கொக்கலிக்கட்டை ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொக்கலிக்பட்டை ஆட்டத்தைக் கோக்கலிக்கட்டை ஆட்டம் என்றும் கூறுகின்றனர். உயர்ந்த குச்சியில் ஏறி அதனைக் காலாகப் பயன்படுத்தி ஆடும் ஆண்கள் நடனம் இது. இது பயிற்சி செய்து விளையாடப்படும் ஒரு கலைத்திற ஆட்டம். கொக்கு ஒற்றைக்காலில் நிற்பதுபோல் ஒற்றைக் கொம்பில் இருகால்களையும் ஊன்றி நின்றும், இரண்டு கால்களையும் கொக்கு பயன்படுத்திக்கொள்வது போல் இரண்டு கழிகளில் ஏறி நின்றும் இது விளையாடப்படுகிறது.[1]

வகைகள்[தொகு]

ஒருகால் ஆட்டம்[தொகு]

சுமார் 10 அடி உயரமுள்ள ஒரு மூங்கில் கழியில் சுமார் ஓரடி உயரமுள்ள கணுவுக்கு மேல் சுமார் ஓரடி நீளமுள்ள குறுக்குக் கொம்பு ஒன்றைக் குறுக்காகக் கட்டி அதன்மேல் ஏறிநின்று கைகளால் கழியைப் பற்றிக்கொண்டு தத்தித் தத்தி நடந்து ஆடிக் காட்டுவது.

இருகால் ஆட்டம்[தொகு]

இதில் இரு கழிகளை இரண்டு கால்களுக்கும் இரண்டு கைகளுக்கும் பயன்படுத்துவர்.

மரக்கால் ஆட்டம்[தொகு]

தெய்வங்கள் ஆடிய நடனம் எனத் தொகுக்கையில் மரக்கால் ஆட்டத்தைத் துர்க்கை ஆடியதாகக் காட்டப்படுகிறது.[2] இது இக்காலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமாக ஆடிக் காட்டப்படுகிறது.

விழாக்கால ஆட்டம்[தொகு]

இந்த விளையாட்டுகள் எல்லாமே கோயில் திருவிழாக் காலத்தில் ஆடிக் காட்டப்படுகின்றன. மரத்தாலான நீண்ட கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் ஆகும். கொக்குகளின் நீண்ட கால்களைப் போல் காலில் கட்டும் கட்டை இருப்பதால் இதற்குக் கொக்குக் கால் கட்டை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. கங்கையம்மன் கோயில் விழாவோடு தொடர்புடையது. கங்கையம்மனின் அருளால் மட்டுமே ஆட்டத்தை ஆட முடியும் என்று நம்புகின்றனர். ஆடுபவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டைப்படை எண்ணிக்கையிலேயே இருக்கும். தப்பு, சட்டி, டோலக் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகிறது. ஆட்டத்திற்கு பயன்படுத்தும் கட்டை 60 செ. மீட்டர் முதல் 150 செ. மீட்டர் வரை உயரம் உடையதாய் இருக்கும். சிலர் 200 செ. மீட்டர் உயரமுள்ள கட்டைகளையும் பயன்படுத்துகின்றனர். கோயில் என்று மட்டுமல்லாமல் பல்வேறு பொதுநிகழ்விற்கும் விளம்பரத்திற்கும் தற்போது ஆடப்படுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". 2012-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த்தொகுதி, பாடல் 51

பார்க்க[தொகு]

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்[தொகு]

தமிழர் விளையாட்டு மடல், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1988