நெதர்லாந்துச் சண்டை
நெதர்லாந்து சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
ராட்டர்டாம் குண்டுவீச்சில் சேதமடைந்த ராட்டர்டாம் நகரம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நெதர்லாந்து பிரான்சு | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹென்ரி விங்கெல்மான் ஜான் வான் வூர்ஸ்ட் ஆன்றி கிராட் | ஃபெடார் வான் போக் | ||||||
பலம் | |||||||
9 டிவிசன்கள் 676 பீரங்கிகள் 1 டாங்கு 124 விமானங்கள் 280,000 படைவீரர்கள் | 22 டிவிசன்கள் 1,378 பீரங்கிகள் 759 டாங்குகள் 830 விமானங்கள்[1] 750,000 படைவீரர்கள் |
||||||
இழப்புகள் | |||||||
2,332 மாண்டவர் 7,000 காயமடைந்தவர்[2]
| தெரியவில்லை |
நெதர்லாந்து சண்டை (ஆங்கிலம்: Battle of the Netherlands, டச்சு: Slag om Nederland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-14, 1940ல் நடந்த இந்த சண்டையில் நாசி ஜெர்மனி நெதர்லாந்தைத் தாக்கிக் கைப்பற்றியது.
செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தன. நேச நாட்டுக் கூட்டணியில் பிரான்சு, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. மே 10, 1940ல் ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது.
பெல்ஜியத்தைத் தாக்குவதோடு லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி க்கு கீழ் நாடுகளைக் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க்) கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டிருந்தது. மற்ற இரு நாடுகளைத் தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க வான்குடை வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். ஜெர்மானிய வான்குடை வீரரக்ள் நெதர்லாந்தின் பல முக்கிய விமான ஓடுதளங்களையும், ராட்டர்டாம், டென் ஹாக் போன்ற நகரங்களையும் கைப்பற்ற முயன்றனர். நெதர்லாந்திய (டச்சு) படைகளுக்கும் அவர்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போதே, ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே ராட்டர்டாம் நகரை குண்டுவீசி அழித்தது. நெதர்லாந்து உடனடியாக சரணடையவில்லையென்றால் பிற நகரங்களையும் இவ்வாறு அழித்து விடுவோமென்று ஜெர்மானியத் தளபதிகள் மிரட்டினர். லுப்ட்வாஃபே குண்டுவீசிகளை தங்கள் வான்படையால் தடுத்து நிறுத்த முடியாதென்பதை உணர்ந்த டச்சு அரசு, மேலும் பல நகரங்கள் அழிவதைத் தடுக்க சரணடைய ஒப்புக்கொண்டது. மே 14ம் தேதி டச்சு அரசாங்கம் சரணடைந்தாலும், சீலாந்து மாநிலத்தில் டச்சுப் படைகள் மேலும் நான்கு நாட்கள் ஜெர்மானியரை எதிர்த்து போரிட்டன.
நெதர்லாந்து சரணடைந்தாலும் டச்சு அரசி வில்லெமீனா நெதர்லாந்தை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் ஒரு நாடு கடந்த டச்சு அரசை உருவாக்கினார். நெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் நாடு கடந்த டச்சு அரசின் படைகளும், பல உள்நாட்டு எதிர்ப்புப் படையமைப்புகளும் ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடின. 1945ல் நெதர்லாந்து நேச நாட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.
