எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் (Positions on Jerusalem) என்பது யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்து, சிறப்புடைய பழம்பெரும் நகராகிய எருசலேம் எந்த நாட்டின் அல்லது ஆளுகையின் கீழ் வரவேண்டும் என்பது குறித்து, பன்னாட்டளவில் நிலவுகின்ற சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளைக் குறிக்கும்.[1] பன்னாட்டுச் சட்டத்தின்கீழ் எருசலேம் எந்நிலை பெறவேண்டும் என்பது குறித்து நாடுகளிடையேயும் வல்லுநர்களிடையேயும் கருத்து ஒற்றுமை இல்லை.[2] பெரும்பான்மையான உலக நாடுகள் எருசலேம் நகரை இசுரயேல் நாட்டின் தலைநகராக ஏற்பதில்லை. பல நாடுகள் எருசலேம் நகர் இசுரயேலுக்கு உரிமைப்பட்டதல்ல என்று கூறுகின்றன. ஐ.நா.வின் பெரும்பான்மையான நாடுகள், எருசலேம் பன்னாட்டு நிலை கொண்ட நகராக இருக்கவேண்டும் என்று ஐ.நா. அளித்த பரிந்துரையை ஏற்கின்றன.[3]

சர்ச்சையின் அடிப்படை[தொகு]

1967இல் நடைபெற்ற ஆறு நாள் போர் என்று அழைக்கப்படுகின்ற சண்டையின்போது இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்டது. அது சட்டத்துக்கு முரணானது என்று ஐ.நா. அவையின் பெரும்பான்மை உறுப்பினர் நாடுகள் கருதுகின்றன. "ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம்" இசுரயேலின் தலைநகராக இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிக்கை விடுத்தது. அதையும் பெரும்பான்மை நாடுகள் ஏற்பதில்லை. என்றாலும், மேற்கு எருசலேம் இசுரயேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுபற்றிப் பெரும்பான்மை நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.[4] இவ்வாறு, வெளிநாட்டுத் தூதரகங்கள் இசுரயேல் நாட்டில் டெல் அவீவ் (Tel Aviv) நகரிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலும் அமைந்துள்ளன.

சிக்கலின் தன்மையும் பன்னாட்டு நிலைப்பாடும்[தொகு]

பாலத்தீன ஆட்சியமைப்பும் (Palestinian National Authority) இசுரயேலும் எருசலேமின் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்னும் பரிந்துரை இன்னும் நிறைவேறவில்லை. பாலத்தீன ஆட்சியமைப்பின்படி, எருசலேம் (அல்-குட்சு - Al Quds) வருங்கால பாலத்தீன தன்னுரிமை நாட்டின் தலைநகர் ஆகும்.

ஆனால், இசுரயேலின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு இறுகிய நிலைப்பாடு வெளியிட்டார். அவர் கருத்துப்படி, "எருசலேம் யூத மக்களுக்கு உரிமைப்பட்டது. அது நித்திய காலமும் இசுரயேலின் இறையாண்மைக்கு உட்பட்டே இருக்கும்." "[5]

பிற நிறுவனங்களும் நாட்டு சமூகங்களும் எருசலேம் நகரம் பன்னாட்டு நிலை கொண்ட நகரமாக விளங்கவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கின்றன.[6]

பின்னணி[தொகு]

1517ஆம் ஆண்டிலிருந்து எருசலேம் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்தது. 1830இலிருந்து எருசலேமில் யூதர் பெரும்பான்மையினராக இருந்துள்ளனர்.[7]

19ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய அரசுகள் எருசலேமில் தம் செல்வாக்கைப் பரப்பத் தொடங்கின. அவற்றுள் சில நாடுகள் எருசலேமின் கிறித்தவ புனிதத் தலங்களுக்குப் பாதுகாப்பு அளித்துப் பராமரிக்கத் தொடங்கின. பல நாடுகள் எருசலேமில் அரசுத் தூதரக அலுவலகங்களை ஏற்படுத்தின.

முதலாம் உலகப் போருக்குப்பின், 1917இல் பிரித்தானிய அரசு எருசலேமைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. நேச நாடுகளின் முக்கிய உறுப்பு நாடுகள் எருசலேம் நகரம் ஆபிரகாமிய மதங்களுக்கு (யூதம், கிறித்தவம், இசுலாம்) முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, அது "மனித நாகரிகத்துக்குப் புனிதமான அறக்கட்டளை" போல உள்ளது என்று ஏற்றுக்கொண்டு, எருசலேம் நகர் குறித்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உரிமைக் கோரிக்கைகளும், உடைமைக் கோரிக்கைகளும் மதித்து ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் பன்னாட்டு உத்தரவாதம் அமைய வேண்டும் என்று ஒத்துக்கொண்டன.[8]

எருசலேமைத் தன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமுன், 1948 மே மாதத்தில், பிரித்தானிய அரசு பாலத்தீனப் பகுதி குறித்து அரபு மக்களுக்கும் யூத மக்களுக்கும் இடையே நிலவிய உடைமைக் கோரிக்கையைத் தீர்த்துவைக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொண்டது. 1947, நவம்பர் மாதம் ஐ.நா. "181ஆம் தீர்மானம்" என்னும் முடிவை வெளியிட்டது. அதன்படி, பாலத்தீனப் பகுதி அரபு நாடு என்றும் யூத நாடு என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். எருசலேம் நகரம் "தனி நிலப்பகுதி" (corpus separatum) என்னும் சட்ட நிலை, அரசியல் நிலை பெறவேண்டும். அது ஐ.நா. அவையால் நிர்வகிக்கப்படும். அது 1947இல் வெளியிடப்பட்ட "பாலத்தீனத்தைப் பிரிப்பது பற்றிய ஐ.நா. திட்டம்" என்னும் ஆவணத்தின்படி அரபு நாடு மற்றும் யூத நாடு ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு உட்படாவகையில் அமையும். இதுவே ஐ.நா. வெளியிட்ட "181ஆம் தீர்மானம்" என்னும் முடிவின் சுருக்கம்.[9]

யூதர்களின் தரப்பைச் சார்ந்த பிரதிநிதிகள், அரபு மக்கள் மேற்கூறிய தீர்மானத்தை ஏற்பதாக இருந்தால் தாங்களும் அதை ஏற்பதாக ஒத்துகொண்டனர். ஆனால் அரபு பிரதிநிதிகளும் அரபு நாடுகளும் ஐ.நா. தீர்மானம் சட்ட முரணானது என்று கூறி அதை நிராகரித்தன.[2]

இசுரயேல் தன்னை முழு இறையாண்மை கொண்ட நாடாக 1948 மே மாதம் அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து அண்டைய அரபு நாடுகள் இசுரயேல் மீது படையெடுத்தன. இவ்வாறு, எருசலேம் குறித்து ஐ.நா. வெளியிட்ட தீர்மானம் செயல்படாமல் மடிந்தது. 1949இல் போர்முடிவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, எருசலேம் நகரின் கீழ்ப்பகுதி யோர்தான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும், எருசலேம் நகரின் மேற்குப் பகுதி இசுரயேல் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தன.[10] இரு தரப்பினரும் ஒருவர் மற்றொருவர் நடைமுறையில் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பகுதிகளை ஏற்றனர்.[11] எருசலேம் நகரம் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா. வெளியிட்டிருந்த தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், இசுரயேலுக்கும் யோர்தானுக்கும் இடையே ஏற்பட்ட போர்முடிவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்ட முறைமை கொண்டதாக ஏற்கப்படவில்லை.[12]

உடனடியாக இசுரயேல், "எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டுக்கே உரித்தான பகுதி என்னும் வகையில் அது நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும்" என்று அறிக்கையிட்டது. 1950 இல் யோர்தான் கிழக்கு எருசலேமை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஐக்கிய இராச்சியம் மற்றும் பாக்கிஸ்தான் நாடு ஆகியவை இதனை ஏற்றுக் கொண்டன.[13] வேறு எந்த உலக நாடும் யோர்தானோ அல்லது இசுரயேலோ எருசலேமில் ஆட்சி செய்வதை சட்டரீதியாக ஏற்கவில்லை.[10]

