கி. வீரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கி.வீரமணி M.A., B.L.,
தமிழர் தலைவர் கி.வீரமணி M.A., B.L.,.jpg
கி.வீரமணி M.A., B.L.,
பெரியார் திடல் வேப்பேரி சென்னை
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 2, 1933 (1933-12-02) (அகவை 84)
கடலூர் முதுநகர், கடலூர் மாவட்டம்
அரசியல் கட்சி திராவிடர் கழகம்
இருப்பிடம் சென்னை
சமயம் கடவுள் மறுப்பாளர்
இணையம் http://kveeramani.com

கி. வீரமணி திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர் . பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார். ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.

வாழ்க்கை குறிப்பு

இவர் கடலூர் மாவட்டம் முதுநகரில் 1933ல் பிறந்தார். இவரின் இயற்பெயர் சாரங்கபாணி. பத்து வயதில் தந்தைப் பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் பேசத் தொடங்கினார். 11 வயதில் சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில் ஒரு தீர்மானத்தின் மீது உரையாற்றினார். 1944 சூலை 29 அன்று தந்தை பெரியாரைப் பார்த்தார். 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள் கலந்து கொண்ட நிகழ்வுகள் 227. கலந்து கொண்ட மாநாடுகள் 16. பயணம் செய்த தூரம் 23422 கி.மீ. 23 வயதில் முதுகலை வகுப்பினை முடித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 25 வயதில் கடலூர் திராவிடநாடு பிரிவினை மாநாட்டிற்கு வருகை புரிந்தோரின் உடைமைகளைப் பாதுகாக்கும் பணியினைச் செய்தார். 27 வயதில் சட்டக் கல்வியை முடித்ததோடு தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு பெரியாருடன் தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார். திராவிடர் கழக பொதுச்செயலாளராகவும் ஆனார். 29 வயதில் விடுதலை பத்திரிக்கையின் நிருவாக ஆசிரியர் பொறுப்பேற்றார். 38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 43 வயதில் நெருக்கடி நிலையில்(மிசா) கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 59 வயதில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க 31(சி) தனிச் சட்டத்தை உருவாக்கினார். 65 வயதில் (1998) பெரியார் பிஞ்சு குழந்தைகள் இதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.

ஆசிரியர் பணி

1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியர் குத்தூசி குருசாமி பொறுப்பு விலகிய நிலையில் பொறுப்பேற்ற இவர் தொடர்ந்து 50 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார். 4 பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த விடுதலை -இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என இரண்டு பதிப்புகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆங்கில (The Modern Rationalist) இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இணைய தளங்கள் மூலமாகவும் மேற்கண்ட இதழ்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைப் பரப்புகின்றார்.

கல்விப்பணி

 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]
 • பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி[1]
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]
 • நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி[1]
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]
 • பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி[1]
 • சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி[1]
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி[1]
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்[1]
 • பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு[1]
 • பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
 • பெரியார் கணினி மய்யம், திருச்சி[1]
 • பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி[1]
 • பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி[1]
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை[1]
 • பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை[1]
 • பெரியார் அருங்காட்சியகம், சென்னை[1]
 • பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை[1]
 • பெரியர் நகர குடும்பநல மய்யம், சென்னை[1]
 • பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை[1]
 • பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை[1]
 • இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை[1]
 • பெரியார் கல்வியகம், சென்னை[1]
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை[1]
 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை[1]
 • பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை[1]
 • பெரியார் பயிற்சி மய்யம், சென்னை[1]
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை[1]
 • பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்[1]
 • பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்[1]
 • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்[1]
 • பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை[1]
 • பெரியார் வலைக்காட்சி, சென்னை[1]
 • பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை[1]
 • பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி[1]
 • பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி.[1]

