அமைதிப் பெருங்கடல்
அமைதிப் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு போர்த்துகேய நிலந்தேடு ஆய்வாளரான பெர்டினென்ட் மகலன் என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது.16.52 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.
ஆர்க்டிக் பகுதியின் பெருங் கடலிலிருந்து, அன்டார்டிகாவின் ராஸ் கடல் வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் கொலம்பியக் கடற்கரை மற்றும் பெரு வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு அட்ச ரேகையில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. மலாக்கா நீரிணைவு இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்படுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,928 மீ ஆழமுடைய மரியானா அகழியை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும்.
ஏறத்தாழ 25,000 தீவுகளை இக்கடல் உட்படுத்துகிறது. இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு-எண்ணிக்கையை விட அதிகமாகும். பெரும்பான்மைத் தீவுகள் நிலநடுக்கோட்டின் தெற்கில் அமைந்துள்ளன. அமைதி பெருங்கடல் சுருங்கவும் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என நில தட்டியல் கோட்பாடுகள் கூறுகின்றன. செலிபெஸ் கடல், கோரல் கடல், கிழக்கு சீனக்கடல், பிலிப்பைன் கடல், யப்பான் கடல், தென் சீனக்கடல், சுலு கடல், டாஸ்மான் கடல், மஞ்சள் கடல், ஆகியன அமைதிப் பெருங்கடலின் ஒழுங்கற்ற மேற்கோர எல்லைகளில் காணப்படும் முக்கியக் கடல்களாகும். மலாக்கா நீரிணைவு அமைதிப் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் மேற்கிலும், மாகெல்லன் நீரிணைவு இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கிழக்கிலும் இணைக்கின்றன. வடக்கில் பெருங்கடல் இப்பெருங்கடலை ஆர்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.[1][2][3]
சுற்றுச்சூழல்
[தொகு]அமைதிப் பெருங்கடலின் நடுவாக, கிழக்கையும் மேற்கையும் முடிவுசெய்யும் ± 180° தீர்க்க ரேகை செல்வதால், இக்கடலின் ஆசியப் பக்கம் கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும் எதிர்புறம் மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் வழங்கப்படுகின்றன. அதாவது எந்த எல்லைக்கோடு முதல் தீர்க்க ரேகைகள் கிழக்கு தீர்க ரேகை ஆகிறதோ அக்கோடு முதல் கிழக்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும், எது முதல் அவை மேற்கு தீர்க்க ரேகை ஆகிறதோ அது முதல் மேற்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் கருதப்படுகின்றன. சர்வதேச காலக் கோடு தனது வடக்கு-தெற்கு எல்லை வகுப்புக்கு இந்த ± 180° தீர்க்க ரேகையையே பெரும்பாலும் பின்பற்றுகிறது. ஆனால் கிரிபாட்டி பகுதியில் பெருமளவில் கிழக்காகவும், அலியூட்டியன் தீவுகள் பகுதியில் மேற்காகவும் திரும்பிச் செல்கிறது.
மாகெல்லன் நீரிணைவு முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான பெரும்பாலான மகலனின் கடற்பயணங்களின் போது அமைதிப் பெருங்கடல் அமைதியானதாகவே காணப்பட்டிருக்கிறது. ஆனால் அது எப்போதும் அமைதியான கடற்பகுதியாக இருப்பதில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் ஹரிகேன் எனப்படும் சூறாவளி வீசும் போதெல்லாம் அமைதிப் பெருங்கடலின் தீவுகள் கடுமையாக சேதப்படுத்தப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் ஓர நிலப்பரப்புகள் அனைத்தும் எரிமலைகளாக காட்சியளிப்பதோடு அவை அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகின்றன. சுனாமி எனப்படும் நீரடி நிலநடுக்கங்களால் ஏற்படும் பெரும் அலைகளினால் நிறைய தீவுகள் சூறையாடப்பட்டதோடு மிகப்பெரிய நகரங்களும் அழிக்கப்பட்டன.
