உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தோக்கிய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தோக்ய உபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 9-வது உபநிஷத்து. எல்லா உபநிடதங்களிலும் இரண்டாவது பெரிய உபநிடதம் ஆகும். இது ஸாமவேதத்தில் சாந்தோக்யப் பிராம்மணத்தைச் சேர்ந்தது.'சந்தோக:' என்றால் ஸாமகானம் செய்பவன் என்று பொருள். அதனிலிருந்து சாந்தோக்யம் என்ற பெயர் வந்தது. சாந்தோக்யப் பிராம்மணத்தில் உள்ள பத்து அத்தியாயங்களில் பின் எட்டு அத்தியாயங்கள் தான் சாந்தோக்ய உபநிடதம் ஆகும். பிரம்ம சூத்திரத்தின் பெரும் பகுதி இவ்வுபநிடதத்தின் மந்திரங்களை அடிப்படையாகக்கொண்டது. இதனிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மேற்கோள்களை பிரம்ம சூத்திரம் எடுத்துக் கையாள்கிறது. அதனால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு.[1]

ஒரே ரிஷியின் உபதேசமல்ல

[தொகு]
சனத்குமாரர் நாரதருக்கு பூமாவித்தையை உபதேசித்தல்
துறவி ரைக்வர் சம்வர்க்க வித்தையை சானசுருதி மன்னருக்கு உபதேசித்தல்

பிரச்ன உபநிடதம், முண்டக உபநிடதம், கடோபநிடதம், இவைபோல் இது ஒரே ரிஷியின் உபதேசமாக அமையவில்லை. பிரகதாரண்யக உபநிடதம் போல் பல ரிஷிகளின் உபதேசங்களின் தொகுதியாக அமைந்துள்ளது. இதிலுள்ள பற்பல வித்தைகளின் ரிஷிகளின் பட்டியலை கீழே காணவும்:

ரிஷி வித்தை யாருக்கு உபதேசிக்கப்பட்டது
சனத்குமாரர் பூமா வித்தை நாரதருக்கு
உத்தாலக ஆருணி ஸத்வித்தை சுவேதகேதுவுக்கு
மஹீதாஸ ஐதரேயர் புருஷவித்தை -
ரைக்வர் ஸம்வர்க்க வித்தை ஜானசுருதிக்கு
ஸத்யகாம ஜாபாலர் ஷோடசகலா பிரம்ம வித்தை -
சாண்டில்யர் சாண்டில்ய வித்தை -
பிரவாஹண ஜைவலி பஞ்சாக்னி வித்தை -

முதல் வாக்கியமே ஒரு மேல்நோக்கு

[தொகு]

எல்லா வேதாந்த நூல்களிலும் தொடக்கத்திலுள்ள வாக்கியங்கள் அந்நூலின் முக்கிய உட்கருத்துக்களை அதனுள் அடக்கியிருக்கவேண்டும் என்ற விதிப்படி, இந்நூலும் தொடக்கவாக்கியத்திலேயே அதனுடைய குறிக்கோளைக் காட்டிவிடுகிறது. ஈசாவாஸ்ய உபநிடதத்தின் முதல் வாக்கியம், கேன உபநிடதத்தின் முதல் சில வாக்கியங்கள், பிருகதாரண்யக உபநிடதத்தின் அசுவம் (குதிரை) முதலிய எல்லாமே அந்தந்த உபநிடதத்தின் உட்கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.சாந்தோக்ய உபநிடதத்தில் பல உபாசனைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் முக்கியமானது ஓங்கார உபாசனை. உபாசனை என்றால் தியானத்தின் மூலம் தியானப்பொருளின் தத்துவத்திலேயே நிலைத்திருப்பது.'ஸர்வம் கலு இதம் பிரம்ம', ' தத் த்வம் அஸி' 'ஆத்மா வா இதம் ஸர்வம்' முதலிய மஹாவாக்யங்களே இவ்வுபநிடதத்தின் சாராம்சம். மஹாவாக்கியங்களோ ஓங்காரத்தில் அடங்கியவை. படிப்படியாக ஓங்காரப் பொருளை விளங்க வைப்பதே இவ்வுபநிடதத்தின் முக்கிய நோக்கம்.'உத்கீதம்' எனப் பெயர் பெற்ற 'ஓம்' என்ற ஒற்றையெழுத்துச் சொல்லை உபாசிக்கவேண்டும் என்று தொடங்குகிறது உபநிடதம். ஓம் என்று தொடங்கியே அத்தனை வேதங்களும் கானம் செய்யப்படுகின்றன. பிரம்மத்தின் சின்னம் ஓம். சின்னம் மட்டுமல்ல, சின்னமே பிரம்மம். அதனால் பிரம்மத்தை தியானம் பண்ணுவதற்கு இதுவே வழி. இதுவே முடிவு.