பின்புலம்
[தொகு]செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப்போர் துவங்கியது. பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தன. அக்டோபர் 1939 - மே 1940ல் மேற்குப் போர்முனையில் போருக்கான ஆயத்தங்களை இரு தரப்பும் செய்யத் தொடங்கின. இந்த காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. கீழ் நாடுகள் (low countries) என்றழைக்கப்படும் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்த நாடுகள். ஆனால் மேற்குப் போர்முனையில் இவை இரு தரப்பு போர்த் தலைமையகங்களின் மேல்நிலை உத்திகளிலும் முக்கியமான பங்கு வகித்தன. கீழ் நாடுகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, நிகழ இருக்கும் போருக்கு மிக அவசியம் என்பதை இரு தரப்பு தளபதிகளும் உணர்ந்திருந்தனர். ஏனென்றால் இப்பகுதிகளிலிருந்து முக்கிய தாக்குதல் நடக்கப் போகும் ஜெர்மானிய-பிரான்சு எல்லைக் களத்தைத் தாக்கலாம். அல்லது எல்லை அரண்களை சுற்றிக் கொண்டு போக புறவழியாகப் பயன்படுத்தலாம்.
நெதர்லாந்து 1930களில் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியது. ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்த பின்னும், ஜெர்மனியோடு வெளிப்படையாக பகைமை பாராட்டவில்லை. பெரும் பொருளியல் வீழ்ச்சியால் பாதிக்கப்படிருத நெதர்லாந்திய (டச்சு) பொருளாதாரம் நாசி ஜெர்மனியுடனான வர்த்தக உறவை பெரிதும் சார்ந்திருந்தது. இதனால் ஜெர்மனிக்கெதிரான நேச நாட்டுக் கூட்டணியில் நெதர்லாந்து சேரவில்லை. வரவிருக்கும் போருக்கு வெளிப்படையாக ஆயத்தங்களைச் செய்யவில்லை. ஜெர்மனியில் ஆட்சியாளர்கள் அதிருப்தியடையக் கூடாதென்பதில் நெதர்லாந்திய அரசு கவனமாக இருந்தது. 1938-39ல் ஐரோப்பிய அரசியல் நிலை மோசமாகியது. ஜெர்மனி, செக்கஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளை இணைத்து பரந்த மூன்றாம் ரெய்க்கை உருவாக்கியதால், டச்சு அரசு சற்றே சுதாரித்து மெல்ல போருக்குத் தயாரானது.
அக்டோபர் 1939ல், ஹிட்லர் கீழ் நாடுகள் வழியாக பிரான்சைத் தாக்க திட்டங்களை வகுக்குமாறு தன் தளபத்களுக்கு ஆணையிட்டார். மஞ்சள் திட்டம் (இடாய்ச்சு: Fall Gelb) என்று இத்தாக்குதல் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. போர் உறுதி என்று தெரிந்த பின்னரும், டச்சு அரசு வெளிப்படையாக நேச நாடுகளுடன் இணையவில்லை. மீண்டும் மீண்டும் தங்கள் தரப்பில் இணைந்து கொள்ளுமாறு நேச நாடுகள் அழைப்புவிடுத்த போதும், ஜெர்மனி தங்கள் நாட்டைத் தாக்காது என்ற நம்பிக்கையில் அந்த அழைப்புகளை டச்சு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால் தாக்குதலை எதிர்கொள்ள தனது படைகளை தயார்செய்தது. ஆனால் ஜெர்மானியப் போர் எந்திரத்தோடு ஒப்பிடுகையில் ஆள்பலம், ஆயுதபலம் ஆகிய அனைத்திலும் டச்சுப் படைகள் பெரிதும் பின் தங்கியிருந்தன. இதனால் டச்சு போர்த் தலைமையகம் நீர்நிலைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை அகழிகளாகப் பயன்படுத்தி ஒரு நீர் நிலை அரணை (Dutch Water Line) உருவாக்கத் திட்டமிட்டது. 17ம் நூற்றாண்டு முதல் இந்த அகழி முறை நெதர்லாந்து தேசியப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த அகழிகள் 20ம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இற்றைப்படுத்தப் பட்டன. ஜெர்மானியர்கள் தாக்கினால், நீர்நிலைகளை ஒன்றிணைத்து நெதர்லாந்தின் மையப்பகுதியைச் சுற்றி ஒரு பெரும் அகழியை உருவாக்கவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு ஹாலந்து கோட்டை (Fortress Holland) என்று பெயரிடப்பட்டது. அகழியையும், நீர் பாய்ந்து சேறுபடிந்த நிலப்பரப்புகளையும் ஜெர்மானிய கவச வண்டிகளால் எளிதில் கடக்க முடியாது, அதனால் ஜெர்மானியர் நெதர்லாந்தைத் தாக்க மாட்டார்கள் என்று டச்சு தளபதிகள் கணக்கிட்டனர்.
