உள்ளடக்கத்துக்குச் செல்

ம. சிங்காரவேலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மா. சிங்காரவேலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ம. சிங்காரவேலர்
பிறப்பு(1860-02-18)பெப்ரவரி 18, 1860
மதராசு,,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா,
(தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா)
இறப்புபெப்ரவரி 11, 1946(1946-02-11) (அகவை 85)
மதராசு,
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா)
கல்விமாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி
பணிவழக்குரைஞர், தொழிற்சங்கத் தலைவர், கட்சித் தலைவர்
தாக்கம் 
செலுத்தியோர்
கார்ல் மார்க்சு மற்றும் ரஷ்ய புரட்சியாளர் விளாதிமிர் லெனின்
பின்பற்றுவோர்அண்ணா
பட்டம்புரட்சிப் புலி, சிந்தனைச் சிற்பி
அரசியல் கட்சிபொதுவுடைமைக் கட்சி
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்
சமயம்புத்தம் [1]

ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) ஒரு தமிழ்நாட்டு பொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி"[2] எனப் போற்றப்படுகிறார்.

பிறப்பும் தொடக்க வாழ்க்கையும்

[தொகு]

சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள அயோத்திகுப்பத்தில் பிறந்தார்.[3] இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் இவருக்குப் புலமை இருந்தது.வெலிங்டன் சீமாட்டிக் கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள் பற்றியே இவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பது பலருக்கும் தெரியாது.இவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை இவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் .[4]

தொழில்

[தொகு]

சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907 ஆம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.[4]

பொதுவுடைமைச் சித்தாந்தம்

[தொகு]

பின்னி ஆலைப் போராட்டக் காலங்கள்

[தொகு]

1918 ஆம் ஆண்டில் அவரது நெருங்கிய தோழரும், தமிழறிஞருமான திரு.வி.கலியாணசுந்தரனார் சென்னை பின்னி, கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளருக்காகச் சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். இவரது நெருங்கிய நண்பர், சிங்கார வேலரும் அந்த சங்கக் கூட்டங்களுக்கு வந்து தனக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்கார வேலர் அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளில் முனைவான ஆர்வம் காட்டலானார்.அச்சமயத்தில் இந்த இரண்டு ஆலை(மில்)களிலும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளிகளின் ஊர்வலங்களிலும் அவர் பங்கெடுத்தார். 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஆங்கிலேய காவல்துறை பின்னி ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு தொழிலாளிகளைக் கொன்றது. அவர்களின் அடக்க நிகழ்ச்சியின் போது அவர்கள் உடல்களைத் தூக்கிச் சென்றவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார். அதன் பின் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று காவல்துறையினர் நடத்திய மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட ஏழு பின்னி ஆலைத் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற கொண்ட சிங்கார வேலர் அதைக் குறித்து ஒரு உருக்கமான கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி

[தொகு]

1922 இல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922 இல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923 இல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் தொடங்கினார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924 இல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் , மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது.[5] கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925 ஆம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது.1927 இல் பிரித்தானிய கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையைச் சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.[4]

பெரியாருடன் தொடர்பு

[தொகு]

1931 ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது குடியரசு இதழுக்குச் சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர்

  • கடவுளும் பிரபஞ்சமும்
  • கடவுள் என்ற பதமும், அதன் பயனும்
  • மனிதனும் பிரபஞ்சமும்
  • பிரபஞ்சப் பிரச்சனைகள்
  • மெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்
  • மூட நம்பிக்கைகளின் கொடுமை
  • பகுத்தறிவு என்றால் என்ன?

போன்ற கட்டுரைகளை எழுதி உதவினார்.

சமூகப் பணிகள்

[தொகு]
  • இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
  • உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
  • தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 இல் உழப்பாளர் உழவர் கட்சியைத் தொடங்கினார்.
  • 1925 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
  • இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
  • தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
  • பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[6] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
  • பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930 களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

ஈடுபட்ட போராட்டங்கள்

[தொகு]

சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். 1927 இல் பெங்கால்-நாக்பூர் தொடர்வண்டி வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆகஸ்ட் 1927 இல் சாக்கோவுக்கும் வான்செட்டிக்கும் தீர்ப்பாகிய மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.1928 இல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்தியத் தொடர்வண்டி வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930 இல் விடுதலை செய்யப்பட்டார்.[4]

இறப்பு

[தொகு]

கடைசியாக 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அவர் ,

“எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை”

என்று முழங்கினார்.

அவர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். தான் மரண மடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

தகைமைகள்

[தொகு]
சிங்காரவேலர் சிலை, பகுனுதி மாட்டான்குப்பம், திருவல்லிக்கேணி, சென்னை

ம. சிங்காரவேலர் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ம. சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது.