நீர் சிறப்பியல்பு
[தொகு]அமைதிப் பெருங்கடல் நீரின் வெப்பநிலை துருவப்பகுதிகளில் உறைநிலை முதல் நில நடுக்கோடு பகுதிகளில் 29° செல்ஷியஸ் வரை, என வெகுவாக வேறுபடுகிறது. நீரின் உப்புத்தன்மையும் அட்ச ரேகை தோறும் வேறுபடுகிறது. நிலநடுக்கோடு பகுதிகளில் வருடம் முழுவதும் பெருமளவில் ஏற்படும் படிவுகளின் காரணமாக அப்பகுதியின் உப்புத்தன்மை நடு-அட்ச ரேகைப் பகுதிகளின் உப்புத்தன்மையை விட மிகக்குறைவாக இருக்கிறது. துருவப்பகுதியின் குளிரான சூழலில் குறைந்த அளவு நீரே ஆவியாவதால் மிதவெப்ப பகுதி அட்ச ரேகைகளிலிருந்து துருவப்பகுதியை நெருங்குமளவு நீரின் உப்புத்தன்மை குறைந்துகொண்டே போகிறது. பொதுவாக அமைதிப் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடலை விட வெப்பமானதாக நம்பப்படுகிறது. அமைதிப் பெருங்கடல் நீரின் மேற்பரப்பு சுற்றோட்டம் வட அரைக்கோளத்தில் கடியாரப்பாதையாகவும் (வட அமைதிப் பெருங்கடற்சுற்றோட்டம்) தென் அரைக்கோளத்தில் எதிர்-கடியாரப்பாதையாகவும் இருக்கிறது. தடக் காற்றுகளால் மேற்காக 15° வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்கு ஓட்டப்படும் வடக்கு நிலநடுநீரோட்டம், பிலிப்பைன்ஸ் பகுதியில் வடக்காக திரும்பி வெப்பமான குரோசியோ நீரோட்டமாக மாறுகிறது.
பின் ஏறக்குறைய 45° வடக்கு அட்ச ரேகையில் அதன் ஒரு பகுதி கிழக்காகத் திரும்பும் குரோசியோ கிளையும் மேலும் சில நீரும் வடக்காக அலியூட்டியன் நீரோட்டம் என பயணிக்கும் வேளையில் மற்ற பகுதி தெற்காக திரும்பி வடக்கு நிலநடுநீரோட்டத்துடன் இணைகிறது. அலியூட்டியன் நீரோட்டம் வட அமேரிக்காவை நெருங்கி, அங்கு பெரிங் கடலில் ஏற்படும் ஒரு எதிர்-கடியாரப்பாதை சுற்றோட்டத்துக்கு அடிப்படையாக அமைகிறது. அதன் தென்னகப் பிரிவு தெற்காக பாயும் குளிர்ந்த மிதவேக, கலிபோர்னியா நீரோட்டமாக மாறுகிறது.
தெற்கு நிலநடுநீரோட்டம் நில நடுக்கோடு வழியாக மேற்காக பயணித்து நியூகினியின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும். பின்னர் உலகைச்சுற்றும் அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டத்தை உள்ளடக்கும், தென்னக அமைதிப் பெருங்கடலின் பிரதான மேற்கு சுற்றோட்டத்துடன் இணைகிறது. பின்னர் இது சில்லியியன் கடற்கரையை நெருங்கும்போது தெற்கு நிலநடுநீரோட்டம் இரண்டாக பிரிகிறது; ஒரு பிரிவு ஹான் முனையை சுற்றி பாய்கிறது, மற்றொன்று வடக்காகத்திரும்பி கம்போல்ட் நீரோட்டமாகிறது.
நில ஆராய்ச்சி
[தொகு]ஆன்டிசைட் கோடு பகுதி அமைதிப் பெருங்கடலின் மற்ற நிலப்பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதும் மிக முக்கியமான ஒன்றுமாகும். இக்கோடு மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஆழமான காரத்தன்மையுடைய எரிப்பாறைகளை, பகுதி மூழ்கி இருக்கும் அமிலத்தன்மையான எரிப்பாறைகளிடமிருந்து பிரிக்கிறது. இக்கோடு கலிபோர்னிய தீவுகளின் மேற்கு எல்லைகளைப் பின்பற்றி, அலியூட்டியன் வளைவின் தெற்குப்பகுதி, கம்சாட்கா தீவக்குறையின் கிழக்கு எல்லை, குரில் தீவுகள், ஜப்பான், மெரியானா தீவுகள், சாலமன் தீவுகள் மற்றும் நியுஸிலாந்து ஆகியவை வழியாக பயணிக்கிறது. இந்த வேறுபாடு மேலும் தொடர்ந்து வடகிழக்காக பயணித்து அல்பாட்ராஸ் கார்டிரேல்லாவின் மேற்கு எல்லை, தென் அமேரிக்கா, மெக்ஸிகோ வழியாக சென்று பின்னர் கலிபோர்னியத் தீவுப்பகுதிக்கு திரும்புகிறது. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கண்டத்துண்டுகளின் நீட்டல்களான, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், நியூகினியா, நியுஸிலாந்து ஆகியன இந்த ஆன்டிசைட் கோட்டின் வெளியில் இருக்கின்றன.
மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் சிறப்பியல்புகளாக கருதப்படும் ஆழமான பள்ளங்கள், ஆழ்கடல் எரிமலைகள், கடலோர எரிமலைத் தீவுகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் இந்த ஆன்டிசைட் கோட்டின் மூடப்பட்ட வட்டத்தினுளேயே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் எரிமலைகளின் வெடிப்புகளிலிருந்து குழம்புகள் மெதுவாகப் பாய்ந்து பெரிய குடை-வடிவ எரிமலைகளைஉருவாகுகின்றன. இவைகளின் அழிக்கப்பட்ட சிகரப்பகுதிகள் அப்பகுதிகளில் வளை தீவுகளாகவும், கூட்டங்கூட்டமாகவும் காணப்படுகின்றன. இவ்வான்டிசைட் கோட்டுக்கு வெளியே வெடித்து சிதறும் வகை எரிமலைகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் அமைதிப் பெருங்கடல் எரிமலை வளையமே உலகின் வெடிப்பு எரிமலை மண்டலங்களில் மிகப்பெரியது.
நிலப்பரப்புகள்
[தொகு]முற்றிலும் அமைதிப் பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப்பரப்பு நியூகினியா தீவாகும். அமைதிப் பெருங்கடலின் பெரும்பாலான தீவுகள் 30° வடக்குக்கும் 30° தெற்குக்கும், அதாவது தென்கிழக்காசியவிற்கும் ஈஸ்டர் தீவுக்கும் இடையே காணப்படுகிறது. அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஏனைய பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் நீரினுள் மூழ்கி கிடக்கிறது.
ஹவாய், ஈஸ்டர் தீவு, மற்றும் நியுஸிலாந்தை இணைக்கும் பாலினேசியாவின் பெரிய முக்கோணம், மார்க்குசாஸ், சமோவா, தோகிலாவு, டோங்கா, துவாமோத்து, துவாலு & வால்லிஸ், மற்றும் புந்தா தீவுகள் ஆகிய வளைதீவுகளையும் தீவுக்கூட்டங்களையும் சூழ்ந்துகொண்டுள்ளது. நில நடுக்கோட்டின் வடக்காகவும் சர்வதேச காலக்கோட்டின் மேற்காகவும் மைக்ரோனேசியத் தீவுகளான, கரோலின் தீவுகள், மார்ஷல் தீவுகள், மெரியானா தீவுகள் என நிறைய சிறிய தீவுகள் உள்ளன.
அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில் உள்ள மெலனேசியத் தீவுகள் நியூகினியின் ஆதிக்கத்திலுள்ளது. மேலும் பிஸ்மார்க் தீவுக்குழு, பிஜி, நியு காலிடோனியா, சாலமன் தீவுகள் வனுவாட்டு ஆகியன மற்ற முக்கிய மெலனேசியத் தீவுக்கூட்டங்கள்.