படைப்புகள்

 • கீதையின் மறுபக்கம்[2]
 • மகாபாரத ஆராய்ச்சி[2]
 • உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?[2]
 • திராவிட பண்பாட்டை பாதுகாப்போம்![2]
 • திராவிடர் மாணவர் கழகத்தில் சேர வேண்டும்![2]
 • திராவிடர் கழகத்தில் சேர வேண்டும்-ஏன்?[2]
 • தமிழர் சமூக விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணம் ஏன்?[2]
 • 'சன்' தொலைக்காட்சிக்கு-வீரமணி பேட்டி[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 1[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 2[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 3[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 4[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 5[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 6[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 7[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 8[2]
 • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 9[2]
 • காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?[2]
 • கீதையும் திராவிட பண்பாடும்[2]
 • நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?[2]
 • 21-ம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே![2]
 • போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் - ஏன்?[2]
 • கோயில்கள் கோபுரங்கள் ஏன்? எதற்காக?[2]
 • கல்லூரிகளில் சோதிட மூடநம்பிக்கையா?[2]
 • புட்டபர்த்தி சாய்பாபா...?[2]
 • இட ஒதுக்கீடு பற்றிய கேள்விகளுக்கு பதில்கள்[2]
 • உலகெங்கும் நமது கொள்கை[2]
 • வீரமணியின் செவ்வி(பேட்டி)கள்[2]
 • மனிதநேயமும் - நாகரிகமும்[2]
 • தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை[2]
 • தேவை பாலியல் நீதி[2]
 • சக்தி வழிபாடு[2]
 • மூடநம்பிக்கைகள்[2]
 • சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே![2]
 • மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் ஏன்?[2]
 • வெள்ளி முளைக்கட்டும் விடியல் பிறக்கட்டும்[2]
 • தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - ஏன்?[2]
 • சிதம்பர ரகசியம்[2]
 • கழகமும் பிரச்சாரமும்[2]
 • இலட்சியத்தை நோக்கி...[2]
 • பிரார்த்தனை மோசடி[2]
 • ஈழத் தமிழர் பிரச்சனை சில உண்மைகள்[2]
 • தந்தை பெரியாரும் சில புரட்டுகளும் உண்மைத் தகவல்களும்[2]
 • இந்திய அரசியல் சட்ட முதல் திருத்தம் ஏன்? எதற்காக?[2]
 • தமிழக முன்னோடிகளில் தந்தை பெரியார்[2]
 • சமூக நீதி[2]
 • மலேசியா - சிங்கப்பூர் தமிழர்களிடையே வீரமணி விரிவுரை[2]
 • திராவிடர் கழகத்தில் மகளிர் சேர வேண்டும் ஏன்?[2]
 • பகவத் கீதை இதுதான்[2]
 • பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்[2]
 • கி.வீரமணி பதில்கள்[2]
 • எனது மரண சாசனம்[2]
 • கோயில்கள் தோன்றியது ஏன்?[2]
 • அருண்ஷேரியின் அம்பேத்கார் பற்றிய நூலுக்கு மறுப்பு[2]
 • வர்ணதர்மமும் பெண்ணடிமையும்[2]
 • அறிஞர் அண்ணா[2]
 • வகுப்புரிமை வரலாறு[2]
 • காவிரிப் பிரச்சனை தீர்ந்துவிட்டதா?[2]
 • வைக்கம் போராட்ட வரலாறு[2]
 • டாக்டர் அம்பேத்கார் புத்தநெறியை தழுவியது ஏன்?[2]
 • தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி[2]
 • வாழ்வியல்[2]
 • பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை[2]
 • காஞ்சி சங்கராச்சியார் - யார்? ஓர் ஆய்வு[2]
 • வெறுக்கத்தக்கதே பிராமணியம்[2]
 • கீதையின் மறுப்பக்கம் மக்கள் பதிப்பு[2]
 • காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்[2]
 • பெரியாரியல் பாகம் 1 முதல் 5 வரை[2]
 • பெரியாரியல் ஆய்வுரைகள்[2]
 • கி.வீரமணியின் ஆய்வுரைகள் - 1996[2]
 • கி.வீரமணியின் ஆய்வுரைகள் - 1997[2]
 • கி.வீரமணியின் ஆய்வுரைகள் - 1998[2]
 • சுயமரியாதை திருமணம் - தத்துவமும் வரலாறும்[2]
 • பெரியார் ஆயிரம் வினா விடை[2]
 • "டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் - புத்தகக் காதலும்"-2017

