உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகதாரண்யக உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிருகதாரண்யக உபநிடதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரகதாரண்யக உபநிடதம்
for alternate text of the title image per WP:ALT
தேவநாகரிबृहदारण्यक उपनिषद्
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புBṛhadāraṇyaka
இயற்றிய நாள்கிமு முதலாம் மிலேனியத்திற்கு முன்னர்[1][2]
இயற்றிய இடம் (இன்றைய)வடகிழக்கு இந்தியா, தெற்கு நேபாளம்
இயற்றியோர்யாக்யவல்க்யா
உபநிடத வகைமுக்கிய உபநிடதம்
தொடர்பான வேதம்சுக்கில யசுர் வேதம்
தொடர்பான பிரமாணம்சதபத பிராமணம்
தொடர்பான ஆரண்யகம்பிருகத ஆரண்யகம்
அடிப்படைத் தத்துவம்ஆன்மாவின் அடிப்படை அடையாளம்
உரையாசிரியர்ஆதி சங்கரர்
பிரபலமான பாடல்"அகம் பிரமாஸ்மி"
முந்தைய உபநிடதம்
அடுத்த உபநிடதம்சாந்தோக்ய உபநிடதம்


பிரகதாரண்யக உபநிடதம் (Bṛhadāraṇyaka Upanishad, சமக்கிருதம்: बृहदारण्यक उपनिषद्) சுக்ல யசுர் வேதத்தில் அமைந்துள்ள ஓர் உபநிடதம். இதனை யசுர் வேத சாரம் என்றும் அழைப்பர். இவ்வுபநிடதத்திற்கு ஆதிசங்கரர், இராமானுஜர், மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதியுள்ளனர். இது மற்ற அனைத்து உபநிடதங்களை விட மிகப் பெரியது. இது மூன்று காண்டங்களும், ஆறு அத்தியாயங்களையும் கொண்டது. இந்த உபநிடதத்தில் அதிக பிரம்ம (ஆத்ம) தத்துவங்கள் அடங்கிய கதைகள் கொண்டுள்ளது.[3]

பெயர்க்காரணம்

[தொகு]

’பிரகதாரண்யகம்’ எனும் சமற்கிருத சொல்லுக்கு மிகப்பெரிய அடர்ந்த காடு என்று பொருள். பெயருக்கு ஏற்ப இவ்வுபநிடதம் ஆத்மதத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள், சடங்குகள், தியானம், உபாசனை, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள் மற்றும் சீவ - பிரம்ம ஐக்கியத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

பிரகதாரண்யக உபநிடதத்தின் சிறப்பு

[தொகு]

இவ்வுபநிடதத்தில் அஹம் பிரம்மாஸ்மி எனும் மகா வாக்கியம் அமைந்துள்ளது. ’நான் பிரம்மாக இருக்கிறேன்’. (நானே இறைவனாக இருக்கிறேன்) என்ற மெய்ப்பொருள் தத்துவத்தை இந்த உபநிடதம் விளக்குகிறது. இதில் ‘ஆத்ம விசாரணை’ அதாவது, ஆத்மா தொடர்பான பல இரகசியங்களை சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் ‘த’ என்ற எழுத்திற்கு பலவகையான சிறப்பான தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது.

சாந்தி மந்திர பாடமும் விளக்கமும்

[தொகு]

இவ்வுபநிடதம் சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளதால், அதன் சாந்தி மந்திர பாடமே இவ்வுபநிடத்திற்கும் சாந்தி மந்திர பாடமாக அமைந்துள்ளது.

சாந்தி மந்திரம்

[தொகு]
பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

தமிழ் விளக்கம்

[தொகு]

அந்த ஈச்வரன் பூர்ண சொரூபமானவர், இந்த சீவன் பூர்ண சொரூபமானவன், பூர்ணமான ஈச்வரனிடமிருந்து பூர்ணமான சீவன் தோண்றியுள்ளான். பூர்ணமான சீவனுடைய பூர்ணமான சொரூபத்தை எடுத்துவிட்டால் பூர்ணம் மட்டும் எஞ்சியுள்ளது.(பூர்ணம் என்ற சொல்லுக்கு வரையறுக்கப்படாதது என்பது பொருள்).

