திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு
Appearance
கத்தோலிக்க திருச்சபையின் |
வரலாற்று நிகழ்ச்சிகள் |
---|
விவிலியம் வலைவாசல் |
திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்
[தொகு]கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
- திருச்சபை உருவாதல்: கிறிஸ்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை
- திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312
- திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600
- திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800
- திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு
- திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு
- திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
கிறித்தவம் |
---|
கிறித்தவம் வலைவாசல் |
கி.பி. 2001-2011: நிகழ்வுகள்
[தொகு]- 2001, சனவரி 1: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புத்தாண்டு திருப்பலி நிகழ்த்தினார். 2000ஆம் ஆண்டினை யூபிலி ஆண்டாகக் கொண்டாடியதின் வழியாகக் கடவுள் தம் அருள்கொடைகளை மக்களுக்கு வழங்கியதற்கு நன்றிசெலுத்தினார். 34ஆம் உலக அமைதி நாள் கொண்டாட்டத்திற்கு "பண்பாடுகளுக்கிடையே உரையாடல் அன்பும் அமைதியும் தோய்ந்த பண்பினை வளர்க்கும்" என்னும் மையப் பொருள் வழங்கப்பட்டது[1].
- 2001, சனவரி 6: 2000ஆம் யூபிலி ஆண்டின் நிறைவாக புனித பேதுரு பெருங்கோவிலின் திருக் கதவினைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மூடினார்[2]. "புதிய ஆயிரமாண்டு தொடங்கும் வேளையில்" ("At the beginning of the new millennium" = Novo Millennio Ineunte) என்னும் தலைப்பில் மூன்றாம் ஆயிரமாண்டு திருச்சபையின் பணி பற்றி திருத்தந்தை ஒரு திருத்தூது மடல் வெளியிட்டார்[3].
- 2001, பெப்ருவரி 21: புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 44 புதிய கர்தினால்களை நியமித்தார். இவர்களுள் வர்க்கி விதயத்தில், ஐவன் டீயாஸ் ஆகிய இருவரும் இந்தியர்[4].
- 2001, மார்ச்சு 23: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உரோமையில் "திருத்தந்தை கொரியா கல்லூரி" (Pontifical Korean College) என்னும் நிறுவனத்தைத் திறந்துவைத்தார். கொரிய நாட்டுக் குருக்களும் குருமாணவர்களும் அக்கல்லூரியில் தங்கியிருந்து உரோமைப் பல்கலைக் கழகங்களில் மெய்யியல் மற்றும் இறையியல் துறைகளில் தேர்ச்சி பெறுவர்[5].
- 2001, மே 24: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கர்தினால்களின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். உலகுக்குப் பணிபுரிய அனுப்பப்பட்ட திருச்சபை அப்பணியை ஆற்றும் வழிமுறைகள் பற்றிச் சிந்திக்க இக்கூட்டம் நிகழ்ந்தது[6].
- 2001, செப்டம்பர் 11: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெருநகராகிய நியூயார்க்கில் இருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களும், வாஷிங்க்டனில் உள்ள பாதுகாப்புத் துறை மையாமாகிய பென்டகன் என்னும் ஐங்கோணக் கட்டடமும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாயின. இரட்டைக் கோபுரங்கள் எரிந்து விழுந்து அழிந்தன. அல்-கைடாவும் அதன் தலைவர் ஒசாமா பின் லாடனும் அத்தாக்குதல்களுளை நிகழ்த்தியதாக அறியப்பட்டது. இத்தாக்குதல்களால் இறந்தோர் சுமார் 3000 பேர்.
மறுநாள் பொதுமக்களுக்கு உரையாற்றிய போது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்ததோடு, தாக்குதல்களுக்குப் பலியான மக்களை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்தார். மேலும்,
“ | மனித குலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வன்முறை ஒருநாளும் வழியாக அமையாது...இருளின் சக்திகள் வெற்றியடைவது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், கடவுள் நம்பிக்கையுடையோர் தீமையும் சாவும் வெற்றிபெறா என்பதை அறிவர். கிறித்தவ எதிர்நோக்கு இதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது | ” |
என்று திருத்தந்தை கூறினார்[7].