சிறைவாசம்

 1. 1956இல் ராமன் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
 2. 1960இல் தேசப்படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
 3. 1974இல் இராவணலீலா போராட்டத்தில் கைதானார்.
 4. 31.01.1976 முதல் 23.01.1977 வரை மிசா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 5. 31.10.1977 இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்.
 6. நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தான கவி கண்ணதாசனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியதற்கு 22.03.1979 முதல் 04.04.1979 வரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 7. 1981இல் மனுதர்ம சாத்திரத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
 8. 16.03.1982இல் இஸ்மாயில், சோமசுந்தரம் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி கோட்டை முன் மறியல் செய்து கைதானார்.
 9. 23.01.1983இல் ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.
 10. 09.08.1984இல் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
 11. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆகஸ்டு 15 அய் (1984) துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக்கொடி ஏற்றியதற்கு கைது செய்யப்பட்டார்.
 12. ஈழத்தில் ராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு 07.09.1984இல் சென்னையில் கருப்புக் கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
 13. 13.12.1984இல் தமிழக மீனவர்களை சிங்களக்கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல் செய்து கைதானார்.
 14. 22.09.1985இல் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்துப்போராட்டம் நடத்தியதற்கு கைது செய்யப்பட்டார்.
 15. காவிரி நீருக்காக திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்து 30.10.1985 முதல் 05.11.1985 வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
 16. புதிய கல்வித்திட்ட நகல் எரித்ததற்கு 22.06.1986 முதல் 04.07.1986 வரை சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 17. 07.10.1986 இல் டில்லியில் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
 18. 20.02.1987இல் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக கப்பல் மறியல் செய்து தூத்துக்குடியில் கைதானார்.
 19. 01.06.1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.
 20. 02.08.1987இல் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகல் எரித்து சிறை சென்றார்.
 21. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் செய்ததற்கு 26.10.1987முதல் 04.11.1987 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
 22. 25.01.1988இல் இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம் செய்து கைதானார்.
 23. 21.03.1988இல் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து மதச் சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டி சென்னை கிண்டியில் கைதானார்.
 24. 10.09.1988இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்கச் செல்கையில் கைதானார்.
 25. 08.11.1988இல் தீண்டாமை, சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவி எரித்ததற்கு கைது செய்யப்பட்டார்.
 26. 01.08.1989 இல் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி தமிழகம் எங்கும் அஞ்சலகங்கள் முன் மறியல் செய்ததால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
 27. 10.10.1990அல் மண்டல் குழுப் பரிந்துரையை தடை செய்த உச்சநீதிமன்ற ஆணையை எரித்து கைதானார்.
 28. 09.11.1991இல் காவிரி நீர் மண்டல் குழு பிரச்சினைகளுக்காக தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.
 29. 20.01.1992அல் கர்நாடகத் தமிழருக்காக சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் மறியல் செய்து கைதானார்.
 30. 30.04.1992இல் காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக் கோரி திருவாரூர் அஞ்சலகம் முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
 31. 06.12.1992இல் தடையை மீறி இராவணலீலா விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தி புதுவையில் கைதானார்.
 32. 10.02.1993இல் சென்னை இரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
 33. 23.04.1993இல் சென்னையில் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி மறியல் போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
 34. 01.09.1993இல் 69 சதவீதத்தை முடக்கும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்தற்காக கைது செய்யப்பட்டார்.
 35. 02.12.1994இல் இந்தி திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
 36. 31.08.1995இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.
 37. மதுரையில் 25.09.1995இல் தமிழகத்தில் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற ஆணையை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
 38. 23.08.1996இல் சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவியை எரித்ததற்கு 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 39. 29.12.2000இல் அமைனத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகம் முன்பு மறியல் செய்து தஞ்சையில் கைதானார்.
 40. 09.12.2004இல் சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் செய்ய முயன்றபோது கைதானார்.
 41. சென்னையில் 01.02.2006 அன்று அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமை கோரி மறியல் செய்து கைதானார்.
 42. 01.11.2006இல் தமிழ்நாடு அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அவமதித்ததற்கு நீதிபதி முகோபாத்யாயா மன்னிப்பு கேட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன் மறியல் செய்து கைதானார்.
 43. 23.09.2008இல் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ரயில் மறியல் செய்து கைதானார்.
 44. 29.12.2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.
 45. 02.09.2009இல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக ரயில் மறியல் செய்து கைதானார்.
 46. 05.06.2010இல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட கோரி சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி 46 ஆவது முறையாக சிறை சென்றார்.
 47. 15.10.2012 அன்று நெய்வேலியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்க கூடாது என்று நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி தமிழர் தலைவர் 47வது முறையாக கைதானார்.