ஆனால் நெதர்லாந்தை மட்டும் விட்டுவிட ஜெர்மானியத் தளபதிகள் தயாராக இல்லை. மேற்குப் போர்முனையில் வெற்றி பெற நெதர்லாந்தை ஆக்கிரமிப்பது அவசியமென்று அவர்கள் கருதினர். மேலும் பிரான்சை வீழ்த்தியபின், பிரிட்டனைத் தாக்க, நெதர்லாந்தின் விமான ஓடுதளங்கள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே விற்குத் தேவைப்பட்டன. மஞ்சள் திட்டத்தின் படி, கீழ் நாடுகளான பெல்ஜிய, நெதர்லாந்தின் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதல் மட்டுமே. முக்கியத் தாக்குதல், ஆர்டென் காடுகள் வழியாக நடத்தப்பட இருந்தது. பெல்ஜியத்தின் உதவிக்கு விரைந்து வரும் நேசநாட்டுப் படைகளைப் பின்பகுதியில் தாக்கி பெல்ஜியத்திலும் வடமேற்கு பிரான்சிலும் சுற்றி வளைத்து அழிப்பது தான் ஜெர்மானியத் திட்டம். இதனால் நெதர்லாந்தைக் கைப்பற்றுவது ஜெர்மனிக்கு அவசியமானது. டச்சு அகழித் திட்டத்தை முறியடிக்க வான்குடைப் படைகளைப் பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்டனர் ஜெர்மானியர்கள். அதிகாரப்பூர்வமாக நெதர்லாந்து மீது ஜெர்மனி போர்ப் பிரகடனம் செய்யவில்லையென்பதால், நேச நாடுகள் நெதர்லாந்தை ஆக்கிரமிக்காமல் இருக்க அதனைப் பாதுகாக்கவே தான் முயல்வதாக ஜெர்மனி பிரச்சாரம் செய்தது. நாசிக் கட்சியை எதிர்த்த ஜெர்மானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஜெர்மானியத் தாக்குதல் திட்டங்களை டச்சு அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார். ஆனால் அவரது எச்சரிக்கைகளை டச்சு அரசும் நேச நாடுகளும் பொருட்படுத்தவில்லை.
சண்டையின் போக்கு
[தொகு]மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் மேற்குப் போர்முனையில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நெதர்லாந்து மீதான தாக்குதலை நடத்தியது ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி என்றாலும், அதில் ஈடுபட்ட ஜெர்மானிய வான்குடை வீரர்கள் லுஃப்ட்வாஃபே தலைமை தளபதி ஹெர்மன் கோரிங்கின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டனர். நெதர்லாந்து மீது தாக்குதல் நடத்த அனுப்பபட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள் தங்கள் இலக்கு பிரிட்டன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, நெதர்லாந்து நிலப்பரப்பை கடந்து பறந்தன. வட கடல் பகுதியை அடைந்து திரும்பி நெதர்லாந்தைத் தாக்கின. இந்த உத்தி வெற்றியடைந்து, டச்சுப் படைகள் சுதாரிக்குமுன்னர் பல டச்சு விமானங்கள் ஓடுதளங்களிலேயே அழிக்கப்பட்டன. அதிகாலை 4.30 மணியளவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் டச்சு விமான ஓடுதளங்களின் மீது தரையிறங்கி அவற்றைத் தாக்கத் தொடங்கினர். டென் ஹாக் நகரைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மே 10 இரவுக்குள் ஹாக் நகரைச் சுற்றியிருந்த ஓடுதளங்களிலிருந்து ஜெர்மானியப் படைகள் விரட்டப்பட்டன. ஆனால் ராட்டர்டாம் நகரைக் கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றியடைந்தது. ஆரம்பத் தாக்குதலின் இலக்குகளை எளிதில் கைப்பற்றிவிட்டதால், தொடர்ந்து பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ராட்டர்டாம் நகரைச் சுற்றி வான்வழியாகத் தரையிறங்கின. நகரின் நடுவே ஓடும் மியூசே ஆற்றின் ஒரு கரை ஜெர்மானியர் வசமானது. நெதர்லாந்தை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கிய ஜெர்மானியக் கவசப் படைப்பிரிவுகளும் விரைவாக முன்னேறின. தெற்கில் மாஸ்ட்ரிக்ட் நகரம் ஜெர்மானியர் வசமானது.