- 2001, செப்டம்பர் 30: உரோமையில் 10ஆம் பொது ஆயர் மன்றத்தை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தொடங்கிவைத்தார். விவாதப் பொருள்: "ஆயர்: உலக நன்மைக்காக உழைக்கும் இயேசுவின் நற்செய்தி ஊழியர்"[8].
- 2001, நவம்பர் 18: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழக்கமான ஞாயிறு இறைவேண்டலின் போது, உலக அமைதியின் தேவையை வலியுறுத்தினார். 2001 செப்டம்பர் 11ஆம் நாள் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், கிறித்தவ மக்கள் இறைவனிடம் உலக அமைதிக்காக வேண்டுதல் செய்வதோடு, ஒருநாள் உபவாசம் அனுசரிக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும், 2002ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் அசிசி நகரில் எல்லா சமயங்களின் தலைவர்களும் ஒன்றுகூடி உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்திடவும் அழைப்பு விடுத்தார்[9].
- 2001, திசம்பர் 13: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திரு நாட்டிலிருந்து தம்மைச் சந்திக்கவந்த ஆயர்களுக்கு ஆற்றிய உரையில், "இயேசு கிறிஸ்து பிறந்து, வளர்ந்து, இறந்து, சாவினின்று உயிர்பெற்றெழுந்த திரு நாட்டில் வாழும் கிறித்தவர்கள் தங்கள் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்[10].
- 2001, திசம்பர் 24: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பித்து ஆற்றிய உரையில் "இருளில் நடந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்" என்னும் விவிலியச் சொற்றொடரை விளக்கி மறையுரை ஆற்றினார்.
- 2001, திசம்பர் 25: "(உரோமை) நகருக்கும் உலகுக்கும்" (Urbi et Orbi) கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துகள் நல்கி, ஆசிர்வாதம் வழங்கிய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "கிறிஸ்துவே நமக்கு அமைதி கொணர்பவர்" (எபே 2:14) என்னும் விவிலியச் சொற்றொடருக்கு விளக்கமளித்து மறையுரை வழங்கினார்[11].
- 2002, சனவரி 1: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உலக அமைதி நாள் செய்தி வழங்கினார். இந்த ஆண்டுச் செய்தியின் மையப் பொருளாக "நீதி இன்றி அமைதி இல்லை, மன்னிப்பு இன்றி நீதி இல்லை" என்னும் கருத்தை அறிவித்தார்[12].
- 2002, சனவரி 24: உலக அமைதிக்காக இறைவேண்டல் நிகழ்த்த அசிசி நகருக்கு வருகை தந்த பல்சமயத் தலைவர்களையும் பங்கேற்பாளர்களையும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வரவேற்றார். கத்தோலிக்க திருச்சபையின் பதிலாளர்கள் தவிர, மரபுவழி கிறித்தவ சபைகள், புரடஸ்தாந்து சபைகளின் தலைவர்கள் ஆகியோர் வந்திருந்த்னர். இசுலாம், இந்து சமயம், பௌத்தம், சீக்கியம், ஆப்பிரிக்க மரபு சமயங்கள் போன்ற பல சமயங்களின் பதிலாளர்களும் உலக அமைதிக்காக ஒன்றிணைந்து இறைவேண்டல் நிகழ்த்த வந்திருந்தனர்[13].
