உள்ளடக்கத்துக்குச் செல்

பிட்டி தியாகராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தியாகராய செட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிட்டி தியாகராயர்
Pitti Theagaraya Chetty
பிறப்பு(1852-04-27)27 ஏப்ரல் 1852
எகத்தூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு28 ஏப்ரல் 1925(1925-04-28) (அகவை 73)
சென்னை, இந்தியா
பணிவழக்கறிஞர், தொழிலதிபர், அரசியல்வாதி

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் (ஏப்ரல் 27, 1852 - ஏப்ரல் 28, 1925)[1] நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர், தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916-இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வர்களாக இருந்தனர். 1925-இல் இவர் இறந்த போது சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட இடத்திற்கு இவரது நினைவாக தியாகராய நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தியாகராய நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது.[2][3] பிரித்தானிய அரசு இவருக்கு 1909 சனவரி ஒன்றாம் நாள் ராவ் பகதூர் பட்டம் வழங்கியது[4] 1919 சனவரி ஒன்றாம் நாள் திவான் பகதூர் என்னும் பட்டம் பெற்றார்[5]

இளமை

[தொகு]

தியாகராயர் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் இணையருக்கு 1852-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27-ஆம் நாள் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இக்குடும்பம் நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும் செல்வந்தர்கள் ஆவர். தியாகராயர் 1876-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். இவர்களுக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர்.

தொழில்

[தொகு]

தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அவற்றில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர். இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார். நெசவாளர்கள் மாநாடு, கண்காட்சிகளை நடத்தி அதில் நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்றார்.

தனது வீட்டருகே பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறிகளைக் கொண்ட நெசவாலையை ஏற்படுத்தினார். கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே. அதற்கு முன் நாடாவைக் கைகளில் தள்ளித் தான் நெய்தார்கள். இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப் புகழ் பெற்றவை.

அரசியல்

[தொகு]

இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினார். காந்தியடிகள் சென்னை வந்த போது அவருக்குச் சிறப்பானதொரு வரவேற்பைத் தந்தார். 1882-ஆம் ஆண்டு சென்னை உள் நாட்டினர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்தினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் சென்னை மகாஜன சபை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இச்சபை அவ்வப்போது சென்னையில் கூடி விவாதித்துக் கோரிக்கைகளை ஆங்கிலேயே அரசுக்கு அனுப்பி வந்தது. 1916-ஆம் ஆண்டு வரை அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரராகவே செயல்பட்டார். தந்தை பெரியாருக்கும் முன்னரே சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தவர் இவரே. தமிழகக் காங்கிரஸில் ஆதிக்க வெறி கண்டு மனம் வெதும்பிய இவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அப்போது அவரைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பெரியார், பின்னாளில் அதே காரணத்திற்காகக் காங்கிரஸை விட்டு விலகி, தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார். 1916-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், கே. வி. ரெட்டி நாயுடு, தியாகராயர் ஆகியோர் காங்கிரசுக் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

பல கட்சிகளிலும் இருந்த தலைவர்கள் இவரிடம் கொள்கை ரீதியாக வேற்றுமை கொண்டிருந்தாலும் உளப்பூர்வமாக இவரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். ஒரு சமயம் இவரின் நிர்வாகத்தை எதிர்த்து தமிழ்த்தென்றல் திரு. வி. க. சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் மிக ஆவேசமாக உரையாற்றினார். அவரிடமும் தியாகராயர் நட்புணர்வு பாராட்டினார். சர். சி. பி. ராமசாமி அய்யர் தேர்தலின் போது தியாகராயரை எதிர்த்துப் போட்டியிட்டார். துப்பாக்கியைக் காட்டி அவருக்கு எதிராக வாக்கு சேகரித்தார். ஆனால் மிகவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தியாகராயர். அவர் மறைந்த போது அதே சி. பி. ராமசாமி அய்யர், "ஒரு தன்னலமற்ற மனிதாபிமானியை இழந்தோமே" என்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

நீதிக்கட்சி

[தொகு]
1920களில் நீதிக்கட்சித் தலைவர்கள் - முன்வரிசையில் சிறுகுழந்தைக்கு வலப்புறம் தியாகராய செட்டி அமர்ந்திருக்கிறார்

1916-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20-ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் தியாகராயர் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் நீதி (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்தி வந்த "நீதி' என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்றி பரவலாக அழைக்கத் தொடங்கினர்.

தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவராக சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தியாகராயர் வெளியிட்ட கொள்கை விளக்க அறிக்கை, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் நீதிகட்சியின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் பேராதரவு தந்தனர். நீதிக்கட்சி இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் வேண்டும் என்று கோரியது.

தியாகராயரின் தன்னலமற்ற விடாமுயற்சிகளின் காரணமாக, 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முன் வந்தது. அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் வெலிங்டன் பிரபு, நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், தான் முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார்.