மே 10 அன்று இரவு ஜெர்மானியர்கள் மேல் நிலை உத்தி தோல்வியடைந்து விட்டது தெளிவாகியது. ஜெர்மானியப் படைகள் நெதர்லாந்தின் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், டச்சு அரசும், படைகளும் சரணடையவில்லை. ஹாக், ராட்டர்டாம் போன்ற முக்கிய நகரங்களில் ஜெர்மானிய எதிர்ப்பு வலுத்து வந்தது. மே 11ம் தேதி டச்சுப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தின. தெற்கில் ஊடுருவியிருந்த ஜெர்மானியப்படைகளை முறியடித்து, பெல்ஜியத்த்லிருந்து முன்னேறி வரும் நேசநாட்டுப் படைகளுடன் கைகோர்ப்பதே இத்தாக்குதலின் நோக்கம். ஆனால் டச்சு தலைமைத் தளபதி ஹென்றி விங்கல்மானிடம் இதனை வெற்றிகரமாக செய்துமுடிக்கத் தேவையான படைபலம் இல்லை. மே 11 முழுவதும் நடைபெற்ற தாக்குதல்கள் தோல்வியடைந்தன. ராட்டர்டாம் நகரிலும், மியூசே ஆற்றின் வடகரையிலிருந்து ஜெர்மானிய வான்குடைப் படைகளை விரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. தெற்கில் ஜெர்மானியப்படைகளின் முன்னேற்றம் தொடர்ந்தது.
மே 12ம் தேதி டச்சுப் போர்முனையில் இருநாட்களாக நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. தெற்கிலும், வடக்கிலும் நினைத்த முன்னேற்றம் கிட்டவில்லை என்பதால், ஜெர்மானியப் படைகள் உத்திகளை மாற்றி நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியிலிருந்த அரண்நிலைகளில் ஒன்றாகிய கிரெப்பே கோட்டை (Grebbe line) தாக்கின. மே 12 பகலில் நடந்த இச்சண்டையில் கிரெப்பேபர்க் என்ற இடத்தில், டச்சு அரண்நிலைகள் தகர்க்கப்பட்டு, ஜெர்மானியப்படைகள் ஹாலந்து கோட்டைப் பகுதியினுள் ஊடுருவிவிட்டன. இதனால் பெல்ஜியத்திலிருந்து நேச நாட்டுப் படைகள் டச்சுக்காரர்களின் உதவிக்கு வரக்கூடிய வழி அடைபட்டுவிட்டது. மூர்டிக் (Moerdijk) நகரப்பாலத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஜெர்மானியப் படை நெதர்லாந்து நிலப்பரப்பை இரண்டாகத் துண்டித்து விட்டது. மே 13ம் தேதி நிலை கைமீறிப் போனதை டச்சு அரசு உணர்ந்தது. அரசி வில்லேமீனாவும் அவரது குடும்பத்தாரும் கடல்வழியாக இங்கிலாந்துக்கு பத்திரமாக அனுப்பப் பட்டனர். தேவைப்படும் நேரத்தில் சரணடைய தளபதி விங்கெல்மானுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அவர் உடனே சரணடையாமல் மேலும் இருநாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார். டச்சு படைகளின் எதிர்த்தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