சமயத் தலைவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் ஆற்றிய உரையில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பின்வருமாறு கூறினார்[14]:
“ | இன்று நாம் அனைவரும் அமைதித் திருப்பயணிகளாக அசிசி நகர் வந்துள்ளோம். உலகில் உள்ள எல்லா சமயங்களும் அமைதியைப் பேண வேண்டும். மதத்தின் பெயரால் வன்முறையில் இறங்குவது கண்டனத்துக்கு உரியது. அமைதியைத் தாங்கி நிற்கும் இரு தூண்கள் நீதியும் மன்னிப்பும் ஆகும். எல்லா மனிதருக்கும் நீதியின் அடிப்படையில் மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நாம் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கின்ற மனப்பான்மை கொண்டோராய் வாழ்ந்திட வேண்டும் | ” |
.
- 2002,பெப்ருவரி 24: உலக அமைதிக்காக இறைவேண்டல் நிகழ்த்த அசிசியில் சனவரி 24ஆம் நாள் கூடிய பல்சமயத் தலைவர்கள் உலக அமைதியை வளர்க்க உதவும் வண்ணம் "அமைதிக்கான அசிசி பத்துக் கட்டளைகள்" (Decalogue of Assisi for Peace) என்னும் ஆவணத்தை உருவாக்கினர். அசிசியில் கூடிய 200 உலக சமயத்தலைவர்களின் பிரதிநிதிகளாக பத்துப் பேர் மேற்கூறிய பத்துக் கட்டளைகளுள் ஆளுக்கு ஒரு கட்டளை வீதம் தத்தம் தாய் மொழியில் வாசித்தனர்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "அமைதிக்கான அசிசி பத்துக் கட்டளைகளை" உலக நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைத்து, உலகில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.[15]
- 2002, சூன் 10: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலும் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயுவும் இணைந்து, "சுற்றுச் சூழல் அறவியல்" என்னும் பொது அறிக்கையை வெளியிட்டனர்.
- 2002, சூன் 16: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பாத்ரே பீயோ பியெத்ரெல்சீனா என்னும் கப்புச்சின் சபைத் துறவிக்குப் புனிதர் பட்டம் வழங்கினார். புனித பீயோ தம் உடலில் இயேசுவின் ஐந்து காயங்களைத் தாங்கிய புனிதருள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 12-13ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அசிசியின் புனித பிரான்சிசும் ஐந்து காய வரம் பெற்றிருந்தார்.
- 2002, சூலை 23-28: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் டொரோண்டோ நகரில் உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, இளைஞர்கள் "உலகின் ஒளியாக" திகழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
- 2002, சூலை 31:திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மெக்சிகோ நகரில் ஹுவான் டியேகோ என்னும் ஆதி இந்தியருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார். இவர் 1531, திசம்பர் 9ஆம் நாள் மெக்சிகோ நாட்டு குவாடலூப்பே என்னும் இடத்தில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்டார். அவர் போர்த்தியிருந்த துணியில் அன்னை மரியாவின் திருவுருவம் அற்புதமான விதத்தில் பதிந்ததாக மரபு.[16]
- 2002, ஆகத்து 16-19: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தாம் பிறந்த நாடாகிய போலந்துக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, கிராக்கோவ் நகரில், புனித பவுஸ்தீனா பரப்பிய இறை இரக்க பக்திக்கு மையமான திருத்தலக் கோவிலை அர்ப்பணித்தார்.
- 2002, அக்டோபர் 4: சுவீடன் நாட்டு புனித பிரிட்ஜெட் (கிபி 1303-1373) என்பவர் பிறந்த எழுநூறாம் ஆண்டுக் கொண்டாட்டம். ஐரோப்பாவின் துணைப் பாதுகாவராக அறிவிக்கப்பட்ட இப்புனிதரின் நினைவு விழாவை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உரோமையில் சிறப்பித்தார்.
- 2002, அக்டோபர் 6: "கடவுள் சேவை" (Opus Dei) என்னும் சபையைத் தோற்றுவித்த ஹோசேமரியா எஸ்க்ரீவா (1902-1975) என்பவருக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் புனிதர் பட்டம் வழங்கினார்.
- 2002, அக்டோபர் 31: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு "உரோமை நகரின் குடிமகன்" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது.
