உள்ளடக்கத்துக்குச் செல்

வலம்புரி ஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலம்புரி ஜான்
பிறப்புஜான்
1946 அக்டோபர் 14
உவரி, திருநெல்வேலி, தமிழ்நாடு,  இந்தியா
இறப்பு8 மே 2005(2005-05-08) (அகவை 58)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வலம்புரி, பைரவி
சமயம்கிறித்துவம்
பெற்றோர்தந்தை: ஏ.டி.சி.ஃபர்னந்தோ

வலம்புரி ஜான் (Valampuri John, 1946அக்டோபர் 14 - 2005 மே 8) ஒரு தமிழ் எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் ஆவார்.

பிறப்பு[தொகு]

டி.சி.ஜான் என்ற இயற்பெயருடைய வலம்புரி ஜான் திருநெல்வேலி மாவட்டம் உவரி என்னும் கிராமத்தில் ஏ.டி.சி. ஃபர்னந்தோ (A.D.C. Fernando) - வியாகுலம் ஆகியோருக்கு மகனாக 1946 அக்டோபர் 14 அன்று பிறந்தார். பெற்றோரை இளம்வயதிலேயே இழந்தார். பின்ன்வர் இவரை அவர்தம் அண்ணன்களான ஆல்பிரட், மோகன் ஆகியோர் வளர்த்தனர்.

கல்வி[தொகு]

8ஆம் வகுப்பு வரை உவரியில் பயின்றார். உயர்நிலைப்பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்றார். பொது ஆட்சியியலில் (Public Administration) முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட முதுவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் "பேராசிரியர் இரத்தினசுவாமி - நாடாளுமன்றவாதி" என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1992இல் முனைவர் (D.Litt) பட்டமும் வணிகமேலாண்மையில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார். காந்தியச் சிந்தனையிலும் இதழியலிலும் பட்டயம் பெற்றார்.

தொழில்[தொகு]

 • கல்லூரிக்கல்வி முடிந்ததும் பேராசிரியர் வளனரசின் பரிந்துரையால் தினமலர் இதழின் திருச்சி பதிப்பில் உதவியாசிரியராகப் பணியிற் சேர்ந்தார்.[1] அங்கு சிலகாலமே பணியாற்றினார்.
 • அடுத்து திருவள்ளூர்-திருத்தணிச் சாலையில் உள்ள "பாண்டூர்" என்ற ஊரில் "காபிள்" என்ற ஆங்கிலப்பள்ளியில் தன் மாமா ஒருவரின் பரிந்துரையால் ஆங்கில ஆசிரியர் ஆனார். அங்கும் சில காலமே பணியாற்றினார்.
 • பின்னர் சட்டம் பயின்று வழக்குரைஞராகச் சென்னையில் சிறிதுகாலம் பணியாற்றினார்.
 • தில்லியில் இந்திய ஆட்சிப்பணி பயிற்சியகம் ஒன்றில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இதழாளர்[தொகு]

 • மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 சூன் 08ஆம் நாள் தொடங்கப்பட்ட தமிழ் இதழான தாய் இதழுக்கு ஆசிரியராகப் பன்னிரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார்.
 • பாப்பாமலர் என்ற சிறுவர் இதழுக்கும் மெட்டி என்ற மாதநெடுங்கதை இதழுக்கும் மருதாணி என்ற திரைப்படஞ்சார்ந்த இதழ்களுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1][2]
 • சப்தம், ராஜரிஷி ஆகிய இதழ்களை நிறுவி அவற்றின் ஆசிரியராக சிறிதுகாலம் இருந்தார்.

முதற்படைப்பு[தொகு]

இவரது முதற்படைப்பு கண்ணதாசன் வெளியிட்ட "கடிதம்" என்ற இதழில் வெளிவந்தது.[3]

அரசியல்[தொகு]

இவர் தனது அரசியல் வாழ்க்கையைதிராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கினார். பின்னர், ஜனதா கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்பு இ.தே.காங்கிரசில் இணைந்தார். 1996இல் ஜி. கே. மூப்பனாரால் நிறுவப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் உடன் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறிதுகாலம் இருந்தார். இறுதிக்காலத்தில் அரசியலிருந்து விலகி இருந்தார்.

பதவி[தொகு]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1974 ஏப்ரல் 3 ஆம் நாள் தொடங்கி 1974 அக்டோபர் 14ஆம் நாள் வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். உரிய வயதினை அடைவதற்கு முன்னரே அப்பதவிக்குத் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் அப்பதவியை இழந்தார். மீண்டும் அ.இ.அ.தி.மு.க.சார்பில் 1984 ஏப்ரல் 3ஆம் நாள் முதல் 1990 ஏப்ரல் 2ஆம் நாள் வரை அந்த அவையில் உறுப்பினராகப் பதவிவகித்தார்.