காலத்தாலும் இடத்தாலும் குணத்தாலும் வரையறுக்கப்படாததாக உள்ளது. பூர்ணம் என்றும் பிரம்மம் என்றும் கூறப்படுகிறது. ஈச்வரனும் ஜீவனும் உண்மையில் பூர்ணமான தன்மையையுடையவர்களே, வெளித்தோற்றத்தில் வேற்றுமையே தவிர சொரூபத்தில் வேற்றுமை இல்லை. கடலும் அலைகளும் நீர் சொரூபமாக இருப்பது போல், ஈச்வரனும் ஜீவனும் பூர்ண சொரூபமானவர்கள். அதாவது பிரம்ம சொரூபமானவர்கள்.

இறுதியாக மூன்று முறை ஓம் ’சாந்தி’ என்று சொல்வதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. அது மனிதர்களுக்கு மூன்று வழிகளிலிருந்து தடைகள் வருகிறது. அவைகள் 1.ஆதிபெளதிகம் (Physical), 2. ஆதிதெய்விகம் (Divine), 3. ஆதிஅத்யாத்மிகம் (Internal) என்பன. ஆதிபெளதிகம் என்பது வெளிச்சூழ்நிலைகளிருந்து, குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடருந்து நமக்கு வரும் தடைகள், ஆதிதெய்விகம் என்பது துர்தேவதைகள், பேய் பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றிடமிருந்து நமக்கு வரும் தடைகள். ஆதிஅத்யாத்மிகம் என்பது நம்மிடருந்தே நமக்கு வரும் தடைகளான, நோய்கள், வலிகள், சோம்பேறித்தனம் மற்றும் ஞாபகமறதி. இது போன்ற தடைகளிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த சாந்தி மந்திரம் மூன்று முறை ஜெபித்தால், எவ்வித தடைகள் இன்றி வேதாந்த சாத்திரங்களை நன்கு கேட்டு நாம் மனதில் இருத்திக் கொள்ள முடியும்.

உபநிடத சாரம்

[தொகு]

முதல் காண்டமான மது காண்டம் அல்லது உபதேச காண்டம்

[தொகு]

முதல் இரண்டு அத்தியாயங்களில், இறைவன் பற்பல வடிவாக இருப்பினும், இறைவன் ஒருவனே என்று விளக்கப்படுகிறது. ’மெய்ப்பொருளை’ வெவ்வாறாக பிரித்து உபாசிக்கின்றவன், அவன் அறிய வேண்டியது ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தைத் தான். அது எல்லாவற்றை விட மேலானது.

ஆத்மாவை தியானிப்பவர்கள் அதுவாகவே மாறி விடுகின்றனர். எவன் தன்னை இறைவன் என்று (அஹம் பிரம்மாஸ்மி) அறிகிறானோ, அவனுடைய பெருமையைக் குறைக்க தேவர்களாலும் முடியாது.(இங்கு இறைவனை மெய்ப்பொருள், ஆத்மா, பிரம்மம், பரப்பிரம்மம், பரம்பொருள், பரமாத்மா என்றும் அழைப்பர்). இவ்வாறு இறையறிவு என்ற பிரம்மக் ஞானம் அல்லது ஆத்ம ஞானம் விளக்கப்படுகிறது.

யாக்யவல்கியர்’ தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான ’மைத்திரேயி’ வேண்டியவாறு, அவருக்கு ’பிரம்ம வித்தை’ எனும் ‘மெய்ப்பொருளின்’ தத்துவத்தை உபதேசிக்கிறார். சீவன் இந்த உலகை விட்ட பின் சட உடலில் குடிகொண்டிருந்த சீவாத்மா, பரமாத்மாவிடம் இலயித்த பின்னர், தனியே நிற்கும் உலகமும் இல்லை. நானும் இல்லை. அறிபவனும் (பரமாத்மா) அறியப்படுபவனும் ஜீவாத்மா ஒன்றேயான பிறகு, அறிதல் என்பது ஏது?

பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, வேதாந்த சாத்திரங்களிலும் குருவிடத்திலும் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும் புலனடக்கம், மனவடக்கம், தியாகம், அகிம்சை, பொறுமை, விவேகம், வைராக்கியம், தவம், சாத்திரங்களை கேட்டல், கேட்டதை மனனம் செய்தல் (படித்த சாத்திரங்களை தொடர்ந்து நினைவில் அசைபோடுதல்), பரம்பொருளை அறியும் ஆவல், நிதித்யாசனம், எப்பொழுதும் பரம்பொருளை தியானித்துக் கொண்டு இருத்தல் (முமுச்சுத்துவம்) போன்ற (சாதன சதுஷ்டிய சம்பத்தி) குணங்களைக் கொண்டவர்கள் பிரம்ம நிஷ்டை அடைந்து ஆத்ம ஞானம் பெற்று பிரம்மமாகவே மாறிவிடுவர். மேலும் பிரம்ம தத்துவத்தினை அறிந்து கொண்டதின் பலனாக சீவன் பிரம்மத்தில் ஐக்கியம் அடைவதை இவ்வுபநிடதம் போதிக்கிறது.

இரண்டாவதான முனி காண்டம்

[தொகு]

மூன்றாவது முதல் நான்காவது அத்தியாயம் முடிய, மகரிசியான யாக்யவல்க்கியர், ராஜரிசியான சனகரின் அரசவையில் கூடி இருந்த வித்வான்களிடம் பிரம்மத்தைப் பற்றி விவாதித்ததை இந்த அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது. விதேக நாட்டு அரசர் சனகர் வேள்வி செய்து கொண்டு இருந்த போது பல முனிவர்கள் கூடினர்.

சனகர் ஆயிரம் பசுக்களின் கொம்புகளில் பத்துப் பத்து பொற்காசுகளைக் கட்டிவிட்டு, அக்கூட்ட்த்தில் இருந்த முனிவர்களைப் பார்த்து, “பிரம்ம வித்தையில் யார் சிறந்தவரோ அவரே இந்த ஆயிரம் பசுக்களை ஓட்டிச் செல்லலாம் “ என்று அறிவித்தார். அனைத்து முனிவர்களும் தயங்கிய போது, யாக்யவல்கியர் மட்டும் தனது சீடனை அழைத்து, சனக மன்னரின் அந்த ஆயிரம் யாகப்பசுக்களை ஓட்டிச் செல்ல உத்தரவு இட்டார்.

அப்போது சனக மன்னரின் ராஜகுருவான ஆசுவல ரிசி குறுக்கிட்டு, நமக்குள் நீர் தான் பிரம்ம நிஷ்டரோ என்று கேட்டார். ஆசுவல ரிசி அவரிடம் பிரம்மத்தைப் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு யாக்யவல்கியர், அக்னி என் வாக்கில் உள்ளது, வாக்கு மனதில் உள்ளது, மனம் என்னிடத்தில் உள்ளது, நான் அமுதத்தில் உள்ளேன், அமுதம் பிரம்மத்தில். விசயப்பற்றே மரணம். அதிலிருந்து விடுதலையே முக்தி, என்று ஆசுவல ரிசிக்கு பிரம்மத்தைப் பற்றி விளக்கினார் யாக்யவல்கியர்.

பின் உஷஸ்தர் என்ற சாக்ராயணர், எந்தப் பிரம்மம், தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாகவும், வேறு ஒன்றை வேண்டாததாகவும், அனைத்திலும் நிறைந்து, அனைத்திலும் உறையும் ஆத்மாவாகவும் உள்ளதோ, அதை விளக்கிக்கூறும் என்றார். மேலும் எந்த ஆத்மா அனைத்திலும் உறைவது என்று கேட்டார். அதற்கு யாக்ஞவலகியர் “ஒரு காட்சியைக் காண்பவனைக் காணமுடியாது. அறிவை அறிபவனை அறிய முடியாது. இந்த ஆத்மா அனைத்திலும் உறைவது. இதற்கு மாறானதெல்லாம் அழிவுக்கு உட்பட்டவை” என்றார். மேலும் உலகின் இன்பமே, துன்பமே ஆத்மாவை பாதிப்பதில்லை. பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் இவையெல்லாம் கடந்து எது இருக்கிறதோ, அதுதான் இந்த ஆத்மா.