- 2003, சனவரி 1: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 36ஆம் உலக அமைதி நாள் செய்தியை வெளியிட்டார். "அவனியில் அமைதி ஏற்பட, நிலையான ஈடுபாடு வேண்டும்" என்பது 2003ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் மையப்பொருள்.[17]
- 2003, பெப்ருவரி 11: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகராகிய வாஷிங்க்டனில் உள்ள அமல அன்னை தேசிய திருத்தலத்தில் 11ஆம் உலக நோயாளர் நாள் கொண்டாடப்பட்டது.[18]
- 2003, அக்டோபர் 19: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அன்னை தெரேசாவுக்கு (1910-1997) முத்திப்பேறுபெற்ற பட்டம் அளித்தார். உரோமையில் விழாத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மறையுரையின்போது அன்னை தெரேசாவை "நல்ல சமாரியரின் திருவோவியம்" என்று அழைத்துப் போற்றினார்.[19]
- 2004, சனவரி 1: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 37ஆம் உலக அமைதி நாள் செய்தியை வெளியிட்டார். "அமைதியைக் கற்பித்தல் எந்நாளும் நிகழவேண்டிய ஒன்று" என்பது அச்செய்தியின் மையப்பொருள்.[20]
- 2004, மார்ச் 24: செருமனி நாட்டு ஆகென் (Aachen) நகரம் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு "சார்லிமேன் பரிசு" வழங்கியது. ஐரோப்பிய ஒற்றுமையை வளர்க்க சிறப்பான பங்களிப்பு நல்குவோருக்கு வழங்கப்படுகின்ற இப்பரிசைப் பெற்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஐரோப்பிய ஒற்றுமை அரசியல் அடிப்படையில் மட்டுமன்றி, கிறித்தவ சமய அடிப்படையிலும் எழவேண்டியது என்று கூறினார்.[21]
- 2004, ஏப்பிரல் 4: உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் செய்தி விடுத்தார். மையப் பொருள் "இயேசுவைக் காண விரும்புகிறோம்" (யோவா 12:21).
- 2004, சூன் 29: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலும் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயுவும் இணைந்து, கிறித்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டனர்.
- 2004, ஆகத்து 15: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பிரான்சு நாட்டு லூர்து நகரில் திறந்த வெளியில் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
- 2004, ஆகத்து 25: "காசான் இறையன்னை திருவோவிவியம்" என்னும் மரியா படிமத்தை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உருசிய மரபுவழித் திருச்சபைக்கு நன்கொடையாக அளித்தார்.[22][23]
- 2004, நவம்பர் 27: கிறித்தவ ஒன்றிப்பை வளர்க்கும் நோக்கத்துடன், பண்டைக் காலக் கிறித்தவ புனிதர்களான புனித நசியான் கிரகோரி (கிபி சுமார் 329-சுமார் 390), புனித கிறிசோஸ்தோம் யோவான் (கிபி சுமார் 347-407) ஆகியோரின் மீபொருள்களை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயுவுக்குத் திருப்பிக் கொடுத்தார். இம்மீபொருள்கள் 1204இல் சிலுவைப் போர்வீரர்களால் காண்ஸ்டாண்டிநோபுளிலிருந்து கவரப்பட்டு பின்னர் உரோமை வந்தடைந்து, வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்தன.[24]
- 2005, சனவரி 15: நாசி ஆட்சியின்போது, அவுஷ்விட்ச் வதை முகாமில் அடைக்கப்பட்ட மக்களை விடுவித்த 60ஆம் ஆண்டு நினைவாக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒரு செய்தி விடுத்தார். அதில், மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராகக் கொடுமை இழைத்து, மனித மாண்பைச் சீரழிக்கின்ற செயல்பாடு வரலாற்றில் மீண்டும் ஒருநாளும் நிகழலாகாது என்று கூறினார்.[25]
