திராவிட இயக்க இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1916 இல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை ஏராளமான திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆயினும், 1942 – 1962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர். திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இதழ்கள் 265 க்கும் மேற்பட்டவையெனத் திராவிட இயக்க ஆய்வாளர்கள் க. திருநாவுக்கரசு, ப. புகழேந்தி ஆகிய இருவரும் குறிப்பிடுகின்றனர். அவை திராவிட இயக்கத்தையும் அக்காலத்திய தமிழகத்தையும், அதனூடே தமிழக அரசியலையும் நன்கு விளங்கிக்கொள்ள துணை நிற்கின்றன. திராவிட இயக்க வளர்ச்சிக்கு இவ்விதழ்கள் முக்கிய பங்காற்றின. இவ்விதழ்களே திராவிட இயக்கத் தலைவர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கின. திராவிட இயக்க இதழ்களுள் குறிப்பிடத்தக்கவை

கன்னி[தொகு]

கன்னி ஒரு கழகச்சாட்டை   என்னும் முகப்புடன் குமரிமாவட்டம் இரணியலில் இருந்து மாத இதழாக வெளிவந்தது.இதழின் ஆசிரியர் திமுகழக வழக்கறிஞர் இரணியல் ரவி சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோதே எஸ் எஸ் ராசேந்திரன் விஜயகுமாரி ஆகியோர் நடித்த "நாட்டுக்கொரு நல்லவள் " திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர்.  என்னைக்கேளுங்கள் என்ற தலைப்பில் வந்த கேள்வி பதில் பகுதி மிகவும் பிரபலமானது .திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழக முன்னோடிகளின் கட்டுரைகள் மாதந்தோறும் இடம் பெற்றிருக்கும்

அலையோசை[தொகு]

அலையோசை

தி.மு.க வின் கொள்கைகளைப் பரப்பும் எண்ணத்தோடு ஆற்காடு வீராசாமி, கிளியனூர் வெங்கடசுப்பு ரெட்டியார் ஆகியோரின் ஒத்துழைப்போடு அடிப்படையில் வழக்குரைஞராகவும், மேலும் மேயராகவும் பதவி வகித்த வேலூர் நாராயணனால் நடத்தப்பட்ட இதழ் அலை ஓசை. ஒன்றரை லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்த இவ்விதழ் 16 காசுகளுக்கு விற்கப்பட்டது. நாராயணன் தம் கல்லூரி நாட்களில் ‘மகரந்தம்’ என்னும் கையெழுத்திதழை நடத்தியவர். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பெற்று பாளையங்கோட்டையில் சிறைவாசம் அனுபவித்தவர்.

எல்லா தரப்பு செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, செய்திகளை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்டார். விளம்பர வருமானத்தைப் பொருட்படுத்தாமல் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை அலை ஓசை. இவ்விதழ் 1971 ஆகஸ்ட் 11 இல் தொடங்கப்பட்டது, இதில் அரசியல், பொதுச் செய்திகள், தொடர்கதைகள், தொடர் கட்டுரைகள் என இலக்கியத்தரமான படைப்புகள் வெளிவந்துள்ளன. இவ்விதழ் 1992 வரை வெளிவந்தது. இவ்விதழில் ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, கண்ணதாசன், பழ. நெடுமாறன், முரசொலி அடியார், வலம்புரி ஜான், விருதுநகர் சீனிவாசன், அறந்தை நாராயணன் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

கதிர்[தொகு]

திராவிட இயக்க இதழ்களில் மிகவும் மாறுபட்டு வித்தியாசமாக விளங்கிய இதழ் ‘கதிர்’. இதன் ஆசிரியர் ப. புகழேந்தி, கண்ணதாசன் நடத்திய முல்லை, தென்றல், அண்ணாவின் “நம்நாடு” ஆகியவற்றில் துணையாசிரியராகப் பணியாற்றியவர், அண்ணாவிடம் நெருக்கமாகப் பழகியவர். இப்பத்திரிகை 1965 முதல் 1966 வரை 15 மாதங்கள் மட்டுமே வெளிவந்தபோதிலும் அதன் சமகால இதழ்களில் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது. மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

கலைமன்றம்[தொகு]