கஹோலர் என்ற முனிவரின் கேள்விக்கு, யாக்யவல்க்கியர் கூறிய பதில்: நம்மில் உறையும் இந்த ஆத்மாதான் அனைத்திலும் இலயித்திருக்கிறது. மேலும் ஞானிகளுக்கு கர்மம் இல்லை. கர்ம சாதனமும் இல்லை. இவைகளைத் தாண்டிச் சென்ற ஞானிகள் அடையாளம் இல்லாதவன். ஞானியிடம் காமம், கபடம், குரோதம், விரோதம், பொய் முதலியன கலந்த துர்நடத்தை முதலியவைகள் இருக்காது. அப்படி இருந்தால் அவன் ஞானி அல்ல. தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்த பின், அதனை நீரிலோ, மோரிலோ போட்டு வைத்தாலும்கூட அது எதிலும் ஒட்டாது, கலக்காது. தனியே மிதக்கும். மேலேயே மிதக்கும். அது போலப் ஆத்ம ஞானியின் மனம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களுடன் கலக்காமல், பிரம்மத்தில் மட்டும் நிலைத்து நிற்கும். நம் எல்லோருக்கும் ஒரு சமயம் உள்ளே உறையும் பரம்பொருளின் ஒளி ஒன்றையே நாடிச் செல்லும் மனோநிலை வந்துதான் தீரும். அந்த நிலை வரும் பொழுது அவன் தீரனாகிறான். அவன் ஸ்திரப் பிரக்ஞன் எனும் சலனமற்ற புத்தி உள்ளவனாகிறான்.

இகத்தையும் பரத்தையும், எல்லா உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டி வைக்கும் அந்தர்யாமியை (கண்களுக்கு தெரியாதவரை) பற்றி கூறும் என்று கேட்ட உத்தாலக ஆருணி முனிவருக்கு யாக்யவல்க்கியர் பதில் கூறுகிறார்: ”எவர் பூமியில் இருந்துகொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரைப் பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்குப் பூமி உடலாகிறதோ, எவர் பூமியின் உள் நின்று அதனை ஆள்கிறாறோ, அவர்தான் ஆத்மா. அந்தர்யாமியான அவர் அழிவற்றவர்”.

மூன்றாவதான ’கில’ காண்டம்

[தொகு]

ஐந்தாம் மற்றும் ஆறாவது அத்தியாயத்தில் மனிதர்களிடையே மன அடக்கம், புலனடக்கம் மற்றும் கருணை போதிக்கப்படுகிறது. தவத்தால் அகந்தையை தியாகம் செய்ய வேண்டும். அகந்தையை ஒரு மனிதன் தன்னிடமிருந்து நீக்கா விட்டால் இயற்கை அவனை தவிர்க்க, ”நான்” “எனது” என்ற அவன் போற்றியவைகள் எல்லாம் அவனிடமிருந்து கவர்ந்து கொள்கிறது.

பின்பு பிராண உபாசனையும், பஞ்சாக்னி வித்தையும் விளக்கப்படுகிறது. தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் பிரசாபதியிடம் சென்று “த” என்ற ஒரு எழுத்தையே மந்திர உபதேசமாக பெற்று வந்தனர்.

இந்த மந்திரத்தின் படி தாங்கள் புலனடக்கமற்றவர்களாக இருப்பதாக கருதிய தேவர்கள், பிரசாபதி தங்களை ’புலனடக்கத்துடன்’ இருக்க வேண்டும் உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். தாங்கள் மற்றவர்களை துன்புறுத்தும் இயல்பினராக கருதிய அசுரர்களோ, பிரசாபதி தங்களை ’தயை’ உடையவர்களாக இருங்கள் என்று பிரசாபதி உபதேசித்ததாக கருதிக்கொண்டனர். தாங்கள் பேராசையுடையவர்கள் என்று உணர்ந்த கொண்ட மனிதர்களோ, பிரசாபதி தங்களை ’தானம்’ செய்யும்படி உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். ஒருவனுக்கு தன் குறை தெரியாத போது, அதனை குறிப்பால் உணர்த்த இயலும் என்பது இக்கதையால் உணர்த்தப்படுகிறது. தேவர்கள் இயற்கையாகவே புலனடக்கமற்றவர்கள் என்றும், அசுரர்கள் பிறரை துன்புறுத்தும் குணம் கொண்டவர்கள் என்றும், மனிதர்கள் மற்றவர்களுக்கு தானம் வழங்காத கருமிகள் என்றும் அவரவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. Olivelle, p=xxxvi
  2. King, Ācārya, p. 52.
  3. https://archive.org/details/BrhadaranyakaUpanishad

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகதாரண்யக_உபநிடதம்&oldid=4054375" இலிருந்து மீள்விக்கப்பட்டது