உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

கி.பி. 1600-1800: நிகழ்வுகள்

[தொகு]
 • கி.பி. 1600: ஒருசில குருக்கள் இசுலாமியர் அருந்துகின்ற "காப்பி" என்னும் பானம் தடைசெய்யப்பட வேண்டும் என்று கேட்டபோது, திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட் என்பவர் ஒரு கோப்பை காப்பியை அருந்திப் பார்த்துவிட்டு, "இவ்வளவு சுவையான பானத்தைத் தடைசெய்வது முறையல்ல; சாத்தானின் பானம் இது என்றால் அதற்குத் திருமுழுக்குக் கொடுத்து சாத்தானையே நாம் ஏமாற்றிவிடலாமே" என்று பதிலளித்தார்.
 • கி.பி. 1600: ஜோர்டானோ புரூனோ என்னும் சாமிநாதர் சபைக் குரு தவறான கொள்கைகளைப் போதித்தார் என்பதற்காகக் கழுவிலேற்றப்பட்டார்.
 • கி.பி. 1601: யப்பானில் முதல் கிறித்தவ குருக்கள் திருநிலைப்பாடு பெற்றனர்.
 • கி.பி. 1603: யப்பானில் இயேசு சபைக் குருக்கள் அச்சகம் தொடங்கி, யப்பானிய-போர்த்துகீசிய அகராதி வெளியிடலாயினர்.
 • கி.பி. 1605: தத்துவ போதகர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி (1577-1656) கோவா சென்றடைந்தார். பின்னர் அவர் மதுரைப் பணித்தளத்தில் கிறித்தவ போதகராகப் பணியாற்றி, தமிழில் கிறித்தவ இறையியல் உருவாக அடித்தளம் இட்டார்.
 • கி.பி. 1606: கார்லோ மதேர்னோ என்னும் கட்டடக் கலை வல்லுநர் உரோமையில் கட்டப்பட்ட புனித பேதுரு பேராலயத்தைச் சிலுவை வடிவில் அமைக்க வார்ப்புரு அளித்தார்.
 • கி.பி. 1606: யப்பானிய மன்னர் தோக்குகாவா யெயாசு என்பவர் தம் நாட்டில் கிறித்தவத்துக்குத் தடை விதித்தார்.
 • கி.பி. 1609-1610: ஆங்கில் மொழியில் முதன்முறையாக கத்தோலிக்க விவிலிய மொழிபெயர்ப்பு வெளியானது. அது டுவே-ரேம்ஸ் பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாடு மட்டும் 1582இல் வெளியாயிற்று.
 • கி.பி. 1611: விவிலியத்தின் ஆங்கிலப் பெயர்ப்பு (ஜேம்ஸ் அரசர் மொழிபெயர்ப்பு) வெளியானது.
 • கி.பி. 1614: யப்பானில் கிறித்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். நாற்பதாயிரத்துக்கு மேல் கிறித்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.
 • கி.பி. 1615: கானடாவில் பிரான்சிய கிறித்தவ மறைபரப்பாளர் தொல்குடி மக்களுக்குக் கல்வி பயிற்ற கல்விக்கூடங்கள் நிறுவினார்கள்.
 • கி.பி. 1616: மூதாதையருக்கு வணக்கம் செலுத்துவது குறித்து எழுந்த சர்ச்சையில் கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
 • கி.பி. 1618: போர்த்துகீசிய கார்மேல் சபை மறைபரப்பாளர்கள் பாரசீகத்திலிருந்து கராச்சி சென்று அங்கே கிறித்தவ சபையை நிறுவினார்கள்.
 • கி.பி. 1619: பிலிப்பீன் தீவுகளுக்குச் சென்ற சாமிநாதர் சபைக் குருக்கள் அங்கு புனித தோமா பல்கலைக் கழகத்தை நிறுவினார்கள்.
 • கி.பி. 1620: கார்மேல் சபை மறைபரப்பாளர்கள் கோவா சென்றடைந்தனர்.