1983 ஆம் ஆண்டில் சட்டமன்ற மேலவையின் உறுப்பினரானார். 1984ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இப்பதவியிலிருந்து விலகினார்.[4]

தமிழ்நாட்டு அரசின் வேளாண்மைத்தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.[1]

குடும்பம்[தொகு]

இவர் மேரிபானு என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு பெண்மக்களும் பிரபு என்னும் மகனும் [5] பிறந்தனர்.

நூல்கள்[தொகு]

இலக்கியம், அரசியல் மற்றும் சித்த மருத்துவம் உட்பட பல துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். அவை:

 1. அங்கொன்றும் இங்கொன்றும் (கட்டுரைகள்) 1995
 2. அந்தக இரவில் சந்தன மின்னல், (கவிதைகள்) 1984
 3. அம்மா அழைப்பு (கவிதைகள்) 1974
 4. அவர்கள் (கவிதைகள்), 1998 ஆகத்து, பானுசரணம் பதிப்பகம், சென்னை.
 5. அஸ்திவாரங்கள் தெரிவதில்லை (நெடுங்கதை)
 6. ஆண்டாள் அருளிய அமுதம் (கவிதைகள்) 1995
 7. இதயம் கவர்ந்த இஸ்லாம் (மதம்) 1999
 8. இதோ சில பிரகடனங்கள் (கட்டுரைகள்) 1972
 9. இந்த நாள் இனிய நாள் - பாகம் 1 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
 10. இந்த நாள் இனிய நாள் - பாகம் 2 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
 11. இந்த நாள் இனிய நாள் - பாகம் 3 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
 12. இந்த நாள் இனிய நாள் - பாகம் 4 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
 13. இந்த நாள் இனிய நாள் - பாகம் 5 (தொலைக்காட்சித் தொடர் உரை) 1998
 14. இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் (கட்டுரைகள்) 1976
 15. இரண்டாவது அலைவரிசை (கட்டுரைகள்) 1998
 16. இறந்துபோன இந்தியக் கடவுள்கள் (கட்டுரைகள்) 1972
 17. இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் (மதம்) 1993
 18. உங்களைத்தான் அண்ணா! (கட்டுரைகள்) 1972
 19. உள்ளதைச் சொல்லுகிறேன் - முதலாம் தொகுதி, (கட்டுரைகள்) 1983
 20. உள்ளதைச் சொல்லுகிறேன் - இரண்டாம் தொகுதி, (கட்டுரைகள்) 1983
 21. உள்ளதைச் சொல்லுகிறேன் - மூன்றாம் தொகுதி; (கட்டுரைகள்) 1983 திசம்பர்; பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 (பானு பதிப்பக வெளியீடு எண் 57)
 22. எல்லா இராத்திரிகளும் விடிகின்றன (கட்டுரைகள்) 1987, இ.பதி. 2000 அலங்கார் பப்ளிகேஷன்ஸ்.
 23. எழுச்சி நியாயங்கள் (கட்டுரைகள்) 1971
 24. ஒரு ஊரின் கதை (நெடுங்கதை); 1975 நவம்பர்; பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 [6]
 25. ஒரு நதி குளிக்கப்போகிறது (கவிதை) 1980, அபிராமி பப்ளிகேஷன்ஸ், 307, லிங்கி செட்டி தெரு, சென்னை-600001
 26. கல்நொங்கு (சிறுகதைகள்) 1999
 27. கலைஞரின் கவிதைகள் (திறனாய்வு) 1998
 28. காகிதக் கணைகள் (கட்டுரைகள்) 1972
 29. காதல் கடிதங்கள் (கற்பனைக் கடிதங்கள்), 1974 அக்டோபர்,தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-5,[6] இ.பதிப்பு 1982 நவம்பர், கவிதாபானு, சென்னை.
 30. காதலும் காமமும் - பாகம் 1 (கட்டுரைகள்)
 31. காதலும் காமமும் - பாகம் 2 (கட்டுரைகள்)
 32. காந்தியா? அம்பேத்காரா? (கட்டுரைகள்) 1972
 33. காலத்தை வென்ற காதலர்கள் - தொகுதி 1 (சிறுகதைகள்) 1998
 34. காலத்தை வென்ற காதலர்கள் - தொகுதி 2 (சிறுகதைகள்) 1998
 35. காற்றின் சுவாசம், (கவிதைகள்) 1972
 36. கேரள நிசப்தம் (வாழ்க்கை வரலாறு) 1986