ஐக்கிய நாடுகள் அவையின் நிலைப்பாடு[தொகு]

  • ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவை, "எருசலேம் நகரம் ஒரு தனிப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும், பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறுவதோடு, உரிய காலத்தில் எருசலேம் நகரம் இசுரயேல் மற்றும் பாலத்தீன நாடுகள் இரண்டினுடையவும் தலைநகராக மாற வேண்டும்" என்று பரிந்துரைக்கிறது.[14]

ஐக்கிய நாடுகளின் பொதுப்பேரவை கீழ்வருமாறு கூறியுள்ளது: "எருசலேம் நகரம் தனிப்பட்ட ஆன்மிக, சமயம் சார்ந்த மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட நகரம் என்பதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் பன்னாட்டு சமூகம் வழியாகச் செயல்படுகின்ற உரிமை ஐ.நா.வுக்கு உண்டு."[15] இந்த ஐ.நா. நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக அமைவது 1947, நவம்பர் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை வெளியிட்ட "181ஆம் தீர்மானம்" ஆகும். அது கூறியது: "எருசலேம் நகரம் ஒரு தனி நிலப்பகுதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அது பன்னாட்டு நிர்வாகத்தின் கீழ் ஐ.நா. நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்."[16]

இந்த நிலைப்பாட்டை ஐ.நா. பொதுப்பேரவை, 1948ஆம் ஆண்டு அரபு-இசுரேலி போருக்குப் பின்னரும் அறிவித்தது (ஐ.நா. பொதுப்பேரவையின் 303ஆம் தீர்மானம்). மேலும், 1979இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.[17]

இசுரயேல் எருசலேம் நகரைத் தனது தலைநகராக அறிவித்தது சட்டபூர்வமாகச் செல்லாது என்பது ஐ.நா. பொதுப்பேரவையின் நிலைப்பாடு ஆகும். அது ஐ.நா. பொதுப்பேரவையின் 2009ஆம் ஆண்டு தீர்மானம் 63/30 என்னும் அறிவிப்பிலிருந்து தெரிகிறது. அந்த தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: "ஆக்கிரமிப்பு நாடாகிய இசுரயேல் எருசலேம் திருநகரின்மீது தனது சட்டங்கள், சட்ட உரிமை, நிர்வாகம் சார்ந்தவற்றைத் திணிப்பது சட்டப்படி செல்லாது. இத்தகைய சட்டமுரணான, தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இசுரயேல் கேட்டுக்கொள்ளப்படுகிறது."[15]

இதுவரை, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆறு தீர்மானங்கள் இசுரயேல் எருசலேமைக் கையகப்படுத்தியது சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்துள்ளன. பாகுபடாத எருசலேம் இசுரயேலின் தலைநகராக நித்திய காலமும் இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு பன்னாட்டுச் சட்டத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் எருசலேமிலிருந்து பன்னாட்டுத் தூதரகங்கள் இடம்பெயர்வதே நல்லது என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தனது 1980ஆம் ஆண்டு தீர்மானம் 478இல் அறிவித்தது.

இசுரயேல் நாட்டின் நிலைப்பாடு[தொகு]

க்னெசெட் என்று அழைக்கப்படும் இசுரயேல் நாடாளுமன்றம்
  • இசுரேல் இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துத் தன்னோடு இணைத்துக்கொண்டு, எருசலேம் நகரின் முழுப்பகுதியும் தனது தலைநகரம் என்று அறிவித்தது. எருசலேம் நகரைப் பிரிப்பதை ஏற்கமுடியாது என்றும், நகரம் முழுவதும் இசுரயேலின் இறையாண்மையின் கீழ்தான் இருக்கும் என்றும் பெரும்பான்மையான இசுரயேல் அரசுகள் இதுவரை கூறிவந்துள்ளன. எருசலேம் நகரைப் பிரிப்பது பற்றிய பரிந்துரையைப் பரிசீலிக்கத் தாம் முன்வர அணியமாக உள்ளதாக இதுவரை சில இசுரயேலி அரசுகள் கூறின. மேலும், பாலத்தீன நாடு தனக்கென்று தலைநகரம் ஏற்படுத்த விரும்பினால் அந்நகரம் எருசலேமின் புறப்பகுதியான "அபு தீஸ்" (Abu Dis) பகுதியில் வேண்டுமானால் அமையலாம் என்றும் இசுரயேல் கருத்துத் தெரிவித்ததுண்டு

எருசலேம் நகரின் மேற்குப்பகுதியைத் 1948ஆம் ஆண்டில் தனக்கு உரியதாகப் பெற்றதால், அதன் மீது இறையாண்மை தனக்கு உண்டு என்று இசுரயேல் நாடு உரிமைபாராட்டுகிறது. பாலத்தீனக் குடியேற்றத்தை விட்டுவிட்டு பிரித்தானிய நாடு சென்றதால், போர்க்காலத்தின்போது எருசலேம் பகுதி எந்தவொரு இறையாண்மையின் கீழும் இருக்கவில்லை. அப்போது இசுரயேல் அங்கு நுழைந்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது.[10]

1967இல் ஆறு நாள் போர் என்னும் சண்டையின்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைக் கைப்பற்றி அங்கு தனது ஆட்சியையும் நிர்வாகத்தையும் நிறுவி, புதிய நகராட்சி எல்லைகளையும் வரையறுத்தது. எருசலேம் நகரில் அமைந்துள்ள புனித தலங்களுக்குப் பயணியர் சென்றுவருவதற்கான பாதுகாப்பையும் இசுரயேல் அளித்தது. அச்சமயத்தில் இசுரயேல் ஐ.நா.வுக்குக் கொடுத்த தகவலில், தான் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துப் பிடித்துக்கொள்ளவில்லை என்றும், நிர்வாகத்தின் பொருட்டும் நகராட்சி எல்லைகளை வரையறுக்கும் பொருட்டும் நடவடிக்கை எடுத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும் கூறியது. ஆனால், இசுரயேலின் உச்ச நீதி மன்றம் பின்னர் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைத் தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாகக் கருதிச் செயல்பட்டது தெளிவாகவே தெரிந்தது.

இசுரயேல் தனது நிலைப்பாட்டைக் கீழ்வருமாறு வெளியிட்டது: "யோர்தான் நாடு எருசலேம் நகரின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்து 1948இல் கையகப்படுத்திக்கொண்டது. எனவே அதற்கு இறையாண்மை கோர முடியாது. ஆனால் இசுரயேலோ 1967இல் தற்காப்புப் போரில் ஈடுபட்டு அப்பகுதியைப் பெற்றுக்கொண்டதால், அப்பகுதியின்மீது அதிக வன்மையோடு உரிமைபாராட்ட முடியும்."[10]

1980 சூலை மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றமான கினேசட், நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் ஓர் அம்சமாக "எருசலேம் சட்டம்" என்றொரு சட்டம் இயற்றி, "ஒன்றுபட்ட எருசலேம் இசுரயேலின் தலைநகர் ஆகும்" என்று அறிக்கையிட்டது.[18] இசுரயேலின் நாட்டுத்தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் எருசலேமில் அமைந்துள்ளன.