 • கி.பி. 1621: சிட்டகாங்க் பகுதியில் அகுஸ்தீன் சபைத் துறவியர் பணி தொடங்கினர்.
 • கி.பி. 1622: திருத்தந்தை ஆறாம் கிரகோரி என்பவர் ஐரோப்பாவுக்கு வெளியே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியை முறையாக நிகழ்த்தும் வண்ணம் ஓர் பன்னாட்டு நிறுவனத்தை உருவாக்கி, அதற்கு "விசுவாசப் பரம்புதல் திருப்பேராயம்" என்னும் பெயரளித்தார்.
 • கி.பி. 1622, ஏப்பிரல் 19: பதினைந்தாம் கிரகொரி (திருத்தந்தை)திருத்தந்தை பதினைந்தாம் கிரகொரி என்பவர் பதின்மூன்றாம் லூயி அரசரான போது, அர்மாந்த் ழான் டு ப்ளெஸ்ஸி ரிஷெல்யூ என்பவருக்குக் கர்தினால் பட்டம் அளித்தார். கர்தினால் ரிஷெல்யூ அரச அரண்மனையில் செல்வாக்குடையவராய் இருந்தார். அவருடைய செயல்பாடுகள் ஐரோப்பிய அரசியலில் ஆழ்ந்த மாற்றங்களைக் கொணர்ந்தன.
 • கி.பி. 1623: சீனாவில் சிங்கான்ஃபூ என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சீன எழுத்திலும் பாரசீக எழுத்திலும் அமைந்த பாடம் காணப்பட்டது. அதிலிருந்து, கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே கிறித்தவ சமயம் சீனாவில் பரவிய செய்தி தெரியவந்தது. கி.பி. 625இல் அலோப்பென் (ஆபிரகாம்) என்னும் மறைப்பணியாளர் அங்கு கிறித்தவத்தைப் பரப்பினார் என்னும் செய்தி அக்கல்வெட்டிலிருந்து கிடைத்தது.
 • கி.பி. 1624: இன்றைய டோக்கியோ பகுதியில் (அன்று "ஏடோ") கிறித்தவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையால் 50 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
 • கி.பி. 1625: வியத்நாமிலிருந்து கிறித்தவ மறைப்பணியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
 • கி.பி. 1626: இயேசு சபைத் துறவி பிரான்சிஸ் பச்சேக்கோ என்பவர் மறைவாக யப்பானில் நுழைந்து கிறித்தவப் பணி ஆற்றினார் என்பதற்காகக் கொல்லப்பட்டார்.
 • கி.பி. 1626, நவம்பர் 18: திருத்தந்தை எட்டாம் அர்பன் என்பவர் வத்திக்கானில் புதிதாகக் கட்டப்பட்ட புனித பேதுரு பேராலயத்தை ஆடம்பரமாக நேர்ந்தளித்தார். இப்பேராலயம் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் அதே இடத்தில் மன்னன் காண்ஸ்டண்டைன் என்பவரால் முதலில் கட்டப்பட்ட புனித பேதுரு பேராலயத்தின் அடித்தளத்தின் மீது எழுந்தது. அந்த முதல் ஆலயத்தைத் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் என்பவர் அர்ச்சித்திருந்தார்.
 • கி.பி. 1627: ரோது நகர் அலெக்சாண்டர் என்னும் கிறித்தவ மறைபரப்பாளர் வியத்நாமில் பணி தொடங்கினார். மூன்று ஆண்டு பணிக்காலத்தின்போது அவர் 6700 பேரைக் கிறித்தவர்களாக்கினார்.
 • கி.பி. 1628: உலகின் பல நாடுகளிலும் கிறித்தவ மறையைப் பரப்ப மறைபரப்பாளரகளுக்குப் பயிற்சியளிக்க உரோமையில் "விசுவாசப் பரம்புதல் கல்லூரி" நிறுவப்பட்டது.