- 2005, சனவரி 22: 2004, திசம்பர் 26இல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததற்கு இரங்கல் தெரிவித்து, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் செய்தி அனுப்பி, கத்தோலிக்க திருச்சபை மக்களின் மறுவாழ்வுக்குத் துணைசெய்யும் என்று உறுதிகூறினார்.[26]
- 2005, பெப்ருவரி 1: காய்ச்சலும் மூச்சுவிட இயலாமையும் ஏற்பட்டதால் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உரோமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
- 2005, பெப்ருவரி 11: ஆப்பிரிக்க நாடாகிய கமரூனின் தலைநகர் யாவுண்டேயில் அமைந்துள்ள "திருத்தூதர்களின் அரசி அன்னை மரியா" கோவிலில் 13ஆம் உலக நோயாளர் நாள் கொண்டாடப்பட்டது. "ஆப்பிரிக்காவின் நம்பிக்கை இயேசு கிறிஸ்து: இளைஞர், நலவாழ்வு, எய்ட்ஸ்" என்னும் மையப்பொருள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நாளுக்கான செய்தியை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2004, செப்டம்பர் 8ஆம் நாள் விடுத்தார்[27]
- 2005, பெப்ருவரி 11: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மருத்துவ மனையிலிருந்து வத்திக்கான் நகரம் திரும்பினார். பெப்ருவரி 24ஆம் நாள் மீண்டும் மருத்துவ மனை சென்றார். எளிதாக மூச்சு விட வசதியாக அவருக்கு மூச்சுக் குழாயில் சிகிச்சை நடந்தது. மார்ச்சு மாதம் 13ஆம் நாள் மருத்துவ மனையை விட்டு மீண்டும் வத்திக்கான் சென்றார்.
- 2005, பெப்ருவரி 27: வழக்கமாக ஞாயிறு தோறும் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடுகின்ற மக்களோடு நண்பகல் மன்றாட்டை செபித்து, உரையும் நிகழ்த்துகின்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்த ஞாயிறு உடல்நலக் குறைவால் அந்நிகழ்ச்சியை நடத்தவில்லை. அவருடைய 26 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முதல்முறையாக இது நிகழ்ந்தது.
- 2005, மார்ச்சு 27: இயேசு உயிர்த்தெழுந்த பெருவிழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உரோமை நகருக்கும் உலகுக்கும் வழக்கமான ஆசி வழங்க புனித பேதுரு பெருங்கோவிலை அடுத்துள்ள திருத்தந்தை அரண்மனையின் மேல் சாளரத்தட்டில் தோன்றிய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பேசுவதற்கு முயன்றபோதும் அவரது வாயிலிருந்து சொற்கள் வெளிப்படவில்லை. கையை உயர்த்தி, அமைதியாக ஆசி வழங்கினார். நேரிலும் தொலைக்காட்சியிலும் மக்கள் அவருடைய வேதனையைக் கண்முன் கண்டார்கள்.
- 2005, மார்ச்சு 30: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உடல்நலம் குன்றியது. அவரது மூக்குத் துளை வழியாகக் குழல் இணைக்கப்பட்டு உணவு அளிக்கும் நிலை ஏற்பட்டது.
- 2005, ஏப்பிரல் 2, சனிக்கிழமை: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு இறுதி வழியுணவாக நற்கருணை வழங்கப்பட்டது. திருத்தைலத்தால் அவருக்கு நோயில் பூசுதல் என்னும் அருள்சாதனம் வழங்கப்பட்டது. பிற்பகல் 2:37 மணிக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் காலமானார். அப்போது அவருக்கு வயது 84.