இவரைப் பற்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரை எழுதிய நூலில் "ம. சிங்காரவேலர் செட்டியார் பரதவர் குலம், நெய்தல் நாயகன். என்றும் இவர் ஒரு சர்மா(பிராமணர்) ஆக பிறந்து இருந்தால் இவர் சிலை உருசியாவின் மாஸ்கோ வரை நிறுவ பட்டு இருக்கும் என்று கூறி உள்ளார். மேலும் காந்தி புராணம், கந்த புராணம் பேசும் நபர்களை கொண்டாடும் மக்கள் இவரை மிக சாதரணமாக நினைத்து விட்டனர்.... "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!" என்றும், ஆங்கிலேய இந்தியா இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டங்கள் 10 என்றால் நான்கில் இவரின் பங்கு மிக அதிகம். சென்னயில் நடந்த வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு, சைமன் குழு புறக்கணிப்பு , தொழிலார்கள் போராட்டம் ,பின்னி கர்நாடிக்க ஆலைப் போராட்டம், நாகை தொடர்வண்டித் தொழிலாளர்கள் போராட்டம் முதலியன இவர் தலைமையிலேயே நடந்தது. மே 1 இல் தொழிலாளர் நாள் ஆசியாவில் முதல் முதலில் சென்னையில் தான் இவரால் கொண்டாடப்பட்டது.

இவரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் பாடல் எழுதி உள்ளார்.

சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?”

பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்

பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்

சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்

தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்

மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்

புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்

கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்

கூடின அறிவியல், அரசியல் அவனால்!

தோழமை உணர்வு தோன்றிய தவனால்

தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்

ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்

எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!

போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”

இவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூரும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன்படி 2011, பெப்ரவரி 18 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றைக் குறித்து மாணவ மாணவிகளுக்குக் கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.[7][8]

படைப்புகள்

[தொகு]

ம. சிங்காரவேலர் படைப்புகளில் பின்வருவன அடங்கும்:[9]

  1. உலகம் சுழன்று கொண்டே போகிறது
  2. கடவுளும் பிரபஞ்சமும்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.
  3. கல்மழை உண்டாகும் விதம்
  4. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
  5. சமதர்ம உபன்யாசம்: தமிழ்மாகாணச் சமதர்ம மாநாட்டின் சமதர்ம உபன்யாசம்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.[10]
  6. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1
  7. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2
  8. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3: எது வேண்டும்? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா?; 1934; சமதர்மப் பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[11]
  9. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
  10. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
  11. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
  12. பகுத்தறிவென்றால் என்ன?
  13. பிரகிருத ஞானம்
  14. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
  15. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
  16. பிரபஞ்சப் பிரச்சினைகள்
  17. பிரபஞ்சமும் நாமும்
  18. பேய், பிசாசு
  19. மனித உற்பவம்; 1934; சமதர்மப் பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[12]
  20. மனிதனும் பிரபஞ்சமும்
  21. மனோ ஆலய உலகங்கள்
  22. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - பாகம் 1; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.[13]
  23. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - பாகம் 2; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.[13]
  24. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
  25. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
  26. விஞ்ஞானத்தின் அவசியம்
  27. ஜோதிட ஆபாசம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. கே, சந்துரு (பிப்ரவரி 18, 2014). "தமிழகத்தின் முன்னோடிப் போராளி". தமிழ் தி இந்து‍. Archived from the original on பிப்ரவரி 18, 2014. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2014. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  2. தந்தைபெரியாரும் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும், இன்ட்லி
  3. Vasantha Kumaran, P. Singaravelar Godfather of Indian Labour. பரணிடப்பட்டது 13 சனவரி 2018 at the வந்தவழி இயந்திரம் Chennai: Poornimaa Publication,
  4. 4.0 4.1 4.2 4.3 சந்துரு. "தமிழகத்தின் முன்னோடிப் போராளி". பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Ralhan, O.P. (ed.) Encyclopedia of Political Parties New Delhi: Anmol Publications p.336
  6. "புத்தகங்களை உயிராய் கருதிய புரட்சியாளர்". பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-02. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
  8. http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=368ffcbc-b2cd-47e3-ae73-ea4d48669334&CATEGORYNAME=TCHN
  9. அறிவியல் தமிழ் அறிஞர்கள்
  10. புரட்சி, 1934-ஏப்-1;பக்.20
  11. புரட்சி, 1934-ஏப்-1;பக்.18
  12. பகுத்தறிவு, 1934-டிசம்பர்-23;பக்.16
  13. 13.0 13.1 பகுத்தறிவு, 1938-டிசம்பர்-1;பக்.67

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சிங்காரவேலர்&oldid=4146798" இலிருந்து மீள்விக்கப்பட்டது