 37. சாதனை சரித்திரம் சவேரியார் (வாழ்க்கை வரலாறு) 1993
 38. சுயாட்சியா? சுதந்திரமா? (கட்டுரைகள்) 1971
 39. சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக, (கட்டுரைகள்) 1978, இ.பதி 1983 அக்டோபர், கவிதாபானு, சென்னை.
 40. சில உரத்த சிந்தனைகள் (கட்டுரைகள்) 1972
 41. சீனம் சிவப்பானது ஏன்? (கட்டுரைகள்) (இலங்கையில் தடைபடுத்தப்பட்டது); 1974 அக்டோபர், இ.பதி. 1982 நவம்பர், மூ.பதி. 1998 சூன் மாரிமுத்துப் பதிப்பகம், சென்னை.
 42. சொர்க்கத்தில் ஒருநாள் (பயணக்கட்டுரை) 1983 டிசம்பர், இ.பதி. 1998 மே 5. மாரிமுத்துப் பதிப்பகம், சென்னை.
 43. தாகங்கள் (சிறுகதைகள்) 1972
 44. தெற்கு என்பது திசையல்ல (கட்டுரைகள்) 1977
 45. தொரியன் மணக்கிறது (கட்டுரைகள்) 1986
 46. நாயகம் எங்கள் தாயகம் (கவிதைகள்) 1995
 47. நான் ஏன் தி.மு.க?
 48. நான் கழுதையானபொழுது (கட்டுரைகள்) 1986
 49. நான் விமர்சிக்கிறேன்! (கட்டுரைகள்), 1975 பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 [6]
 50. நியாயங்களின் பயணம்
 51. நியாயம் கேட்கிறோம் (கட்டுரைகள்) (அவசரநிலைக் காலத்தில் தடைபடுத்தப்பட்டது) 1975
 52. நிருபர் (நெடுங்கதை) 1998
 53. நீங்கள் கேட்காதவை (சிறுகதைகள்) 1981
 54. நீர்க்காகங்கள் (நெடுங்கதை), 1975 பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 [6]
 55. நீலம் என்பது நிறமல்ல! (கவிதைகள்); 1980; இ.பதி.1987; ஜம் ஜம் பப்ளிகேஷன்ஸ், சென்னை
 56. பலர் நடக்காத பாதை (கவிதைகள்) 1994
 57. பற்றி எரிகிற பனிநதிகள் (கடிதங்கள்), 1983 டிசம்பர், கவிதாபானு, சென்னை
 58. பாரதி - ஒரு பார்வை (திறனாய்வு) 1975; பானுப்ரியா, 16 அகத்தீஸ்வர் நகர், ஹால்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை - 10.
 59. பாரதி நேற்று, இன்று, நாளை (கட்டுரைகள்) 1995
 60. பிரார்த்தனைப் பூக்கள்
 61. புதுவைதந்த போதை! (திறனாய்வு) 1976
 62. பூக்கள் பறிப்பதற்கு அல்ல!(நெடுங்கதை)
 63. பூவுக்கு வாசம் வந்தாச்சு (நெடுங்கதை), 1986
 64. பைபிள் கதைகள் (1997ஆம் ஆண்டில் கல்கியில் வெளிவந்த தொடர்)
 65. மண்ணில் விழுந்த மகரந்தங்கள் (சிறுகதைகள்) 1977
 66. மற்றும் பலர் (கவிதைகள்) 1998
 67. மீண்டும் மகாத்மா! (கட்டுரைகள்) 1974
 68. மூங்கில் பூ (நெடுங்கதை) 1998
 69. வணக்கம், : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
 70. வரலாற்றில் கலைஞர் (கட்டுரைகள்) 1971
 71. வருடம் முழுவதும் வசந்தம் (பயணக்கட்டுரை) 1985
 72. வலைஞர் நெஞ்சில் கலைஞர் (கவிதைகள்) 1974
 73. வாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் (கட்டுரைகள்)மு.பதி. 2007; இ.பதி. 2009; சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
 74. விதைகள் விழுதுகள்
 75. விந்தைமனிதர் வேதநாயகர் (வாழ்க்கை வரலாறு) 1974
 76. வெளிச்சத்தின் விலாசம் (சிறுகதைகள்) 1997
 77. ஜெயலலிதா; : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
 78. Farhanali words
 79. Rages of Rascal (Poems) 1984
 80. Reconstruction of Islamic thought
 81. Trumpet in Dawn (Essays) 1974
 82. Frontiers of our Foreign Policy (Essays) 1995
 83. Islam: Evidence of an eyewitness (Essays) 1999

தொகுத்த நூல்கள்[தொகு]

 1. ஆர்.எம்.வி.ஓர் ஆலயம்

தொகுத்துப் பதிப்பிக்க வேண்டியவை[தொகு]

