ஆஸ்வால்டு கிராசியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு

ஆஸ்வால்டு கிராசியாஸ்
மும்பை உயர்மறைமாவட்டப் பேராயர்-கர்தினால்
கோர்வியாலே-யில் அமைந்த புனித சிலுவைப் பவுல் கோவில் குரு-கர்தினால்
Oswald Gracias at Villianur shrine 04.jpg
2013இல் புனித லூர்து அன்னை ஆலயம், வில்லியனூர், புதுவையில் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் Coat of arms of Oswald Gracias.svg
சபைகத்தோலிக்க திருச்சபை
உயர் மறைமாவட்டம்மும்பை
ஆட்சி பீடம்மும்பை
ஆட்சி துவக்கம்அக்டோபர் 16, 2006
முன்னிருந்தவர்கர்தினால் ஐவன் டீயாஸ்
பிற பதவிகள்-
  • மும்பை உதவி ஆயர் (1997-2000)
  • ஆக்ரா பேராயர் (2000-2006)
  • மும்பை பேராயர் (அக்டோபர் 14, 2006 - )
  • இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் துணைத் தலைவர் (2008-2010)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுதிசம்பர் 20, 1970
கர்தினால் வலேரியன் கிராசியாஸ்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுசெப்டம்பர் 16, 1997
கர்தினால் ஐவன் டீயாஸ்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுநவம்பர் 24, 2007
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி
பிற தகவல்கள்
பிறப்புதிசம்பர் 24, 1944 (1944-12-24) (அகவை 78)
மும்பை, இந்தியா
குடியுரிமைஇந்தியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இல்லம்மும்பை, இந்தியா
குறிக்கோளுரைTo Reconcile All Things in Christ (கிறிஸ்துவில் அனைத்தையும் ஒப்புரவாக்க)

கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் (Oswald Cardinal Gracias) கத்தோலிக்க திருச்சபையின் ஓர் இந்தியக் கர்தினால் ஆவார்[1]. இவர் இந்தியாவின் மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 2006, அக்டோபர் 14ஆம் நாளிலிருந்து பணிபுரிகின்றார். இவர் 2007 இல் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 2010 இல் இவர் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பேரவையின் துணைத் தலைவராக அவர் ஏற்கனவே 2006 இலிருந்து 2008 வரை பணியாற்றியிருந்தார்.

இளமைப் பருவமும் குருப்பட்டமும்[தொகு]

ஆஸ்வால்டு கிராசியாஸ் முன்னாள் பம்பாய் என்று அழைக்கப்பட்ட மும்பை மாநகரில் ஜெர்விஸ் கிராசியாஸ் என்பவருக்கும் அதுஸிண்டா என்பவருக்கும் மகனாக 1944, திசம்பர் 24ஆம் நாள் பிறந்தார். கோவா பகுதியைச் சார்ந்த கத்தோலிக்கரான ஆஸ்வால்டு மாஹிம் நகரில் உள்ள புனித மிக்கேல் பள்ளியில் கல்விபயின்றார். மும்பையில் இயேசு சபையினர் நடத்துகின்ற புனித சேவியர் கல்லூரியில் பயின்றார். ஓராண்டுக்குப் பின் மும்பை புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரியில் மெய்யியலும் இறையியலும் கற்றார்.

ஆஸ்வால்டு கிராசியாஸ் 1970ஆம் ஆண்டு திசம்பர் 20ஆம் நாள் கர்தினால் வலேரியன் கிராசியாஸ் (இருவரும் உறவினர் அல்லர்) என்னும் மும்பைப் பேராயரால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1971-1976 ஆண்டுக் காலத்தில் ஆஸ்வால்டு கிராசியாஸ் ஜாம்ஷெட்பூர் மறைமாவட்ட ஆயரான யோசேப்பு ரோட்ரிக்ஸ் என்பவரின் செயலராகவும் மறைமாவட்டச் செயலராகவும் பணிபுரிந்தார்.

மறைமாவட்டப் பணி[தொகு]

மேற்படிப்புக்காக உரோமை சென்ற ஆஸ்வால்டு கிராசியாஸ் 1976-1982 காலத்தில் திருத்தந்தை அர்பன் பல்கலைக் கழகத்தில் திருச்சபைச் சட்டத்துறையில் தேர்ச்சிபெற்று முனைவர் பட்டம் பெற்றார். மேலும் சட்டத்துறையில் சான்றிதழ் பட்டமும் பெற்றார்.

