உள்ளடக்கத்துக்குச் செல்

தோல்பாவைக்கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல்பாவைக்கூத்து, கொல்லம்

தோல்பாவைக்கூத்து அல்லது பாவைக்கூத்து (Tholpavakoothu) என்பது உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் ஒரு கூத்து ஆகும். பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து.இக்கலை, தோல்பாவைக் கூத்து, தோல்பாவை நிழல் கூத்து, நிழலாட்டம், தோல் பொம்மலாட்டம் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.[1] இக்கலையானது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது. சரபோஜி மன்னர் காலத்தில் தஞ்சை அரண்மனையில் செல்வாக்குப் பெற்றிருந்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள், பிற்காலத்தில் பிழைப்புக்காகத் தமிழகம் முழுமைக்கும் இடம்பெயர்ந்தார்கள்.[2] இக்காலத்தில் தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிகழ்கிறது. இக்கலையானது இன்றைய நிலையில் நலிந்து கொண்டே வருகின்ற கலையாக மாறிவருகிறது.மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

சங்கநூல் குறிப்பு

[தொகு]

உறையூர் மாடங்களில் காம உணர்வோடு ஆணும் பெண்ணுமாக இணைந்து இரவில் ஆடிக்கொண்டிருந்தனர். இது சோழன் நலங்கிள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஒன்று. அது பாவை ஆட்டத்தில் அல்லிப்பாவை கூத்து போல இருந்தது. இந்த ஆட்டத்துக்கு வேண்டிய பாவைப் பொம்மைகள் கலை வல்லுநன் கைவளத் திறத்தில் தைத்து உருவாக்கப்பட்டவை. அல்லிப்பாவை என்பது அல்லிமலர் பாவை. அல்லியரசாணி மாலை கதைக்கூத்தோ எனவும் எண்ணிப் பார்க்கலாம். (அல்லி அரசிக்கு அருச்சுணன் மாலை சூட்டிய கதையைக் கூறுவது அல்லியரசாணி மாலை - அல்லி அரசு ராணி மாலை) [3]

கதை

[தொகு]

பாவை என்பது அழகிய பெண்பொம்மை. திருமாலின் மோகினி வடிவத்தைப் பாவை என்பர். தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்தார்களாம். கடையும்போது தோன்றிய நஞ்சைச் சிவபெருமான் உண்டு அனைவரையும் காப்பாற்றினாராம். கடைசியில் தோன்றிய அமிழ்தத்தை உண்ண இருபாலாரும் சண்டையிட்டுக்கொண்டார்களாம். திருமால் ‘பாவை’ உருவில் தோன்றி வழங்கும்போது, தேவர்களும் முனிவர்களும் வாங்கி உண்டனராம். அசுரர் பாவையின் அழகையே பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அசுரர்களுக்குக் கொடுக்க வரும்போது அமிழ்தம் தீர்ந்துவிட்டதாம். அமிழ்தம் உண்டவர் என்றும் இளமையோடும், சாகாமலும் வாழ்கிறார்களாம். அசுரர்கள் பிணி மூப்புடன் வாழ்ந்து இறந்துபோகிறார்களாம். இப்படி ஒரு கதை. இந்தக் கதையை விளக்கி ஆடும் ஆட்டம் பாவை ஆட்டம்.[4] [5]

கட்டையால் செய்யப்பட்ட பொம்மையையும், தோலால் செய்யப்பட்ட பொமையாயும் ஆட்டிக் காட்டிக் கதை சொல்வதைப் பொம்மலாட்டம் என்பர். இந்தப் பொம்மலாட்டங்களும் ‘பாவை’ எனப்படும்.

கூத்துமுறை

[தொகு]

ஓலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே, தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும். பாவைகளின் மீது, விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர். கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். பாக்கூத்தைக் குடும்பமாத்தான் செய்வார்கள். கூத்தை நடத்துபவர் பலகுரலில் பேசி கூத்து காட்டுபவராகவும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் இசைக் கருவிகளை வாசிப்பவர்களாகவும் இருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து குடும்பத்தோடு கிளம்பி, பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி, மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
  2. கா.சு.வேலாயுதன், கரு.முத்து, சோபியா, என்.சுவாமிநாதன் (11 ஏப்ரல் 2018). "மெல்லக் கொல்லப்படும் நாட்டுப்புறக் கலைகள்: அனைத்துத் துறை கலைஞர்களும் பங்கேற்கும் கலாச்சார திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
    அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்,
    காம இருவர் அல்லது, யாமத்துத்
    தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
    ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
    வாயில் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப,
    நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.புறநானூறு 33

  4. விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
    திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
    பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
    புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய். திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறை

  5. காஞ்சிபுரம் தேவராசசாமி கோயில் தூணில் பாவை என்னும் மோகினி அமிழ்தம் வழங்கும் காட்சிச் சிற்பம் உள்ளது.

இவற்றையும் காணவும்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tolpava Koothu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்பாவைக்கூத்து&oldid=3678740" இலிருந்து மீள்விக்கப்பட்டது