ஐவன் டீயாஸ்
மேதகு ஐவன் டீயாஸ் | |
---|---|
மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவர் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
ஆட்சி பீடம் | மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் |
ஆட்சி துவக்கம் | மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைமைப் பணி தொடக்கம்: மே 20, 2006 |
ஆட்சி முடிவு | மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைமைப் பணி நிறைவு: மே 10, 2011 |
முன்னிருந்தவர் | கர்தினால் கிரெஷேன்ஸியோ ஸேப்பே |
பின்வந்தவர் | ஃபெர்னாண்டோ ஃபிலோனி |
பிற பதவிகள் | -
|
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | திசம்பர் 8, 1958 வலேரியன் கிராசியாஸ்-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | சூன் 19, 1982 கர்தினால் அகொஸ்தீனோ கஸரோலி-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | பெப்ருவரி 21, 2011 |
கர்தினால் குழாம் அணி | குருக்கள் அணி |
பிற தகவல்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 14, 1936 மும்பை, இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
குறிக்கோளுரை | பணியாள் (இலத்தீன்: Servus) |
கர்தினால் ஐவன் டீயாஸ் (Ivan Cardinal Dias) கத்தோலிக்க திருச்சபையின் ஓர் இந்தியக் கர்தினால் ஆவார்[1]. இவர் உரோமையில் அமைந்துள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயம் என்னும் வத்திக்கான் செயலகத் துறையின் தலைவராக 2006இலிருந்து 2011 வரை பணியாற்றி ஓய்வுபெற்றார். முன்னதாக இவர் இந்தியாவின் மும்பை உயர்மறைமாவட்டப் பேராயராக 1996-2006 காலகட்டத்தில் பணியாற்றினார். திருத்தந்தைத் தூதரக அலுவலராக பால்க்கன் நாடுகள், கிழக்கு ஆசியா, மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பணியாற்றினார். இவர் 2001இல் கர்தினாலாக உயர்த்தப்பெற்றார்.
இளமைப் பருவமும் குருத்துவப் பணியும்
[தொகு]ஐவன் டீயாஸ் மும்பை நகரின் ஒரு குடியிருப்புப் பகுதியாகிய பந்த்ரா (Bandra) என்னும் இடத்தில் போர்த்துகீசிய-இந்திய வழியில் கார்லோ நாஸாரோ டீயாஸ் (இறப்பு: 1953) என்பவருக்கும் மரியா மார்த்தின்ஸ் டீயாஸ் (இறப்பு: 1991) என்பவருக்கும் மகனாக 1936ஆம் ஆண்டு ஏப்பிரல் 14ஆம் நாள் பிறந்தார். அவர்தம் தந்தை மகாராட்டிர மாநில உள்துறையில் கீழ்நிலைச்செயலராகப் பணியாற்றியவர்.
ஐவனின் உடன்பிறந்த மூன்று சகோதரர்களுள் ஒருவர் இந்திய இராணுவத்தில் துணைநிலைப் படைத் தளபதியாகவும் இன்னொருவர் மருத்துவராகவும் பணியாற்றினர்.
இயேசு சபையினர் நடத்தும் புனித தனிஸ்லாஸ் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, ஐவன் மும்பை உயர்மறைமாவட்ட குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, 1958ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் கர்தினால் வலேரியன் கிராசியாஸ் என்பவரால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். புனித ஸ்தேவான் பங்கில் 1961 வரை அருட்பணி புரிந்தார். பின் உரோமை நகரில் மேற்படிப்புக்காகச் சென்றார்.
உரோமையில் ஐவன் டீயாஸ் திருத்தந்தை ஆட்சி கல்வியகத்திலும் (Pontifical Ecclesiastical Academy), இலாத்தரன் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1964ஆம் ஆண்டு திருச்சபைச் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
வத்திக்கான் வெளியுறவுத் துறைப் பணி
[தொகு]ஐவன் டீயாஸ் வத்திக்கான் வெளியுறவுத் துறைப் பணியில் 1964இல் சேர்ந்தார். அப்போது திருத்தந்தை ஆறாம் பவுல் இந்தியாவுக்குப் பயணமாகச் சென்ற பின்னணியில் அப்பயணத் தயாரிப்பில் ஐவன் பங்கேற்றார்.