கி.வீரமணிக்கு வழங்கப்பட்ட ஊர்திகள்

 • 18.08.1981 இல் திருவாரூரில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது.
 • 17.09.1988 இல் மதுரையில் நீதிபதி வேணுகோபால் அவர்களால் வழங்கப்பட்டது.
 • 26.02.1994 இல் திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்.கண்ணப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.
 • 19.08.1995 இல் தஞ்சை திலகர் திடலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டது.
 • 26.11.2000 இல் திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களால் வழங்கப்பட்டது.
 • 2008-இல் சென்னையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது.

கி.வீரமணி உயிருக்கு வைக்கப்பட்ட குறிகள்

 1. பழைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம், திருவில்லிப்புத்தூரையடுத்த மம்சாபுரத்தில் 20.07.1982 அன்று புதுப்பட்டி கூட்டுச் சாலையில் தாக்கப்பட்டார்.
 2. 27.04.1985 அன்று வடசென்னையில் நடைபெற்ற, நீதிக்கட்சியின் தந்தை என்று அழைக்கபெறும் சர்.பி.டி தியாகராயரின் 134 ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பாலு தெருவில் வைத்து தாக்கப்பட்டார்.
 3. சென்னை இராயபுரத்தில் 11.04.1995 அன்று நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வத்தில் கி.வீரமணி அலங்கார வண்டியில் அமர்ந்து வருகையில் தாக்கப்பட்டார்.
 4. சேலம் மாவட்டம், ஆத்தூரையடுத்த தம்மம்பட்டியில் 28.08.1987 அன்று தாக்கப்பட்டார்.
 5. 2013- ஆம் ஆண்டு விருதாச்சலத்தில் மாணவரணி மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது இவர் பயணித்த வாகனம் கொடும் ஆயுதங்களால் வழிமறித்துத் தாக்கப்பட்டது

பெரியாரின் கருத்து

 • திரு கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்று துணிவாய் பேசிவிட்டார். திரு வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல -அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படாலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகி விட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம்; இனி அது முழுநேரமாகி விடலாம்.--30.10.1960 இல் சென்னை-திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியார்--[3]

