உள்ளடக்கத்துக்குச் செல்

காசி விசுவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காசி விஸ்வநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசி விசுவநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வாரணாசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
அமைவிடம்
ஊர்:காசி
மாவட்டம்:வாரணாசி
மாநிலம்:உத்திரப் பிரதேசம்
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காசி விஸ்வநாதர்
தாயார்:விசாலாட்சி
தீர்த்தம்:ஆதிகங்கை, ஞான வாவி, மணிகர்ணிகா, சக்ரதீர்த்தம் என 64 தீர்த்தங்கள்
சிறப்பு திருவிழாக்கள்:தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.
வரலாறு
வலைதளம்:https://www.shrikashivishwanath.org
காசி விசுவநாதர் கோயில் நுழைவாயில்
ஜேம்ஸ் பிரின்ஸ்செப் வரைந்த வாரணாசியின் ஞானவாபி பள்ளிவாசல் சுவரை ஒட்டிய, சிதிலமடைந்த பழைய காசி விசுவநாதர் கோயிலின் பகுதி, ஆண்டு 1822
ஞான வாபி பள்ளிவாசலுக்கும், பழைய காசி விசுவநாதர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த புனித ஞான வாபி எனும் அறிவுக் கிணறு மண்டபம்
இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலின் சிதிலமடைந்த சுவர். தற்போது ஞானவாபி பள்ளிவாசலின் மேற்குச் சுவராக உள்ளது.

காசி விசுவநாதர் கோயில் (Kashi Vishwanath Temple) (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விசுவநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]இக்கோயிலை ஒட்டி ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது.

விசுவநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

வரலாறு

[தொகு]

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆணையால் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. இடித்த இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டது. பின்னர் பள்ளிவாசலின் மேற்கு சுவரை ஒட்டிய பகுதியில் புதிய காசி விஸ்வநாதர் கோயிலை மராட்டியப் பேரரசின் இந்தூர் இராணி அகில்யாபாய் ஓல்கர்,1780-ஆம் ஆண்டில் கட்டி எழுப்பினார்.[2] 1835ஆம் ஆண்டில் பஞ்சாப் மன்னர் மகாராஜா இரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக வழங்கினார். அதைக் கொண்டு விமானங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. 1841ஆம் ஆண்டில் நாக்பூர் இராச்சியத்தை ஆண்ட மராத்தியப் பேரரசின் போன்சலே அரச குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டது.[3] கங்கை ஆற்றின் தசாஸ்வமேத படித்துறையிலிருந்து ஒரு குறுகிய தெரு வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்கிறது.

2014 மக்களவைத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக காசி விஸ்வநாதர் கோயிலை அனைத்து வசதிகளுடன் விரிவாக்கம் செய்து, காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம் அமைப்பதாக வாக்களித்தது.

தலபெருமை

[தொகு]

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூசை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கப்படுகிறது.[2]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.

தமிழர்கள் திருப்பணி

[தொகு]
காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்

தமிழகத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தாரால் பொ.ஊ. 1813 முதல் இன்று வரை காசி விசுவநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை பூசைகள் நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் காசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. தெருவில் "சம்போ சம்போ சங்கர மகாதேவா" என்று கூவி கொண்டு பூசை பொருட்களை கொண்டு செல்வதால் இது சம்போ என்ற பெயரால் வழங்கப்படுகிறது.[4][5]

"பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை" என்பது வாரணாசி பழமொழி.[4] பொ.ஊ. 1813 முதல் இதுவரை வரை ஒரு நாள் தவறாமல் பூசை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது 1942ஆம் ஆண்டு காசி நகரில் மாபெரும் கலகங்கள் நிகழ்ந்தது ஆனால் சம்போ நின்றதில்லை எமர்ஜென்சி காலத்திலும் நின்றதில்லை.[4] அன்னபூரணி, விசாலாட்சி ஆகியோர் பூசை பொருட்களும் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் வழங்கப்படுகிறது.[4]

காசி விசாலாட்சி கோயில்

[தொகு]

காசி விசாலாட்சி கோயில், காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறத்தில் உள்ளது. இக்கோயில் தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் கட்டப்பட்டது.[4]

அன்னபூர்ணி கோயில்

[தொகு]

அன்னபூர்ணி கோயில், காசி விசுவநாதர் கோயில் வளாகத்தில் உள்ளது.

படித்துறைகள்

[தொகு]

வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த காசி விசுவநாதர் கோயிலை ஒட்டி பல படித்துறைகள் அமைந்துள்ளது. அவைகளில் சிறப்பானது:

கங்கா ஆர்த்தி

[தொகு]

வாரணாசியின் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த தசவசுவமேத படித்துறையில் நாள்தோறும் மாலை நேரத்தில் கங்கை ஆறுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள்.

கட்டுப்பாடு

[தொகு]

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வர வேண்டும். ஆண்கள் கால் சட்டை, கை பகுதி இல்லாத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது.[6]

குடமுழுக்கு

[தொகு]

239 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோயிலின் குடமுழுக்கு 5 சூலை 2018இல் நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் நடத்தப்பட்டது.[7][8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 ஸ்ரீ காசி மகாத்மியம், ராக்கி பிரகாசன், பஞ்சமாளிகை, கயா
  3. ஷங்கர் (9 ஆகத்து 2018). "காசி விஸ்வநாதருக்குக் குடமுழுக்கு செய்த தமிழர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2018.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 சோமலெ (1963). ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் வரலாறு. pp. 36–42.
  5. "சம்போ... சம்போ... சம்போ மகாதேவா..." பயணங்களும் பதிவுகளும். Archived from the original on 2020-10-11.
  6. விஸ்வநாதர் கோயிலில் பெண்களுக்கு ஆடை நெறிமுறைகள் அறிமுகம் தி இந்து தமிழ் 24 நவம்பர் 2015
  7. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 239 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்... தமிழரின் முயற்சி!, விகடன், 25 சூலை 2018
  8. North and South merged at this Altar, The Hindu, Friday Review, 27 July 2018

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_விசுவநாதர்_கோயில்&oldid=4059666" இலிருந்து மீள்விக்கப்பட்டது