- 2005, ஏப்பிரல் 8: வழக்கமான ஏழு நாள் துக்கம் கொண்டாடியபின் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் அடியில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாற்பது இலட்சத்துக்கு மேலான மக்கள் அடக்கச் சடங்கில் கலந்துகொண்டார்கள்.[28]
- 2005, ஏப்பிரல் 19: கர்தினால் யோசப் அலோய்ஸ் ராட்சிங்கர் கத்தோலிக்க திருச்சபையின் 265ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினாறாம் பெனடிக்ட் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்[29]. 1927ஆம்.ஆண்டு ஏப்பிரல் 16ஆம் நாள் செருமனி நாட்டின் தென்பகுதியாகிய பவேரியாவில் பிறந்த இவர் 21ஆம் நூற்றாண்டில் தெரிந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை ஆவார்.
- 2005, ஏப்பிரல் 21: பதினாறாம் பெனடிக்ட் தம் மின்னஞ்சல் முகவரியை உலகுக்கு அறிவிக்கிறார்: (benedictxvi@vatican.va).
- 2005, மே 9: திருத்தந்தை பெனடிக்ட் தமக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை இரண்டம் யோவான் பவுல் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குவதாக அறிவிக்கிறார்.
- 2005, ஆகத்து 18-21: செருமனி நாட்டில், கொலோன் நகரில் நடந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் பதினாறாம் பெனடிக்ட் கலந்துகொண்டு, சிறப்பித்தார். அவ்விழாவின் கருப்பொருள் "அவரை (இயேசுவை) வணங்க வந்திருக்கிறோம்" (மத்தேயு 2:2) என்னும் விவிலியக் கூற்றாகும். திருத்தந்தை என்னும் தகுதியில் அவர் மேற்கொண்ட முதல் அயல்நாட்டுப் பயணம் இதுவே.
- 2006, சனவரி 25: பதினாறாம் பெனடிக்ட் "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்னும் தலைப்பில் எழுதப்பட்ட தம் முதல் சுற்றுமடலை வெளியிடுகிறார்[30].
- 2006, மே 25-28: பதினாறாம் பெனடிக்ட் போலந்து நாட்டுக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு திருத்தந்தை இரண்டம் யோவான் பவுலின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல இடங்களைச் சந்தித்தார்.
- 2006, சூலை 8-9: பதினாறாம் பெனடிக்ட் எசுப்பானியா நாட்டுக்குப் பயணமாகச் சென்று, "குடும்பங்களுக்கான ஐந்தாவது உலக மாநாட்டில்" கலந்துகொண்டார்.
- 2006, செப்டம்பர் 12: பதினாறாம் பெனடிக்ட் செருமனி நாட்டில் ரேகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் "பகுத்தறிவும் இறைநம்பிக்கையும்" என்னும் பொருளில் பேருரை ஆற்றினார். மனித பண்பாட்டுச் சிந்தனையோடு பகுத்தறிவு உரையாடலில் ஈடுபடவேண்டும் என்றால் அது இறைநம்பிக்கையைப் புறக்கணித்தல் ஆகாது என்று அவர் வலியுறுத்தினார். அந்த உரையின்போது, 14-15 நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிசான்சியப் பேரரசராகிய இரண்டாம் மனுவேல் பலையோலோகோசு என்பவர் இசுலாம் வன்முறைக்குத் தூண்டுதலாயிற்று என்று கூறியிருந்ததை பதினாறாம் பெனடிக்ட் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, உலகின் பல பகுதிகளில் முசுலிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்[31].
- 2006, நவம்பர் 28 - டிசம்பர் 1: பதினாறாம் பெனடிக்ட் துருக்கி நாட்டுக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, இசுலாமியத் தலைவராகிய பெரும் மப்தி முஸ்தபா கக்ரிசி என்பவரோடு கூட பதினாறாம் பெனடிக்ட் இஸ்தான்புல் நீல மசூதிக்குள் நுழைந்து அங்கு அமைதியாக இறைவேண்டல் செய்தார்[32]. எழில்மிகு பிசான்சிய கலைப்பாணியில் கட்டப்பட்டு, கிறித்தவ பெருங்கோவிலாக விளங்கி, பின்னர் கலைகூடமாக மாற்றப்பட்ட "தூய ஞானம்" (Hagia Sophia) என்னும் இடத்தையும் திருத்தந்தை சந்தித்தார்.