பத்திரிகை விமர்சனங்கள்

 • கி.வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈவெரா பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப்பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944 இல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது திரு. வீரமணி பத்து வயதுச் சிறுவன். இப்போது திராவிடர் கழகப் பொதுச்செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு, முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப்பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் பணம் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் ரூ.95 அனுப்பினார். பின்னர், தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூறியது: "அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம் மறந்து போச்சு." --கல்கி ஏடு 24.06.1979 குளோஸ் அப் பகுதியில்--[4]
 • "பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது" என்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். "தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடக்கூடாது; சமுதாயத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. திராவிடர் கழகம் ஒரு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகும்" என்று வீரமணி சொல்லுகிறார்.--நியூயார்க் டைம்ஸ், 09.11.1982--[5]
 • திரு கே.வீரமணி, திராவிடர் கழக தலைவர் மாடர்ன் ரேசனலிஸ்ட் மாத இதழின் ஆசிரியர், பெரியார் ஈ.வி.ராமசாமி நாயக்கருக்குப் பிரதான சீடர். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு நெருக்கமானவர். தற்போது பெரியார் லட்சியங்களை உலகமெங்கிலும் பரப்புவதற்காக அசாதாரணமாகப் பாடுபட்டு வருபவர்.--கோரா மனபத்ரிக தெலுங்கு வார ஏடு--[6]
 • தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒதுக்கீட்டுக் கொள்கைகளினால் நிர்வாகம் சீர்கெடுமா என்று வினவியதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த நிர்வாக அமைப்பை பெற்றிருக்கிறது என்றார். --மனோரமா இயர் 'புக்' 1991 தமிழ் பதிப்பு பக்கம் 19--[7]
 • கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள், 'நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா?' என்றும் சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் - தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்தரிக்குமோ, அப்படி காட்சி தருவார். பண்பு பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்! சின்னஞ்சிறு வயதில் மேடையில் 'ஸ்டூல்' போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை. கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம். --சாவி 31.03.1995 இதழ்--[8]
 • கி.வீரமணி எழுதிய "கீதையின் மறுபக்கம்" நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி, கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துகள் முதலிய தலைப்புகளையும் கொண்டது.--சி.இராமகிருஷ்ணன் "கீதையின் மறுபக்கம்" தினமணி விமர்சனம் 08.110.1998--[9]
 • தமிழகத்தைப் பாதித்த பல இயக்கத் தலைவர்களின் வரிசையில் முதலாவதாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி.--குமுதம் தீராநதி நவம்பர் 2002--[10]
 • மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் , அதை முறையடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள். --தி இந்து 23 ஜூலை 1994--[11]

