உள்ளடக்கத்துக்குச் செல்

காலா பாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலா பாணி
நூல் பெயர்:காலா பாணி
ஆசிரியர்(கள்):மு. ராஜேந்திரன்
வகை:புதினம்
துறை:தமிழிலக்கியம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:536 [1]
பதிப்பகர்:அகநி வெளியீடு[1]

காலா பாணி நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை, 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும். இது எழுத்தாளரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றியவருமான மு. ராஜேந்திரனால் எழுதப்பட்டது.

கதைக்களம்

[தொகு]

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் பல்வேறு அலுவலக கடித பரிமாற்றங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அரசாங்க நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் வரலாற்று ஆய்வாளர்களான கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் ஆகியோரின் வரலாற்று நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு சிவகங்கை சீமையின் மன்னரும், வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர்கள் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே மாண்ட போராட்டமே இந்த புதினத்தின் கதைக்களனாகும்.

1801- ஆம் ஆண்டில் சுமார் ஆறு மாதங்கள் வரை நடைபெற்ற காளையார்கோவில் போரை இந்திய நாட்டின் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் என வரலாற்று ரீதியாக நிறுவ முடிந்தாலும்கூட அந்த மக்கள் கிளர்ச்சிக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இன்னமும் உரிய பெருமை வழங்கப்படவில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை இந்த காளையார்கோவில் போரில் ஈடுபட்ட பெரிய உடையணத் தேவன் உள்பட்ட எந்த விசாரணையும் இல்லாமல் ஐநூறு பேர் வரை குழந்தைகள், முதியவர்கள் உள்பட தூக்கிலிடப்பட்ட போராட்டக்காரர்களை பெருமைபடுத்திய பிறகே அதற்கு பின்வந்த மற்ற விடுதலை வீரர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக இப்புதினம் முன்னெடுக்கிறது.

இந்த காளையார்கோவில் போரை முன்வைத்து இதே ஆசிரியர் எழுதிய 1801 என்ற புதினத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இந்த "காலா பாணி' புதினத்தை வாசிப்பதன் மூலம் இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்ள இயலும்.

புதினத்தின் முதன்மை கதாபாத்திரமான பெரிய உடையணத் தேவன் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, சிறைக்கைதியாக திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து துறைமுகத்தின் வழியாக அட்மிரல் நெல்சன் கப்பலில் ஏற்றி, பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டு, அங்கேயே சிறைக்கைதிகளாக்கப்பட்டு அவர்கள் மாண்ட துயரத்தையும், அதன்வழியே அவர்களுடைய மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் படும்பாடுகள், அன்றைய தமிழகத்தின் அரசியல், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் ஆட்சி நடத்தும் அணுகுமுறைகள் போன்றவற்றை வரலாற்று குறிப்புகளோடு, புனைவுகளையும் கலந்து இப்புதினத்தை ஆசிரியர் எழுதியுள்ளார். [2]

காலா பாணி பற்றி மு.ராஜேந்திரன் சொல்லியது:[3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "காலா பாணி".
  2. "'காலா பாணி' நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது".
  3. "பதிவு செய்யப்பட வேண்டிய தியாக வரலாறு". விகடன். https://www.vikatan.com/amp/story/news/literature/rajendran-ias-interview-about-kaala-paani-novel. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=காலா_பாணி&oldid=3857579" இலிருந்து மீள்விக்கப்பட்டது