2010, நவம்பர் மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றம் மற்றுமொரு சட்டத்தை இயற்றியது. கிழக்கு எருசலேம் சார்பான மற்றும் கோலான் நிலப்பகுதி தொடர்பான உடைமையுரிமையை இசுரயேல் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்குமுன் பொதுமக்களின் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் 60 உறுப்பினரின் இசைவு பெறப்பட்டிருக்கவேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது.[19]

ஐ.நா. அவை "எருசலேம் பன்னாட்டு நிர்வாகத்தின்கீழ் இருக்கவேண்டும்" என்று தீர்மானம் இயற்றியதற்குப் பன்னாட்டுச் சட்டமுறையில் எந்த ஆதாரமும் இல்லை என்று இசுரயேல் கருதுகிறது. மேலும், ஐ.நா.வின் நிலைப்பாடு எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாத ஒரு பரிந்துரை மட்டுமே. அப்பரிந்துரையின் செயல்படு காலமும் கடந்துவிட்டது. அதாவது, அரபு நாடுகள் ஐ.நா.வின் 181ஆம் தீர்மானத்தை மீறி, இசுரயேல் நாட்டின்மீது சட்டமுரணாகப் படையெடுத்த நேரத்திலிருந்து ஐ.நா.வின் பரிந்துரை மடிந்துபட்டது. இது இசுரயேலின் நிலைப்பாடு. எருசலேமைத் "தனிப்பகுதி" (corpus separatum) என்று கருதுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தமோ, உடன்படிக்கையோ, புரிதலோ எக்காலத்திலும் இருந்ததில்லை என்று இசுரயேல் கூறுகிறது.[20]

இசுரயேலில் ஆட்சிசெய்த அரசுகள் மாறியபோது, எருசலேம் பற்றி அந்த அரசுகள் கொண்டிருந்த நிலைப்பாடும் அவ்வப்போது மாறிவந்துள்ளது. இசுரயேலி பிரதமராய் இருந்த இட்சாக் ரபீன் (Yitzhak Rabin) ஓஸ்லோ உடன்படிக்கையில் (Oslo Accords) கையெழுத்திட்டார். அதில் எருசலேமின் வருங்கால சட்டநிலை கருத்துப்பரிமாற்றத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ராபின், "எருசலேம் நகரை ஒருபோதும் பிரிக்கப்போவதில்லை" என்றும் கூறினார். பின்னர், 1995இல் பள்ளிச் சிறுவர் குழுவினரிடம் பேசும்போது ராபின், "இசுரயேலின் இறையாண்மையின் கீழ் இருக்கின்ற ஒன்றுபட்ட எருசலேமைக் கைவிட்டால் அமைதி ஏற்படும் என்று யாராவது கூறினால், அதற்கு நாம் அளிக்கின்ற பதில், 'அப்படிப்பட்ட அமைதி எங்களுக்கு வேண்டாம்' என்பதே" என்று கூறினார்.

பிரதமர் ராபினுக்குப் பின் பதவி ஏற்ற பிரதமர் பென்யமின் நெத்தன்யாகு என்பவரும் மேற்கூறிய நிலைப்பாடு கொண்டவராகவே இருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் பாராக் என்பவர், தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, "எருசலேம் பிரிக்கப்படுவது தேவை என்றால் அதற்கும் அணியமாய் இருக்கிறோம்" என்று கூறினார். இவ்வாறு விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு பேசிய முதல் இசுரயேலி பிரதமர் பாராக் மட்டுமே.[21] பின்னர் பதவியேற்ற பிரதமர் ஆரியேல் ஷாரோன் (Ariel Sharon) "எருசலேம் எக்காலத்திற்கும் யூத மக்களின் பிளவுபடாத தலைநகராக இருக்கும்" என்று சூளுரைத்தார்.[22] பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் ஓல்மெர்ட் என்பவர், தற்போது இசுரயேலி இறையாண்மையின் கீழ் உள்ள அரபு குடியேற்றங்களைப் பிரித்துக் கொடுக்கவும், கோவில் மலை பகுதியைப் பன்னாட்டு அறக்கட்டளை ஒன்றின்கீழ் கொணரவும் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், அதன் பின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு கடினப்போக்கு கொண்டவர். அவர் கூற்றுப்படி, "ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம் நகரம் நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும். எந்த சமயத்தைச் சார்ந்தவர்களும் எருசலேமுக்கு வந்து போகலாம்."

பாலத்தீனிய ஆட்சியமைப்பின் நிலைப்பாடு[தொகு]

கிழக்கு எருசலேம் இசுரயேல் நாட்டினால் ஆக்கிரமித்துக் கைப்பற்றப்பட்ட பகுதி என்று ஐ.நா. பாதுகாப்பு அவை தனது 242ஆம் தீர்மானத்தில் கூறியிருப்பதைப் பாலத்தீனிய ஆட்சியமைப்பு தன் நிலைப்பாடாகக் கொண்டுள்ளது. பாலத்தீன நாட்டின் தலைநகரம் கோவில் மலை உட்பட்ட கிழக்கு எருசலேம் முழுவதும் ஆகும் என்றும், மேற்கு எருசலேம் எந்நிலையது என்பதற்கு குறித்துப் பேச்சுவார்த்தையின்படி முடிவுசெய்யலாம் என்பதும் பாலத்தீனிய நிலைப்பாடு. இருந்தாலும், "எருசலேமைத் 'திறந்த நகர்' (open city) என்று கொள்வது, அல்லது வேறு தீர்வுகளைக் காண்பது எப்படியென்று பேச்சுவார்த்தை நடத்துவது தனக்கு ஏற்புடையதே என்றும் பாலத்தீனம் கூறுகிறது.

1988ஆம் ஆண்டு பாலத்தீனிய விடுதலை இயக்கம் (PLO) வெளியிட்ட "பாலத்தீனிய விடுதலைப் பிரகடனத்தில்" (Palestinian Declaration of Independence) எருசலேம் பாலத்தீன நாட்டின் தலைநகரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் பாலத்தீனிய ஆட்சியமைப்பு, எருசலேமைத் தன் தலைநகராக அறிவித்துச் சட்டம் இயற்றியது. அச்சட்டம் யாசிர் அரபாத்தால் 2002இல் அமலாக்கப்பட்டது. காண்க:[23]

பாலத்தீனிய நாட்டு ஆட்சியமைப்பின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு இது: "எருசலேம் 'திறந்த நகராக' இருக்கும். அது தனித்தபகுதிகளாகப் பிரிக்கப்படாமல் இருக்கும். சமயம் தொடர்பான இடங்களைப் பாதுகாத்தல், அவற்றைச் சந்தித்து வழிபாடு நடத்தவரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அதற்கான சுதந்திரம் வழங்கல் அனைத்திற்கும் பாலத்தீன அரசு பொறுப்பு ஏற்கும்."[24]

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு[தொகு]

  • ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா. அவை அறிக்கையிட்ட 181ஆம் தீர்மானத்தின்படி, எருசலேம் "தனிப்பகுதி" (corpus separatum) என்பதால் அதுவே தமது நிலைப்பாடும் ஆகும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை.[25][26] அரபு-இசுரயேலி பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதால், பாலத்தீனம் என்றொரு நாடும் இசுரயேல் என்றொரு நாடும் இருக்கவேண்டும் என்ற பார்வையில் எருசலேமின் நிலை பற்றிய பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். மோதலில் ஈடுபட்டுள்ளா எல்லாத் தரப்பினரின் சமயம் மற்றும் அரசியல் சார்ந்த கரிசனைகளைக் கண்முன் கொண்டு, எருசலேம் நகரம் இரு நாடுகளுக்கும் பொதுவான தலைநகராக அமைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.[27][28]

ஒரு நிலப்பகுதியை வன்முறையால் கையகப்படுத்துவது சட்ட முரணானது என்னும் கொள்கையின் அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்பு அவையின் 242ஆம் தீர்மானத்தின் அடிப்படையிலும் ஐரோப்பிய ஒன்றியம், பேச்சுவார்த்தைகளின் விளைவாக எருசலேமின் நிரந்தர நிலை பற்றிய தீர்வு ஏற்படுவதற்குத் தடையாக அமையக்கூடுமான நடவடிக்கைகளை எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒத்துக்கொண்டாலன்றி, எருசலேம் தொடர்பான எல்லை வரையறைகள் 1967க்கு முந்திய நிலைப்படி அமைய வேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுள் பின்வருவனவும் அடங்கும்: கிழக்கு எருசலேமில் பாலத்தீன ஆட்சியமைப்பு தனது நிறுவனங்களை மீண்டும் ஏற்படுத்த வழி திறக்கப்பட வேண்டும். குறிப்பாக, "கிழக்கு இல்லம்" (Orient House), வர்த்தக இல்லம் (Chamber of Commerce) ஆகியவை இந்த நிறுவனங்களுள் அடங்கும். வேலைக்கு அனுமதி வழங்கல், கல்வி மற்றும் மருத்துவ வசதி பெற வாய்ப்புகள், கட்டடங்கள் எழுப்ப அனுமதி, வீடுகள் தகர்த்தல், வரிவிதிப்பு, செலவினங்கள் போன்ற துறைகளைப் பொறுத்தமட்டில் கிழக்கு எருசலேமில் பாலத்தீனியருக்கு எதிராகச் செயல்படாதிருக்க வேண்டும் என்று இசுரயேலி அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது."[29]

2010, மார்ச்சு 21ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் துறை பிரதிநிதியான காதரின் ஆஷ்லி (Catherine Ashley) என்பவர் பின்வருமாறு கூறினார்:

"ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை சென்ற திசம்பர் மாதம் அறிக்கையிட்டது. அதன்படி, அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்ற பாலத்தீனம் மற்றும் இசுரயேல் என இரு நாடுகள் அருகருகே உருவாகும் தீர்மானத்தை அது ஆதரிக்கிறது. 1967இல் இருந்த எல்லைக் கோட்டின்படி, கிழக்கு எருசலேம் மற்றும் காசா நிலப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி மேற்குக் கரையில் செயல்படக்கூடுமான பாலத்தீன நாடு உருவாக வேண்டும். எருசலேம் நகரம் பாலத்தீனம் மற்றும் இசுரயேல் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய தலைநகராக மாறக்கூடிய விதத்தில் வழி காணப்பட வேண்டும்."

- ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் துறை பிரதிநிதி காதரின் ஆஷ்லி[30]

உருசிய நாட்டின் நிலைப்பாடு[தொகு]

  • உருசியா உருசிய நாடு, எருசலேம் நகரம் பன்னாட்டு ஆளுகையின் கீழ் வருவது நல்லது என்று கருத்துத் தெரிவித்துள்ளது. கிழக்கு எருசலேமில் இசுரயேலி குடியேற்றம் நிகழ்வதையும் உருசியா எதிர்க்கிறது. 2010இல் உருசிய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் பின்வருமாறு கூறினார்: "இசுரயேல் கிழக்கு எருசலேமில் குடியேற்றங்களைக் கொணர்வதற்காகக் கட்டட விரிப்பில் ஈடுபட்டிருப்பது ஏற்கத்தகாதது. அது நல்லுறவுச் செயல்பாட்டுக்குத் தடையாக மாறுகின்ற ஆபத்து உள்ளது.[31] பாலத்தீன நாடு தான் இறையாண்மை கொண்ட நாடு என்று அறிக்கையிட்டதை உருசியா ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, 2011 சனவரி மாதத்தில் உருசிய பிரதமர் மேத்வதோவ் (Medvedev) என்பவர் பின்வருமாறு கூறினார்: "பாலத்தீனிய மக்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு கொண்டிருக்க உரிமைபெற்றுள்ளார்கள் என்பதை உருசியா இதுவரை ஆதரித்துவந்துள்ளது. இனிமேலும் அந்த உரிமையை உருசியா ஆதரிக்கிறது. மேலும் பாலத்தீனம் ஒரு தனி நாடாகி கிழக்கு எருசலேமைத் தனது தலைநகராகக் கொண்டிருக்கவும் உரிமைபெற்றுள்ளது. இந்த உரிமையை யாரும் பறித்துவிட முடியாது."[32]

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு[தொகு]

2006 மே மாதம் - விரிந்த எருசலேம் (அமெரிக்க மைய உளவு நிறுவனம் - CIA - காட்டுகின்ற தொலையுணர்வு நிலப்படம்: குடியேற்றங்கள், அகதி முகாம்கள், வேலிகள், சுவர்கள் போன்றவை காட்டப்படுகின்றன.
  • ஐக்கிய அமெரிக்கா எருசலேம் நகரம் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வருவது விரும்பத்தக்கது என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு.[33] எருசலேம் இறுதியாக எந்நிலை கொண்டிருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுசெய்ய வேண்டும்.[34]. எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டின் தலைநகரம் என்பதை ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஏற்பதில்லை.[35]தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு அமெரிக்க அதிபர் டொனல்ட் திரம்பு இசுரேலின் தலைநகராமாக எருசலேத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 6, 2017இல் அறிவித்தார் தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் செருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்[36]

"எருசலேம் நகரம்" எந்த எல்லைகளைக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்து, அந்நகரை ஒரு "தனிநிலமாக" (corpus separatum) அறிவித்ததோ, அதையே ஐக்கிய அமெரிக்கா நாடுகளும் குறிப்பிடுகிறது. அதன்படி, "சட்டப்பூர்வமாக" (de jure) எருசலேம் நகரம் "பாலத்தீன நில ஆட்சியை" (Palestine Mandate) சார்ந்தது; அதன்பின் அந்நகரம் வேறு எந்த இறையாண்மைகொண்ட நாட்டின் ஆளுகையின்கீழும் வந்ததில்லை.[37][38] 1989-1993 ஆண்டுகளில் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (George H. W. Bush) பின்வருமாறு கூறினார்: "கிழக்கு எருசலேமில் புதிய குடியேற்றங்கள் கட்டப்படுவது சரி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் கருதவில்லை"[39] மேலும், எருசலேம் பிளவுபடுவதையும் தான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

2008ஆம் ஆண்டு, சூன் மாதம் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பராக் ஒபாமா பின்வருமாறு கூறினார்: "எருசலேம் இசுரயேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும். அது பிளவுபடாமலும் இருக்கவேண்டும்."[40] கிழக்கு எருசலேமில் வாழ்ந்த பாலத்தீனியரைப் பாதிக்கும் விதத்தில் ஜீலோ மற்றும் ராமத் ஷ்லோமோ பகுதிகளில் இசுரயேலி குடியேற்றம் விரிக்கப்படுவதையும், மக்கள் வீடுகளிலிருந்து அகற்றப்படுவதையும், வீடுகள் தரைமட்டமாக்கப்படுவதையும் ஒபாமா அரசு கண்டனம் செய்துள்ளது.[41][42][43]

ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐ.நா. தீர்மானங்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு[தொகு]

  • ஐ.அ.நா. 1947 நவம்பரில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் பொது அவையின் 194ஆம் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது.
  • 1948இல் நிகழ்ந்த அரபு-இசுரேலி போருக்குப் பின்னும் 1948 திசம்பரில் அவ்வாறே ஆதரவு அளித்தது.
  • எருசலேம் நகரம் ஒரு "தனிநிலமாக" (corpus separatum) மாற்றப்பட்டு, பன்னாட்டு ஆளுகையின் கீழ் ஐ.நா. கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று ஐ.நா. பொதுப்பேரவை வெளியிட்ட தீர்மானத்தை, நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறி ஐ.அ.நா. ஏற்கவில்லை. அதற்கு அமெரிக்கா அளித்த விளக்கம்: "யோர்தான் நாடும் இசுரயேல் நாடும் ஏற்கெனவே எருசலேம் நகரில் அரசியல் அமைப்பை உருவாக்கிவிட்டிருந்தன என்பதால் எருசலேமைப் பன்னாட்டு ஆட்சியின் கீழ் கொணர்வது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல."[44]
  • 1949இல் இசுரயேல் தன் தலைநகரை டெல் அவீவ் (Tel Aviv) நகரிலிருந்து அகற்றி எருசலேமில் நிறுவுவதாக அறிவித்தற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது. அதுபோலவே 1950இல் யோர்தான் நாடு எருசலேமைத் தனது இரண்டாம் தலைநகராக அறிவித்ததற்கும் அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டது.[44]
  • 1967ஆம் ஆண்டு "ஆறுநாள் போருக்குப்" பின் இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக் கையகப்படுத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது.[44]
  • அமெரிக்கா எருசலேமில் ஒரு துணைத் தூதரகத்தை (Consulate) ஏற்படுத்தியுள்ளது. அது முக்கியமாக பாலத்தீன ஆட்சியமைப்போடு உள்ள தொடர்புகளைப் பேணுகிறது. இசுரயேலோடு உறவுகளைப் பேண அமெரிக்கா டெல் அவீவில் தூதரகம் அமைத்துள்ளது. எருசலேமில் உள்ள துணைத் தூதரகம் இசுரயேல் அரசின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.[45]
  • எருசலேம் எதிர்காலத்தில் எந்நிலை பெற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகள் மூலம் எடுக்கின்ற முடிவைப் பொறுத்ததாக இருக்கவேண்டும் என்னும் கருத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது.[44]
  • தூதரகத்தை டெல் அவீவிலிருந்து எருசலேமுக்கு நகர்த்துவது போன்ற ஒருதலையான முடிவுகள் எடுத்து, அதன் காரணமாக எருசலேமின் நிலை பேச்சுவார்த்தைகள் வழி சுமூகமாக நிர்ணயிக்கப்படுவதற்குத் தடையாக அமையக்கூடுமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்போவதில்லை என்னும் கொள்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசுகள் கடைப்பிடித்துவந்துள்ளன.[44]
  • 2002ஆம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) "இசுரயேல் நாட்டில் பிறக்கின்ற அமெரிக்க குடிகள் தாங்கள் பிறந்த தாய்நாடு 'இசுரயேல்' என்று குறிப்பிடலாம்" என்று சட்டம் இயற்றியது. ஆனாம் அச்சட்டத்தை அமெரிக்க முதல்வர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர்.[46]
  • ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு உரிமையான ஆறு கட்டடங்கள் எருசலேமில் உள்ளன. அவற்றில் 471 பேர் பணியாற்றுகின்றனர். 2010 ஆண்டுக் கணக்குப்படி அதன் நிதித்திட்டம் 96 மில்லியன் டாலர் ஆகும்.[47]

ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு[தொகு]

  • ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தின் கொள்கைப்படி, எருசலேம் ஒரு "தனிநிலமாக" கருதப்பட்டு, பன்னாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் ஐ.நா. பார்வையில் செயல்படும் என்றிருந்தது.[48] ஆனால் எருசலேம் "தனிநிலமாக" ஏற்படுத்தப்படவில்லை. பாலத்தீனப் பகுதியைப் பிரிப்பது குறித்து ஐ.நா. பொதுப்பேரவை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே இசுரயேல் மேற்கு எருசலேமை ஆக்கிரமித்தது.[48] யோர்தான் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்தது. அதில் எருசலேமின் பழமை வாந்த நகர்ப்பகுதியும் (Old City) அடங்கும்.[48] எருசலேமின் இரு பகுதிகளை இசுரயேலும் யோர்தானும் தமது நடைமுறை (de facto) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை ஐக்கிய இராச்சியம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்நாடுகளுக்கு எருசலேமின் மீது இறையாண்மை உண்டென்று ஐக்கிய இராச்சியம் ஏற்றுக்கொள்ளவில்லை.[48]
  • 1967இல் இசுரயேல் கிழக்கு எருசலேமையும் பிடித்துக்கொண்டது. இசுரயேல் அவ்வாறு செயல்பட்டதை ஐக்கிய இராச்சியம் இராணுவ ஆக்கிரமிப்பாகக் கருதுகிறது. எனவே இசுரயேல் கிழக்கு எருசலேமில் ஏற்படுத்திய குடியேற்றங்கள் நான்காம் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி (Fourth Geneva Convention) சட்ட முரணானவை என்பது ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு ஆகும்.[48][49]
  • ஐக்கிய இராச்சியம் இசுரயேல் நாட்டில் தனது தூதரகத்தை டெல் அவீவ் நகரில் அமைத்துள்ளது, எருசலேமில் அல்ல.[48] கிழக்கு எருசலேமில் ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் துணைத் தூதரகம் உள்ளது. அதில் ஒரு பொதுத் துணைத் தூதர் உள்ளார். ஆனால் அந்த அலுவலகம் எந்த நாட்டின் தூதர் இல்லப் பட்டியலிலும் இல்லை. இவ்வாறு ஐக்கிய இராச்சியம், எந்த ஒரு நாட்டுக்கும் எருசலேமின்மீது இறையாண்மை இல்லை என்னும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.[48]
  • ஐக்கிய இராச்சியத்தின் கொள்கைப்படி, எருசலேமின் நிலை என்னவென்பது இனிமேலாகத் தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒட்டுமொத்தமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் எருசலேமின் நிலை நிர்ணயிக்கப்பட வேண்டும். எனினும், இனிமேலாக எருசலேம் பிளவுபடுத்தப்படக் கூடாது.[48]
  • இசுரயேலும் பாலத்தீன விடுதலை இயக்கமும் முறையே 1993 செப்டம்பர் 13, 1995 செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் கையெழுத்திட்ட "கொள்கை அறிக்கையும் இடைக்கால ஒப்பந்தமும்" The Declaration of Principles and the Interim Agreement) என்னும் ஆவணத்தின்படி, இரு தரப்பினரும் எருசலேமின் நிரந்தரமான நிலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பின்னர் பேச்சுவார்த்தைகள் வழி நிர்ணயிக்க வேண்டும்.[48]
  • "தி கார்டியன்" (The Guardian) என்னும் ஐக்கிய இராச்சிய நாளேடு "இசுரயேலின் தலைநகரம் எருசலேம் அல்ல, டெல் அவீவ் தான் அதன் தலைநகரம்" என்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த "அச்சுப் புகார்க் குழு" (Press Complaints Commission) கார்டியன் இதழ் அவ்வாறு கூறியது தவறல்ல என்று முதலில் தீர்ப்பு வழங்கியது.[50] ஆனால் பின்னர் அத்தீர்ப்பு மறு விசாரணையின்போது இரத்துசெய்யப்பட்டது. புதிய தீர்ப்பு இவ்வாறு கூறியது: "இசுரயேலின் தலைநகரம் டெல் அவீவ் தான் என்று கார்டியன் இதழ் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அடித்துக் கூறியது (unequivocally) தவறே. அக்கூற்று இதழின் வாசகர்களின் உள்ளத்தில் தவறான கருத்தை உருவாக்கக் கூடும். மேலும், இதழ் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறையை மீறியதாகவும் இருக்கக் கூடும்."[51] இந்த இரண்டாம் தீர்ப்புக்கு முன்னரே கார்டியன் நாளிதழ் தான் வெளியிட்ட கருத்தைப் பின்வாங்கிக் கொண்டது. அப்போது அந்த இதழ் பின்வருமாறு கூறியது: "இசுரயேல் தனது தலைநகரம் எருசலேம் தான் என்று கூறியது பன்னாட்டு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்து என்று கூறி, திருத்தம் செய்வது சரி என்றே நாங்கள் கருதுகிறோம். என்றாலும், அந்நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த மையமாக உள்ள டெல் அவீவ் தான் அந்நாட்டின் தலைநகரம் என்று நாங்கள் கூறியது தவறே." [52]

ஏனைய நாடுகளின் நிலைப்பாடுகள்[தொகு]