கி.வீரமணியைப் பற்றி பிற தலைவர்கள் கூறியது

 • திராவிடர் கழகத்தின் ஆயுட்காலப் பொதுச்செயலாளராக அருமை நண்பர் கி.வீரமணி அவர்களை, மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் நியமனம் செய்து, அந்த நியமனம் திராவிடர் கழகப் பொதுக்குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றமை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பர் திரு. வீரமணி அவர்கள் ஆண்டில் இளையர்; ஆயினும் பல ஆண்டுகள் தந்தை பெரியாரிடத்தும் அன்னை மணியம்மையாரிடத்தும் இருந்து பணி செய்த வகையில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இயல்பாக அவருக்கிருக்கும் நுண்ணறிவோடு அனுபவமும் இயைந்து பொலிவுறுகிறது. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்; சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இனிய நண்பர் வீரமணி அவர்களை, திராவிடர் கழகம் பொதுச் செயலாளராகப் பெற்றுள்ள இந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு. இந்தத் தலைமுறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகின்றோம்.--குன்றக்குடி அடிகளார், தமிழகம் சித்திரை இதழில் ("விடுதலை", 21.04.1978)--[12]
 • புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களை பாராட்டுகிறோம். அரசியலலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியை பெறுகிறேன். அதேபோல், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.--முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் 23.12.1992 அன்று திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவுநாள், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில்--[12]
 • இங்கு பிரம்மாண்டமான மாநாட்டை வீரமணி போன்ற தலைவர்களால் தான் கூட்ட முடியும். உங்களால் முடியுமா என்று என்னை நீங்கள் கேட்டால் முடியாது என்றுதான் கூறுவேன். காரணம் நான், வீரமணி போன்ற பெரிய தலைவர் அல்ல. விமான நிலையத்திலே குடியரசு தலைவரை நானும், நண்பர் வீரமணியும் வழியனுப்பச் சென்றபோது, குடியரசுத் தலைவர் மனம் திறந்து சொன்னார். 'Veeramani is the Most Popular Leader in Tamilnadu'.--பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை ஒன்றியத்தின் செயல் தலைவர் சந்திரஜித் யாதவ். 'விடுதலை' தந்தை பெரியார் 109-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்--[12]
 • தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக திரு வீரமணி அவர்கள் இருக்கின்றார்கள். அவர் கிறித்தவ, முஸ்லீம், தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலைவராக வந்து கொண்டிருக்கின்றார்.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- [13]
 • மண்டல் கமிசனைப் பற்றி நான் மிகச் சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசு, மண்டல் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கக் கூடத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் உள்ளே சுமார் ஆறு எம்.பி.க்கள் போராடியதன் விளைவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே திரு. வீரமணி அவர்களும் போராடியதன் விளைவாகத்தான் மண்டல் கமிசன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- [13]
 • முளைக்கும் பருவத்தில், இளமையில் துடிப்போடு, 'எங்கே கடவுள்? காட்டுவாயா? என்ற பொதுவினாவை எழுப்பியவர் வீரமணி. பெரியார் சொன்னதெல்லாம் அவருக்கு மறை வாக்கு! --கி.துளசி வாண்டையார்--[14]
 • பேச்சில், எழுத்தில், எதிர்நீச்சல் போட்டு, பெரியார் கொள்கைகளைப் பிடிப்போடு, எவர் எதிர்த்தாலும் அடாது அலுக்காமல் விடாது பேசி, எழுதி வருகிற 'விடுதலை ஆசான்' வீரமணி!.--கி.துளசி வாண்டையார்--[14]
 • குடி, சூது - இவற்றிலிருந்து விலகி 'உழைப்பே துணை, ஒழுங்கே மானம்' என்ற நல்லுரையை ஏற்று 'தேர்தலா? அது சந்திசிரிக்குமே!' என்ற பெரியார் எண்ணத்தை ஆசாபாச லாப நட்டத்திற்கு இடம் தராமல் வளர்ந்த மணியான வீரன் வீரமணி.--கி.துளசி வாண்டையார்--[14]
 • உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், சிரித்த முகத்தோடு, நோகாமல், வம்பையும் தும்பையும் எவர் செய்தாலும், மரியாதை பிறழாமல் நித்திய நேசத்தில் வளர்கின்ற போராளி வீரமணி.--கி.துளசி வாண்டையார்--[14]
 • 1944 ல் நடைபெற்ற சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் அழைப்பிதழில் பெயரில்லாத ஒருவர் பேச அனுமதிக்கப்பட்டார். அவர்தான் நண்பர் கி.வீரமணி. வீரமணி பேசியபின் அறிஞர் அண்ணா அவரை மிகவும் பாராட்டி பேசினார். --கவிஞர் கருணானந்தம் மணிவிழா மலரில் தவமணிராசந்-[15]
 • அய்யா வீரமணியவர்கள் தந்தை பெரியார் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஓர் தொண்டறம் காக்கும் தனயர்! பெரியார் வழித் தோன்றல்! வாரிசு! அவரைத் தலைவராக போற்றும் நான், ஆருயிர் நண்பராகவும் அவர்களைப் பெற்றது எனக்கு என் வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன்.--எஸ்.பி.செல்வநாயகம் இலண்டன் குரோய்டன் நகர்மன்ற ஆட்சிக்குழ் உறுப்பினர்--[16]