கலைமன்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து 1952 முதல் 1956 வரை வெளிவந்த மாத இதழ். பால்வண்ணன் இதன் ஆசிரியர். பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவர். சன்மார்க்கம் பற்றிச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை சென்று சொற்பொழிவாற்றியவர். திராவிட இயக்கத்தின் மீது பற்று கொண்டவர். ஊடுருவி என்னும் புனைப்பெயரில் எழுதியவர். தி.மு.க வின் வளர்ச்சிக்குக் கலைமன்றம் முக்கியப் பங்காற்றியது. இவ்விதழில் கதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், கேலிச்சித்திரம் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு, கோவி. மணிசேகரன், பூவண்ணன், சுப்பு ஆறுமுகம், துரை. அரசன் பா. கலைச்செழியன், அண்ணாதுரை, என். எஸ். கிருஷ்ணன், கண்ணதாசன், த. கோவேந்தன், வேலாயுதசாமி, ஏ. வி. பி. ஆசைத்தம்பி, ஏ. கே. வேலன், வாணிதாசன், வே. தில்லைநாயகம் போன்றோர் எழுதியுள்ளனர்.

காதல்[தொகு]

1947 இல் காதல் என்னும் பெயரில் ஒரு பாலியல் விஞ்ஞான இதழை இலக்கியத் தன்மையோடு நடத்தியவர் அரு. ராமநாதன். இப்பத்திரிகைக்குத் தொடக்க காலத்தில் பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. இதில் காதல் பற்றிய கதை, கட்டுரை, கவிதை, பொன்மொழி, கேலிச்சித்திரம், உண்மை வரலாறு போன்றன வெளிவந்தன. வீரபாண்டியன் மனைவி, அசோகன் காதலி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திரவடிவு என்னும் புதினங்கள் தொடர்களாக வெளிவந்தன.காதலில் மு. வரதராசன். ராசமாணிக்கனார், பாஸ்கரத் தொண்டமான், கு. அழகிரிசாமி, அகிலன், வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், சோமலே, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. குழந்தை எப்படிப் பிறக்கிறது, குடும்பக்கட்டுப்பாடு, இந்து சட்ட மசோதா, கைம்பெண் மறுமணம், ஆண்பெண் சமத்துவம், பெண்ணுரிமை, தமிழ் மொழி முன்னேற்றம் ஆகிய பொருள்களில் கட்டுரைகள் வெளிவந்தன.

குத்தூசி[தொகு]

”சகம் எதிர்த்தபோதும் தனித்து எதிர்க்கும் சுயமரியாதைச் சுடர்” என்று பாரதிதாசனால் போற்றப்பட்ட சா. குருசாமியால் 1962 முதல் 1965 வரை நடத்தப்பட்ட இதழ் குத்தூசி. இவர் 16 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு’, ‘விடுதலை’ ஆகிய இதழ்களில் 5000 கட்டுரைகளை எழுதியவர். இவ்விதழில் துறை சார்ந்த அறிஞர்கள் எழுதிய பொருளியல், தத்துவம், அறிவியல், அரசியல், இலக்கியம் என அனைத்துச் செய்திகளும் வெளிவந்தன.

குயில்[தொகு]

பாரதிதாசனால் 1947 இல் எட்டணா விலையில் தொடங்கப்பெற்றது ”குயில்” என்னும் இதழ். இது துவக்கத்திலேயே 4000 படிகள்வரை அச்சிடப்பட்டது. இதில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, வடமொழி எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்ற கொள்கைகள் பரப்பப்பட்டன. கவிதை, கட்டுரை ஆகியவையும் வெளியாகின. குயில் விட்டுவிட்டு 128 இதழ்கள்வரை வெளிவந்து 1964 இல் நின்று போனது.

குறிஞ்சி[தொகு]

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் தி.மு.க. தலைவராக அரசியல் வாழ்வை ஆரம்பித்தப் பழ. நெடுமாறனால் 1962 முதல் 1971 வரை நடத்தப்பட்ட இதழ் ‘குறிஞ்சி’. நெடுமாறன் ”தமிழ்நாடு”, ”தென்றல்” ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.

