுவநாதர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.[39] கால்களின் கீழ் பாம்புகள் சூழ பாகுபலியின் சிற்பம் பிராமி மற்றும் சுந்தரி எனும் அவரது இரு மகளோடு வடிக்கப்பட்டுள்ளது. [41][39] பல ஜைன தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உட்சுவர்களிலும் உட்தூண்களிலும் காணப்படுகின்றன. பல அறிஞர்கள் இக்குகையின் காலம் ஏழாம் நூற்றாண்டின் நடுக்காலம் எனவும், வேறுசிலர் 8 ஆம் நூற்றாண்டு எனவும் கருதுகின்றனர்.[41]
குகை 5
[தொகு]ஐந்தாவது குகை சிறியளவிலான இயற்கைக் குகையாகும். இக்குகையின் நுழைவுப்பகுதி மிகவும் குறுகலானதால் தவழ்ந்து சென்றுதான் குகைக்குள் நுழைய முடியும்.[21] குகையினுள் சிற்ப வேலைப்பாடமைந்த அரியணை மீதமர்ந்த சிற்பமொன்று, விசிறி வீசும் பெண்கள், ஒரு மரம், யானைகள் மற்றும் பாய்ந்த நிலையிலுள்ள சிங்கங்கள் உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. 1995 வரை இச்சிலையின் முகம் நல்லநிலையில் இருந்தது;[21] அதன்பின்னர் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.[42]
இச்சிலை யாருடையது என்பது குறித்து பலவிதமான கருத்துகள் உள்ளன: ஒரு சாரார் இது அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை என்றும்[42], விசிறி வீசுபவர்கள் போதிசத்துவர் என்றும், புத்தரின் முகத்தில் விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரத்தின் அடையாளங்கள் தீட்டப்பட்டிருப்பதன் மூலம், இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இக்குகை இந்துக் கடவுளான விஷ்ணுக்கு உரியதாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.[42][43] தொல்லியலாளரும் மேற்கிந்திய வேல்சு இளவரசர் அருங்காட்சிய அதிகாரியுமான பி. வி. ஷெட்டி, இக்குகை இடைக்காலத்தில் மாற்றப்படவில்லை; துவக்கத்தில் இருந்தே இச்சிலை இந்து புராண மாயமோக உருவத்தைக் குறிக்கிறதெனவும் இதன் காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது எனவும் கருத்துத் தெரிவிக்கிறார்.[21][44]
இரண்டாவது வகையான கருத்து, பிரித்தானிய இந்தியாவின் சமயப் பரப்பாளரும் ஜைன அறிஞருமான ஜான் முர்ரே போன்றோரின் காலனியாதிக்ககாலக் குறிப்புகளில் காணப்படுகிறது. இவர்களின் கருத்துப்படி ஐந்தாவது குகையின் முதன்மைச் சிலை ஜைன சமய உருவமாகும். [45][46]
பொதுவாக புத்தர் உருவங்களில் காணப்படும் உருண்டையான திரளானது (Ushnisha lump) இச்சிற்பத்தின் முகம் சிதைந்து போவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சிற்பத்தின் தலையுச்சியில் காணப்படவில்லை என்பதால், இச்சிலை பழங்கால அரசனது சிலை என்ற மூன்றாவது கருத்து நிலவுகிறது.னப்படுகிறது. இக்கருத்தினை தொல்லியலாளர்கள் ஹென்றி கூசென்சு (Henry Cousens) மற்றும் ஏ. சுந்தரா முன்வைக்கும் இக்கருத்தினை உள்ளூர்வாசிகளும் ஆதரிக்கின்றனர்.[21] புத்தரின் உருவத்திற்குத் தொடர்பில்லாத, விரல் மோதிரங்கள், கழுத்தாபரணங்கள், மார்புப் பட்டை போன்ற ஆபரணங்களும் இந்து சமய உபநயன நூலும் இச்சிற்பத்தில் காணப்படுகின்றன. மேலும் தலையமைப்பு புத்தருடையதைவிட ஜைன பாணிக்கு நெருக்கமாக உள்ளது.[21] இக்காரணங்களால் வெவ்வேறு பாரம்பரியங்களின் கூற்றுகளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழங்கால அரசனின் சிற்பம் எனக் கருதப்படுகிறது.[21]
சுமித்சோனியன் ஃபிரீர் கலைக் காட்சியகத்தின் துணையதிகாரியான கரோல் ராட்கிளிஃபெ போலோனின் (Carol Radcliffe Bolon) கருத்துப்படி, ஐந்தாவது குகையின் காலமும் முதன்மைச் சிற்பத்தின் அடையாளமும் அறியப்படாத விந்தையாகும்[47]
ஏனைய குகைகள்
[தொகு]கர்நாடக மாநில அரசுப் பணியாற்றும் பாகல்கோட் மாவட்டத் துணை இயக்குநரான மஞ்சுநாத் சுல்லோல்லி (Manjunath Sullolli), முதன்மையான நான்கு குடைவரைக் குகைக்கோயில்கள் வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் 27 சிற்பங்களுடைய மற்றொரு குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டதை 2013 ஆம் ஆண்டில் அறிவித்தார். ஆண்டு முழுவதும் இக்குகையிலிருந்து நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. விஷ்ணு மற்றும் பிற இந்துக் கடவுளரின் சிற்பங்களுடன் தேவநாகரியில் அமைந்த கல்வெட்டும் இங்குள்ளது. இச்சிற்பங்களின் காலம் அறியப்படவில்லை.[48][49]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Evolution of Temple Architecture – Aihole-Badami- Pattadakal". UNESCO. 2004. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Fergusson 1880, ப. 405.