 • நான் நினைக்கிறேன் - வள்ளுவர் குறளில் சொல்லியிருக்கின்றார் மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல், எனும்சொல். இது வீரமணி அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்த மாதிரி அய்யா அவர்களுக்கு அவர் உதவியாற்றுகின்றார். அதோடு, அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று சொல்லுவார்கள். அய்யா அவர்களுக்குப் பிள்ளை இல்லை. அய்யா அவர்களுக்கு வீரமணி அவர்கள்தான் பிள்ளை. வேறு யாரும் பிள்ளை இல்லை. சமுதாயத்திற்கு இன்றைய தினம் எது தேவையோ எதைச் செய்தால் சமுதாயம் பயன்படுமோ அய்யா அவர்கள் சொன்ன கருத்துக்களுக்குப் பலன் கிடைக்குமோ - அந்த பணியை வீரமணி அவர்கள் செய்ய முன்வந்து இந்தக் கல்லூரிகளையும் பல்வேறு சூழ்நிலைகளையும் ஏற்படுத்தியிருப்பது என்பது மிகுந்த பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றாகும். அதற்காக மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றேன்.--ஜி.கே. மூப்பனார்- வல்லம் பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி விழாவில் 22.07.2000--[17]
 • ஓயாமல் நீதிக்கட்சி சாதனைகளை அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்ற பணியில், சுயமரியாதைக் கருத்துகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற பணியில், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி எடுத்துச் சொல்லி நினைவுபடுத்துகின்ற பணியில், தொடர்ந்து விடாமல் செய்து கொண்டு வருகின்ற ஒருவர் அருமை நண்பர் வீரமணி என்கின்ற காரணத்தினாலே தான் - இந்த நூலை வெளியிடுவதர்குரிய தகுதி, திறமை உண்டு என்று நான் கருதினேன். எட்டு வயதிலிருந்து வீரமணி அவர்கள் மிகத் தெளிவாக எதைப்பற்றியும் கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு ஆர்வத்தோடு, எழுச்சியோடு இருந்த அருமை நண்பர் வீரமணி அவர்களோடு 52 ஆண்டுக்காலம் பழகியதனுடைய அடிப்படையில், இந்த நூலை வெளியிடுவதற்கு ஏற்றவர் அவர்தான் என்று முடிவு செய்தேன்.-- நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், சென்னை பெரியார் திடல் 11.07.1996--[18]
 • பெரியார் ஈ.வெ.ரா.விடத்தும், அவர் கொள்கைகளின் மேலும் அசைவற்ற பற்றுக் கொண்டவர். அந்தக் கொள்கைகளைப் பரப்புவதில் தம்முடைய காலம் முழுவதையும் செலவழிப்பவர். அந்தக் கொள்கைகளில் பற்று மாத்திரமல்லாமல், அவற்றை பரப்புவதில் எவ்வித எதிர்ப்பு ஏற்படினும் அதனை முறியடிப்பதில் அழுத்தமும், உறுதியும் கொண்டவர். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் எந்த நேரத்திலும் எல்லா சமுதாயங்களுக்கும் தேவை. சொல்லப்போனால், ஒருவருடைய கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமல்ல. அவர் தம் கொள்கைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கிறாரா என்பதுதான் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய செய்தி. அப்படிப் பார்க்கும் பொழுது திரு. கி. வீரமணி பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர் என்பதில் அய்யமில்லை. --நீதிபதி மு.மு.இஸ்மாயில்--[19]

ஆதாரங்கள்

சான்றுகள்

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 கல்விப்பணியில் கி.வீரமணி
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 2.51 2.52 2.53 2.54 2.55 2.56 2.57 2.58 2.59 2.60 2.61 2.62 2.63 2.64 2.65 2.66 2.67 2.68 2.69 2.70 2.71 2.72 2.73 திராவிடர் கழகம் மற்றும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகளின் புத்தக பட்டியல்
 3. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 79
 4. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 73
 5. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 259
 6. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 81
 7. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 133
 8. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 223
 9. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 231
 10. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 251
 11. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 265
 12. 12.0 12.1 12.2 தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007
 13. 13.0 13.1 தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 29
 14. 14.0 14.1 14.2 14.3 தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46
 15. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 253
 16. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 259
 17. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 85
 18. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 193
 19. தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 233

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._வீரமணி&oldid=2477938" இருந்து மீள்விக்கப்பட்டது