மே 14ம் தேதி, ராட்டர்டாம் நகரம் பெரும் குண்டுவீச்சுக்கு உள்ளானது. நான்கு நாட்களாக அந்நகரில் நடந்த இச்சண்டையில் இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. மியூசே ஆற்றின் இரு கரைகளில் ஒவ்வொன்றும் ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆற்றை இரு தரப்பு படைகளாலும் கடக்க முடியவில்லை. எதிர்பார்த்ததை விட நெதர்லாந்தைத் தோற்கடிக்க அதிக காலமாகிவிட்டதால் பொறுமையிழந்த ஜெர்மானியப் போர்த் தலைமையகம், ராட்டர்டாம் மீது குண்டுவீசி அச்சுறுத்தி நகரைச் சரணடைய ஆணையிட்டது. ஆனால் அதற்கு முன்பே ராட்டர்டாம் அதிகாரிகள் சரணடைந்துவிட்டனர். இந்தச் செய்தி லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளுக்கு வானொலி மூலம் தெரிவிக்கப்படும்முன் அவற்றுள் ஒரு பகுதி ராட்டர்டாமை அடைந்து குண்டுகளை வீசி விட்டன. நகரின் பெரும்பகுதி சேதமடைந்தது. இந்த நிகழ்வு ராணுவ ரீதியில் தேவையற்ற ஒன்றாக இருந்தாலும் உளவியல் ரீதியாக பெரும் பலனைக் கொடுத்தது. டச்சுப் படைகள் உடனடியாகச் சரணடையா விட்டால் ராட்டர்டாமுக்கு நேர்ந்த கதி அடுத்து உட்ரெக்ட் நகருக்கு நேரும் என்று ஜெர்மானியர்கள் அறிவித்தனர். தனது விமானப்படையால் லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளைத் தடுக்க முடியாதென்பதை உணர்ந்த விங்கெல்மான் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுக்க மே 14 மாலை ஐந்து மணியளவில் சரணடைந்தார். ஆனால் சீலாந்து பிரதேசத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த டச்சுப் படைப்பிரிவுகள் சரணடைய மறுத்து மேலும் நான்கு நாட்கள் போரிட்டன. மே 18ம் தேதி அவையும் சரணடைந்தன.
தாக்கம்
[தொகு]போர் தொடங்கி நான்கே நாட்களில் நெதர்லாந்தின் வீழ்ச்சி நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நெதர்லாந்துக்கும், பெல்ஜியத்துக்கும் பொதுவான எல்லையிருந்ததால், பெல்ஜியம் சண்டையின் பின் பாதியில் நெதர்லாந்து வழியாக ஜெர்மானியப்படைகள் பெல்ஜியத்தை தாக்கும் சாத்தியம் உருவானது. டச்சு அரசு சரணடைந்தாலும், டச்சு கப்பற்படையின் பல போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்குத் தப்பின. பின் அவை தென்கிழக்காசியாவிலுள்ள டச்சு காலனிகளுக்குச் (இந்தோனேசியா) சென்று விட்டன. ஜப்பான் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தபோது நிகழ்ந்த சண்டைகளில் ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. டச்சு அரசி வில்லேமீனா, இங்கிலாந்தில் நாடுகடந்த டச்சு அரசை உருவாக்கினார். அவருடன் சேர்ந்து தப்பிய டச்சுப் படைவீரர்கள் அடுத்த ஐந்தாண்டுகள் நேச நாட்டுப் படைகளில் பணிபுரிந்தனர்.
நெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. நாசி ஜெர்மனி நெதர்லாந்தில் ஒரு ஆக்கிரப்பு அரசை (Reichskommissariat Niederlande) உருவாக்கினர். டச்சு மண்ணில் அமைக்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமான தளங்கள் பிரித்தானியச் சண்டை மற்றும் ஐரோப்பிய வான் போரில் பெரும்பங்கு வகித்தன. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால ஜெர்மானிய ஆக்கிரமிப்பில், டச்சு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். டச்சு யூதர்களில் மிகப்பெரும்பாலானோர் நாசி கைதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். யூதர்களையும் சேர்த்து சுமார் 3,00,000 டச்சு பொதுமக்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் மடிந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. (1944ல் ஏற்பட்ட பஞ்சத்தில் மட்டும் 18,000 பேர் மடிந்தனர்) ஜெர்மானிய ஆக்கிரமிப்பை டச்சு மக்களில் ஒரு சிறு பகுதி ஆதரித்தாலும், ஜெர்மனிக்கு எதிராக விரைவில் ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகியது. ஆக்கிரமிப்பு அரசுக்கெதிராக தாக்குதல்கள், நேச நாட்டுப் படைகளுக்கு உளவு பார்த்தல், டச்சு மண்ணில் சுட்டு வீழ்த்தப்படும் நேச நாட்டு விமானங்களின் விமானிகளைப் பத்திரமாக இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பதல் போன்ற ஜெர்மானிய எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். 1944ம் ஆண்டின் பிற்பகுதியில் நேசநாட்டுப் படைகளால் நெதர்லாந்தின் தெற்கு, மற்றும் வடக்கு பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால் மேற்கு பகுதி மே 1945ல் ஜெர்மனி சரணடையும்வரை ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்தது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Hooton 2007, p. 48
- ↑ "Many more wounded in May 1940 Invasion, NOS News" (in Dutch). Archived from the original on 3 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)
மேற்கோள்கள்
[தொகு]- Amersfoort, Herman; Kamphuis, Piet, eds. (2005), Mei 1940 — De Strijd op Nederlands grondgebied (in Dutch), Den Haag: Sdu Uitgevers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 901208959X
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Schulten, C.M.; Theil, J. (1979), Nederlandse Pantservoertuigen (in Dutch), Bussum: Unieboek BV, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9026945558
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - C.W. Star Busmann. Partworks and Encyclopedia of world war II
- De Jong, Lou (1969), Het Koninkrijk der Nederlanden in de Tweede Wereldoorlog, Deel 1: Voorpel (in Dutch), Amsterdam: Rijksinstituut voor Oorlogsdocumentatie
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - De Jong, Lou (1969), Het Koninkrijk der Nederlanden in de Tweede Wereldoorlog, Deel 2: Neutraal (in Dutch), Amsterdam: Rijksinstituut voor Oorlogsdocumentatie
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - De Jong, Lou (1970), Het Koninkrijk der Nederlanden in de Tweede Wereldoorlog, Deel 3: Mei '40 (in Dutch), Amsterdam: Rijksinstituut voor Oorlogsdocumentatie
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Hooton, E. R. (2007), Luftwaffe at War, Volume 2; Blitzkrieg in the West 1939-1940, London: Chervron/Ian Allen, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781857802726
- Jentz, Thomas L. (1998), Die deutsche Panzertruppe 1933–1942 — Band 1 (in German), Wölfersheim-Berstadt: Podzun-Pallas-Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3790906239
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Frieser, Karl-Heinz (2005), Blitzkrieg-Legende — Der Westfeldzug 1940 (in German)
{{citation}}
: Text ", R. Oldenbourg Verlag München" ignored (help)CS1 maint: unrecognized language (link) - Shirer, William L. (1960), The Rise and Fall of the Third Reich: A History of Nazi Germany, New York: Simon & Schuster
- Powaski, Ronald E. (2003). Lightning War: Blitzkrieg in the West, 1940. John Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471394319, 9780471394310.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help) - Powaski, Ronald E. (2008). Lightning War: Blitzkrieg in the West, 1940. Book Sales, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0785820973, 9780785820970.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help) - History Site "War Over Holland - the Dutch struggle May 1940"