  •  கனடா: கானடா: பாலத்தீன-இசுரயேலி சர்ச்சைக்கு ஒட்டுமொத்தமான ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதும், அந்த ஒட்டுமொத்த தீர்வின் பகுதியாகத் தான் எருசலேமின் நிலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் கானடாவின் நிலைப்பாடு. இசுரயேல் தன்னிச்சையாகக் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்டதை கானடா ஏற்கவில்லை.[53] கானடாவின் வெளியுறவுத் துறையின் இணையத்தளத்தில் இசுரயேலின் தலைநகர் இது என்று குறிப்பிடப்படாமலே வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.[54]
  •  டென்மார்க்: டேன்மார்க் நாடு: "இசுரயேல் எருசலேமைத் தன் தலைநகராக அறிவித்துக்கொண்டுள்ளது. அப்பிரதேசத்தில் நிகழ்கின்ற மோதல் காரணமாகவும், எருசலேம் நகரின் நிலை பற்றிய தெளிவின்மைக் காரணமாகவும் வெளிநாட்டுத் தூதரகங்கள் டெல் அவீவ் நகரில் அமைந்துள்ளன."[55]
  •  பின்லாந்து: பின்லாந்து நாடு: "இசுரயேல் எருசலேமைத் தன் தலைநகராகக் கருதுகிறது. பன்னாட்டு சமூகம் அதை ஏற்கவில்லை. பின்லாந்தின் தூதரகம் டெல் அவீவ் நகரில் உள்ளது."[56]
  •  பிரான்சு: பிரான்சு:"மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எருசலேமின் இறுதி நிலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சார்ந்தது. எருசலேம் இரு நாடுகளுக்கும் தலைநகராக இருக்கவேண்டும் என்பது பிரான்சின் நிலைப்பாடு."[57]
  •  செருமனி: செருமனி: செருமனியின் வெளியுறவுத் துறை அலுவலகம் இவ்வாறு கூறுகிறது: "இசுரயேலின் தலைநகரம் (பன்னாட்டு அங்கீகாரம் இல்லாத விதத்தில்): எருசலேம்."[58] செருமனியின் தூதரகம் டெல் அவீவில் உள்ளது.[59]
  •  இத்தாலி: இத்தாலி: "இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையைத் தனதாக்குகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இசைவு இன்றி நிகழ்த்தப்படுகின்ற எல்லைக் கோடு மாற்றங்களைச் சட்ட ஏற்புடையனவாக இத்தாலி கருதாது. எருசலேமின் நிலை பற்றிய பிரச்சினை மிகவும் கவனமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று. ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட மூன்று பெரும் சமயங்களைச் சார்ந்த புனித தலங்களைத் தன்னகத்தே கொண்டது அந்நகரம். அதன் நிலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பது கடினம் என்றாலும் இயலாத காரியம் அல்ல. நகரின் புனிதத் தன்மையைக் காக்கும் வகையிலும் இரு மக்களினத்தாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரவேண்டும்."[60]
  •  சப்பான்: சப்பான் நாடு: "ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட ஒரு பகுதி சட்டப்பூர்வமாக எந்நிலை கொண்டது என்பதைத் தன்னிச்சையாகத் தீர்க்க முயல்வதை சப்பான் ஏற்பதில்லை. அது ஐ.நா. அவையின் தீர்மானங்களுக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது." "எருசலேம் தொடர்பான காரியங்களுக்குத் தீர்வு காண்பதற்கு அந்நகரின் இறுதி நிலைமை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் வழிவகுக்க வேண்டும். அத்தகைய தீர்வு ஏற்படும் வரை, சம்பந்தப்பட்ட தரப்பினர் தன்னிச்சையாக எருசலேமின் நிலையை நிர்ணயித்தல் சரியல்ல."[61]
  •  நோர்வே: நோர்வே: "பன்னாட்டு சமூகத்தைச் சார்ந்த அனைத்து நாடுகளும் கருதுவதுபோலவே, நோர்வே நாடும் இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துள்ளது பன்னாட்டு சட்டத்திற்கு முரணானது என்று கருதுகிறது."[62]
  •  சவூதி அரேபியா: சவுதி அரேபியா: எருசலேம் பற்றிய சிக்கலுக்கு ஒரு நீதியான தீர்வு காணவேண்டும் என்றால் ஐ.நா. பாதுகாப்பு அவையின் 242ஆம் மற்றும் 338ஆம் தீர்மானங்கள் படி அது அமைய வேண்டும். எருசலேமின் நில எல்லைகளை இசுரயேல் விரிவுபடுத்திக்கொண்டது சட்டத்துக்கு முரணானது என்றும், பன்னாட்டு ஒப்பந்தங்களை மீறுவது என்றும் சவுதி அரேபியா கருதுகிறது.[63]
  •  சுவீடன்: சுவீடன்: "பிற நாடுகளைப் போலவே சுவீடனும் இசுரயேல் எருசலேமைத் தன் தலைநகராகக் கருதுவதை ஏற்கவில்லை. ஆகவே தான் அதன் தூதரகம் டெல் அவீவில் உள்ளது."[64]
  •  வத்திக்கான் நகர்: வத்திக்கான் நகர்: கத்தோலிக்க திருச்சபையின் திருப்பீடமாகிய வத்திக்கான் நாடு எருசலேம் நகர் ஒரு பன்னாட்டு நகராக ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்குள்ளோ, அது சார்ந்த வேறொரு நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழோ அமைய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளது. இக்கருத்தை முதன்முதலாக வெளியிட்டோருள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயசும் ஒருவர் ஆவார். அவர் 1949ஆம் ஆண்டு எழுதிய ஒரு திருமுகத்தில் (Redemptoris Nostri Cruciatus) இக்கருத்தை வெளியிட்டார். அவருக்குப் பின் திருத்தந்தை இருத்திமூன்றாம் யோவான், திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோரும் இக்கருத்தை ஆதரித்துள்ளனர்.

வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைவிடம்[தொகு]

ஐ.நா. பாதுகாப்பு அவை 478ஆம் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, எருசலேமில் தங்கள் தூதரகங்களை அமைத்திருந்த 13 நாடுகள் அங்கிருந்து தம் தூதரகங்களை இடம்பெயர்த்து, முக்கியமாக டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றன. அவ்வாறு எருசலேமிலிருந்து தூதரகங்களை அகற்றிய நாடுகள் இவை:

மேற்கூறிய நாடுகளுள் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகள் 1984இல் தங்கள் தூதரகங்களை மீண்டும் எருசலேமுக்கு மாற்றின. பின்னர் 2006இல் கோஸ்ட்டா ரிக்கா தன் தூதரகத்தை மீண்டும் ஒருமுறை டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றது. ஒரு சில வாரங்களுக்குப் பின் எல் சால்வடோர் நாடும் அவ்வாறே தனது தூதரகத்தை டெல் அவீவுக்கு மாற்றியது.[65][66] தற்போது பன்னாட்டுத் தூதரகம் எதுவும் எருசலேமில் இல்லை. பராகுவாய் மட்டும் எருசலேமுக்கு மேற்கே 10 கி.மீ தூரத்திலுள்ள மெவாசரெத் சீயோன் என்னும் இடத்தில் தன் தூதரகத்தைக் கொண்டுள்ளது.[67] பொலீவியாவும் அவ்வாறே செய்தது, ஆனால் 2009இல் இசுரயேலோடு தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.[67][68] உலக நாடுகளுள் பல 1940களிலும் 1950களிலும் இசுரயேலை இறையாண்மை கொண்ட தனி நாடாக ஏற்றன. ஆனால் மேற்கு எருசலேம் மீது இசுரயேல் நாட்டுக்கு இறையாண்மை உண்டு என்று அவை ஏற்கவில்லை. Consular Corps of the Corpus Separatum என்னும் பெயர்கொண்ட பன்னாட்டு "தனிநிலப்பகுதி துணைத் தூதரகம்" ஒன்று எருசலேமில் அமைந்துள்ளது.

சில நாடுகள் எருசலேமில் "துணைத் தூதரகங்கள்" (consulates) அமைத்துள்ளன. அந்த நிறுவனங்கள் பிரித்தானியக் கால பாலத்தீனத்தின் சட்டநிலை கொண்டவை (Mandate Palestine) என்றும், அந்த நிலப்பகுதி எந்தவொரு நாட்டின் இறையாண்மைக்கும் உட்படவில்லை என்றும் மேற்கூறிய நாடுகள் கூறுகின்றன.[12]

நெதர்லாந்து அரசு எருசலேமில் ஓர் அலுவலகத்தை நடத்துகிறது. அது முக்கியமாக இசுரயேலி குடிமக்களுடைய தேவைகளுக்காக உள்ளது. எருசலேமில் துணைத் தூதரகம் அமைத்துள்ள பிற நாடுகள் இவை:

இசுரயேலின் குடியரசுத் தலைவர் எருசலேமில் தங்கியிருப்பதாலும், அங்குதான் அவர் அயல்நாட்டுத் தூதர்களின் பதவி ஆவணத்தைப் பெறுவதாலும், அயல்நாட்டுத் தூதர்கள் டெல் அவீவ் நகரிலிருந்து பயணம் செய்து எருசலேம் வந்து அங்கு தம் ஆவணத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதரகம்[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதரகம் டெல் அவீவ் நகரிலும், துணைத் தூதரகம் "தனிப்பகுதி" நிலைப்படி (Consular Corps of the Corpus Separatum) எருசலேமிலும் உள்ளது.[70] அமெரிக்காவின் நாட்டுச் சட்டப்படி, ஒரு நிலப்பகுதியில் அன்னிய இறையாண்மையை ஏற்று ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு அமெரிக்க முதல்வருக்கு மட்டுமே உரிய பொறுப்பு ஆகும்.[71] அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) ஒன்றுபட்ட எருசலேம் நகரத்தை இசுரயேலின் தலைநகராக ஏற்பது பொருத்தம் என்றும், அமெரிக்க தூதரகத்தை எருசலேமில் நிறுவுவது பொருத்தம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை தம் விருப்பத்தைத் தெரிவிப்பதாக அமைகின்றனவே ஒழிய, கட்டுப்படுத்தும் திறன் (binding effect) கொண்டவை அல்ல.