உரைகள்

[தொகு]

ஆதிசங்கரருடைய விளக்க உரையே சாந்தோக்ய உபநிடதத்தின் எல்லா உரைகளிலும் முந்தியது.

பிரகதாரண்யமும் சாந்தோக்யமும்

[தொகு]

பிரகதாரண்யக உபநிடதம்மும் சாந்தோக்ய உபநிடதமும் இரு மிகப்பெரிய உபநிடதங்கள். இரண்டிற்கும் ஆதிசங்கரரும் இன்னும் மற்ற ஆசாரியர்களும் விரிவாக உரை எழுதியிருக்கின்றனர். இவையிரண்டில் இல்லாத வேதாந்த தத்துவங்கள் வேறு எங்குமே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் இரண்டையும் ஆழமாகப் பார்க்கும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காணலாம். சாந்தோக்யம் இப்பிரபஞ்சத்தில் நம் புலன்களுக்குப் புலனாவதில் தொடங்கி நம்மை பிரும்மத்திற்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கிறது. பிருகதாரண்யகம் நம் புலன்கள் அறியக்கூடியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மத்தை நம்மறிவிற்கு உட்படுத்தமாட்டாமையை விளக்குகிறது. இதனால் சாந்தோக்யத்தை 'ஸப்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் பிரகதாரண்யகத்தை 'நிஷ்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் சொல்வதுண்டு [2].

முதல் அத்தியாயம்

[தொகு]

ஓங்காரத்தின் மகிமையை அறிந்து, சிரத்தையுடனும் யோகமுறைப்படியும் செய்யப்படும் உபாசனையே வீரியமுடையதாகும். சூரியனிடம் போற்றப்படும் தெய்வம் எதுவோ அதுவே கண்ணில் ஒளியாயிருப்பது. இதுதான் அக்ஷி வித்தை. (அக்ஷி = கண்). இவ்வுலகிற்குப்புகலிடம் 'ஆகாசம்' (=வெளி). 'ஆகாசம்' என்ற வடமொழிச்சொல்லிற்கு [3] 'எங்கும் விளங்கும் பொருள்' என்று தமிழில் சொல்லலாம். இதனால் 'ஆகாசம்' என்ற தத்துவத்தை 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' விளங்கும் பரம்பொருள் என்றே அறிந்து கொள்ளலாம். இவ்விதம் அறிந்து கொள்வதைத்தான் 'ஆகாச வித்தை' என்பர்.

இதற்குப்பிறகு அத்தியாயத்தின் முடிவில் உஷஸ்தி என்பவருடைய கதை வருகிறது. இவர் கிராமம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, வேறு வழியில்லாமல் கொள்ளைத் தின்றுகொண்டிருந்த யானைக்காரன் ஒருவனிடம் பிச்சை கேட்டார். அவன் தான் தின்றுகொண்டிருந்த கொள்ளையே இவருக்குக் கொடுத்தான். கூடவே தண்ணீரும் கொடுத்தான். கொள்ளை ஏற்றுக்கொண்ட உஷஸ்தி தண்ணீரை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஏனென்றால் அது ஒருவர் சாப்பிட்டமீதம் என்றார். அப்படியென்றால் கொள்ளை மாத்திரம் எப்படி ஏற்றுக்கொண்டீர் என்று கேட்டதற்கு 'அதை உண்ணாவிடில் என் உயிர் நிலைத்திருக்காது; குடி நீரோவெனின் காமமாகும்' என்றார். உயிருக்கு ஆபத்து இருக்கும்போது தன் ஆசாரத்தை மீறுவது தவறாகாது என்பது இதனால் தெரியப்படுத்தப்படுகிறது.

