அல்போன்ஸ் மரிய லிகோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி
அல்போன்ஸ் மரிய லிகோரி, உலக இரட்சகர் சபையின் நிறுவனர்.
ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு(1696-09-27)செப்டம்பர் 27, 1696
நாபொலி பேரரசு
இறப்புஆகத்து 1, 1787(1787-08-01) (அகவை 90)
பாகனி, நாபொலி பேரரசு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்செப்டம்பர் 15, 1816, உரோமை நகரம், இத்தாலி by ஏழாம் பயஸ்
புனிதர் பட்டம்மே 26, 1839, உரோமை நகரம், இத்தாலி by பதினாறாம் கிரகோரி
திருவிழாஆகஸ்ட் 1[1]
பாதுகாவல்நாபொலி; கீல்வாதம்

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (செப்டம்பர் 27, 1696 – ஆகஸ்ட் 1, 1787) என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839இல் புனிதர் பட்டம் அளித்தார். 1871இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார்.

வரலாறு[தொகு]

இத்தாலியின் இன்றைய நாபொலி நகருக்கு அருகிலுள்ள மரியனெல்லா என்ற ஊரில் 1696ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர் அல்போன்ஸ் மரிய லிகோரி. 16 வயதில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். இவர் எடுத்து நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. 27 வது வயதில் நேப்பிள்ஸ் மாநில வழக்கறிஞர் அமைப்பு ஒன்றுக்குத் தலைவராகவும் இருந்தார். ஆனால் 1723ம் ஆண்டில் நேப்பிள்ஸ் பிரபு ஒருவருக்கும், டஸ்கன் பிரபு ஒருவருக்கும் இடையே இருந்த சொத்து வழக்கில் அல்போன்ஸ், தனது எட்டு வருட வழக்குரைஞர் வாழ்க்கையில், முதல் முறை தோல்வி அடைந்தார். இந்தத் தோல்வி அவரை வெட்கித் தலைகுனிய வைத்தது. “உலகே, உன்னைத் தெரிந்து கொண்டேன், நீ இனிமேல் என்னைப் பார்க்க மாட்டாய்” என்று சொல்லி நீதிமன்றத்தைவிட்டுக் கிளம்பினார். மூன்று நாள்கள் சாப்பிட மறுத்துவிட்டார். இந்தத் தலைகுனிவானது, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார். 27வது வயதில் தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட்டார். மிகவும் வறிய நிலையிலிருந்த ஏழைகளுக்கு மறைப்பணியாற்றிய நேப்பிள்ஸ் பிரச்சாரம் என்ற அருட்பணியாளர்கள் அமைப்பால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவினார். 1726ம் ஆண்டில் அல்போன்ஸ் குருவானார். “அடுத்தவருடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருப்பதே மிகவும் நேர்த்தியான பிறரன்பு” என்று இவர் சொல்வதுண்டு.

1732ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உலக இரட்சகர் சபையைத் தொடங்கினார். சுமார் 20 வருடங்கள் நேப்பிள்ஸ் மாநிலத்தில் பயணம் செய்து எண்ணற்ற மக்களை மனந்திருப்பினார். 1752ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதுவதில் தன்னை அர்ப்பணித்தார். இவர் படித்தவை, எழுதியவை அனைத்தும் எளிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு ஆன்ம வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது என்பர்.

அல்போன்ஸ் நேப்பிள்ஸ் மாநிலத்தில் புனித ஆகத்தா தெய்கோத்தி என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். இதற்கு இவர் இணங்க மறுத்ததால், திருத்தந்தை இவரை கீழ்ப்படிதல் வாக்குறிதியைக்கொண்டு கட்டாயப்படுத்தி ஆயராக்கினார். 13 வருடங்கள் பனியாற்றி தனது மறைமாவட்டத்தைச் சீர்படுத்தினார். ஜான்சனிசத் தப்பறைக் கொள்கையைப் பெருமளவில் கட்டுப்படுத்தினார்.

இறப்பு[தொகு]

இவர் ஆயர் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே கடும் காய்ச்சல் வந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட் மற்றும் அவருக்கு பின் திருத்தந்தையான திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் ஆகியோர் இவரை நோயுற்றிருப்பினும் ஆயர் பதவியில் இருக்க கட்டயப்படுத்தினர். 1775இல் தனது 79வது வயதில் செவித்திறனை இழந்தார். கண்பார்வையையும் இழந்தார். இவருக்கு குழாய் வழியாகவே உணவு கொடுக்க வேண்டியிருந்தது. ஆதனால் மே, 1775இல் திருத்தந்தை ஆறாம் பயஸ் இவர் ஓய்வு பெற அனுமதியளித்தார். இவரின் இறுதிநாட்களில் இவர் துவங்கிய சபையினில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. இவரின் இறப்புக்குப் பின்னும் அவை நீடித்தன.

இவர் 1787ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நொச்சேரா தெ பகானி என்ற ஊரில் இறந்தார்.

புனிதர் பட்டமளிப்பு[தொகு]

செப்டம்பர் 15, 1816இல் இவருக்கு திருத்தந்தை ஏழாம் பயஸ் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839ம் ஆண்டு மே 26ம் தேதி இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். 1871ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி அல்போன்ஸ் மரிய லிகோரியின் திருவிழா ஆகும்.

படைப்புகள்[தொகு]

அறநெறி இறையியல் பற்றி இவர் எழுதியவை, “அறநெறி இறையியலாளர்களின் இளவரசர்” என்ற பட்டத்தை இவருக்கு தேடித் தந்தது. இன்றும் உரோமையில் அறநெறி இறையியல் கல்விக்கு இவரது உலக இரட்சகர் சபை நடத்தும் நிறுவனமே புகழ்பெற்றது.

இவர் நற்கருணை மற்றும் அன்னை மரியா மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாவின் பெருமை, திருநற்கருணை சந்திப்பு, கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, சிலுவைப்பாதை போன்ற இவரது நூல்கள் புகழ் பெற்றவை. இவர் 111 நூல்களை எழுதியுள்ளார். அவை 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 4000த்துக்கும் மேற்பட்ட பதிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Calendarium Romanum (Libreria Editrice Vaticana 1969), p. 99
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போன்ஸ்_மரிய_லிகோரி&oldid=2228354" இலிருந்து மீள்விக்கப்பட்டது