காந்தியும் தியாகராயரும்

[தொகு]

தியாகராயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்த போதிலும் பார்ப்பனிய ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதனால் அவர் மகாத்மா காந்தியிடமும் முரண்பட நேர்ந்தது. காந்தியின் கதர் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பழைய முறையிலான கைத்தறி நெசவு நம் இந்திய முன்னேற்றத்திற்கு ஏற்றதல்ல; அதில் புதுமையைப் புகுத்தி தொழில் புரட்சி புரிய வேண்டும் என்பது தியாகராயரின் எண்ணம். அதில் தீவிரமும் காட்டினார். காந்தியடிகள் இவரிடம் முரண்பட்ட போதும், அவர் சென்னைக்கு வந்த போது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து அதை பார்வையிட்டார். அதில் ஒரு தறியில் அமர்ந்து நெய்தும் பார்த்தார். அதில் கண்டிருந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத் தன்னுடைய புதல்வர்களான மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத கலைப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.

சமயப் பணிகள்

[தொகு]

தியாகராயரை எல்லோரும் நாத்திகர் என்றே நம்பியிருந்தனர். ஆனால் அவர் சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார். சென்னையிலுள்ள மயிலை கபாலீஸ்வரர் கோவிலை இந்திய ரூபாய் பத்தாயிரம் செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் கோவிலைச் சேர்ந்தோர் இவரைக் கோபுரத்திலேறி கும்பநீரை ஊற்ற அனுமதிக்கவில்லை. பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தில் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடிக் கண் விழிகளை இலண்டனிலிருந்து தருவித்தார். இன்றும் அந்த வாகனத்தில் தான் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

பதவியும் தொண்டும்

[தொகு]
  • 1920 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி நகராண்மைத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தலைவர் (மேயர்) சர்.பிட்டி. தியாகராயர் ஆவார்.
  • 1905-ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, நகராண்மைத் தலைவராக இருந்த தியாகராயர், இளவரசரை வெள்ளுடை அணிந்து வரவேற்க அப்போதைய ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
  • 1882 முதல் 1923 வரை சுமார் 41 ஆண்டுகள் சென்னை நகராண்மைக் கழகத்துடன் தொடர்புடையவராக திகழ்ந்த தியாகராயர், 1081 கூட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
  • 1920-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சிப் பள்ளியில் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • சென்னை மாநகராட்சி கூடத்தின் பின்புறம் உள்ள மக்கள் பூங்காவையும், பேரக் நெய்டன் என்னும் இடத்தில் பெண்களுக்கென்று தனியாக ஒரு பூங்காவைவையும் நிறுவினார்.
  • 1909 – 12 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் குழுவிற்கு நகராண்மைக் குழுவிலிருந்து அனுப்பப்படும் ஒரு நகரசபை உறுப்பினராக திகழ்ந்தார்.

கல்விப்பணி

[தொகு]

தியாகராயர் தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் நிறுவியதே. சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவப் பெரும் தொண்டாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக வழி ஏதும் செய்யப்படாமையால் செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். பாடசாலைகளைப் போலவே தொழில் நுட்பப் பயிற்சி பள்ளிகளைத் தொடங்கினார். முஸ்லீம் கல்வி அறக்கட்டளையிலும் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்தார். பச்சையப்பர் கல்வி அறக்கட்டளையைச் சீரமைத்து அனைவரும் உறுப்பினராகும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.

சிறப்புகள்

[தொகு]

தியாகராயரின் நினைவாக இன்றும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரிக்கு இவரது பெயர் உள்ளது. மேலும் சென்னை தியாகராயர் நகர் என்பது இவரைக் குறிப்பதுவே. பெங்களூரிலும் தியாகராயர் நகர் என்ற பகுதி உள்ளது. இந்திய அரசு இவரினுருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. அஞ்சல் தலையின் பின்னணியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவம் காணப்படுகிறது.

ரிப்பன் மாளிகை எனப்படும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் இவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1959-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற தி. மு. க. உறுப்பினர்கள் நகர மன்றத்தில் நுழையும் முன் வளாகத்தின் எதிரில் அமைந்திருந்த தியாகராயர் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நூல்கள்

[தொகு]

தியாகராயர் பற்றிப் பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில:

  • ஜி.ஜெயவேல் என்பவர் எழுதிய வள்ளுவர் வகுத்த நெறிமுறையில் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் வாழ்க்கை

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும், முனைவர் பி. சரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998, பக். 219
  2. Ralhan, O. P. (2002). Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT. LTD. ISBN 8174888659, ISBN 978-81-7488-865-5. {{cite book}}: Check |isbn= value: invalid character (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. Some Madras Leaders. 1922., Pg 38 - 42
  4. The Asylum Press Almanack and Directory of Madras and Southern India 1919, page 289
  5. The Asylum Press Almanack and Directory of Madras and Southern India 1919, page 285
புதிய அரசியல் கட்சி நீதிக்கட்சியின் தலைவர்
1917-1925
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டி_தியாகராயர்&oldid=4262344" இலிருந்து மீள்விக்கப்பட்டது