முதல் அத்தியாயத்தின் பொன்மொழிகள்

[தொகு]
  • அறிவும் அறியாமையும் முற்றும் வேறு. ஆகையால் தத்துவஞானத்துடனும், சிரத்தையுடனும், யோகமுறைப்படியும் எது செய்யப்படுகிறதோ அதுவே மிகுந்த வீரியமுடையதாகும் [4].

இரண்டாவது அத்தியாயம்

[தொகு]

இவ்வத்தியாயத்தில் 24 'கண்டங்கள்' (= பாகங்கள்) உள்ளன. அவைகளில் முதல் 22 கண்டங்களில் ஸாமகானத்தை எப்படியெப்படியெல்லாம் தியானம் செய்யலாம், செய்யவேண்டும் என்பதைப்பற்றி விவரமாகச்சொல்லப்பட்டிருக்கின்றன. 23-வது கண்டத்தில் தருமத்தைப்பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துச்சொல்லப்போக, ஆதிசங்கரர் தன்னுடைய பாஷ்யத்தில், இதையே ஒரு தாவுபலகையாகக்கொண்டு, பரம்பொருளுடன் ஒன்றிப்போக துறவறம் இன்றியமையாதது என்ற தன்னுடைய அத்வைதக் கூற்றை நிலைநிறுத்துவதற்காக ஒரு நீண்ட வாதப்பிரதிவாதத்தை தன்னுரையில் சேர்த்திருக்கிறார். 23-வது கண்டத்திலுள்ள மூன்று மந்திரங்களில் சொல்வது:

தருமத்திற்கு மூன்று பிரிவினைகள் உள்ளன. ஒன்று, யஞ்ஞம், சாத்திரப்படிப்பு, தானம் ஆகிய மூன்றும் அடங்கிய இல்லற தருமம்; இரண்டாவது, தவநிலை ஒன்றையே கொண்ட வானப்பிரஸ்த தர்மம்; மூன்றாவது, குருகுலத்தில் புலனடக்கத்துடன் பிரம்மச்சர்யம் வாழ்க்கை வாழும் பிரும்மசரிய தருமம். இவர்கள் எல்லோரும் புண்ணிய உலகங்களுக்குச் செல்வார்கள். பிரம்மத்தில் நிலைபெற்றவன் (பிரம்ம-ஸம்ஸ்தன்) அழியும் அவ்வுலகங்களுக்குச் செல்லாமல் அழியாத ஆன்மநிலையை அடைகிறான்.

இரண்டாவது அத்தியாயத்தின் பொன்மொழிகள்

[தொகு]
  • இலைகளெல்லாம் நரம்பினால் நன்கு ஊடுருவிப் பரப்பிக்கப் பட்டிருப்பதுபோல் சொற்களெல்லாம் ஓங்காரத்தினால் ஊடுருவி வியாபிக்கப் பட்டிருக்கின்றன [5].

மூன்றாவது அத்தியாயம்

[தொகு]

இவ்வத்தியாயத்தில் மது வித்தை, காயத்ரீ மந்திரத்தின் மஹிமை, சாண்டில்ய வித்தை, இரண்யகர்ப தியானம் மனித வாழ்க்கையே ஒரு யக்ஞம் என்ற பார்வை, முதலியன அடங்கும்.

மது என்றால் தேன். தேன் எப்படி களியூட்டுகிறதோ அப்படி சூரியன் எல்லா புலன்களுக்கும், புலன்களின் அதிதேவதைகளான தேவர்களுக்கும் களியூட்டுகிறான். தேவர்கள் இந்த சூரியனாகிற அமிர்தத்தைப் பார்த்தே திருப்தியடைந்துவிடுகின்றனர். இவ்வித்தையை பிரம்மா பிரஜாபதிக்கும், பிரஜாபதி மனுவுக்கும் மனு மற்ற மக்களுக்கும் உபதேசித்தார். இவ்விதம் பரம்பரையாக வந்த பிரம்மஞானத்தை உத்தாலக ஆருணிக்கு அவருடைய தந்தை உபதேசித்தார்.(3-1 இலிருந்து 3-11 வரை).

தோன்றியதாக இங்கு அசைவது அசையாதது எதெதெல்லாம் உண்டோ அது எல்லாம் காயத்ரியே. தோன்றிய இதையெல்லாம் பாடுவதாலும் (காயதி), இதையெல்லாம் பேரிட்டுப்பேசி க்காப்பாற்றுவதாலும் (த்ராயதே ச) பேசும் புலனான வாக்கே காயத்ரீ.(3-12-1).