1965இலிருந்து 1973 வரை ஐவன் டீயாஸ் டென்மார்க், சுவீடன், நோர்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து, இந்தோனேசியா, மடகாஸ்கார், ரீயூனியன், கோமோரோ தீவுகள், மொரீசியசு போன்ற நாடுகளில் திருத்தந்தைத் தூதரக அலுவலராகப் பணியாற்றினார்.
வத்திக்கானுக்குத் திரும்பிவந்து, ஐவன் டீயாஸ் சோவியத் யூனியன், பால்ட்டிக் நாடுகள், பெலருஸ், உக்ரைன், போலந்து, பல்கேரியா, சீனா, வியத்நாம், லாவோஸ், கம்பூச்சியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, லெசோத்தோ, சுவாசிலாந்து, சிம்பாப்வே, எத்தியோப்பியா, ருவாண்டா, புருண்டி, உகாண்டா, சாம்பியா, கென்யா, தன்சானியா ஆகிய நாடுகள் தொடர்பான காரியங்களைக் கண்காணிக்கும் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
திருத்தந்தைத் தூதுவராகவும் ஆயராகவும் நியமனம்
[தொகு]1982, மே மாதம் 8ஆம் நாள் ஐவன் டீயாஸ் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் ருசுபிசிர் பட்டத்தில்-ஆயராக நியமிக்கப்பட்டு, கானா, டோகோ, பெனின் ஆகிய நாடுகளுக்குத் திருத்தந்தைத் தூதுவர் என்னும் பணியாற்ற நியமனம் பெற்றார். அதே ஆண்டு சூன் 19ஆம் நாள் கர்தினால் அகோஸ்தீனோ காஸரோலி என்பவரால் ஆயராகத் திருப்பொழிவு பெற்றார். வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் துணைத் திருப்பொழிவாளர்களாக பேராயர்கள் அக்கீல்லே சில்வெஸ்த்ரீனி என்பவரும் துரைசாமி சைமன் லூர்துசாமியும் பங்கேற்றனர். அப்போது தம் குறிக்கோளுரையாக பணியாள் (இலத்தீன்: Servus) என்னும் சொல்லைத் தேர்ந்துகொண்டார் ஆயர் ஐவன் டீயாஸ்.
1987, சூன் மாதம் 20ஆம் நாள் ஐவன் டீயாஸ் கொரியா நாட்டுக்குத் திருத்தந்தைத் தூதுவராகச் சென்றார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாளிலிருந்து அல்பேனியா நாட்டில் திருத்தந்தைத் தூதுவராகப் பணியாற்றினார். பல்லாண்டுகளாகப் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருந்த அந்நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ சமயம் தழைப்பதற்கு உழைத்தார்.
மும்பைப் பேராயராக நியமனம்
[தொகு]அல்பேனியா திருத்தந்தை தூதரகத்தில் பணியாற்றியதோடு ஐவன் டீயாஸின் தூதரகப் பணிக்காலம் முடிவுக்கு வந்தது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் ஐவன் டீயாஸ் மும்பை உயர்மறைமாவட்டத்தின் ஒன்பதாவது பேராயராக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார்.
கர்தினால் பதவி
[தொகு]2001ஆம் ஆண்டு பெப்ருவரி 21ஆம் நாள் பேராயர் ஐவன் டீயாஸ் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதே சமயத்தில் ஃபெர்ராத்தேல்லாவில் அமைந்த தூய ஆவிக் கோவில் கர்தினால்-குரு என்னும் பட்டத்தையும் பெற்றார்.
கர்தினால் டீயாஸ் வத்திக்கான் நகரத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பற்றி ஆய்வுநடத்த ஏற்படுத்தப்பட்ட குழுவில் பங்கேற்றார். 2001 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வத்திக்கானின் நடந்த 10ஆம் ஆயர் மன்றப் பொது அமர்வில் தலைமைப் பணி ஆற்றினார்.