 • தாய் இதழின் கடைசிப்பகுதியில் எழுதிய "உள்ளதைச் சொல்கிறேன்" பகுதி
 • அரசியல், இலக்கியச் சொற்பொழிவுகள்
 • தாய் இதழில் பைரவி என்ற பெயரில் எழுதிய வினா-விடைகள்
 • பிறர் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள்
 • நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையிலும் தமிழ்நாடு சட்ட மேலவையிலும் ஆற்றிய உரைகள்
 • சன் டிவியில் ஆற்றிய 'இந்த நாள் இனிய நாள்' உரைகள்
 • முரசொலி உள்ளிட்ட இதழ்களில் எழுதிய தொடக்க காலக் கட்டுரைகள்
 • தாய் இதழிலிருந்து வெளியேறிய பின்னர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள்
 • முனைவர் பட்ட ஆய்வேடு
 • கருத்தரங்குகளில் வாசித்த ஆங்கிலக் கட்டுரைகள்

பதிப்பாளர்[தொகு]

கவிதா பானு பதிப்பகம் என்ற நூல்வெளியீட்டு நிறுவனம் ஒன்றை வலம்புரி ஜான் உருவாக்கினார். அதன் வழியாக தனது நூல்களையும், ஜெயலலிதா, பொன்.ஜெயந்தன் ஆகியோரைப் போன்றோர் எழுதிய் நூல்களையும் வெளியிட்டார்.

திரைப்படம்[தொகு]

பாடலாசிரியர்[தொகு]

வலம்புரி ஜான் பின்வரும் திரைப்படங்களில் பாடல்கள் இயற்றியுள்ளார்[7]:

 1. வரப்பிரசாதம், 1976
 2. சுதந்திர நாட்டின் அடிமைகள்
 3. பிரியமுடன் பிரபு
 4. பொறுத்தது போதும், 1988 சூலை 15 [8]
 5. ஞானபறவை, 1991 பிப்ரவரி 11
 6. பத்தினி [9]
 7. அன்பு [10]

மேலும், சமயப்பாடல்கள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். அவற்றுள் சில 'இயேசுவின் அமுதம்' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.[11]

கதை வசனம்[தொகு]

 1. குங்கும கோலங்கள் [12]

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு[தொகு]

1988ஆம் ஆண்டில் பானு ரேவதி கம்பைன்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அது அந்தக்காலம் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.[12]

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

வலம்புரி ஜான் பின்வரும் விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.[3]

 1. கலைமாமணி - தமிழ்நாட்டரசு
 2. வார்த்தைச்சித்தர் - கிருபாநந்த வாரியார்
 3. ஞானபாரதி - குன்றக்குடி அடிகளார்

வலம்புரி ஜானைப்பற்றிய நூல்கள்[தொகு]

 1. வளரும் தமிழில் வலம்புரி ஜான் - தொகுத்தவர் எதிரொலி விசுவநாதன்

பெயர்மாற்றம்[தொகு]

தமிழர்கள் மதம் தொடர்பான தமது பெயர்களைத் துறந்து தூயதமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று வலம்புரி ஜான் தனது பெயரை 'வலம்புரியார்' என்று மாற்றிக்கொள்வதாகவும் அங்ஙனமே கையொப்பம் இடுவதாகவும் 2002 திசம்பரில் அறிவித்தார்.[13]

வக்கற்றவர்[தொகு]

வலம்புரி ஜான், அவர் மனைவி பானு ஆகிய இருவராலும் தாம் அர்சூன் தாசு என்பவரிடம் வாங்கிய கடன் ரூ. 12.28 லட்சத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. எனவே, அர்சூன் தாசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதி மன்றம் 2004 ஏப்ரலில் அவர்கள் இருவரையும் வக்கற்றோர் (திவாலானோர்) என்று அறிவித்தது.[14]

இறப்பு[தொகு]

இவர் 2005 மே 8ஆம் நாள் சிறுநீரக் கோளாறால் தொடர் சிகிச்சைபெற்று மரணமடைந்தார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 வலம்புரி ஜான் வளர்த்த தமிழ் - பேராசிரியர் வளன் அரசு
 2. எல்லை தாண்டிய ராஜாளிப் பறவை! - ராசி.அழகப்பன்
 3. 3.0 3.1 13.10.2001 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணிவரை ஒலிபரப்பான வானொலிச் செவ்வி, எழுத்துவடிவம்-வல்லமை இதழ்
 4. மாநிலங்களவை உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-06-2018
 5. பல பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘தாய்’க்கு உண்டு! - ராசி.அழகப்பன்
 6. 6.0 6.1 6.2 6.3 தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 38
 7. Filibeat - Valampuri John
 8. [1]
 9. [2]
 10. [3]
 11. [4]
 12. 12.0 12.1 எக்காலத்திற்கும் மறக்க முடியாத சினிமா அனுபவம்!
 13. ஒன் இந்தியா தமிழ் 2002 திசம்பர் 24
 14. ஒன் இந்தியா தமிழ் 2004 ஏப்ரல் 16
 15. [5]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலம்புரி_ஜான்&oldid=3944099" இலிருந்து மீள்விக்கப்பட்டது