- ↑ Fergusson 1880, ப. 405–406.
- ↑ 4.0 4.1 "Badami around the Tank: Western Chalukya Monuments". Art-and-archaeology.com, Princeton University. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ Jessica Frazier (2015), The Bloomsbury Companion to Hindu Studies, Bloomsbury Academic, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4725-1151-5, pages 279–280
- ↑ 6.0 6.1 Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 174.
- ↑ Michell 2014, ப. 36–50.
- ↑ 8.0 8.1 Michell 2014, ப. 50.
- ↑ 9.0 9.1 Fergusson 1880, ப. 409.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 10.7 Michell 2014, ப. 38–50.
- ↑ Burgess 1880, ப. 406.
- ↑ 12.0 12.1 JC Harle (1972), Aspects of Indian Art, BRILL Academic, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-03625-3, page 68
- ↑ Jill Tilden (1997), First Under Heaven: The Art of Asia, Hali Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898113-35-5, pages 31–32
- ↑ Kapila Vatsyayan and Bettina Bäumer (1992), Kalātattvakośa: A Lexicon of Fundamental Concepts of the Indian Arts, Motilal Banarsidass , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1044-0, pages 79–84
- ↑ 15.0 15.1 Stella Kramrisch (1936), Paintings at Badami, Journal of the Indian Society of Oriental Art, Vol 4, Number 1, pages 57–61
- ↑ James C Harle (1994), The Art and Architecture of the Indian Subcontinent, Yale University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-06217-5, pages 361, 166
- ↑ 17.0 17.1 17.2 17.3 17.4 Alice Boner (1990), Principles of Composition in Hindu Sculpture: Cave Temple Period, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0705-1, pages 89–95, 115–124, 174–184
- ↑ 18.0 18.1 "Cave 4, Badami: Jain Tirthankarasaccess". art-and-archaeology.com, Princeton University. 21 October 2015.
- ↑ Thapar 2012, ப. 45.
- ↑ 20.0 20.1 Michell 2014, ப. 37.
- ↑ 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 21.6 Shetti, BV (1995). "An image of Buddhavatara of Visnu at Badami" (PDF). Nirgrantha 1 (2): 87–91. http://www.jainlibrary.org/elib_master/article/250000_article_english/Image_of_Buddhavatara_of_Visnu_at_Badami_269008_std.pdf. பார்த்த நாள்: 2017-02-26.
- ↑ 22.0 22.1 22.2 22.3 Fergusson 1880, ப. 413.
- ↑ 23.0 23.1 23.2 23.3 Michell 2014, ப. 37–38.
- ↑ 24.0 24.1 24.2 Fergusson 1880, ப. 414.
- ↑ Fred Kleiner (2009), Gardner's Art through the Ages: Non-Western Perspectives, Wadsworth Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-57367-8, page 21
- ↑ Fergusson 1880, ப. 415.
- ↑ Fergusson 1880, ப. 416.
- ↑ 28.0 28.1 28.2 28.3 28.4 Fergusson 1880, ப. 412.
- ↑ Archana Verma (2012), Temple Imagery from Early Mediaeval Peninsular India, Ashgate, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4094-3029-2, pages 89–93
- ↑ VK Subramanian (2003), Art Shrines of Ancient India, Abhinav, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-431-8, page 47
- ↑ TA Gopinatha Rao (1993), Elements of Hindu iconography, Vol 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0877-5, pages 334–335
- ↑ George Michell (1988), The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms, University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-53230-1, pages 98–100
- ↑ Fergusson 1880, ப. 406–407.
- ↑ Fergusson 1880, ப. 409–412.
- ↑ Fergusson 1880, ப. 407-08.
- ↑ Michell 2014, ப. 45-55.
- ↑ Fergusson 1880, ப. 411.
- ↑ Stella Kramrisch and Barbara Stoler Miller (1983), Exploring India's Sacred Art: Selected Writings of Stella Kramrisch, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-7856-9, pages 306–308
- ↑ 39.0 39.1 39.2 39.3 39.4 Fergusson 1880, ப. 491.
- ↑ Michell 2014, ப. 60.
- ↑ 41.0 41.1 Michell 2014, ப. 60-61.
- ↑ 42.0 42.1 42.2 "Small Buddhist Cave:Badami, Image 2". art-and-archaeology.com, Princeton University. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
- ↑ "Small Buddhist Cave:Badami". art-and-archaeology.com, Princeton University. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ Carol Radcliffe Bolon (2010). Forms of the Goddess Lajj? Gaur? in Indian Art. Pennsylvania State University Press. p. xiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-271-04369-2. பார்க்கப்பட்ட நாள் 2 April 2016.
- ↑ Numark, Mitch (2013). "The Scottish `Discovery' of Jainism in Nineteenth-Century Bombay". Journal of Scottish Historical Studies (Edinburgh University Press) 33 (1): 20–51. doi:10.3366/jshs.2013.0061.
- ↑ John Murray (1897), A Handbook for Travellers in India, Ceylon and Burma, p. 314, கூகுள் புத்தகங்களில்
- ↑ Carol E Radcliffe (1981), Early Chalukya sculpture, PhD Thesis awarded by New York University, இணையக் கணினி நூலக மையம் 7223956
- ↑ "Badami's supremacy set in stone". DNA India. 22 August 2013.
- ↑ "Natural cave shrine discovered". Indian Express. June 2013. http://www.newindianexpress.com/states/karnataka/Natural-cave-shrine-discovered/2013/06/10/article1628245.ece.