ஜான் டி பிரிட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருளானந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித அருளானந்தர்
Saint John de Brito
இரத்த சாட்சி
பிறப்பு மார்ச் 1 1647
லிஸ்பன், போர்த்துக்கல்
இறப்பு பெப்ரவரி 4 1693
ஓரியூர், தமிழ் நாடு, இந்தியா
ஏற்கும் சபை/சமயம் ரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம் ஒன்பதாம் பயஸ்-ஆல் ஆகஸ்ட் 21 1853, ரோம்
புனிதர் பட்டம் பன்னிரண்டாம் பயஸ்-ஆல் ஜூன் 22 1947, ரோம்
முக்கிய திருத்தலங்கள் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம்
திருவிழா பெப்ரவரி 4
பாதுகாவல் போர்த்துக்கல், சிவகங்கை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை


புனித ஜான் டி பிரிட்டோ (Saint John de Brito, போர்த்துக்கீசம்: João de Brito, மார்ச் 1, 1647பெப்ரவரி 4, 1693) போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீசக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை பிரேசிலின் ஆளுநராக இருந்து இறந்தவர். 1662 ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1673 ஆம் ஆண்டில் மதப் போதனைக்காக தென்னிந்தியாவில் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். பின்னர் அவர் ஐரோப்பாவுக்குத் திரும்பி, 1683 இல் லிஸ்பன் திரும்பினார். இரண்டாம் பேதுரோ மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டிக் கொண்டும், அவர் மீண்டும் 24 புதிய சமயப் பிரசாரகர்களுடன் 1690 இல் மதுரை சென்றார்.

மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய ஈடுபாடுகளற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார்.. இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றி புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். இராபர்ட் தெ நோபிலி இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்.

கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்[தொகு]

ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு அறுந்து போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன் சேதுபதியிடம் இருந்தது. கிழவன் சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் இருந்தார். அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவம் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் தடியத் தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது.

முனி எனும் கிராமத்தில் ஜான் பிரிட்டோ தங்கி இருந்தபோது 1693 ஜனவரி 8 ஆம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனவரி 11 ஆம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார்.

ஜனவரி 31 ஆம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள உறையூருக்கு கொண்டு வரப்பட்டார். சிறையில் 1693 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் எழுதிய கடிதம் ஜனவரி 28 இல் என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது... கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய உறையூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்து வந்த வேலைக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்து விட்டது. என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே. வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் என்னால் எழுதுவது முடியாது...'[1].

பெப்ரவரி 4, 1693 இல் கொலையாளிகள் பிரிட்டோவை கோட்டைக்கு எதிரில் உள்ள குன்றுக்கு அழைத்துச் சென்று தலையைத் துண்டித்தனர்.

புனிதர் பட்டம்[தொகு]

ஜூன் 22, 1947 அன்று, பன்னிரண்டாம் பயஸ் ஜான் டி பிரிட்டோவை புனிதராக அறிவித்தார். இவரது திருவிழா பெப்ரவரி 4ந்தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும், கற்பக விநாயகம், திண்ணைக் கட்டுரை, பெப்ரவரி 24, 2006

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி_பிரிட்டோ&oldid=1620108" இருந்து மீள்விக்கப்பட்டது