இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)
| முத்திப்பேறு பெற்ற இருபத்திமூன்றாம் யோவான் Bl. John XXIII |
|
| 261ஆம் திருத்தந்தை | |
| ஆட்சி துவக்கம் | 28 அக்டோபர் 1958 |
|---|---|
| ஆட்சி முடிவு | 3 சூன் 1963 (4 ஆண்டுகள், 218 நாட்கள்) |
| முன்னிருந்தவர் | பன்னிரண்டாம் பயஸ் |
| பின்வந்தவர் | ஆறாம் பவுல் |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவ திருநிலைப்பாடு | 10 ஆகத்து 1904 ஜூசேப்பே செப்பெத்தெல்லி-ஆல் |
| ஆயர்நிலை அருட்பொழிவு | 19 மார்ச் 1925 ஜோவான்னி தாச்சி போர்ச்செல்லி-ஆல் |
| கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 12 சனவரி 1953 |
| பிற தகவல்கள் | |
| பிறப்புப் பெயர் | ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி |
| பிறப்பு ஆண்டும் இடமும் | 25 நவம்பர் 1881 சோத்தோ இல் மோந்தே, இத்தாலியா |
| இறப்பு ஆண்டும் இடமும் | சூன் 03 1963 (அகவை 81) வத்திக்கான் நகரம் |
| குறிக்கோளுரை | கீழ்ப்படிதலும் அமைதியும் Oboedientia et Pax |
| புனிதர் பட்டம் | |
| முத்திப்பேறு பெற்ற பட்டம் | 3 செப்டம்பர் 2000 |
| முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தவர் | இரண்டாம் யோவான் பவுல் |
| யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் | |
இருபத்திமூன்றாம் யோவான் அல்லது இருபத்திமூன்றாம் அருளப்பர் (Pope John XXIII) (இலத்தீன்: Ioannes PP. XXIII; இத்தாலியம்: Giovanni XXIII)கத்தோலிக்க திருச்சபையின் 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலக்கட்டத்தில் ஆட்சிசெய்தவர்.[1]
இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அக்குறுகிய ஆட்சிக்காலத்தில் இவர் 20ஆம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் நாள் இறந்தார்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கும் திருத்தந்தை ஒன்பதாம் பயசுக்கும் 2000ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் முத்திப்பேறு பட்டம் அளித்தார்.
[தொகு] இளமைப் பருவம்
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொம்பார்டி மாநிலத்தில் பெர்கமோ என்னும் பகுதியைச் சார்ந்த சோத்தோ இல் மோந்தே (Sotto il Monte) என்னும் சிற்றூரில் பிறந்தார். அவருடைய தந்தை ஜோவான்னி பத்தீஸ்தா ரொங்கால்லி (1854-1935), தாயார் மரியான்னா ஜூலியா (1854-1939). அவர்களுக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளுள் ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி நான்காமவர். அவருடைய உடன்பிறப்புகள்:
- அல்ஃப்ரேடோ (பிறப்பு: 1889)
- மரியா கத்தரீனா (1877-1883)
- தெரேசா (1879-1954)
- அன்சீல்லா (1880-1953)
- தொமேனிக்கோ ஜூசேப்பே (பெப்ருவரி 22, 1888 - மார்ச் 14, 1888)
- பிரான்செஸ்கோ சவேரியோ (1883-1976)
- மரியா எலீசா (1884-1955)
- அஸ்ஸூந்தா கசீல்தா (பிறப்பு: 1886)
- ஜோவான்னி பிரான்செஸ்கோ (1891-1956)
- என்றீக்கா (1893-1918)
- ஜூசேப்பே லூயிஜி (பிறப்பு: 1894)
- லூயிஜி (1896-1898).
ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்களைப் போலவே அவரது குடும்பத்தினரும் குத்தகை நிலத்தில் வேலை செய்தனர்.[2] [3][4]
சிறுவயதிலேயே குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்ட ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, தம் உறவினர் ஒருவர் அளித்த நிதி உதவியோடு பெர்கமோ சிறு குருமடத்தில் கல்விபயின்றார். கல்வி உதவித் தொகை பெற்று உரோமையில் புனித அப்போல்லினார் குருமடத்தில் (இன்றைய "உரோமைத் திருத்தந்தை பெரிய குருமடம்") கல்விகற்றார். இறையியல் படிப்பை முடித்து, 1904ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார். உரோமை நகரில் "மோந்தே சாந்தோ அன்னை மரியா" கோவிலில் குருப்பட்டம் நிகழ்ந்தது.
ரொங்கால்லி சிறுவயதிலிருந்தே அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மிலான் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இம்பெர்சாகோ என்னும் ஊரில் அமைந்திருந்த அன்னை மரியா திருத்தலத்துக்கு அவர் பல முறை திருப்பயணமாகச் சென்றுவந்தார்.
1901ஆம் ஆண்டு லொம்பார்டி பட்டாளத்தில் கட்டாய இராணுவ சேவை செய்தார்.
[தொகு] திருச்சபையில் பணிபுரிதல்
பெர்கமோ மறைமாவட்டத்தின் ஆயர் ஜாக்கொமோ ரதீனி-தெதேஸ்கி என்பவர் தம் செயலராக ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லியை 1905இல் நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும் திறமையோடும் ஆற்றினார். 1914, ஆகத்து 22ஆம் நாள் ஆயர் ரதீன்-தெதேஸ்கி இறந்தார். அதுவரையிலும் ரொங்கால்லி தம் ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.
1921ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் கொடுத்து, அவரை இத்தாலியின் நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ இருபத்திமூன்றாம் யோவான்
- ↑ வத்திக்கான் தகவல்
- ↑ Jean XXIII. – Google Books. Google Books. 1970. ISBN 9782701004044. http://books.google.com/?id=EGymkVOEJIsC&pg=PA337&lpg=PA337&dq=zaverio+roncalli+1826#v=onepage&q=zaverio%20roncalli%201826&f=false. Retrieved 12 September 2010.
- ↑ Armas e Troféus, Instituto Português de Heráldica, 1990s