- 2007, மே 15: பதினாறாம் பெனடிக்ட் எழுதிய "நாசரேத்து இயேசு" என்னும் நூல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு வந்தது[33].
- 2007, சூன் 11: பதினாறாம் பெனடிக்ட் தமக்கு முன் பதவியிலிருந்த இரண்டாம் யோவான் பவுல் அறிமுகப்படுத்திய சட்டத்தை மாற்றி, இனிமேல் திருத்தந்தைத் தேர்வுக்கு மூன்றில் இரண்டு பகுதி ஆதரவு வாக்குகள் தேவை என்று சட்டம் இயற்றினார்.
- 2007, சூலை 7: கத்தோலிக்க திருச்சபையில் முன்னாட்களில் வழக்கத்திலிருந்த "திரெந்து திருப்பலி முறை" (1962ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட பூசைப்புத்தகம்) இனிமேல் "கூடுதல் முறை" (extraordinary form) என்னும் வகையில் தொடர்ந்து பயன்படுத்தப்படலாகும் என்று அறிவித்தார். எனினும், "வழக்கமான முறை" (ordinary form) என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வழிகாட்டல்படி உருவான திருப்பலிப் புத்தகத்தின்படியே தொடரும் எனவும் அறிவித்தார்.[34]
- 2007, சூலை 13: வத்திக்கான் சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியது. அது தொடர்பாக, அங்கேரி நாட்டில் மரங்கள் நட்டு ஒரு காட்டுப்பகுதியை உருவாக்கியது. வத்திக்கான் நகர்-நாட்டில் வெளியாகும் கரிம வெளியேற்றம் (carbon emission) இவ்வாறு நிகர்ப்படுத்தப்பட்டது. இடைத் தொடர்ந்து, உலகிலேயே முதல்முறையாக கரிமம் தவிர்த்த நாடு (carbon-neutral state) என்னும் சிறப்பு வத்திக்கான் நகர்-நாட்டுக்குக் கிடைத்தது. வத்திக்கானின் ஒரு பகுதியில் சூரிய ஆற்றல் தகடுகள் நிறுவப்பட்டன[35].
- 2007, அக்டோபர் 13: 43 நாடுகளைச் சேர்ந்த 138 இசுலாம் அறிஞர்கள் ஒன்றிணைந்து, கிறித்தவமும் இசுலாமும் தமக்குள்ளே நல்லுறவை வளர்க்கும் வண்ணம் உரையாடலில் ஈடுபட வேண்டும் எனவும், உலக அமைதிக்காக ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, பதினாறாம் பெனடிக்டுக்கு மடல் அனுப்பினார்கள்[36].
- 2007, அக்டோபர் 28: பதினாறாம் பெனடிக்ட் எசுப்பானிய உள்நாட்டுப் போர் (1936-1939) நிகழ்ந்த காலத்தில் கிறித்தவ நம்பிக்கையின்பொருட்டு கொல்லப்பட்ட 498 பேருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிக்க ஆணை வெளியிட்டார்[37].
- 2007, நவம்பர் 30: பதினாறாம் பெனடிக்ட் தம் இரண்டாம் சுற்றுமடலை "நம்பிக்கையால் மீட்படைந்தோம்" (Spe Salvi) என்னும் தலைப்பில் வெளியிட்டார்[38].