1995இல் பாராளுமன்றம் நிறைவேற்றிய "எருசலேம் தூதரகச் சட்டம்" (Jerusalem Embassy Act) என்னும் தீர்மானம் இவ்வாறு உள்ளது: "எருசலேம் இசுரயேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இசுரயேல் தூதரகம் எருசலேமில் 1999, மே 31ஆம் நாளுக்கு முன் நிறுவப்பட வேண்டும்." இத்தீர்மானம் அமெரிக்க முதல்வரின் அதிகாரத்தில் தலையீடுபோல் அமையக்கூடும் என்பதால் சட்டத்திற்கு முரணானது என்று அமெரிக்க நீதித்துறை கூறியது.[72]

டெல் அவீவ் போன்ற ஒரு நகரத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது என்னும் ஒரே காரணத்தின் அடிப்படையில் அந்த நகரைத் தலைநகராக அமெரிக்கா கருதுகிறது என்று பொருளாகாது. வெளியுறவுச் சட்ட வல்லுநர்கள் கூற்றுப்படி, அமெரிக்க நாடாளுமன்றம் எருசலேமில் தூதரகம் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்துவதாக இருந்தால், அமெரிக்க அரசு எருசலேமில் இன்னொரு தூதரகத்தை அமைத்துவிட்டு, அதே நேரத்தில் எருசலேமை இசுரயேலின் தலைநகராகக் கருதவில்லை என்று வாதாட முடியும்.[73] அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை எருசலேமின் பகுதியாகிய டால்பியோட் (Talpiot) என்னுமிடத்திற்கு மாற்றி, அங்கு எருசலேமிலும் பாலத்தீன நிலப்பகுதிகளிலும் வாழும் குடிகளுக்கு நுழைவுரிமை வழங்கல், வர்த்தகம் மேம்படுத்தல் போன்ற அரசு சேவைகளில் ஈடுபட்டுள்ளது.[74]

குறிப்புகள்[தொகு]