தனியரசு[தொகு]

‘வாலிபப் பெரியார்’ என்று அழைக்கப்பெற்ற திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் ஏ. வி .பி. ஆசைத்தம்பியால் நடத்தப்பெற்றது ‘தனியரசு’ என்னும் இதழ். இது முதலில் விருதுநகரிலிருந்தும் பிறகு சென்னையில் இருந்தும் வெளிவந்தது. தொடக்கத்தில் நாளிதழ் அளவில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதம் இருமுறை இதழாக 1956 மே 15 முதல் வெளிவந்த இந்த இதழ் 35,000 படிகள்வரை விற்பனையானது. ஆசைத்தம்பி 10 ஆண்டுகள் நகராட்சி உறுப்பினராகவும், இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1977 இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். ”திராவிட சினிமா” என்ற திங்கள் இருமுறை திரைப்பட இதழையும் நடத்தியுள்ளார்.

திராவிடன்[தொகு]

பிராமணர் அல்லாதாரை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் 1917 இல் ”திராவிடன்” இதழ் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விதழ் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறுபான்மையினராக இருந்த பிராமணர்கள் எல்லா நலன்களையும் அனுபவித்துக்கொண்டு திராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியது. சீர்திருத்தம், மொழிப்பற்று, வர்ணாசிரமதர்ம எதிர்ப்பு போன்ற பல நிலைகளில் செயல்பட்டது. மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார், எஸ்.எஸ். அருணகிரிநாதர், நாகை சொ. தண்டபாணிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற பலர் இவ்விதழில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

திராவிட நாடு[தொகு]

திராவிட நாடு இதழின் முதல் பக்கம் 1948)

குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிராயராகப் பணியாற்றிய அண்ணாவால் 1942 இல் ஓரணா விலையில் தொடங்கப்பட்டது ‘திராவிடநாடு’. இவ்விதழ் 1963 வரை தொடர்ந்து வெளிவந்த்து. பிறகு ‘காஞ்சி’ என்னும் பெயரில் அண்ணா அதை நடத்தினார். இவ்விதழில் பாரதிதாசன், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன், மு. கருணாநிதி, இரா. செழியன், தில்லை வில்லாளன், ராதா மணாளன், ப. உ. சண்முகம், ப.வாணன், ம.கி. தசரதன், வாணிதாசன் போன்றோர் எழுதியுள்ளனர். மேலும் பல அறிமுகமில்லா இளம் கவிஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்தியது இவ்விதழ். அண்ணாவின் ”தம்பிக்கு” கடிதங்கள் இவ்விதழில் தான் வெளிவந்தன. மேலும் அவரது புகழ்பெற்ற நாடகங்களான ‘சந்திரோதயம்’, ‘நீதிதேவன் மயக்கம்’, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ ஆகிய நாடகங்களும், ‘தீ பரவட்டும்’, ‘ஆரிய மாயை’, ‘கம்பரசம்’ ஆகிய தொடர் கட்டுரைகளும் திராவிட இதழில் வெளிவந்தவையே. 1949 இல் நெடுஞ்செழியன் இதன் துணையாசிரியராக விளங்கினார்.

நம்நாடு[தொகு]

அண்ணாதுரையை ஆசிரியராகக் கொண்டு 1953 தொடங்கி 1972 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ஓரணா விலையில் வெளிவந்த இதழ் நம்நாடு. இவ்விதழின் ஆசிரியர்களாகச் சி. என். அண்ணாதுரை (1953), இரா. நெடுஞ்செழியன் (1956), இரா. செழியன் (1967), சி. பி. சிற்றரசு (1972) ஆகியோர் செயலாற்றியுள்ளனர். ‘நம்நாடு’ இதழில் திமுகவின் முன்னணித் தலைவர்களின் சொற்பொழிவுகளும் முழுமையாக இதழ்தோறும் தொடராக வெளியிடப்பட்டுள்ளன. நம்நாடு பெரும் பொருளிழப்புக்கு ஆளானபோது அண்ணா தமது ஒருமாதச் சம்பளத்தைத் தந்ததோடு மட்டுமல்லாமல் உண்டியல் ஏந்தி ஒரே நாளில் ஒருலட்சம் ரூபாயை நிதியாகத் திரட்டி இதழைத் தொடர்ந்து வெளிவரச் செய்தார்.