 • கி.பி. 1631: ஓலாந்து நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் ஆபிரகாம் ரோஜர் என்பவர் சென்னைக்கு அருகில் பவழக்காடு என்னுமிடத்தில் தமிழ் மக்கள் நடுவே பணியாற்றத் தொடங்கினார். 10 ஆண்டுகள் பணி செய்தார்.
 • கி.பி. 1633: கலிலேயோ கலிலேயி பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியது விவிலியக் கொள்கைக்கு மாறானது என்று திருச்சபையால் கண்டனம் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கலிலேயோ விவகாரத்தில் திருச்சபை அளித்த முடிவு தவறானது என்று கூறி அதற்காக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மார்ச் 13, 2000ஆம் ஆண்டு திருச்சபை பெயரால் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
 • கி.பி. 1637: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான தொல்குடி மக்கள் அம்மை நோய்க்கு பலியானார்கள். ஐரோப்பிய மறைபரப்பாளர் அங்கு வந்ததே அவ்விடருக்குக் காரணம் என்று தொல்குடி மருத்துவ முறையினர் குற்றம் சாட்டினர்.
 • கி.பி. 1645: முப்பது ஆண்டு பணிக்குப் பிறகு இயேசு சபையினர் வியத்நாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 • கி.பி. 1646: கானடா நாட்டில் தொல்குடியினர் நடுவே கிறித்தவ மறையைப் போதித்த ஐசக் ஜோக் என்பவர் இரோக்குவா என்னும் தொல்குடியினரால் கொல்லப்பட்டார்.
 • கி.பி. 1647: கார்மேல் சபைத் துறவியர் மடகாஸ்கர் நாட்டில் மறை அறிவித்தார்கள்.
 • கி.பி. 1653, சனவரி 3: எர்ணாகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலையிலுள்ள மட்டாஞ்சேரி என்னும் இடத்தில் புனித தோமா கிறித்தவர்கள் போர்த்துகீசியர் கொணர்ந்த உரோமை வழிபாட்டு முறையை ஏற்பதில்லை என்று உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சி "கூனன் குரிசு சத்தியம்" என்று அழைக்கப்படுகின்றது.
 • கி.பி. 1655: அங்கோலா நாட்டில் மட்டாம்பா பிரதேச இளவரசி ஜிங்கா என்பவர் கிறித்தவத்தைத் தழுவினார். தம் நாட்டுக்கு மேலதிக மறைப்பணியாளரை அனுப்புமாறு திருத்தந்தையை வேண்டினார்.
 • கி.பி. 1659: கிறித்தவ மறையைப் பரப்ப "பாரிசு வெளிநாட்டு மறைபரப்புச் சபை" என்னும் அமைப்பை ரோது நகர் அலெக்சாண்டர் என்பவர் நிறுவினார்.
 • கி.பி. 1660: கம்போடியா நாட்டில் கிறித்தவம் பரவத் தொடங்கியது.
 • கி.பி. 1673: பிரான்சிய வர்த்தகர் லூயி ழோலியே என்பவரும் ழாக் மர்க்கேட் என்னும் மறைபரப்பாளரும் அமெரிக்கா மாநிலமாகிய இல்லினாய் சென்று, அங்குள்ள தொல்குடி மக்களைக் கிறித்தவராக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 • கி.பி. 1676: வட அமெரிக்காவில் மோஹாக் என்னும் தொல்குடியைச் சார்ந்த கத்தேரி தேக்காக்வித்தா என்னும் பெண்மணி கிறித்தவரானார். அவரும் பிற தொல்குடி (அமெரிக்க) இந்திய கிறித்தவர்களும் கானடாவில் குடியேறினர்.
 • கி.பி. 1678: பிரான்சிய மறைபரப்பாளர்கள் ழான் லாஸால், மற்றும் லூயி ஹென்னெப்பின் என்பவர்கள் நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தார்கள்.
 • கி.பி. 1685: சீன நாட்டைச் சார்ந்த ஒருவர் முதன்முறையாக கத்தோலிக்க ஆயராகத் திருநிலைப்பாடு பெற்றார்.