அமைதிப் பெருங்கடலின் தீவுகள் நான்கு வகைப்படும்: கண்டத் தீவுகள், உயரத் தீவுகள், ஊருகைத்திட்டு, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை. கண்டத் தீவுகள் ஆன்டிசைட் கோட்டுக்கு வெளியே கிடக்கின்றன. நியூகினியா, நியுஸிலாந்து தீவுகள், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய தீவுகள் இவ்வகைப்படுவன. அமைப்பு முறையில் இத்தீவுகள் பக்கத்து கண்டங்களுடன் தொடர்புடையவை. உயர்ந்த தீவுகள் எரிமலைகளால் உருவானவைகள். அவைகளில் நிறைய தீவுகளில் தற்போதும் இயக்க நிலை எரிமலைகள் உள்ளன. அவைகளில் பௌகெயின்வில்லி, ஹவாய், சாலமன் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கவைகள்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைகள் ஊருகைத்திட்டு கூட்டங்களின் தொகுதியால் உருவானவைகள். பவளப் பாறைகள், எரிமலைப்பாறைகளின் குழம்பு ஓட்டங்களுக்கு மேல் தங்கியிருக்கும் தாழ்ந்த நிலைத் தொகுதிகளாகும். இதற்கு சரியான எடுத்துக்காட்டாக வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும் கரைவிலகிய முருகைப் பார் (Barrier Reef) திகழ்கிறது. காரலிலிருந்து உண்டாகும் இரண்டாம் வகைத் தீவான, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை கீழ்நிலை காரல் தீவுகளை விட சற்று பெரியதாக இருக்கும். பனாபா மற்றும் பிரெஞ்சு பாலினேசியாவின் மகாடியா ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.
வரலாறு
[தொகு]வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அமைதிப் பெருங்கடற்பகுதியில் முக்கிய மனித இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் முக்கியமானதாக, அமைதிப் பெருங்கடலின் ஆசிய ஓரத்திலிருந்து பாலினேசியர்கள் இடம்பெயர்ந்து தாகிட்டிக்கும் பின்னர் ஹவாய்க்கும், நியுஸிலாந்துக்கும் சென்றுள்ளனர்.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கடற்பகுதி ஐரோப்பியர்களால் பார்வையிடப்பட்டது. முதலில் வாஸ்கோ நியுனெஸ் டி பால்போவாவால் 1513 - லும், பின்னர் கி.பி.1519 முதல் கி.பி.1522 வரையிலான கடற்சுற்றுப்பயணத்தின் போது அமைதிப் பெருங்கடலைக் கடந்த பெர்டினென்ட் மகலன்னும் இப்பார்வையை மேற்கொண்டனர். பின்னர் 1564 ஆம் ஆண்டு, கான்குவிஸ்டேடர்கள் மிகியுல் லோபெஸ் டி லெகஸ்பி இன் தலைமையில் மெக்ஸிகோவிலிருந்து இக்கடலைக்கடந்து பிலிப்பைன்ஸ் மற்றும் மெரியானா திவுப்பகுதிகளுக்கு சென்றனர். அந்நூற்றாண்டின் பிந்திய காலங்களில் ஸ்பெயின் காரர்களின் இக்கடல் பகுதியை அதிகமாக ஆட்கொண்டிருந்தனர். அவர்களது கப்பலகள் அடிக்கடி பிலிப்பைன்ஸ், நியூகினியா மற்றும் சாலமன் தீவுகளுக்கு சென்ற வண்ணமிருந்தன. மணிலாவின் கப்பல்கள் மணிலாவுக்கும் அக்காபுல்கோவுக்கும் சென்றவண்ணமிருந்தன.
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் காரர்கள் தெற்கு ஆப்பிரிக்கக் கடற்பகுதி வழியாக பயணித்து நிலப்பரப்புகளை கண்டுபிடிப்பதிலும் வர்த்தகத்திலும் முன்னணிவகித்தனர்; ஏபெல் ஜான்சூன் டாஸ்மான் டாஸ்மானியாவையும் நியுஸிலாந்தையும் கண்டுபிடித்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் அதிக அளவில் நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அலாஸ்கா மற்றும் அலியூட்டியன் தீவுப்பகுதிகளில் ரஷ்யர்களும், பாலினேசியப் பகுதிகளில் பிரெஞ்சுக் காரார்களும், ஆங்கிலேயர்கள், ஜேம்ஸ் குக்கின் மூன்று கடற்பயணங்கள் (தெற்கு அமைதிப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியா, ஹவாய், மற்றும் வட அமேரிக்கா மற்றும் அமைதிப் பெருங்கடல் வடமேற்கு)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வேகமாக வளர்ந்த ஏகாதிபத்தியக் கொள்கையின் காரணமாக ஓசியானியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை பிரிட்டன், பிரான்சு, மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆட்கொண்டன. எச்.எம்.எஸ்.பீகிள், (1830களில்) மற்றும் சார்ல்ஸ் டார்வின்; 1870 களில் எச்.எம்.எஸ். சான்சிலர்; யு.எஸ்.எஸ்.டஸ்கராரோ (1873–76); ஜெர்மானிய கேசெல் (1874–76) ஆகியவர்களால் கடல் ஆராய்ச்சியில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 1898 - ல் பிலிப்பைன்சை அமேரிக்கா எடுத்துக்கொண்ட போதும், மேற்கத்திய அமைதிப் பெருங்கடலை 1914இல் சப்பான் கட்டுப்படுத்தியதோடல்லாமல், இரண்டாம் உலகப்போரில் மேலும் பல தீவுகளை அது கைப்பற்றியது. போருக்குப் பிறகு அமேரிக்காவின் அமைதிப் பெருங்கடற்கப்பற்படை கடற்பரப்பின் தலைவன் போல் தோன்றியது.