  1. "Brian Whitaker. "Rivals for holy city may have to turn to God." Guardian Unlimited. August 22, 2000; "Marilyn Henry. "Disney response on Jerusalem exhibit calms Arabs." Jerusalem Post Service October 1, 1999; Deborah Sontag. "Two Dreams of Jerusalem Converge in a Blur" த நியூயார்க் டைம்ஸ். May 21, 2000.
  2. 2.0 2.1 Moshe Hirsch, Deborah Housen-Couriel, Ruth Lapidoth. Whither Jerusalem?: proposals and positions concerning the future of Jerusalem, Martinus Nijhoff Publishers, 1995. pg. 15. ISBN 90-411-0077-6
  3. See Governing Jerusalem: again on the world's agenda, by Ira Sharkansky, Wayne State University Press, 1996, ISBN 0-8143-2592-0, page 23 [1]
  4. "UN security Council Resolution 478" (PDF). Archived from the original (PDF) on 2009-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-11-18.
  5. Netanyahu to Bush: J'lem to stay under Israeli control for eternity, Haartez, 10-01-2008
  6. "Europe Affirms Support for a Corpus Separatum for Greater Jerusalem". Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2012-11-18.
  7. See Jerusalem: a city and its future; edited by Marshall J. Berger, Ora Ahimeir, Syracuse University Press, 2002, ISBN 0-8156-2912-5, page 62 [2]
  8. See for example Article 28 of the League of Nations Mandate for Palestine [3]; and ICJ Reports 2004, CONSTRUCTION OF A WALL (ADVISORY OPINION) page 165 para. 70, page 188 para 129. Paul J.I.M. de Waart said "The Court ascertained the legal significance of the "sacred trust of civilization" of the League of Nations (LoN) in respect of the 1922 Palestine Mandate as the origin of the present responsibility of the United Nations", in 'International Court of Justice Firmly Walled in the Law of Power in the Israeli–Palestinian Peace Process', Leiden Journal of International Law, 18 (2005), pp. 467–487
  9. General Assembly resolution 48/158D, 20 December 1993. para. 5(c) stipulated that the permanent status negotiations should guarantee "arrangements for peace and security of all States in the region, including those named in resolution 181(II) of 29 November 1947
  10. 10.0 10.1 10.2 10.3 Lapidoth, Ruth; Moshe Hirsch (1994). The Jerusalem Question and Its Resolution. Martinus Nijhoff. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7923-2893-0. http://books.google.com/books?id=e93JIwTBjHgC. 
  11. Korman, Sharon (1996). The Right of Conquest. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-828007-6. http://books.google.com/books?id=ueDO1dJyjrUC. 
  12. 12.0 12.1 See "Corpus Separatum §33 Jerusalem" Marjorie M. Whiteman editor, US State Department Digest of International Law, vol. 1 (Washington, DC: U. S. Government Printing Office, 1963) pages 593–594;Foreign relations of the United States, 1948. The Near East, South Asia, and Africa (in two parts) Volume V, Part 2, Page 748; "Governing Jerusalem: again on the world's agenda", By Ira Sharkansky, Wayne State University Press, 1996, ISBN 0-8143-2592-0, page 23; and John Quigley, "The Legal Status Of Jerusalem Under International Law, The Turkish Yearbook Of International Relations, [VOL. XXIV, 1994] pp 11–25
  13. Syracuse University Press. pp. 145. ISBN 978-0-8156-2912-2.
  14. Jerusalem must be capital of both Israel and Palestine, Ban says, UN News Centre, (October 28, 2009)
  15. 15.0 15.1 "Resolution adopted by the General Assembly – 63/30. Jerusalem" (PDF). United Nations. 2009-01-23. பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
  16. United Nations General Assembly Resolution 181 November 29, 1947, Part III. The City of Jerusalem [4] பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
  17. The Status of Jerusalem, CEIRPP, DPR (1 January 1981) பரணிடப்பட்டது 2012-12-08 at the வந்தவழி இயந்திரம் Section "Conclusions"
  18. "Basic Law: Jerusalem, Capital of Israel". Israel Ministry of Foreign Affairs. 1980-07-30. பார்க்கப்பட்ட நாள் 2007-04-02.
  19. http://www.ynetnews.com/articles/0,7340,L-3988447,00.html
  20. The Status of Jerusalem, March 1999. Israel Ministry of Foreign Affairs
  21. http://www.jcpa.org/jcprg10.htm
  22. http://www.bridgesforpeace.com/modules.php?name=News&file=article&sid=1617
  23. Arafat Signs Law Making Jerusalem Palestinian Capital, People's Daily, published October 6, 2002; Arafat names Jerusalem as capital, BBC News, published October 6, 2002.
  24. The Palestinian Official Position, Palestinian National Authority, Ministry of Information, copy from Archive.org, retrieved June 20, 2007.
  25. World: Middle East EU re-ignites Jerusalem sovereignty row (BBC, March 11, 1999) "the EU reply stated that all of Jerusalem, including the Jewish sector, is a "corpus separatum" or separate body. This term is a direct reference to the 1947 UN resolution 181, designating Jerusalem an international zone. "
    Europe Affirms Support for a Corpus Separatum for Greater Jerusalem பரணிடப்பட்டது 2012-09-05 at Archive.today
  26. Reaction by Foreign Minister Sharon on the EU stand on Jerusalem, MFA, (March 11, 1999)
  27. EU rebukes Israel for Jerusalem settlement expansion (EUObserver, Nov. 19, 2009)
    "If there is to be genuine peace, a way must be found to resolve the status of Jerusalem as the future capital of two states."
  28. "EU: Jerusalem should be capital of two states". BBC News. 2009-12-08. http://news.bbc.co.uk/2/hi/middle_east/8401913.stm. பார்த்த நாள்: 2010-08-11. 
  29. The EU & the Middle East Peace Process: FAQ, European Commission, retrieved June 20, 2007.
  30. Lessons From a Gaza Trip, by Catherine Ashton (New York Times, March 21, 2010)
  31. Ria Novosti: Russia concerned over Israeli housing plans for East Jerusalem
  32. பாலத்தீன நாட்டை உருசியா அங்கீகரிக்கிறது (BBC, January 18, 2011)
  33. "See General Assembly, A/L.523/Rev.1, 4 July 1967". Archived from the original on 24 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. "U.S.: Only Israel, Palestinians should decide Jerusalem's future (Haaretz, Dec. 9, 2009)". Archived from the original on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  35. A New Struggle For Jerusalem (New York Times, March 2, 1997)
  36. "Trump says US recognises Jerusalem: The speech in full". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2017.
  37. Foreign Relations of the United States, 1961–1963: Near East, 1962–1963, V. XVIII. DC: GPO, 2000, 152. Memorandum of conversation, February 7, 1963. Crawford (NE)-Campbell (IO)-Bar-Haim (Israeli Embassy) meeting: U.S. position on the status of Jerusalem
  38. Justices Return Jerusalem Status Case to Lower Court (New York Times, March 26, 2012)
    "அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்க ஐக்கிய நாடுகள், எந்த நாடும் எருசலேமின் மீது இறையாண்மை கொண்டதாக ஏற்றதில்லை"
  39. "U.S. Policy: Jerusalem's Final Status must Be Negotiated". Archived from the original on 2012-07-31. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  40. "Abbas slams Obama for saying Jerusalem to stay Israel's undivided capital". Haaretz. 2008-06-04. பார்க்கப்பட்ட நாள் 1 April 2011.
  41. US fury as Israel approves 900 new housing units in Gilo settlement (Times, Nov. 18, 2009)
  42. Frenkel, Sheera (2010-03-16). "Anger in Ramat Shlomo as settlement row grows". London: The Times. http://www.timesonline.co.uk/tol/news/world/middle_east/article7062808.ece. பார்த்த நாள்: 16 March 2010. 
  43. "Clinton: Israeli settlement announcement insulting". CNN. 2010-03-13. http://edition.cnn.com/2010/WORLD/meast/03/12/israel.clinton/index.html. பார்த்த நாள்: 14 April 2010. 
  44. 44.0 44.1 44.2 44.3 44.4 Mark, Clyde. "Jerusalem: The U.S. Embassy and P.L. 104-45" (PDF). CRS Report for Congress. Congressional Research Service. The Library of Congress. Archived from the original (PDF) on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 April 2011.
  45. "Inspection of Consulate General Jerusalem (United States Department of State and the Broadcasting Board of Governors) (pages 1 and 3)" (PDF). Archived from the original (PDF) on 2012-06-01. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  46. Kampeas, Ron. "ADL to Jerusalem-born Yanks: We Want You." Jewish Journal. 28 July 2011. 28 July 2011.
  47. "www.oig.state.gov/documents/organization/161737.pdf" (PDF). Archived from the original (PDF) on 2012-06-01. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  48. 48.0 48.1 48.2 48.3 48.4 48.5 48.6 48.7 48.8 "The UK position on Jerusalem – A key issue in the Palestinian track, and a key concern to the whole Islamic world". பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  49. "Global Security: Israel and the Occupied Palestinian Territories – Foreign Affairs Committee. Israel and British Government policy". www.parliament.uk. 2009-07-26. பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.
  50. UK Press Commission Rules: Tel Aviv is Capital of Israel (Israel National News (Arutz Sheva)), May 24, 2012
  51. Ahren, Raphael (2 October 2012). "UK media watchdog rules: Tel Aviv is not the capital". The Times of Israel. பார்க்கப்பட்ட நாள் 04 October 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  52. Corrections and clarifications (The Guardian, Aug. 7th, 2012)
  53. "Canadian Policy on Key Issues in the Israeli-Palestinian Conflict". Archived from the original on 2018-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  54. "Fact Sheet: Israel". Archived from the original on 2010-10-14. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  55. ""Israel har erklæret Jerusalem for sin hovedstad (ca. 900.000 indbyggere). På grund af konflikten og den uafklarede situation vedrørende byens status opretholdes udenlandske ambassader i Tel Aviv."". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  56. ""Pääkaupunki: Israel pitää Jerusalemia pääkaupunkinaan. Tätä ei ole kansainvälinen yhteisö tunnustanut. Suomen suurlähetystö sijaitsee Tel Avivissa."". Archived from the original on 2017-12-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  57. Jerusalem's status: the statement made by the Israeli Prime Minister is detrimental to the final status negotiations பரணிடப்பட்டது 2010-03-01 at the வந்தவழி இயந்திரம், French Ministry of Foreign and European Affairs, (May 21, 2009)
  58. Hauptstadt (international nicht anerkannt): Jerusalem (Yeruschalayim)
  59. Botschaft der Bundesrepublik Deutschland - Embassy of the Federal Republic of Germany
  60. "Interview with Minister Frattini: "Italy is seeking a just solution to the conflict, without unilateral actions and preconditions"". Archived from the original on 2011-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  61. "UN Document A/56/480, 17 October 2001". Archived from the original on 27 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  62. http://www.regjeringen.no/en/dep/ud/press/News/2010/east_jerusalem.html?id=591172
  63. Kingdom reiterates to UN its position on Jerusalem, saudiembassy.net, (January 7, 1998)
  64. ""Huvudstad: Enligt Israels ensidiga utropande Jerusalem. Sverige erkänner, liksom flertalet andra stater, emellertid inte Jerusalem som Israels huvudstad varför ambassaden är belägen i Tel Aviv. "" (PDF). Archived from the original (PDF) on 2012-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
  65. Costa Rica to relocate embassy to TA பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம், Jerusalem Post, published August 17, 2006.
  66. El Salvador to move embassy in Israel from Jerusalem to Tel Aviv, People's Daily, published August 26, 2006,
  67. 67.0 67.1 Embassies and Consulates in Israel, Israel Science and Technology Homepage, retrieved June 20, 2007.
  68. Bolivia cuts diplomatic ties with Israel பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந்திரம் Reuters, January 14, 2009
  69. "Country Profile: Israel". Archived from the original on 2003-07-31. பார்க்கப்பட்ட நாள் 2003-07-31.
  70. See Whiteman, "Corpus Separatum"
  71. See Restatement (3rd) Foreign Relations Law of the United States, American Law Institute, 1986, §§ 203 Recognition or Acceptance of Governments and §§ 204 Recognition and Maintaining Diplomatic Relations Law of the United States.
  72. See Justice Department Memorandum Opinion For The Counsel To The President, May 16, 1995 [5] பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்
  73. Marshall J. Breger, "Jerusalem Gambit: How We Should Treat Jerusalem Is a Matter of U.S. Constitutional Law as Well as Middle Eastern Politics," National Review 23 Oct. 1995
  74. "Diplomatic construction", Jerusalem Post, published December 1, 2005.

வெளி இணைப்புகள்[தொகு]

Jewish Virtual Library:

  • Greater Jerusalem: [6]

"The area known as 'Greater' Jerusalem usually refers to an approximately 100-சதுர-மைல் (260 km2) space surrounding the Old City of Jerusalem. This area includes both West and East Jerusalem, including the adjacent neighborhoods outside of the municipal boundaries of the city. ... Regarding the route of Israel's security fence in the Jerusalem area, there have been a few competing strategies: to reinforce the municipal boundaries of the city, to alter the demographics in Israel's favor, and to permanently draw the lines for 'Greater' Jerusalem."

"The Israeli proposal included the following main points: 1. Jewish areas outside Jerusalem's municipal boundaries would be annexed to the city, including such population centers as Givat Ze'ev, Ma'aleh Adumim and Gush Etzion. (Gush Etzion is a major settlement block just south of Jerusalem, and is not shown on the map)."

IRIS.org (Information Regarding Israel's Security).

  • Maps of Areas A, B, and C. 1993 and 1995 Oslo Accords: [11]

Map Centre of OCHA oPt (United Nations Office for the Coordination of Humanitarian Affairs – occupied Palestinian territory): [12]

Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA). Jerusalem maps section: [14] பரணிடப்பட்டது 2008-06-16 at the வந்தவழி இயந்திரம்

பிற இணைப்புகள்[தொகு]