நாத்திகம்[தொகு]

பெரியார்மீதும் அவரது கொள்கைகள்மீதும் கொண்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகச் செப்டம்பர் 17, 1958ல் பி. இராமசாமியால் தொடங்கப்பெற்றது ‘நாத்திகம்’. மாதம் இருமுறை இதழான இது 12 காசுகளுக்கு விற்கப்பட்டது. தி.மு.க வை ஆதரித்து எழுதிவந்த இதழ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகத் தி.க. வை ஆதரித்து எழுதியது. அப்போதைய நிலையில் இவ்விதழ் 14,000 படிகள்வரை விற்பனையானது. இவ்விதழை நாளேடாக மாற்றும் முயற்சிக்காக எம். ஆர். இராதா, காமராஜர் தலைமையில் வாணி மஹாலில் நாடகம் நடத்தி 20,000 ரூபாய் நிதி திரட்டித் தந்தார். 1964 க்குப் பிறகு ‘நாத்திகம்’ நாளிதழாக வெளிவந்தது.

புதுவை முரசு[தொகு]

புதுவை முரசு நவம்பர் 10, 1930 இல் தொடங்கப்பெற்று வார இதழாகத் திங்கட்கிழமைதோறும் வெளிவந்த இதழ். தன்மானக் கொள்கைகளைப் பிரெஞ்சிந்தியரிடம் பரப்புவதும், இந்திய மக்களும், அயலக இந்தியர்களும் தன்மானக் கொள்கைகளை ஏற்று இனிதாக வாழ வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்டது. இவ்விதழில் எழுதியவர்களில் பாரதிதாசன், குத்தூசி குருசாமி, எஸ். சிவப்பிரகாசம், சாமி. சிதம்பரனார். ஏ. பி. ஆதித்தர், மா. சிங்காரவேலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்விதழில் பாரதிதாசன் 19 புனைப் பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவ்விதழ் இந்து சமயத்தையும் கிறித்துவத்தையும் தாக்கி எழுதியதாகக் கூறப்படுகிறது.

பொன்னி[தொகு]

திராவிட இயக்கப்பற்றாளர்கள் முருகு சுப்பிரமணியன், அரு. பெரியண்ணன் என்பவர்களால் 1947 முதல் 1954 வரை எட்டு ஆண்டுகள் ‘பொன்னி’ என்னும் இலக்கிய இதழ் நடத்தப்பட்டது. இதன் முதல் இதழில் ‘எங்கெங்கோ ஊறிச் செழிக்கும் கருத்துகளை அவை தமிழர்க்கும் ஆக்கம் தருபவையானால் தேடிக்கொணர்ந்து தமிழர்க்குப் படைப்பாள் பொன்னி. தமிழ் நெஞ்சம் வளமாகும் வகையில் அவள் எண்ண ஓடை பாயும்’ என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு வெளிவந்தது.இவ்விதழின் மூலம் வாணிதாசன், சுரதா, நாரா. நாச்சியப்பன், பெரி. சிவனடியான், சுப்பு ஆறுமுகம் போன்ற 48 கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறிமுகம் செய்யப்பட்டனர்; மதுவிலக்கு, இந்தி எதிர்ப்பு, காஷ்மீர் பிரச்சனை போன்ற அனைத்துலக செய்திகளையும், சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, விவாத மேடை, நூல் மதிப்புரை, திரைப்பட விமர்சனம் என்று பல்சுவை இதழாக வெளிவந்தது.

முரசொலி[தொகு]

மு. கருணாநிதியால் 1942 இல் பொங்கல் நாளன்று ”முரசொலி” ஏடு திருவாரூரில் இருந்து நான்கு பக்கங்கள் கொண்ட துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டது. நிதிநிலைக்கு ஏற்ற எண்ணிக்கையில் பக்கங்கள் அச்சிடப்பட்டன. உலகப்போர் காலத்தில் சரியான அச்சுத்தாள்கள் கிடைக்காத சமயத்தில் 1942 முதல் 1944 வரை வெளிவந்து நின்றுபோன இந்த ஏடு, ஜனவரி 14, 1948 இல் மீண்டும் மறுபிறவி எடுத்தது. அதன்பின் ஏப்ரல் 2, 1954 இல் சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கியது. வார ஏடாக இருந்த முரசொலி, செப்டம்பர் 17, 1960 இல் நாளேடாக மாற்றப்பட்டு இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருக்கிறது. முரசொலி வார ஏட்டில்தான் கருணாநிதியின் ‘புதையல்’, ‘வெள்ளிக்கிழமை’, ‘சுருளிமலை’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’ முதலான புதினங்கள் முதலில் தொடர்களாக வெளிவந்தன். கருணாநிதி “சேரன்” என்ற பெயரில் இவ்விதழை நடத்தினார்.