தற்போது பதினேழு சுதந்திர நாடுகள் அமைதிப் பெருங்கடலில் உள்ளன. அவை, ஆஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நௌரு, நியுசிலாந்து, பலாவு, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சாமொவா, சாலமன் தீவுகள், சீனக் குடியரசு (தைவான்) டோங்கா, துவாலு, மற்றும் வனுவாட்டு. இவைகளில் பதினொரு நாடுகள் 1960 முதல் முழு சுதந்திரம் அடைந்தன. வடக்கு மெரியானா தீவுகள் சுய ஆட்சி பெற்றுள்ள போதிலும் அதன் வெளியுறவு கட்டுப்பாடு அமேரிக்கா வசமுள்ளது. குக் தீவுகள் மற்றும் நையு ஆகியன இதே வித கட்டுப்பாடில் நியுஸிலாந்து வசமுள்ளது. மேலும் அமைதிப் பெருங்கடலில் ஒரு அமேரிக்க மாநிலமான ஹவாய் மேலும் பல தீவுப் பிரதேசங்களும், ஆஸ்திரேலியா, சிலி, இக்குவேடர், பிரான்சு, ஜப்பான், நியுஸிலாந்து, ஐக்கியப் பேரரசு மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்களும் உள்ளன.
பொருளாதாரம்
[தொகு]இக்கடலின் தாது வளங்கள் இதன் கடும் ஆழமான தன்மையினால் மனித ஆக்கிரமிப்புக்கரியதாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் இக்கடலின்கரையோர கண்டப்பாறைகளின் நீர் ஆழமற்ற பகுதிகளிலிருந்து பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஆகியன எடுக்கப்படுகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பப்புவா நியூகினியா, நிக்கராகுவா, பனாமா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் முத்து எடுக்கப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் மிகப்பெரிய சொத்து அதன் மீன்களாகும். இதன் கடற்கரையோரங்களில் பல அரிய வகை மீன்கள் கிடைக்கின்றன.
1986 - ல் அணு சக்தி கழிவுகள் இப்பகுதியில் குவிவதை தடுக்க இப்பகுதியை தெற்கு அமைதிப் பெருங்கடல் மன்றத்தின் உறுப்பு நாடுகள் அணுசக்தி பயன்பாட்டுக்கற்ற பகுதியாக அறிவித்தது.
முக்கிய துறைமுகங்கள்
[தொகு]- அக்காபுல்கோ, மெக்ஸிகோ
- ஆக்லாந்து, நியுஸிலாந்து
- பாங்கொக், தாய்லாந்து
- பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
- ஹாங் காங், சீன மக்கள் குடியரசு
- ஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- மணிலா, பிலிப்பைன்ஸ்
- பனாமா நகரம், பனாமா
- சான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- சிங்கப்பூர்
- சிட்னி, ஆஸ்திரேலியா
- யோக்கஹோமா, ஜப்பான்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Barkley, Richard A. (1968). Oceanographic Atlas of the Pacific Ocean. Honolulu: University of Hawaii Press.
- prepared by the Special Publications Division, National Geographic Society. (1985). Blue Horizons: Paradise Isles of the Pacific. Washington, D.C.: National Geographic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87044-544-8.