இந்தியா திரும்பியதும் ஆஸ்வால்டு மும்பை உயர்மறைமாவட்டத்தில் அலுவலகச் செயலராகவும், நீதிமன்ற ஆயர்-பதில்குருவாகவும் பணியாற்றினார். 1991இல் அவர் மறைமாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனார்.

ஆஸ்வால்டு கிராசியாஸ் மும்பை, பூனே, பெங்களூரு ஆகிய நகர்களில் குருத்துவக் கல்லூரிகளில் திருச்சபைச் சட்டவியல் கற்பித்தார். அவர் இந்திய திருச்சபைச் சட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

ஆயர் பணி[தொகு]

1997ஆம் ஆண்டு சூன் மாதம் 28ஆம் நாள் ஆஸ்வால்டு கிராசியாஸ் மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் அவர் ஆயராகத் திருப்பொழிவு பெற்றார். அவரை ஆயராகத் திருப்பொழிவு செய்த சடங்கிற்கு அப்போது மும்பைப் பேராயராக இருந்த மேதகு ஐவன் டீயாஸ் தலைமைதாங்கினார். ஆயர்கள் போஸ்கோ பென்ஹா என்பவரும் ஃபெர்டினாண்ட் ஃபோன்சேக்கா என்பவரும் துணைத் திருப்பொழிவாளர்களாகச் செயல்பட்டனர்.

2000, செப்டம்பர் 7ஆம் நாளன்று, ஆயர் ஆஸ்வால்டு கிராசியாஸ் ஆக்ரா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலராகவும் பணியாற்றினார். தற்போது அவர் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (இலத்தீன்) தலைவராக உள்ளார்.

கர்தினால் பதவி[தொகு]

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் ஆஸ்வால்டு கிராசியாஸைக் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார். அதே ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் உரோமை புனித பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்த கர்தினால் நியமனச் சடங்கின்போது அவர் கர்தினாலாக நிறுவப்பட்டார். அவருக்கு கோர்வியாலே-யில் அமைந்த புனித சிலுவைப் பவுல் கோவில் குரு-கர்தினால் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.

2008, பெப்ருவரி 20ஆம் நாள் ஆஸ்வால்டு கிராசியாஸ் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவிச் சின்னத்தின் விளக்கம்[தொகு]

ஆஸ்வால்டு கிராசியாஸ் ஆயராக நியமிக்கப்பட்டபோது தெரிந்துகொண்ட சின்னத்தில் (1997, செப்டம்பர் 16) நான்கு கட்டங்கள் உள்ளன. குறிக்கோளுரை மேலே ஆங்கிலத்திலும் கீழே மராத்தியத்திலும் உள்ளது. அது "அனைத்தையும் கிறிஸ்துவில் ஒப்புரவாக்க" என்னும் விவிலியச் சொற்றொடர் ஆகும் (காண்க: கொலோசையர் 1:20). மேலே இடது கட்டத்தில் இயேசு தம் சீடரின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சி (காண்க: யோவான் 13:1-17) உள்ளது. மேலே வலது புறம் "M" என்னும் எழுத்து மணிமுடியோடு உள்ளது. அது அன்னை மரியாவைக் குறிக்கிறது. கீழே இடது புறம் தராசு உளது. ஆயர் ஆஸ்வால்டு பயிற்சி பெற்ற சிறப்புத்துறை "திருச்சபைச் சட்டம்" என்பதும் அச்சட்டம் எப்போதும் நீதியை நிலைநாட்ட உதவும் கருவி என்பது குறிப்பிடப்படுகிறது. கீழே வலது புறம் கைகுலுக்கும் அடையாளம் உள்ளது. அது விருந்தோம்பல், நல்லிணக்கம் போன்ற விழுமியங்களைக் குறிக்கிறது.

பிற பணிகள்[தொகு]

பிற கர்தினால்களைப் போலவே கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாசும் உரோமைத் தலமைச் செயலகத்தின் பல துறைகளில் உறுப்பினராகப் பணியாற்றுகிறார். திருச்சபைச் சட்டத் தொகுப்பு விளக்கக் குழு உறுப்பினராக கிராசியாசை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2008, மே மாதம் நியமித்தார். 2010, சூலை 6ஆம் நாளிலிருந்து திருவழிபாடு மற்றும் அருளடையாள வழிமுறைப் பேராயத்தின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார்.

ஆதாரங்கள்[தொகு]

மேலும் அறிய[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஐவன் டீயாஸ்
மும்பை உயர்மறைமாவட்டப் பேராயர்
14 அக்டோபர் 2006 முதல்
பதவியில் உள்ளார்