சாண்டில்ய வித்தை

[தொகு]
ஸர்வம் கல்விதம் பிரம்ம தஜ்ஜலான் இதி ஶாந்த உபாஸீத[6]

இது எல்லா உபநிடதங்களிலுமே ஓர் உயர்ந்த புகழ் பெற்ற தத்துவ வாக்கியம். இதன் பொருள்:

இது எல்லாம் (அறிவுக்கு உணவாகும் எல்லாமே) பிரம்மம் என்ற பரம்பொருளே. தத் எனும் பிரம்மத்தினின்று உண்டாகி, அதிலேயே முடிவில் லயித்து இடையில் அதிலேயே உயிர் பெற்றிருப்பதால் இவ்வுலகத்தனையும் பிரம்மமே என்று மன அமைதியுடன் உபாசிக்கவேண்டும்.
தஜ்ஜலான் என்ற சொல்லை ஆதிசங்கரர் ஆராய்ந்து உரை எழுதுகிறார்: தத், ஜ, ல, அன் -- ஆகிய நான்காகப் பிரித்து, தத் என்பது பிரம்மத்தையும், என்பது அதிலிருந்து உலகம் பிறக்கிறது (ஜன்மம் அடைகிறது) என்பதையும், என்பது அதிலேயே உலகம் லயம் அடைகிறது என்பதையும், அன் என்பது, இடையில் அதுவே உலகுக்கு ஆதாரமாக உள்ளது என்பதையும், குறிப்பதாகச் சொல்கிறார்.

சாண்டில்யவித்தையின் வேர்க்கருத்தே இந்த தனிப்பட்ட ஜீவனும் அந்த வானளாவிய பிரம்மமும் ஒன்றே என்ற கருத்துதான். மூன்றாவது அத்தியாயத்தின் 14-வது கண்டத்தில் மீதமுள்ள 2,3,4 -வது மந்திரங்கள் இதைத் தெள்ளத் தெளிவாக்குகின்றன.

மூன்றாவது அத்தியாயத்தின்பொன்மொழிகள்

[தொகு]
  • காயத்திரி மந்திரத்தின் மஹிமை பெரிது. அதைவிடப்பெரிது உள்ளுறையும் பரம்பொருள். தோன்றி மறையும் உலகெலாம் அவனுடைய ஒரு கால் பங்கு. முக்கால் பங்கு அழிவற்ற ஆன்ம ஜோதியில் அமிர்தமாயுள்ளது. [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://archive.org/details/ChandogyaUpanishad
  2. http://www.swami-krishnananda.org/chhand/ch_pub.html
  3. = எங்கும்; காசம் = பிரகாசிப்பது
  4. நானா து வித்யா ச அவித்யா ச யதேவ வித்யயா கரோதி ஶ்ரத்தயா உபநிஷதா ததேவ வீர்யவத்தரம் பவதி
  5. யதா ஶங்குனா ஸர்வாணி பர்ணானி ஸம்த்ருண்ணானி ஏவம் ஓங்காரேண ஸர்வா வாக் ஸம்த்ருண்ணா 2-23-3.
  6. சாந்தோக்ய உபநிடதம், (3-14-1)
  7. தாவானஸ்ய மஹிமா; ததோ ஜ்யாயாம்ஶ்ச பூருஷ: ; பாதோஸ்ய ஸர்வா பூதானி; த்ரிபாதஸ்யா அமிர்தம் திவி (3-12-6)

உசாத்துணைகள்

[தொகு]
  • S. Radhakrishnan. The Principal Upanishads. George Allen & Unwin Ltd. London. 1969
  • Swami Gambhirananda .(Tr) Chandogya Upanishad, with the commentary of Sri Sankaracharya. Advaita Ashrama, Calcutta, 1983.
  • அண்ணா (உரையாசிரியர்). உபநிஷத்ஸாரம். சாந்தோக்யம், பிருகதாரண்யகம், பிரம்ம சூத்ரம். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.
  • Sacred Books of the East[[1]]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தோக்கிய_உபநிடதம்&oldid=3797269" இலிருந்து மீள்விக்கப்பட்டது