- Cameron, Ian (1987). Lost Paradise: The Exploration of the Pacific. Topsfield, Mass.: Salem House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88162-275-3.
- Couper, A. D. (ed.) (1989). Development and Social Change in the Pacific Islands. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-00917-0.
{{cite book}}
:|first=
has generic name (help) - Gilbert, John (1971). Charting the Vast Pacific. London: Aldus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-490-00226-9.
- Lower, J. Arthur (1978). Ocean of Destiny: A Concise History of the North Pacific, 1500–1978. Vancouver: University of British Columbia Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7748-0101-8.
- Napier, W.; Gilbert, J.; Holland, J. (1973). Pacific Voyages. Garden City, N.Y.: Doubleday. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-04335-X.
- Nunn, Patrick D. (1998). Pacific Island Landscapes: Landscape and Geological Development of Southwest Pacific Islands, Especially Fiji, Samoa and Tonga. editorips@usp.ac.fj. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-982-02-0129-3.
- Oliver, Douglas L. (1989). The Pacific Islands (3rd ed.). Honolulu: University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-1233-6.
- Paine, Lincoln. The Sea and Civilization: A Maritime History of the World (2015).
- Ridgell, Reilly (1988). Pacific Nations and Territories: The Islands of Micronesia, Melanesia, and Polynesia (2nd ed.). Honolulu: Bess Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-935848-50-9.
- Samson, Jane. British imperial strategies in the Pacific, 1750-1900 (Ashgate Publishing, 2003).
- Soule, Gardner (1970). The Greatest Depths: Probing the Seas to 20,000 அடிகள் (6,100 m) and Below. Philadelphia: Macrae Smith. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8255-8350-0.
- Spate, O. H. K. (1988). Paradise Found and Lost. Minneapolis: University of Minnesota Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-1715-5.
- Terrell, John (1986). Prehistory in the Pacific Islands: A Study of Variation in Language, Customs, and Human Biology. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-30604-3.
வரலாறெழுதியல்
[தொகு]- Davidson, James Wightman. "Problems of Pacific history." Journal of Pacific History 1#1 (1966): 5-21.
- Gulliver, Katrina. "Finding the Pacific world." Journal of World History 22#1 (2011): 83-100. online
- Igler, David (2013). The Great Ocean: Pacific Worlds from Captain Cook to the Gold Rush. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-991495-8.
- Munro, Doug. The Ivory Tower and Beyond: Participant Historians of the Pacific (Cambridge Scholars Publishing, 2009).
- Routledge, David. "Pacific history as seen from the Pacific Islands." Pacific Studies 8#2 (1985): 81+ online பரணிடப்பட்டது 2016-09-23 at the வந்தவழி இயந்திரம்
- Samson, Jane. "Pacific/Oceanic History" in Kelly Boyd, ed. (1999). Encyclopedia of Historians and Historical Writing vol 2. Taylor & Francis. pp. 901–2.
{{cite book}}
:|author=
has generic name (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- EPIC Pacific Ocean Data Collection Viewable பரணிடப்பட்டது 2010-05-04 at the வந்தவழி இயந்திரம் on-line collection of observational data
- NOAA In-situ Ocean Data Viewer பரணிடப்பட்டது 2007-12-25 at the வந்தவழி இயந்திரம் plot and download ocean observations
- NOAA PMEL Argo profiling floats Realtime Pacific Ocean data பரணிடப்பட்டது 2006-02-10 at the வந்தவழி இயந்திரம்
- NOAA TAO El Niño data Realtime Pacific Ocean El Niño buoy data
- NOAA Ocean Surface Current Analyses பரணிடப்பட்டது 2005-12-29 at the வந்தவழி இயந்திரம்—Realtime (OSCAR) Near-realtime Pacific Ocean Surface Currents derived from satellite altimeter and scatterometer data
பெருங்கடல்கள் |
---|
அத்திலாந்திக்குப் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • தென்முனைப் பெருங்கடல் • அமைதிப் பெருங்கடல் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pacific Ocean". Britannica Concise. 2008: Encyclopædia Britannica, Inc.
- ↑ "The Coriolis Effect". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் April 8, 2022.
- ↑ Administration, US Department of Commerce, National Oceanic and Atmospheric. "How big is the Pacific Ocean?". oceanexplorer.noaa.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)