 • கி.பி. 1691: திருத்தந்தை பன்னிரண்டாம் இன்னசெண்ட் என்பவர், திருச்சபை பதவிகளை வழங்கும்போது உறவினர், பொருள் கைம்மாற்று என்னும் அடிப்படையில் செயல்பட தடை விதித்தார்.
 • கி.பி. 1693, பெப்ருவரி 4: மறவ நாட்டில் ஓரியூரில் ஜான் டி பிரிட்டோ என்னும் அருளானந்தர் கிறித்தவ மறையைப் போதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, தலைவெட்டுண்டு கொல்லப்பட்டார்.
 • கி.பி. 1713: பிறப்புநிலைப் பாவம் மனிதரைப் பாதிப்பதால் அவர்களுக்கு உண்மையான உள்சுதந்திரம் இல்லை எனவும், மனித இயல்பு முற்றிலும் சீரழிந்து போயிற்று எனவும், ஒருசிலர் எப்படியும் முடிவில்லா தண்டனைக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டார்கள் எனவும் கற்பித்த "ஜான்செனிசம்" (Jansenism) என்னும் தப்பறைக் கொள்கையை திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் கண்டனம் செய்தார்.[1]
 • கி.பி. 1714: பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் என்னும் செருமானிய லூதரன் மறைபரப்பாளர் விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டை முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்த்து தரங்கம்பாடியில் அச்சேற்றினார்.
 • கி.பி. 1717: திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் என்பவர், இறந்த மூதாதையருக்கு வணக்கம் செலுத்தல் போன்ற பழக்கங்களைக் கிறித்தவத்தில் புகுத்துவதற்குத் தடைவிதித்தார். இத்தடையை பன்னிரண்டாம் பயஸ் என்னும் திருத்தந்தை 1939இல் அகற்றினார்.
 • கி.பி. 1718: பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் கிறித்தவ வழிபாட்டுக்காகத் தரங்கம்பாடியில் ஒரு கோவில் கட்டினார். அக்கோவில் இன்றும் உள்ளது.
 • கி.பி. 1721: சீனாவில் கிறித்தவம் பரவத் தடைவிதித்து காங்சி பேரரசர் சட்டமியற்றினார்.
 • கி.பி. 1732: புனித அல்போன்சு லிகோரி என்பவர் நாட்டுப்புறங்களில் கிறித்தவ மறையைப் பரப்புவதற்காக "உலக மீட்பர் சபை" என்னும் அமைப்பை உருவாக்கினார்.
 • கி.பி. 1767: இயேசு சபைத் துறவியர் எசுப்பானியா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
 • கி.பி. 1773: திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் என்பவர் இயேசு சபையைத் தடைசெய்து முடக்கினார்[2]. பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த இச்சபை உருசியாவில் மட்டும் இயங்கியது.
 • கி.பி. 1777: பங்களாதேஷ் நாட்டில் ஹஷ்னாபாத் நகரில் போர்த்துகீசிய மறைபரப்பாளர்கள் ஒரு கோவில் கட்டியெழுப்பினர்.
 • கி.பி. 1789: ஜான் கேரல் என்பவர் பால்ட்டிமோர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். இவரே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முதன்முறையாக ஆயராக நியமிக்கப்பட்டவர்.
 • கி.பி. 1793: பிரஞ்சுப் புரட்சியின்[3] விளைவாகக் கத்தோலிக்க திருச்சபை பல இன்னல்களுக்கு உட்பட்டது.
 • கி.பி. 1798: முதலாம் நெப்போலியனின் இராணுவம் திருத்தந்தை ஆறாம் பயஸ் என்பவரைச் சிறைப்பிடித்தது. அவர் பிரான்சு நாட்டில் கைதியாக இறந்தார்.

(தொடர்ச்சி): திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு

மேற்கோள்கள்

[தொகு]