கர்தினால் டீயாஸும் அன்னை தெரேசாவும்
[தொகு]அல்பேனியாவில் திருத்தந்தை தூதுவராகப் பணியாற்றிய காலத்தில் ஐவன் டீயாஸ் அன்னை தெரேசாவோடு நட்புறவு கொண்டிருந்தார். அன்னை ஆற்றிய பணிபற்றியும் ஐவன் டீயாஸ் மிகவும் உயர்ந்த எண்ணம் உடையவர். "அன்னை தெரேசா ஏழை மக்களை அரவணைத்ததுபோல, ஒவ்வொரு கிறித்தவரும் பிற மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுக்குப் பணிபுரிவதைத் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்" என்று கர்தினால் டீயாஸ் கூறினார்[2]. கடவுள் நம்பிக்கை இன்றைய உலகிலிருந்து மறைந்துவருவது கவலைக்குரியது என்னும் கருத்தையும் அவர் வெளியிட்டார்.
மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவராக நியமனம்
[தொகு]கத்தோலிக்க திருச்சபை பரவியிருக்கின்ற ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் அடங்கிய பகுதிகளில் திருச்சபைப் பணியைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்ட மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயம் என்னும் வத்திக்கான் தலைமைச் செயலத் துறைக்குத் தலைவராக ஐவன் டீயாஸை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2006ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் நியமனம் செய்தார். அப்பதவியின் அடிப்படையில் கர்தினால் ஐவன் டீயாஸ் திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தின் பெருவேந்தராகவும் நியமனம் பெற்றார்.
75ஆம் அகவை நிறைவுற்றதும் கர்தினால் டீயாஸ் பணித்துறப்பு மடல் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து 2011, மே 10ஆம் நாள் அவர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின் ஃபெர்னாண்டோ ஃபிலோனி என்பவர் மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பெற்றார்.
பிற பணிகள்
[தொகு]வத்திக்கான் நகரில் அமைந்துள்ள கீழ்வரும் பேராயங்களில் கர்தினால் டீயாஸ் உறுப்பினராகப் பணிபுரிகின்றார்:
- நம்பிக்கைக் கோட்பாடு பேராயம்
- திருவழிபாடு மற்றும் அருள்டையாள ஒழுங்குமுறைப் பேராயம்
- கீழைச் சபைகள் பேராயம்
- கத்தோலிக்கக் கல்விப் பேராயம்
- பண்பாட்டுக்கான திருத்தந்தைக் கழகம்
- பொதுநிலையர் மேம்பாட்டுக்கான திருத்தந்தைக் கழகம்
- கிறித்தவ ஒன்றிப்புக்கான திருத்தந்தைக் கழகம்
- பல்சமய உரையாடலுக்கான திருத்தந்தைக் கழகம்
- சமூகத் தொடர்புக் கருவிகளுக்கான திருத்தந்தைக் கழகம்
- பண்பாட்டு மரபுச்செல்வங்களுக்கான திருத்தந்தைக் கழகம்
- திருச்சபைச் சட்ட விளக்கங்களுக்கான திருத்தந்தைக் கழகம்.
கருத்துகள்
[தொகு]மும்பையில் பேராயராகப் பணியாற்றிய காலத்தில் ஐவன் டீயாஸ் இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் நிகழ்வதைக் கண்டித்தார். அடிப்படைவாதம் உண்மையான சமய நம்பிக்கைக்கு எதிரானது என்று கருத்துத் தெரிவித்தார். 2001ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில், மும்பையில் உள்ள எல்லா சமயங்களின் தலைவர்களையும் ஐவன் டீயாஸ் தம் இல்லத்திற்கு அழைத்து, "போராலும் பகைமையாலும் சிதறுண்ட உலகிற்கு அமைதி கொணரும் நோக்கத்திற்காக" இணைந்து உழைத்திட கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வாய்ப்பு உருவாக்கினார்.
2002இல் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் அரசு தரப்பில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டபோது கர்தினால் டீயாஸ் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஒழுக்க நெறியைப் பொறுத்தமட்டில் கத்தோலிக்க மரபுக் கொள்கைகளை அவர் வலியுறுத்தினார்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Ivan Cardinal Dias". Catholic-Hierarchy.org. டேவிட் எம். சேனி. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2014.
- ↑ "கர்தினால் ஐவன் டீயாஸ் - கருத்துகள்". Archived from the original on 2009-10-03. பார்க்கப்பட்ட நாள் 2011-06-07.
மேலும் அறிய
[தொகு]- Archdiocese of Bombay
- Article at AmericanCatholic.org பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்