விடுதலை[தொகு]

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் ஆதரவுடன் சூன் 1, 1935 இல் பெரியாரால் தொடங்கப்பெற்றது ‘விடுதலை’. இது முதலில் கிழமை இருமுறை ஏடாக வெளிவந்து. 1.01.1937 லிருந்து நாளேடாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர்களாகப் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை, அ. பொன்னம்பலனார், மணியம்மை, கி. வீரமணி, அண்ணாதுரை, சா. குருசாமி, சாமி சிதம்பரனார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழ் ஆரிய வர்ணசாதி முறையை எதிர்த்தது. கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், முற்பிறவி, தலைஎழுத்து முதலான கோட்பாடுகளைச் சாடியது. வேத-சாத்திர-புராண-இதிகாச நூல்களை மறுத்துப் பேசியது. பெண்ணடிமை, தீண்டாமை, தீட்டு ஆகிய கொடுமைகளை எதிர்த்தது. பொதுவுடைமையைப் பரப்பியது, தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தது. எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது. மேலும் அரசு நிர்வாகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்குபெறப் போராடியது. இன்று வரை வெளிவந்துகொண்டிருக்கின்றது.

  1. காஞ்சி - அண்ணாதுரை
  2. திராவிடன் - என்.வி.நடராசன்
  3. ஞாயிறு -ஏ.கே.வேலன் - கரந்தை [1]
  4. தென்னகம் - கே.ஏ.மதியழகன்
  5. மன்றம் - இரா.நெடுஞ்செழியன்
  6. பகுத்தறிவு - ப.கண்ணன் (சலகண்டபுரம்)
  7. விருந்து - க. அப்பாதுரையார் [2]
  8. போராட்டம் - (திருவத்திபுரம்) [3]
  9. புரட்சி - மாஜினி, 265 மேலமாசி வீதி, மதுரை [4]
  10. தளபதி - இறைமுடிணி - வார இதழ் - 228/16 கோவிந்தப்பநாய்க்கன் தெரு, சென்னை-1 [5]
  11. களஞ்சியம் - ? - மாத இதழ் - 38, செயின்ட் மேரீஸ் சாலை, சென்னை -18, 1951-திசம்பர்- முதல் நாள் முதல் [6]
  12. சிந்தனைத்துளிகள் பாரிநிலையம், சென்னை [7]
  13. எதிரொலி - என்.எஸ்.இளங்கோ - அதிராம்பட்டினம் [8]
  14. நெல்லைத்தோழன் - வார இதழ் - கே.வி.கே.சாமி - தூத்துக்குடி [8]
  15. நம்நாடு - நாளிதழ் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதழாக 1953 சூன் 15 முதல் வெளிவந்தது 16. கன்னி[9]

உசாத்துணைகள்[தொகு]

  1. இ. சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு (பதி) ‘திராவிட இயக்க இதழ்கள்’ முதல் தொகுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை -113, 2005.
  2. இலக்கிய இதழ்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை- 113.
  3. வல்லிக்கண்ணன்,தமிழில் சிறுபத்திரிகைகள், மணிவாசகர் பதிப்பகம், 2004.
  4. கல்பனாதாசன், ‘சில தீவிர இதழ்கள்’, காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2008.

சான்றடைவு[தொகு]

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:23-3-1952, பக்கம் 8
  2. திராவிடநாடு (இதழ்) நாள்:9-9-1951, பக்கம் 4
  3. திராவிடநாடு (இதழ்) நாள்:2-9-1951, பக்கம் 2
  4. திராவிடநாடு (இதழ்) நாள்:7-10-1951, பக்கம் 11
  5. திராவிடநாடு (இதழ்) நாள்:18-11-1951, பக்கம் 5
  6. திராவிடநாடு (இதழ்) நாள்:25-11-1951, பக்கம் 3
  7. திராவிடநாடு (இதழ்) நாள்:7-10-1951, பக்கம் 9
  8. 8.0 8.1 திராவிடநாடு (இதழ்) நாள்:23-3-1952, பக்கம் 5
  9. திராவிடநாடு (இதழ்) நாள்:7-6-1954, பக்கம் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிட_இயக்க_இதழ்கள்&oldid=3400444" இலிருந்து மீள்விக்கப்பட்டது