- 2008, சனவரி 16: பதினாறாம் பெனடிக்ட் அறிவியல் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி, உரோமை நகர "நுண்ணறிவுப் பல்கலைக்கழகம்" (La Sapienza) என்னும் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 67 பேராசியர்கள் திருத்தந்தை அப்பல்கலைக்கழகத்திற்குச் சென்று பேருரை ஆற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்தாலி நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் அந்த எதிர்ப்புக்கு ஆதரவு தரவில்லை. சனவரி 14ஆம் நாள் "திருத்தந்தை பல்கலைக்கழகம் சென்று உரையாற்றவிருந்த நிகழ்ச்சி நடைபெறாது" என்று வத்திக்கான் அறிவித்தது. உரோமை நகரிலேயே மிகப் பழைமை வாய்ந்ததும் மிகப் பெரியதுமாகிய "நுண்ணறிவுப் பல்கலைக் கழகம்" 1303இல் அப்போது ஆட்சி செய்த திருத்தந்தை எட்டாம் போனிபாசு என்பவரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது[39].
- 2008, ஏப்பிரல் 15-20: பதினாறாம் பெனடிக்ட் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குத் திருப்பயணமாகச் சென்றார்[40].
மேலும் காண்க
[தொகு]- History of the Catholic Church கத்தோலிக்க திருச்சபை வரலாறு பரணிடப்பட்டது 2008-07-26 at the வந்தவழி இயந்திரம்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ புத்தாண்டு மறையுரை
- ↑ யூபிலி நிறைவு
- ↑ புதிய ஆயிரமாண்டு - மடல்
- ↑ புது கர்தினால்கள்
- ↑ கொரியா கல்லூரி
- ↑ கர்தினால்கள் கூட்டம்
- ↑ செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் பற்றி திருத்தந்தை உரை
- ↑ ஆயர் மன்றம்
- ↑ அசிசியில் சமயத் தலைவர்கள் கூட்டம் - திருத்தந்தை விடுத்த அழைப்பு
- ↑ திரு நாட்டில் கிறித்தவம் - திருத்தந்தை உரை
- ↑ கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து - திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
- ↑ திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி
- ↑ உலக அமைதிக்காக இறைவேண்டல் - அசிசி நகர்
- ↑ சமயங்கள் அமைதியை வளர்க்க வேண்டும் - திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆற்றிய உரை
- ↑ அமைதிக்கான அசிசி பத்துக் கட்டளைகள்
- ↑ புனித ஹுவான் டியகோ
- ↑ உலக அமைதி நாள்
- ↑ உலக நோயாளர் நாள்
- ↑ அன்னை தெரேசாவின் முத்திப்பேறுபெற்ற பட்டம்
- ↑ அமைதிச் செய்தி
- ↑ சார்லிமேன் பரிசு
- ↑ காசான் இறையன்னை திருவோவியம்
- ↑ உருசிய மரபுவழித் திருச்சபைக்கு நன்கொடை
- ↑ இரு புனித மறைவல்லுநர்களின் மீபொருள்கள்
- ↑ அவுஷ்விட்ச் வதை முகாம்
- ↑ சுனாமி இரங்கற்செய்தி
- ↑ 13ஆம் உலக நோயாளர் நாள் செய்தி
- ↑ திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அடக்கச் சடங்கு
- ↑ திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
- ↑ "கடவுள் அன்பாய் இருக்கிறார்"
- ↑ பதினாறாம் பெனடிக்ட் ஆற்றிய ரேகன்ஸ்பர்க் பேருரை
- ↑ "பெனடிக்டின் துருக்கி பயணம்". Archived from the original on 2010-07-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ "திருத்தந்தை பெனடிக்டின் "நாசரேத்து இயேசு" சுருக்கம்". Archived from the original on 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ திருப்பலி முறை
- ↑ பசுமைப்படுத்தல்
- ↑ கிறித்தவ-இசுலாமிய உரையாடல்
- ↑ எசுப்பானிய உள்நாட்டுப் போர் மறைச்சாட்சிகள்
- ↑ "நம்பிக்கையால் மீட்படைந்தோம்" - திருத்தந்தை பெனடிக்ட்
- ↑ பெனடிக்டின் உரோமைப் பல்கலைப் பயணம் பற்றிய சர்ச்சை
- ↑ பெனடிக்டின் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணம்